தேசாந்திரியின் நிழலாக வாசகர்கள்

கடந்த ஆறு நாட்களாக புத்தகக் கண்காட்சியில் வாசகர்களைச் சந்தித்து உரையாடுவது மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

வாசகர்களின் மகத்தான ஆதரவும் அன்புமே தேசாந்திரி பதிப்பகத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணை.

எத்தனை விதமான வாசகர்கள். எழுத்தாளர்கள். பத்திரிக்கையாளர்கள். புத்தகக் கண்காட்சியில் என்னைச் சந்திக்கும் போது அவர்கள் காட்டும் அன்பு நெகிழச்செய்கிறது.

எழுத்தாளர்கள் பிரபஞ்சன், அம்பை, சாருநிவேதிதா,சமஸ், மாமல்லன், மருதன், ,  லட்சுமி சரவணக்குமார், சரவணன் சந்திரன், பா.ராகவன், சுந்தர புத்தன்,  கே.என். செந்தில், விஷால் ராஜா, மானா பாஸ்கர், அதிஷா, பரிசல், கே.என்.சிவராமன்,தமிழ்மகன், சுகா,   தமிழ்பிரபா,  கவிஞர் சுகிர்தராணி, கவிஞர்வெய்யில், பிருந்தாசாரதி, ஹரன் பிரசன்னா, இயக்குனர் சசி, குமரவேலன், ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சன், விஜய் ஆம்ஸ்ட்ராங்க், லிட்டில் ஜாக்கி பள்ளி உரிமையாளர் ஜோஷ்வா டேனியல்,  ஒவியர் அரஸ், ஜீரோ டிகிரி பதிப்பாளர் ராம்ஜி, காயத்ரி,   ராசி அழகப்பன், நலங்கிள்ளி,   கேபிள் சங்கர், சன் தொலைக்காட்சி  ராஜா, ராஜா திருவேங்கடம், ஐஐடி சசி,கல்வித்துறை அதிகாரிகள்,   எனப் பலரும் அரங்கிற்கு வருகை தந்து சிறப்பித்தார்கள்.

நேற்று ஒரு இளம் பெண் புத்தகம் வாங்க வந்திருந்தார். கையெழுத்து வேண்டும் எனப் புத்தகத்தை நீட்டும் போது அவரது கை நடுங்குவதைக் கண்டேன். அவர்  மெதுவான குரலில் உங்களை நேர்ல பார்த்து பேசுவேனு நினைக்கவேயில்லை. கைநடுங்குது. விட்டா அழுதுருவேன் என்றார். அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டேன்.

உண்மையான வாசகர்களின் அன்பை உணரும் இது போன்ற தருணத்தை உருவாக்கி தந்ததிற்காக புத்தகக் கண்காட்சிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்.

இளைஞர்கள் படிப்பதில்லை என்பது பொய் என தேசாந்திரி பதிப்பகத்தைத் தேடி வரும் இளைஞர்கள் நிரூபணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நேற்று ஒரு இளைஞர் பெங்களுரிலிருந்து வந்து இரண்டு பைகள் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு போனார். முதுகு நிறைய புத்தகச்சுமையோடு போகும் அவரைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

லண்டனில் இருந்து ஒரு இளைஞர் உலகப்புகழ்பெற்ற எழுத்தாளர்களின் புகைப்படங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றைப் பரிசாக தந்து போனார்.  அவரது ப்ரியத்திற்கு நன்றி

photo : Harshi & Bala

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: