வெய்யில்

சமீபத்தில் நான் வாசித்த மிகச்சிறந்த கவிதைத்தொகுப்பு வெய்யில் எழுதியுள்ள மகிழ்ச்சியான பன்றிக்குட்டி.
புதிய பாடு பொருள். கவிமொழி என அற்புதமாக எழுதியிருக்கிறார்.
வெயிலின் கவிதைகளை தொடர்ந்து வாசித்துவருபவன். அவரது கவிதை உலகின் அடுத்த கட்டம் இத்தொகுப்பு.
கவிதைகளின் தொனியும், வியப்பூட்டும் படிமங்களும் இத்தொகுப்பை மிக முக்கியமானதாக்குகிறது.
நூலைச் சிறப்பாக அச்சிட்டுள்ளது கொம்பு பதிப்பகம்
•••
மகிழ்ச்சியான பன்றிக்குட்டி
தலைமுறை ஒன்று:
என்னிடம் விசுவாசமிக்க ஒரு பன்றி இருந்தது
அதை பல நூற்றாண்டுகளாக நான் பழக்கினேன்
என் தேவையைப் பொறுத்து
அதன் தசைகளை அவ்வப்போது அறுத்துக்கொள்வேன்
சாந்தமாக இப்படிச் சொல்லும்…
“நான் உங்கள் வீட்டுக் கோதுமைத் தவிட்டாலும் நீராலுமானவன்!”
எதிர்பாராத விருந்தினர்களால் ஒருநாள் வீடு நிறைந்துவிட
நான் புழக்கடைப் பக்கம் போய் மௌனமாக நின்றேன்
புரிந்துகொண்டு சிரித்தபடி வந்து
வெட்டு மேசையில் படுத்தது
அதன் காதில் சொன்னேன்…
“ஞாயிறு அந்தியில் உன் ரத்தத்தால் செவ்வானம் செய்வேன்
உன் மாமிசம் மகிழம் பூவில் வாசமாயிருக்கும்”
இப்போது அதன் கழுத்து வெட்டுவதற்கு சிரமமாயிருக்கவில்லை
மறுநாள் நான் உறங்குகையில்
அதன் குட்டி என் சுண்டுவிரலைத் தின்றுவிட்டது
“கேரட் என்று நினைத்தேன்!” என்றபடி தலைகுனிந்து நின்றது
நானதன் விழிகளில்
எதிர்ப்பின் சிறு ஒளிவளையத்தைக் கண்டேன்.
தலைமுறை இரண்டு:
இதயத்தைப் பிடுங்கியெடுத்த பின்னும்கூட
பாருங்கள்
கனத்த உடலை இழுத்துக்கொண்டு
அந்தப் பன்றி காட்டுக்குள் எப்படி ஓடுகிறது
ஈட்டியோடு அதை விரட்டினோம்
ஓர் அடுக்குச் செம்பருத்திப் பூவைப் பறித்து
தன் இதயமிருந்த இடத்தில் வைத்துக்கொண்டு
இன்னும் அது வேகமெடுத்து மறைந்தது
நானிந்த கதையைச் சொன்னதிலிருந்து
நாளும் என் கிழத்தி செம்பருத்தியைச் சூடிக்கொள்கிறாள்
ரத்தக்கறையேறிய ஈட்டியில் துரு பரவி மிகுகிறது
மழை விட்டபாடில்லை.
தலைமுறை மூன்று:
மத்தியான வெயிலில்
தீரம்மிக்க ஒரு தாய்ப்பன்றி
சாக்கடையைப் பாலாக மாற்றுவதற்கு
போராடிக்கொண்டிருக்கிறது
ஊஞ்சல்போலாடும் அதன்
பன்னிரண்டு காம்புகளின் பின்னே
துள்ளித்துள்ளித் திரிகின்றன
மகிழ்ச்சியான சில பன்றிக்குட்டிகள்
அவற்றின் வாலாட்டலில் ஒரு வரலாற்று நிதானமிருக்கிறது
விழிச்சுடர்கள் காலத்தால் தூண்டப்பட்டிருக்கின்றன.

••

புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரி புக் பேலஸ் அரங்கில் நூல் விற்பனைக்கு கிடைக்கிறது

Archives
Calendar
February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  
Subscribe

Enter your email address: