ஆயிரம் கொக்குகள்


டஞ்சோ எனப்படும் கொக்குகள் ஜப்பானில் மிக புகழ்பெற்றவை. இந்த கொக்குகள் ஆயிரம் வருடம் வாழக்கூடியவை என்ற நம்பிக்கை ஜப்பானியர்களிடமிருக்கிறது. அரிதாகிவரும் இந்தக் கொக்குகளை காப்பாற்றுவதற்காக அரசு பெரும்முயற்சி எடுத்துவருகிறது.


டஞ்சோ கொக்கைக் காண்பது நீண்ட ஆயுளைத் தரக்கூடியது என்று ஜப்பானியர்கள் நம்புகிறார்கள். ஆன்மாவின் குறியீடாகவும், சமாதானத்தின் அடையாளம் போலவும் கொக்குகள் சித்தரிக்கபடுகின்றன. அதை ஜென் கவிதைகளில் தொடர்ந்து காணமுடிகிறது. டிராகன் போல கொக்குவும் ஒரு புனிதபிம்பமே.


நம் ஊரிலும் கொக்குகள் அதிர்ஷடத்தை கொண்டு வருகின்றன என்ற நம்பிக்கையிருக்கிறது. சிறார்கள் வானில் பறக்கும் கொக்குகளை துரத்தியபடியே கொக்கே கொக்கே பூப்போடு என்று ஒடுவதைக் கண்டிருக்கிறேன். கொக்கு பூப்போட்டதன் அடையாளமாக நகத்தில் வெண்திட்டு காணப்படும். அப்படி நகத்தில் இருந்தால் புதிய உடைகள் கிடைக்ககூடும் என்று நம்புவது வழக்கம். இன்றுள்ள சிறுவர்கள் அப்படி நம்புகிறார்களா எனத் தெரியாது. நான் சொல்வது முப்பது வருசத்தின் முந்தைய சிறார்களை.


கிராமத்து வயல்களில் கொக்குகள் இறங்கி புழுக்களை விழுங்கிக் கொண்டிருப்பதை காண்பது களிப்பூட்டும் அனுபவம். பச்சை ததும்பும் வயலின் நடுவில் ஒற்கை காலில் நின்றபடியே தியானத்திலிருக்கும் கொக்குகள் வசீகரமானவை. கொக்குகளின் கூட்டம் வானில் போவதை காண்பது என்றுமே விருப்பமாகயிருக்கிறது. கொக்கு கடந்து போகையில் வானம் திடீரென அதிக பொலிவு கொண்டுவிடுவது போலவேயிருக்கிறது.


கொக்கின் வெண்மையும், அதன் சாந்தமான தோற்றமும் காத்திருப்பின் நிதானமும் சிறகடிப்பில் தோன்றும் லயமும் மயக்கமூட்டுபவை. கொக்கை பார்த்து கொண்டேயிருப்பது கூட ஒருவகையில் தியானம் போலதானோ.


அது மற்ற பறவைகளை போலில்லை. தனக்குள் எந்த ரகசியமும் இல்லை என்பது போன்ற நேரடியான பாவனையொன்று அதனிடம் காணப்படுகிறது. கொக்குகள் நடனமாடுகின்றன. அந்த நடனம் காற்றின் லயத்தோடு கூடியிருப்பதை பலநேரங்களில் கண்டிருக்கிறேன்.


மழையற்ற காலங்களில் கொக்கு ஊரை கடந்து போகையில் ஏக்கத்துடன் சிறுவர்கள் அதை விரட்டிப் போவார்கள். கொக்கு பசுமையறிய கூடியது. அது எப்போதுமே ஈரத்தை நோக்கி பறக்கிறது. குளிர்ச்சியே கொக்கின் விருப்பம். சிலவேளைகளில் குளக்கரையில் உட்கார்ந்தபடியே தன்பிம்பத்தை தானே பார்த்துக் கொண்டிருக்கும் சில கொக்குகளை பார்த்திருக்கிறேன். நீரில் அலைவுறும் தன்பிம்பங்களை காண்பதில் கொக்குகள் ஏனோ ஆனந்தம் கொள்கின்றன. மீனுக்காக காத்திருந்தபோதும் கொக்கின் கவனம் மீனில் மட்டுமில்லை. அது நீரின் அசைவுகளை தான் பார்த்தபடியிருக்கிறது. தண்ணீரோடு பேசுகிறதோ என்று கூட தோன்றுகிறது.


ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் அணுகுண்டு வீசப்பட்ட போது ஷடாகோ சஷாகி (Sadako Sasaki )என்ற சிறுமிக்கு இரண்டு வயது. அவள் மிசாஷா பாலத்தின் அருகில் உள்ள ஒரு வீட்டில் இருந்தாள். அணுவீச்சின் காரணமாக நகரமே மாபெரும் பேரழிவை சந்தித்தது. சஷாகி அதில் அதிர்டவசமாக உயிர்தப்பிவிட்டாள்.


ஆனால் அணுவீச்சின் பாதிப்பு அவள் உடலில் இருந்து கொண்டேயிருந்தது. அவள் வளர வளர நோயும் கூடவே வளர்ந்தது. முதலில் உடலில் நீலப்புள்ளி தோன்ற துவங்கின. உடல் மெலிவுற்றது. அவளது சிறுநீரகங்கள் பாதிக்கபட்டன. கால் முடக்கமானது. அதன் உச்சபட்சமாக பனிரெண்டாவது வயதில் அவள் லூகேமியா எனப்படும் ரத்தபுற்றுநோயால் பாதிக்கபட்டாள். இந்த நோயை அணுசக்தியின் நோய் என்றே சொல்கிறார்கள். ரத்ததில் கலந்து ஆளை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லகூடியது.


பனிரெண்டு வயது சிறுமியான ஷடாகோ சஷாகியை 1955 ம் ஆண்டு பிப்ரவரி 21ம் நாள் மருத்துவமனையில் அனுமதித்தார்கள். ஒருவருடம் தான் அவளது வாழ்க்கை என்று மருத்துவர் கெடுவிதித்துப் போனார். படுக்கையில் நோயாளியாக படுத்தபடியே வெளி உலகினை ஏக்கத்துடன் பார்த்தபடியிருந்தாள் சஷாகி. அவளது பெற்றோர் மனம் உடைந்துபோனார்கள்.


சஷாகியின் தோழி சிசுகோ மஹாமதோ அடிக்கடி மருத்துவமனைக்கு வந்து சஷாகியோடு விளையாடிப் போவாள். ஒரு நாள் அவள் வரும்போது காகிதத்தில் செய்த கொக்கு ஒன்றை கொண்டுவந்து சஷாகியிடம் தந்தாள். எதற்காக இந்த கொக்கு என்று கேட்டபோது கொக்கு நீண்ட ஆயுளைக் குறிக்ககூடியது. ஆயிரம் காகிதக் கொக்குகளை நீ செய்து முடித்துவிட்டால் கட்டாயமாகப் பிழைத்துவிடுவாய் என்று கூறினாள்.


அத்துடன் அடுத்தவர்களின் துயரத்தைப் புரிந்து கொள்வதன் அடையாளமாகவே தான் கொக்குகளை உருவாக்குகிறேன் என்று தோழி சொன்னாள், இதை நம்பிய சஷாகி மறுநாள் முதல் காகிதக் கொக்குகளை உருவாக்கத் துவங்கினாள். பகல் எல்லாம் காகிதத்தை மடித்து கொக்கு செய்வது. அதை தனது படுக்கையின் மீது ஒரு கயிற்றில் தொங்கவிடுவது என்று செயல்பட்டாள்.


காகிதக் கொக்குகளின் கூட்டம் அவள் படுக்கையின் மீது அசைந்தபடியே இருந்தன. ஒரு சமயம் அவள் கொக்கு செய்வதற்கு காகிதம் இல்லாமல் போகவே மருந்துபுட்டிகளின் உறையை எடுத்து அதில் கொக்கு செய்திருக்கிறாள். மற்ற நோயாளிகளின் மருந்துச்சீட்டுகளை மடித்து கொக்கு செய்திருக்கிறாள்.சிலவேளை சிசுகோ தன் பள்ளியில் படிக்கும் மாணவர்களிடமிருந்து காகிதம் கொண்டு வந்து தந்து கொக்கு செய்யத் தூண்டியிருக்கிறாள்


எப்படியும் தன்னால் ஆயிரம் காகித கொக்குகளை செய்துமுடித்துவிட முடியும் என்ற நம்பிக்கை அவளுக்குள் இருந்தது. தான் கொக்குகளை செய்யத் துவங்கிய பிறகு வாழ வேண்டும் என்ற உத்வேகம் அதிகமாகிவருவதை உணரத் துவங்கினாள்.


ஆனால் 664 கொக்குகள் செய்து முடித்தபோது நோய் முற்றி சஷாகி மரணம் அடைந்துவிட்டாள். இந்தச் செய்தி அறிந்த பள்ளிமாணவர்கள் சஷாகி ஆசைப்பட்டபடியே மற்ற 356 காகித கொக்குகளை செய்து அவளோடு சேர்ந்து புதைத்தனர். இச் செய்தி ஜப்பான் முழுவதும் பரவியது. அன்றிலிருந்து இன்று வரை காகிதக் கொக்குகளை சமாதானத்தின் அடையாளமாக மக்கள் கருதுகிறார்கள்.ஆயிரம் காகித கொக்குகளை செய்தால் நோயாளி ஆரோக்கியமாகிவிடுவார் என்ற நம்பிக்கை வலுப்பெற்றது.


அத்தோடு குழந்தைகள் சுகமாக பிறந்ததற்கும், ருதுவான பெண்கள் தனக்கு விருப்பமான மணமகன் கிடைப்பதற்கும் ஆயிரம் காகிதக் கொக்குகளை செய்து சமர்பிக்கிறார்கள். வீட்டினுள் காகிதக் கொக்கு பறந்து கொண்டிருப்பது அமைதி மற்றும் சந்தோஷத்தின் அடையாளமாக நம்பபடுகிறது.


ஹிரோஷிமாவில் சஷாகிக்கு ஒரு நினைவிடம் அமைக்கபட்டு ஆண்டுதோறும் பள்ளிமாணவர்கள் ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து காகித கொக்குகளை செய்து அங்கே காணிக்கை ஆக்குகிறார்கள்.


இறந்தவர்கள் காகித கொக்குகளின் குரலை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒருநம்பிக்கை இதிலிருந்து வளரத் துவங்கியது. ஜப்பானியர்கள் அணுவீச்சின் எதிர்ப்பு அடையாளமாக காகித கொக்குகளை உருவாக்குகிறார்கள். இன்றும் ஆகஸ்ட் 6ம் நாள் நாடெங்கும் காகித கொக்குகள் தயாரிக்கபட்டு பறக்கவிடப்படுகின்றன. ஒரிகாமி எனப்படும் காகித மடிப்புக்கலையில் கொக்குகள் விதவிதமான வண்ணங்களில் அளவுகளில் உருவாக்கபடுகிறது. தங்க நிறத்தில் பெரிய கொக்குகளை செய்து பொது இடங்களில் பறக்கவிடுகிறார்கள். திருமணத்தின் போது மணமக்கள் பல ஆண்டுகாலம் வாழ வேண்டும் என்பதன் அடையாளமாக காகித கொக்குகளை பரிசாக தருகிறார்கள்.


ஷடாகோ சஷாகியின் நம்பிக்கையின் சின்னமாக இருந்த காகித கொக்கினை பற்றி பிரபல ரஷ்ய கவிஞர் ரசூல் கம்சுதேவ் ஒரு நீண்ட கவிதை எழுதியிருக்கிறார். சஷாகியின் கதை ஜப்பானிய பள்ளிபுத்தகங்களில் பாடமாக வைக்கபட்டுள்ளது.


அமெரிக்காவில் செப்டம்பர் 11 தாக்குதல் நடந்தபோது பலியான 24 பேர்களில் ஒருவரான Kazushige Ito வின் அப்பா Tsugio Ito ஹிரோஷிமா விபத்தில் உயிர்தப்பியவர். இன்று அவரது பையன் தீவிரவாதிகளின் தாக்குதலில் World Trade Center சிக்கி இறந்து போனான். அவனது மரணத்திலிருந்து மீள முடியாத டிசூகோ ஆயிரம் காகித கொக்குகளை செய்து அதே இடத்தில் பறக்கவிட்டிருக்கிறார். தன் மகன் அந்த காகித கொக்குகள் பறக்கும் ஒசையை அரூபமாக இருந்து கேட்டுக் கொண்டுதானிருப்பான் என்று கண்ணீர்மல்க சொல்கிறார்.


இன்றைக்கும் குழந்தைகள் வாங்கி படிக்க வேண்டிய முக்கிய புத்தகமாக Sadako and the Thousand Paper Cranes இருக்கிறது. காகித கொக்குகள் நம்மிடையே இன்னமும் அறிமுகமாகவில்லை. நிஜமான கொக்குகளே கூட நகரை விட்டு வெகுதொலைவில் தான் பறக்கின்றன. வாழ்க்கையை நேசிக்க எதையாவது ஒன்றைப் பற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. அது ஒரு காகித கொக்காக இருப்பது கூட போதும் தானே.


Archives
Calendar
December 2017
M T W T F S S
« Nov    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: