தும்பை பூத்த பாதை

மலையடிபட்டி என்ற ஊருக்கு சைக்களில் சென்று கொண்டிருந்தேன். அந்த பாதையில் ஆட்களேயில்லை. வழியெங்கும் தும்பைச் செடிகள் பூத்திருந்தன. இவ்வளவு தும்பைகள் பெருகிய பாதையைக் கண்டதேயில்லை. சைக்கிளை விட்டு இறங்கி நின்று பாதையைத் திரும்பி பார்த்தேன். முன்னும் பின்னும் வளைந்து கிடந்தது பாதை. தொலைவில்  ஊர் தெரிகிறது. எல்லா கிராமங்களும் வெளியில் இருந்து பார்க்கும் போது மிக அழகாகவே இருக்கின்றன.அதன் தோற்றம் யாரோ வரைந்து வைத்துவிட்டு போன சித்திரம் போலவே இருக்கிறது. மரங்கள், வீடுகள், வைக்கோல் போர்கள், அடிவானம், என யாவும் கச்சிதமான ஒழுங்கில் ஒன்று சேர்ந்திருப்பது போலிருந்தது.


எல்லா கிராமங்களிலும் வேம்புகள் இருக்கின்றன. வேப்பமரங்கள் இல்லாத கிராமம் ஒன்றை கூட இதுவரை நான் கண்டதேயில்லை. கடைவாயில் ஒளிந்து கொண்டுள்ள பற்களை போல இப்படி சில கிராமங்கள் வெளி உலகின் கண்களில் படாமல் ஒளிந்து கொண்டு வாழ்கின்றன. ஊரின் பின்னால் சிறிய குன்று ஒன்று விழுந்துகிடக்கிறது. வெட்டவெளியில் தனியே முளைத்த  சோளக்கதிர் ஒன்றை போல இந்த கிராமம் இருப்பதாக தோன்றியது.


அகிரா குரசோவாவின் ட்ரீம்ஸ் படத்தில் வான்கோவின் ஒவியத்தை பார்த்து கொண்டிருந்த ஒரு பார்வையாளன் அப்படியே ஒவியத்தினுள் நடந்து செல்ல துவங்குவான். அதே நிறமுள்ள வயல். அதே நிறமுள்ள  ஆகாசம். பெண்கள், பாலம் என எல்லாமும் ஒவியத்தில் உள்ளது போலவே இருக்கும். அன்று நான் பார்த்த காட்சியும் ஒரு  ஒவியத்தின் உள்ளே நடந்து செல்வதை போலதானிருந்தது.


தும்பை செடிகள் எளிமையானவை.  அவை ஒரே கொண்டையில் நிறைய பூக்களை கொண்டிருக்கின்றன. அந்த பூக்களை சிறுமிகள் காதணிகளாக ஒட்டிக் கொண்டு விளையாடுவதை கண்டிருக்கிறேன். அச்சு அசலாக அப்படியே காதணி போலிருக்கும். பூவை காதணியாக கொள்வது எவ்வளவு மகிழ்வான விசயம். 


ஆண்கள் பூக்களை வேடிக்கை மட்டுமே பார்க்கிறார்கள். அல்லது யாருக்கோ பறித்தோ வாங்கியோ தருகிறார்கள். பூக்களை நெருங்கி அறிந்து கொள்வதில்லை. பூக்களை தேடித் தேடி பார்ப்பதும் ரசிப்பதுமில்லை. பூக்களின் முடிவற்ற பள்ளதாக்கில் நிற்கும் போது கூட ஆண்களின் நினைவில் பூக்களை விட பெண்களை முதன்மையாக நிற்கிறார்கள். பூக்கள் ஆண் பெண் என பேதம் காண்பதில்லை. ஆதிவாசிகளில் ஆண்களும் பூச்சூடிக் கொள்வதை கண்டிருக்கிறேன்.


தும்பை செடிகளை நின்று கொண்டு பார்க்க முடியாது. அவை எவ்வளவு பெரிய மனிதனையும் தன் முன்னே மண்டியிட செய்கின்றன. அருகில் குனிந்து செடியை உற்று பார்க்கிறேன். எவ்வளவு வெண்மையான பூக்கள். தும்பை பூவில் தேனிருக்கும். அதை உறிஞ்சி குடிப்பது தனித்த ருசி.  மிகச்சிறிய துளியவு தேனிருக்கும் . ஒரு வண்ணத்துபூச்சிக்கு அது போதுமானதாக இருக்க கூடும்.
நமக்கு அது நாவின் நுனிக்கு கூட போதுமானதாகயில்லை. ஆனால் அந்த தித்திப்பை கொண்டிருப்பதால் தானோ என்னவோ எப்போதும் ஒரு கர்வத்துடன் நிற்கிறது தும்பைசெடிகள்.


இலைகள் காற்றில் அசைந்து கொண்டிருக்கின்றன. பருத்தி வெடித்து காற்றில் பறப்பது போல மேகங்கள் வானில் சிறிய திட்டு போல மிதந்து கொண்டிருக்கின்றன. ஆகாயம் ஒரு பக்கம் வெளிறிப்போயிருந்தது. கரிசலின் சூரியன் உற்று பார்த்து கொண்டிருக்கிறது. சில பாதைகள் நம் பயன்பாட்டிலிருந்து மெல்ல விலகி போய்விடுகின்றன.


பேருந்து செல்லும் புதிய பாதை வந்த பிறகு மாட்டு வண்டிகள் செல்லும் பாதைகள் மங்கி மறைய துவங்குகின்றன. நான் சென்று கொண்டிருந்த பாதையும் அப்படியானது தான். அதில் மாட்டுவண்டிகள் சென்று அழுந்திய தடமேறியிருக்கிறது. சில இடங்களில் பாதை ஒடுங்கி பள்ளமாகி பின் மேலேறுகிறது. ஆனால் வண்டிகளின் போக்குவரத்து குறைந்து போன காலமது. ஆகவே பாதைகளில் ஒன்றிரண்டு விறகு கொண்டு செல்லும் சைக்கிள்களும் விவசாய வேலைகளுக்கு செல்பவர்களுமே செல்கிறார்கள். அதனால் பாதை ஒய்ந்து போயிருந்தது.


தும்பை செடிகள் பயணிகளை பற்றி கவலைபடுவதேயில்லை. ஒரு மஞ்சள் நிற வண்ணத்துபூச்சி பறந்து வருகிறது. அது எந்த பூவில் உட்காருவது என்று முடிவு எடுக்க முடியாதபடியே அங்குமிங்கும் பறக்கிறது. பிறகு ஒரு தும்பை செடியில் அமர்கிறது. அடுத்த நிமிசம் அதை விலக்கி பறக்கிறது. அதன் பின்னாடியே கண்ணாடி சிறகுகள் கொண்ட இரண்டு தட்டான்பூச்சிகள் வருகின்றன. அவை தும்பை செடியின் மீது வட்டமிடுகின்றன.


அவ்வளவு பெரிய வெட்டவெளியில் மூன்றே பூச்சிகள் சிறகடிக்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று இணக்கமாக இல்லை. இரண்டு பூச்சிகள் ஒன்றாகச செல்வது போல அருகாமையில் சென்றாலும் ஒவ்வொன்றும் தனி இயல்பும் தனியான வேகமும் கொண்டிருக்கின்றன. ஒன்றையொன்று போட்டியிடவே செய்கின்றன.


தட்டானின் சிறகுகள் எவ்வளவு வசீகரமானது. யார் இவ்வளவு நுட்பத்தோடு அதன் சிறகுகளை உருவாக்கியது.  அவை சப்தமிடுகின்றன. பன்னெடுங்காலமாக வெட்டவெளி கேட்டுபழகிய சப்தமது. அந்த சப்தம் கிராமத்தின் அடிநாதம் போலிருக்கிறது. பகலை துளைப்பது போல அந்த சப்தம் துடிக்கிறது. 


ஒரு தும்பை பூவை கையில் பறிக்கிறேன். சின்னஞ்சிறிய பூ. அதை சூடிக் கொள்ளும் பெண்கள் உலகில் இருக்கிறார்களா என்ன? தும்பைபூவை மாலையாக்கி ஆண்கள் அணிந்து கொள்வார்கள் என்று எங்கோ படித்த ஞாபகம். தும்பை செடிகள் மௌனமாக அசைகின்றன. அவை பூமியில் ஆழமாக வேர்விடுவதில்லை. பனிக்காலத்தில் தும்பை செடியில் உருளும் முத்துகளை போல பனி துளிர்திருக்கும்.


தும்பை செடிகளில் உள்ள வண்ணத்துபூச்சிகளை பிடிப்பதற்காக சிறார்கள் அலைவார்கள். ஆட்களின் அரவம் கேட்டும் பறக்காத வண்ணத்துபூச்சிகள் அதிகமுண்டு. அவை தேன் குடித்த கிறக்கத்தில் மயங்கியிருக்க கூடும். வண்ணத்துபூச்சிகளை பிடித்து அதன் பின்னால் நூல்கட்டி பறக்கவிடுவார்கள். நூல் அறுந்து சில வேளை வண்ணத்துபூச்சிகள் பறந்து போய்விடக்கூடும். யார் அந்த நூலை அவிழ்த்துவிடுவார்கள். அல்லது வாழ்நாள் முழுவதும் இந்த நூலோடு தான் பறந்து கொண்டிருக்க வேண்டுமா என்று யோசனையாக இருக்கும்.


மார்கழி மாதம் மட்டும் வீட்டுவாசலில் வைக்க தும்பை பறிக்க சிறுவர்கள் ஒடுவதை கண்டிருக்கிறேன். அவர்கள் கொண்டுவந்த பூக்கள் சாண உருண்டையில் பூசணிபூக்களின் கம்பீரத்தில் ஒடுங்கி போய் மறைந்து நின்று கொண்டிருக்கும். வீதியில் உள்ள கோலங்களும் கூட இப்படி தான். அத்தனை வீட்டு பெண்களும் ஒன்று போல காலையில் எழுந்து அக்கறையாக கோலம் போடுகிறார்கள். ஆனால் ஏதோ ஒரு பெண்ணின் கோலம் மற்ற கோலங்களை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகிறது.


அவளது கோலத்தின் முன்னால் மற்ற கோலங்கள்  முகம் திரும்பி கொண்டுவிடுகின்றன. தெருவை கடந்து செல்லும் ஒவ்வொருவரும் கோலம் போட்ட பெண் யாராக இருப்பாள் என்று கற்பனை செய்துகொண்டு போகிறார்கள். கோலமிட்ட பெண் பெருமையில் யாருமில்லாத பகல்வேளையில் தனது கோலத்தை தானே ரசித்து கொண்டிருக்கிறாள். வீட்டுவாசல் தினம் ஒரு கோலம் சூடிக் கொள்கிறது. மற்றவீட்டு கோலங்களுடன் போட்டியிடுகிறது. இன்று கோலமிடப்பட்ட வீடுகளை காண முடிவதில்லை. அவை கனவில் மட்டுமே தோன்றுகின்றன.


தும்பை தன் அளவில் யார் யாருக்கோ பயனளித்து கொண்டிருக்கிறது. அதை வயலுக்கு உரமாக போடுவார்கள். அரைத்து தேமலுக்கு மருந்து போடுவார்கள். வண்ணத்துபூச்சிக்கு தேன் தருகிறது. செடிகள், மரங்கள், கொடிகள் என யாவும் எதையாவது மனிதனுக்கு தந்தபடி தானிருக்கிறது. மனிதர்கள் தான் எதையும் அதற்கு திரும்பி தருவதில்லை. நன்றி  கொள்வதுமில்லை.


தும்பை ஏன் இவ்வளவு சிறிய பூக்களை கொண்டிருக்கிறது. உலகில் பெரிய விசயங்களை விட சிறிய விஷயங்கள் தான் அதிகமாகயிருக்கிறதா?
சைக்கிளில் முன்செல்ல துவங்குகிறேன் . பள்ளி சிறுவர்கள் கையசைப்பதை போல தும்பை பூக்கள் டாடா காட்டுகின்றன. பூக்களை கடந்து செல்வது சந்தோஷமாக இருக்கிறது.


கிராமம் தன் சிறிய வாசலின் வழியே உள்ளே அழைத்து கொள்கிறது. வீடுகளில் நாம் தும்பை வளர்ப்பதில்லை. அவை நம் வீடுகளுக்குள் வருவதற்கும் ஆசை கொள்வதில்லை. ஆனால் சாலையோரங்களில் நின்றபடியே நம்மை அழைக்கின்றன. நாம் அதன் மென்குரலை பெரும்பான்மை நேரங்களில் கேட்பதேயில்லை.
**


 


 

Comments are closed.

Leave a Reply

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: