விருந்தாளிகளின் தலையணை


ஒரு நண்பரின் வீட்டில் தங்கியிருந்தேன். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். அவர்களது வீடு மிகச்சிறியது. இரண்டே அறைகள். ஆனாலும் அவர்களோடு நான் தங்கிக் கொள்ள வேண்டும் என்று அன்போடு சொன்னதால் இரவு தங்கியிருந்தேன். இரவு உணவு முடிந்து பேசிக் கொண்டிருந்தோம். படுப்பதற்கான பாய் தலையணைகள் கொண்டு வந்து தந்தார் நண்பரின் மனைவி. எங்கள் பேச்சு ஹாலில் சுவாரஸ்யமாக நீண்டு கொண்டிருந்தது.


இடையில் தண்ணீர் குடிக்க உள்ளே எழுந்து போனபோது நண்பரின் கடைசிமகள் உறங்காமல் உட்கார்ந்தபடியே இருந்தாள். ஐந்து வயதிருக்கும். என்ன ஆச்சு உறக்கம் வரவில்லையா என்று கேட்டேன். அவள் என்னை முறைத்தபடியே நீங்க எப்போ ஊருக்கு போவீங்க என்று கேட்டாள். நான் விளையாட்டாக ஒரு மாசம் இங்கே தான் இருக்க போகிறேன் என்றேன்.அவள் சலிப்போடு அப்போ நான் தூங்கினாப்பில தான் என்றாள்.  ஏன் அப்படிச் சொல்கிறாள் என்று கேட்டேன். அவள் முகத்தை இறுக்கமாக வைத்து கொண்டு அது என் தலையணை. அதை உங்களுக்காக அம்மா குடுத்திருக்காங்க. அது இல்லாம என்னாலே தூங்க முடியாது என்றாள். அதெற்கென்ன எடுத்துக் கொள் என்றேன். இல்லை அம்மா திட்டுவாங்க உங்களாலே நான் இன்னைக்கு தூங்கவே முடியாது என்றாள்.


எங்கள் பேச்சின் ஊடாக நண்பர் நுழைந்து உனக்கு வேறு தலையணை எடுத்துகோ என்றார். அவள் நம்ம வீட்ல இருக்கிறதே அஞ்சு தலையணை தான்பா. நீ வேணும்னா உன் தலையணையை இந்த அங்கிளுக்கு குடுத்திரு என்றாள். அவர் கூச்சத்தோடு இந்த தலையணையில் படுத்து பழகிட்டா. நீங்க இதை வச்சிக்கோங்க என்று தனது தலையணையை நீட்டினார். அதனால் என்ன இருக்கிறது என்று சொல்லி நான் அவளிடம்  தலையணையை தந்தபோது ஆசையாக வாங்கிக்கொண்டு அதன் உறையில் இருந்த வாத்தை முத்தமிட்டபடியே குட்நைட் அங்கிள் என்று சொல்லி போனாள்


இரவெல்லாம் சிறுமியின் தலையணையை பற்றியே நினைத்து கொண்டிருந்தேன்.


இந்த சிறுமியை போல நானும் இருந்திருக்கிறேன். தலையணை வெறும் பொருள் அல்ல. அது ஒரு துணை. அது நம்மை கனவுகளின் நுழைவாசலுக்கு அழைத்து போகிறது. தலையணையோடு சிறுவயதில் பேசியிருக்கிறேன். அழுதிருக்கிறேன். சில நேரம் தலையணையை கோபத்தில் திட்டியிருக்கிறேன். இளம்சிவப்பில் பூப்போட்ட அதன் உறை என் மனதில் அப்படியே இருக்கிறது.


எதிர்பாராத விருந்தாளிகள் வந்த நாட்களில் இரவு உணவு கூட எப்படியாவது ஏற்பாடு செய்து தரப்பட்டுவிடும். தலையணை. போர்வைகள் தான் தட்டுபாடு. யாரும் தனது தலையணையை இரவல் தரமாட்டார்கள். இதில் சில தலையணைகள் மிக உயரமாக இருக்கும் என்பதால் அதை கொடுத்தாலும் விருந்தாளிகள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.


ஒரே பலி சிறுவர்கள் தான். சிறுவர்களுக்கு சேலையை ஒரு மஞ்சள் பையில் அடைத்து திடீர் தலையணைகள் தயார் ஆகும். அதை வைத்துக் கொண்டு அவரவர் தலையணைகளை விருந்தினர்களுக்கு தந்துவிட வேண்டும் என்பார்கள். கோபமும் அழுகையுமாக தர மறுத்த போது அடிவிழும். அல்லது பறித்துகொண்டு போகப்படும்.


இந்த சிறுமியை போலவே இருட்டிற்குள் உட்கார்ந்தபடியே விருந்தினர்கள் ஏன் வருகிறார்கள் என்று மனதிற்குள்ளாகவே திட்டிக் கொண்டிருப்பேன். முரண்டுபிடித்தால் சில வேளை தலையணை கிடைத்துவிடும். ஆனால் உறங்கியதும் அதை நைசாக உருவிக் கொண்டு போய்விடுவார்கள். அப்படி ஒரு இரவு உறக்கத்தில் திரும்பிய போது தலையணையை காணவில்லை. இருட்டிற்குள்ளாக எங்கே போனது என்று தேடினால் அதைக் காணவேயில்லை.


கண்ணை கசக்கி கொண்டு நடந்து வெளியே வந்தால் திண்ணையில் அந்தத் தலையணையை வைத்தபடியே உறவினர் உறங்கிக் கொண்டிருக்கிறார். அவரிடமிருந்து தலையணையை பறிப்பது எளிதாக இல்லை. ஆனால் விடாப்பிடியாக அதை பறித்து கொண்டு பூனை போல நடந்து என் அறைக்கு போய் படுத்துக் கொண்டேன். ஆனால் விடிந்து எழுந்த போது அந்த தலையணையை வைத்து அதே உறவினர் தூங்கி கொண்டிருந்தார். அது எப்படி என்று புரியவேயில்லை


தலையணைகள் பகிர்ந்து கொள்ளபடமுடியாதது தான் போலும். அது நம் கனவை இன்னொருவருடன் பகிர்ந்து கொள்வதை போன்றது தானா? யார் யார் வீடுகளிலோ ஏதேதோ தலையணைகளில் உறங்கியிருக்கிறேன். எந்த தலையணையும் அதில் உறங்கிய மனிதனை பற்றி எதையும் முணுமுணுத்ததில்லை ஆனால் சில தலையணைகளில் அதன் உருவ அமைப்பையும் மிருதுவையும் வைத்து அதை பயன்படுத்திய மனிதனை பற்றி நாமாக கற்பனை செய்து கொள்ள வேண்டியது வரும். ஆண்களின் தலையணை பெண்களின் தலையணை என்று இரண்டுவகை இருப்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்.


உலகெங்கும் லாட்ஜில் ஒரே போல தான் தலையணைகள் இருக்கின்றன. அவை ஒரு போதும் சந்தோஷமான கனவுகளை தருவதேயில்லை. இது உன் வீடல்ல, நீ இதன் அதிதி என்று ரகசியமாக சொல்கின்றன. பால்நுரை போன்ற வெண்மையான தலையணையை பாங்காங்கில் தங்கியிருந்த ஒரு நட்சத்திர விடுதியில் தந்தார்கள். அது மிக மிருதுவாக இருந்தது. இதில் தலைவைத்து உறங்க வேண்டுமா என்று கூச்சமாக இருந்தது.


அந்த தலையணையை நெடுநேரம் பார்த்தபடியே இருந்தேன். பிறகு விளக்கை அணைத்துவிட்டு தலையணையில் தலைவைத்து படுத்த போது உறக்கம் வரவேயில்லை. நீண்ட நேரம் புரண்டு புரண்டு படுத்தபோதும் உறக்கம் கூடவேயில்லை. தலையணையை அப்புறப்படுத்திவிட்டு கம்பளியை மடித்து தலையணை போல செய்து அதில் தலைவைத்தவுடன் தூக்கம் கூடியது. பிரச்சனை தலையணைகளிடம் இல்லை. அதை பயன்படுத்தும் மனிதர்களிடம் தான் இருக்கிறது.


ஒவ்வொருவரும் ஒருவிதத்தில் உறங்குகிறார்கள். ஒரே வீட்டில் ஒருவரை போல உறங்கும் இன்னொருவரை காண முடியாது. மனிதன் தன் உறக்கத்தை ஒரு போதும் காணவே முடியாது. உறக்கத்தில் மனிதர்கள் தூய்மையடைகிறார்கள். உறக்கம் மனிதனை சாந்தம் கொள்ள வைக்கிறது.  ஆறுதல்படுத்துகிறது. குழந்தைகள் மட்டுமே உறக்கத்தின் உண்மையான ருசியை அறிந்தவர்கள். அவர்கள் தூக்கத்தில் ஊறிமிதக்கிறார்கள். தூக்கத்தின் விரலை பிடித்துக் கொண்டுவிட மறுக்கிறார்கள். நாம் பாதி தூக்கத்தில் தானிருக்கிறோம்.


நேற்றைய தூக்கம் முந்தைய நாள் தூக்கம் பதினைந்து வயதின் தூக்கம் என்று இதுவரை நம் தூக்கத்தின் இயல்பை நாம் பட்டியல் இட்டு வேறுபடுத்தி பார்த்திருக்கிறோமா என்ன? அது சாத்தியம் தானா?


மலிவான ரக லாட்ஜ்களில் உள்ள தலையணைகளில் தலைமயிர் ஒட்டி காமத்தின் கறை உறைந்து போயிருக்கும். தலை வைத்தால் முத்தவாசனை அடிக்க கூடும் அந்த அறையின் கடந்தகாலத்தை மறைப்பதற்காகவோ என்னவோ வெளுத்த தலையணை உறைகள் வெள்ளை போர்வைகள் போட்டு யாவும் மறைக்கபட்டிருக்கின்றன.


நாள்பட்ட தலையணைகள் துர்கனவை கொண்டுவரும் என்பார்கள். ஆகவே சில வருசங்களுக்கு பிறகு அதை குப்பையில் வீசிவிடுவார்கள். எனது கிராமத்தில் ஒரு பாசிபிடித்து போன குளமிருந்தது. அங்கே தான் பழைய தலையணைகளை வீசிஎறிவார்கள். விரும்பி வைத்திருந்த தலையணை தண்ணீரில் விழுந்து ஈரமேறுவதை வெறித்து பார்த்தபடியே நின்றிருக்கிறேன். இலவம்பஞ்சால் ஆன தலையணைகள் நல்லது என்கிறார்கள். அவை தலையை உள்வாங்கிக் கொண்டு இதம் தருகின்றன.


கல்யாண மாப்பிள்ளைக்கென தனியே தலையணைகள் வாங்குவார்கள். அதை தூக்கிகொண்டு ஆட்கள் வீதியில் நடந்து செல்லும்போது சிறுவர்கள் மஞ்சள் பட்டில் செய்தது போன்ற அந்த தலையணைகளை வியப்போடு பார்த்தபடியே கூடவே நடப்பார்கள். சிறுவர்களுக்கு ஏன் அது போன்ற பட்டுதலையணைகள் தரப்படுவதேயில்லை என்று ரகசியமாக விவாதிப்பார்கள். இதற்காகவே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று சகமாணவன் ஒருவன் சொன்னது இன்று நினைக்கையில் வேடிக்கையாக இருக்கிறது


கிராமத்தில் கையை தலைக்கு வைத்து படுத்து உறங்குகின்றவர்கள் அதிகம். அதை நிச்சயம் வேறு யாருக்கும் இரவல் தர முடியாது.


தலையணை உறையில் நீந்தும் மீன்கள் ஏன் ஒன்றையொன்று கடந்து செல்வதேயில்லை என்று பலமுறை சிறுவயதில் பார்த்தபடியே இருந்திருக்கிறேன். தலையணையின் முன்பக்கம். பின்பக்கம் இரண்டும் ஒன்று போலதானிருக்கிறது. ஆகவே அதில் எந்த பக்கம் நேற்று தூங்கினேன் என்று சந்தேகம் வருவதும் உண்டு. யாவரிடமும் தலையணை கதைகள் நிறைய இருக்கின்றன. வயது வளர வளர இந்த கனவுகள் கதைகள் கூடவே வளர்ந்து கொண்டிருக்கின்றன.


சிறுவர்களின் மனநிலை எல்லா காலத்திலும் ஒன்று போலதானிருக்கிறது. அது தான் உறக்கத்தை மீறி என்னை அன்று சந்தோஷப்படுத்தியபடி இருந்தது.
**

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: