துரத்தும் பணம்

சிறிய முதலீட்டில் தயாரிக்கப்படும் மராத்திபடங்கள் உலக அளவில் மிகப்பெரிய விருதுகளையும் அங்கீகாரத்தையும் தொடர்ச்சியாகப் பெற்றுவருகின்றன. மராத்தி சிறுகதைகளில் இருந்தோ, நாவல்களில் இருந்தோ படத்திற்கான ஆதாரக்கதையைப் பெற்றுக் கொண்டு இளம் இயக்குனர்கள் திரைப்படங்களை உருவாக்கி வருகிறார்கள். அத்துடன் ஐம்பது லட்ச ரூபாய்க்குள் படத்தை முடித்துவிட முடிகிற வாய்ப்புகளும் அங்குள்ளன.

மல்டிபிளெக்ஸ் அரங்குகளில் கட்டாயம் ஒரு திரை மராத்தி திரைப்படங்களுக்கு ஒதுக்கபட வேண்டும் என்பது மாநில விதிமுறை. ஆகவே விநியோக முறையும் சாதகமாகவுள்ளது. ஹிந்தி திரையுலகின் பிரபலங்கள் பலரும் மராத்தி திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் நடிக்கிறார்கள். மாற்றுமுயற்சிகளுக்கு உறுதுணை செய்கிறார்கள். மராத்திய நாடகமேடை சிறந்த நடிகர்களை உருவாக்கி தருவது திரையுலகிற்குக் கூடுதல் பலம்.

சமீபமாக மலையாள சினிமாவில் மாற்றுமுயற்சிகள் குறைந்து வருகின்றன. கேளிக்கை சினிமாவை நோக்கி தன்னை விஸ்தரித்துக் கொள்ளவே மலையாள திரையுலகம் முயற்சிக்கிறது. வங்கத்திலோ தமிழகத்தில் வெற்றிகரமாக ஒடிய படங்களின் ரீமேக் அதிகம் உருவாக்கபட்டு அரங்குகளை நிரப்பிக் கொண்டிருக்கின்றன.

சமீபத்தில் Ek Hazarachi Note என்ற மராத்தி திரைப்படத்தைப் பார்த்தேன். படத்தின் இயக்குனர் Shrihari Sathe மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக வெளிவந்தபடம். சர்வதேச திரைப்படவிழாக்களில் பங்கேற்று முக்கிய விருதுகளைப் பெற்றுள்ளது.

பூதி என்ற கிராமத்துப் பெண் தனியாக வாழ்கிறாள். விவசாயத்திற்குக் கடன்வாங்கி அதைக்கட்டமுடியாமல் அவளது மகன் தற்கொலை செய்துவிடுகிறான். ஆகவே பூதிக்கு உறவென யாருமில்லை. தனி ஆளாகச் சமைத்து சாப்பிட்டுக் கொண்டு வீட்டு வேலைகாரியாக வாழ்ந்து வருகிறாள். அவளுக்கு ஆதரவாக இருப்பவன் அடுத்தவீட்டில் குடியிருக்கும் சுதமா என்ற ஆடு மேய்ப்பவன். தனது தாயைப் போல அவளைக் கவனித்துக் கொள்கிறான்.

ஒரு நாள் அந்த ஊருக்கு தேர்தல் பிரச்சாரத்திற்காக அரசியல்வாதி ஒருவர் வருகிறார். ஒட்டுகேட்க வரும் வேன். பசுமாட்டுசின்னம். அவர் நிகழ்த்தும் உரையென அந்தக் காட்சி அற்புதமாகப் படமாக்கபட்டிருக்கிறது. ஒருவேளை சாப்பாடு கிடைக்கும் என்பதற்காக எப்படிக் கிராம மக்கள் தேர்தல் கூட்டங்களுக்கு வருகிறார்கள் என்பதை அழகாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

நிகழ்ச்சியில் ஒட்டுவாங்குவதற்காக ஊர்மக்களுக்குப் பணம் தரப்படுகிறது. அரசியல்வாதி பூதியின் மகன் தற்கொலை செய்து கொண்டதற்கு ஆறுதல் மொழிகளைப் பேசி மூன்று ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அன்பளிப்பாகத் தருகிறான்.

தன் வாழ்நாளில் ஆயிரம் ரூபாய் நோட்டினை பார்த்திராத பூதி அதைப் பரவசத்துடன் பெற்றுக் கொள்கிறாள். இந்த 1000 ரூபாய் அவள் வாழ்க்கை எப்படிப் புரட்டிப் போடுகிறது என்பதே திரைக்கதை

1000 ரூபாய் கள்ளநோட்டு என அவள் கைது செய்யப்படுகிறாள். கள்ள நோட்டு என்றால் என்னவென்றே அறியாதவள் பூதி. ஆகவே அவள் நடந்த உண்மையை அப்படியே சொல்கிறாள். காவல்துறை ஆய்வாளர் அதை நம்பமறுக்கிறார். சுதமா அவளுக்கு ஆதரவாகப் பேசுகிறான். அவனுக்கு அடிவிழுகிறது. தொடர்ந்து காவல்நிலையத்தில் விசாரணை நடைபெறுகிறது. பாகிஸ்தானுடன் அவளுக்குத் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை செல்கிறது. அவளுக்கு உதவிக்கு வந்த சுதமாவும் சிறையில் அடைக்கப்படுகிறான்.

ஆயிரம் ரூபாய் நோட்டு ஒரு வயதான பெண்ணின் வாழ்க்கையை எப்படி நரகமாக்கிவிடுகிறது என்பதைப் படம் அழுத்தமாகச் சித்தரிக்கிறது. ரூபாய் நோட்டு மதிப்புநீக்கம் நடைபெற்ற சூழலில் இந்தப்படம் மிக முக்கியமான அரசியல்படமாகக் கருதப்படுகிறது.

விசாரணை படத்தில் நாம் பார்த்த காவல்துறை விசாரணை ஒரு பக்கம் என்றால் அதன் மறுபக்கத்தை இப்படத்தில் காணலாம். படத்தில் பூதியாக நடித்துள்ள Usha Naik படத்தில் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். ஆயிரம் ரூபாயை வியப்புடன் அவர் பார்க்கும் விதம். காவல்நிலையத்தில் மன்றாடுவது, சுதமாவை நேசிக்கும் விதம். அவருக்காகத் தேநீர் தயாரிப்பது என அக் கதாபாத்திரம் மனதில் ஆழமாகப் பதிந்து போய்விடுகிறது.

நேர்மையாக வாழ்ந்து வரும் எளிய மனிதர்களைச் சுயநல அரசியல் எவ்வாறு சூறையாடுகிறது என்பதை இப்படம் மிக உண்மையாகச் சித்தரிக்கிறது. Ming Kai Leung படத்தின் ஒளிப்பதிவாளர். ஹாங்காங்கை சேர்ந்த இவர் வெகுநேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். குறிப்பாகக் காவல்நிலையக்காட்சிகள் சிறப்பாகப் படமாக்கபட்டிருக்கின்றன.

தேர்தலில் ஒட்டுப்போடத்தரப்படும் பணம் கள்ளநோட்டாக இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியே இப்படத்தின் ஆதாரக்குரல்.

கள்ளநோட்டினை தந்த அரசியல்வாதி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கபடுவதில்லை. ஆனால் அப்பாவி கிராமத்து பெண் தீவிரவாதியாகச் சித்தரிக்கபட்டு கடுமையான விசாரணைக்கும் தண்டனைக்கும் உள்ளாகிறாள்.

பூதிக்கும் சுதமாவிற்குமான உறவு அற்புதமானது. ஆடுமேய்க்கும் இடத்திற்குப் போய்ச் சுதமா கையால் பூதி டீக்குடிக்கும் காட்சியில் அவர்களின் உறவு கவித்துவமாகப் படமாக்கபட்டுள்ளது.

சின்னஞ்சிறிய கிராமம் ஒன்றிலே படமாக்கியிருக்கிறார்கள். குறைவான நடிகர்கள். கிராமத்திற்குள்ளாகவே நடைபெறும் கதை. அருகிலுள்ள சந்தை. சிறுநகரம், பேருந்து பயணம் இவ்வளவு தான் திரைப்படம்

ஒரு பக்கம் விவசாயிகளின் தற்கொலையைப் பேசும் இக்கதை மறுபக்கம் வாழ்பவர்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. படத்தில் ஆடல்பாடல்கள் எதுவுமில்லை. சண்டை காட்சிகள் கிடையாது. காவல்நிலையக்காட்சிகள் கூட மிக யதார்த்தமாகப் படமாக்கபட்டிருக்கின்றன.

சுயாதீன திரைப்பட முயற்சிகளில் ஒன்றாகவே இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது.

**

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: