லூவரின் பெருமை.

அலெக்சாண்டர் சுக்ரோவ் ரஷ்யாவின் மிகச்சிறந்த இயக்குனர். அவரது இயக்கத்தில் வெளியான Mother and Son, Father and Son, Moloch போன்ற படங்களைப் பார்த்திருக்கிறேன்.

ரஷ்யாவின் புகழ்பெற்ற Hermitage Museumத்தை ஆவணப்படுத்துவது போலச் சிங்கிள் ஷாட் மூவியாக Russian Ark என்ற திரைப்படத்தை எடுத்திருக்கிறார் சுக்ரோவ். இது சினிமா வரலாற்றில் முக்கியமான படம். இப்படத்தின் பிறகே பல்வேறு நாடுகளிலும் அருங்காட்சியகம் குறித்த திரைப்படங்கள் உருவாகத் துவங்கின.

சுக்ரோவின் சினிமா கவித்துவமானது. குறிப்பாக Mother and Son, Father and Son இரண்டும் காட்சியியல் கவிதைகள் என்றே சொல்வேன்.

சுக்ரோவ் சமீபத்தில் இயக்கியுள்ள திரைப்படம் Francofonia

பிரான்சின் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்தின் வரலாற்றைச் சொல்கிறது இப்படம்.

கலைவரலாறு பற்றி அறிந்தவர்களுக்கு லூவர் ம்யூசியத்தின் பெருமை தெரிந்திருக்கும். லூவர் அருங்காட்சியகம் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் அமைந்துள்ளது. இக்காட்சியகம் 60,600 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. உலகப்புகழ் பெற்ற மோனாலிசா ஒவியம் இங்குதான் உள்ளது. இங்கே 35000க்கும் அதிகமான ஒவியங்கள் காட்சிக்கு வைக்கபட்டுள்ளன.

லூவர் அருங்காட்சியகம் இன்றுள்ள இடத்தில் 12ம் நூற்றாண்டில் இரண்டாம் பிலிப் மன்னர் அரண்மனை கட்டியிருந்தார். பின்பு அந்த அரண்மனை மாற்றம் அடைந்து கோட்டையாக உருவானது. வெர்செயிலெஸ் நகருக்கு லூயி மன்னர் மாறிவிடவே லூவர் கலைக்கூடமாக உருவாக்கபட்டது. இதனை விஸ்தாரணம் செய்து அரிய கலைப்பொருட்களைச் சேகரம் செய்து நிரப்பியவர் நெப்போலியன். ஆகவே இது நெப்போலியன் ம்யூசியம் என்றே அழைக்கபட்டது.

நெப்போலியன் வாட்டர்லூவில் தோற்ற பிறகு மீண்டும் லூவர் ம்யூசியம் என்றே அழைக்கபட்டது. பிரெஞ்சு புரட்சிக்கு பின்னர் இந்த அருங்காட்சியகத்திலிருந்து எந்தப் பொருளையும் அதன் உரிமையாளர் எடுத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால் பல அரிய பொருட்கள் திரும்பக் கொண்டு செல்லப்பட்டன. இப்போது காணப்படும் கண்ணாடியில் உருவான பிரமீடு 1988ல் பிரான்ஸ் அரசால் உருவாக்கபட்டது.

இரண்டாம் உலகப்போரின் போது உலகப்புகழ்பெற்ற ஒவியங்களும் சிற்பங்களும் கொண்ட லூவர் ம்யூசியம் நாஜிகளின் தாக்குதலுக்கு உள்ளானது. நாஜி படைகளுக்குப் பயந்து முக்கியக் கலைப்பொருட்கள் யாவும் மறைத்து வைக்கபட்டன.

ஹிட்லர் ஐரோப்பிலுள்ள அத்தனை கலைப்பொருட்களையும் தனதாக்கிக் கொள்ள விரும்பினார். இதற்காகச் சிறப்பு அதிகாரிகளை நியமித்து ஐரோப்பா முழுவதும் கலைச் செல்வங்களைக் கொள்ளையடித்தார்.

பாரீஸ் நகரம் கலைகளின் பிறப்பிடம். ஒவியக்கூடங்களும், இசைவிடுதிகளும், நூலகமும், கலைக்கூடங்களும் நிரம்பியது. நாஜி தாக்குதலுக்குப் பயந்து பாரீஸ் நகரம் காலிசெய்யப்பட்டது ஆயினும். பாரீஸ் நகருக்குள் புகுந்த நாஜி படைகள் அந்த நகரை தீயிட்டு கொளுத்தினார்கள். ஹிட்லர் லூவர் ம்யூசியத்தைத் திரும்பி பார்ப்பது போன்ற ஒரு காட்சி படத்தில் இடம் பெறுகிறது

வரலாற்றின் துயரநிகழ்வாக அமைந்த இந்தச் சம்பவங்களுடன் லூவர் ம்யூசியம் எப்படிக் காப்பாற்றப்பட்டது என்ற கதையைச் சொல்கிறார். சுக்ரோவ் வாய்ஸ் ஒவர் மூலமாக நிகழ்வுகள் விவரிக்கபடுகின்றன. படத்தின் துவக்க காட்சியில் லியோ டால்ஸ்டாயின் உருவப்படம் ஒளிர்கிறது. டால்ஸ்டாயின் இறந்த உடல் காட்டப்படுகிறது. அதைத் தொடர்ந்து ஆன்டன் செகாவின் அறை. அவரது இறந்த உடல் இரண்டும் காட்சிகளாக வந்து போகின்றன. எழுந்து வாருங்கள் செகாவ். எழுந்து வாருங்கள் டால்ஸ்டாய் என்ற குரல் எழுகிறது. இருவரும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரதிநிதிகள். காலத்தின் மனசாட்சியாக இருந்தவர்கள். அவர்களை எழுப்புவதன் வழியே சுக்ரோவ் காலத்தின் மனசாட்சியை அழைக்க விரும்புகிறார்

பழைய நியூஸ் ரீல் காட்சிகள், புகைப்படங்கள். பத்திரிக்கை செய்திகள். கலைப் பொருட்கள். இவற்றுடன் பிரான்ஸை உருவகப்படுத்தும் மரியான் என்ற பெண் கதாபாத்திரம் மூலம் லூவரின் வரலாற்றைச் சுக்ரோவ் விளக்குகிறார். லூவர் ம்யூசியத்தின் கட்டிடக்கலையின் அழகியலை வியக்கும் நாம் அதற்குக் காரணமாக இருந்த Pierre Lescot பற்றி அறிந்திருக்கவில்லை. சுக்ரோவ் லெஸ்கோட்டின் அழகியல்நுட்பங்களைச் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறார்.

லூவர் ம்யூசியத்திலிருந்த கலைப்பொருட்கள் யாவும் 1938 செப்டம்பர் 27 அன்று Jacques Jaujard ஆணையின் படி லாரிகள் மூலமாக Château de Chambord என்ற இடத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு மறைத்து வைக்கபட்டது., ஒவியங்களின் பிரேம்களை அகற்றிவிட்டு ஒவியத்தை மட்டுமே சுருட்டி மறைத்து வைத்தார்கள். மணல்பைகளில் சிற்பங்கள் ஒளித்து வைக்கபட்டன. ம்யூனிச் ஒப்பந்தம் வெளியான பிறகே ஒவியங்களும் சிற்பங்களும் திரும்ப லூவர் ம்யூசியத்திற்குக் கொண்டுவரப்பட்டன.

படத்தின் ஒரு காட்சியில் இந்த உலகில் அரிதானவை எனப் பாதுகாக்கபடும் யாவும் கைகளால் உருவாக்கபட்டவை. தலையை விடவும் கைகள் சிறப்பாகச் செயல்பட்டிருக்கின்றன என்பது போன்ற வாசகம் இடம் பெறுகிறது.

அந்த வாசகம் என்னை உலுக்கியது. சத்தியமான வார்த்தையது. விலைமதிப்பற்ற பொருட்கள் எனப்பாதுகாக்கபடும் சிற்பங்கள், ஒவியங்கள். நுண்கலைப்பொருட்கள் யாவும் கைகளால் உருவாக்கபட்டதே. கைகள் இந்த உலகிற்குத் தந்த கொடை அபாரமானது. தலையின் வழியே நாகரீகம் அடுத்தக் கட்டத்திற்கு நகர்ந்தது. அதைக் கைகள் உருவாக்கிய கலைப்பொருட்களே சாட்சியம் சொன்னது.

லூவரின் கதையை இரண்டு கலை ஆர்வலர்களுக்குள் ஏற்பட்ட சந்திப்பு வழியாகச் சுக்ரோவ் காட்சிபடுத்துகிறார். ஒருவர் ஜெர்மன் ராணுவத்தின் அதிகாரி Franz Wolff-Metternich. மற்றவர் லூவர் ம்யூசியத்தின் இயக்குனர் Jacques Jaujard. ஆக்ரமிக்கபட்ட நகரிலுள்ள எல்லாக் கலைப்பொருட்களும் ஹிட்லருக்கு சொந்தமானது என உரிமை கொண்டாடுகிறார் Franz Wolff-Metternich. ஆனால் பிரான்சின் சொத்தாகக் கருதப்படும் கலைப்பொருட்களை ஒப்படைக்க மறுத்து அதை ரகசியமாக ஒளித்து வைக்கிறார் Jaujard. கலை ரசிகர்களான இருவரும் மிகப்பண்புடன் நடந்து கொள்கிறார்கள். அவர்களின் நடத்தையும் உரையாடலும் அழகாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரம் இருவரும் அடையாளமற்ற மனிதர்களாக இறந்து போனார்கள் என்ற உண்மையையும் சுக்ரோவ் பதிவு செய்கிறார்..

காலத்தின் கண்கள் நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவே ஒவியத்திலுள்ள மனிதர்களின் கண்கள் உலகை உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைய வேண்டும் என்றே சுக்ரோவ் படமாக்கியிருக்கிறார். இதுவே இயக்குனரின் தனித்துவம். உலகப்புகழ்பெற்ற ஒவியத்தின் கண்கள் திரையை உற்று நோக்கும் போது அதிலிருந்து வெளிப்படும் பாவமும் வீரியமும் அபாரமாகவுள்ளன

படத்தில் சுக்ரோவ் ஒரு கதாபாத்திரம் போலவே இடம் பெறுகிறார். அவரது கம்ப்யூட்டரில் ஸ்கைப் மூலமாகக் கப்பல் கேப்டன் டிரிக் என்பவருடன் பேசிக் கொண்டேயிருக்கிறார். அரிய கலைப்பொருட்களை ஏற்றுக் கொண்டு புயலில் மாட்டிக் கொண்டுள்ளது ஒரு கப்பல். எந்தக் கலைக்கூடத்திலிருந்த கலைப்பொருட்கள் அவை. எங்கே கொண்டு செல்லப்படுகின்றன என்பது போன்ற விபரங்கள் தெரியப்படுத்தபடுவதில்லை.

ஆனால் நூற்றாண்டுகளாகக் கலைப்பொருட்கள் தூரதேசங்களில் இருந்து இப்படிக் கப்பல் மூலம் கடல் வழியாகக் கொண்டுவரப்பட்டதையும், சில கப்பல்கள் கடலில் மூழ்கிப் போய்விட்டதையும் இந்தக் காட்சி நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

படத்தில் சுமேரியா நாகரிகத்தின் அடையாள சின்னமாக விளங்கும் Winged human-headed bull சிற்பத்தைத் திரையில் காட்டும் போது பின்ண்ணிக்குரல் அழிந்து போன ஒரு நாகரீகத்தின் நினைவு சின்னம் அதுவென அறிமுகம் செய்கிறது. இந்தக் கலைப்பொருட்கள் எப்படி லூவர் ம்யூசியத்திற்குக் கொண்டுவரப்பட்டன. ஒரு காலத்தில் மெசபடோமியா நகரின் நுழைவாயிலாக இருந்த சிற்பங்கள் இன்று காட்சிப்பொருளாக மாறியுள்ளன என்பதைச் சுக்ரோவ் அழகாக விளக்குகிறார். அதில் கடற்பயணத்தின் வழியே கலைப்பொருட்கள் கொண்டுவரப்பட்ட வரலாற்றை விவரிக்கிறார்.

இன்று சுமேரிய நாகரீகம் அழிந்து போய்விட்டது. ஆனால் அதன் கலைப்பொருட்கள் மட்டுமே சாட்சியமாக உள்ளன.

யூப்பிரட்டீஸ், டைகிரிஸ் என்னும் இரு ஆறுகளுக்கும் இடைப்பட்ட பகுதியே மெசபடோமியா என அழைக்கப்பட்டது. சுமேரியா நாகரிகம் நகரங்களைச் சிறப்பாக நிர்மாணம் செய்தது. சுமேரியர்கள் பிரம்மாண்டமான நூலகத்தை அமைத்தார்கள். காலத்தை நொடியாகப் பகுக்கும் முறை சுமேரியர்களிடமிருந்தது

படத்தில் சிறகுள்ள காளையொன்று மனித முகத்துடன் இருக்கும் சிற்பம் மிக அண்மையில் காட்சிப்படுத்தபடும் போது. கலைநேர்த்தியின் உச்சத்தைத் தொட்ட ஒரு நாகரீகம் ஏன் அழிந்து போனது என்ற கேள்வியை எழுப்புகிறார் சுக்ரோவ்.

அதிகாரம் போரை விரும்புகிறது போரோ அழிவை உண்டாக்குகிறது போரின் போது அழிக்கப்பட்ட கலைப்பொருட்கள் ஏராளம். போரின் போது மனிதர்கள் விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டார்கள். நாஜி படைகளால் லெனின்கிராடு நகரம் முற்றுகையிடப்பட்டதையும் ஹெர்மிடேஜ் ம்யூசியம் எப்படிப் பாதுகாப்பு அரணாக உருமாறியது என்பதையும், பனியில் செத்து விழுந்தவர்களைப் புதைக்க்கூட முடியாதபடி நெருக்கடி எப்படி உருவாக்கபட்டது என்பதையும் சுக்ரோவ் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறார்

அதைக் காணும் போது ஒரு ரஷ்யனின் குரல் உலக வரலாற்றை நோக்கி கேள்வி எழுப்புகிறது என்றே தோன்றியது.

லூவர் ம்யூசியம் உருவாக்கபட்ட நாளில் இருந்து இன்றைய அதன் பெருமை வரை கூறும் இப்படம் கலை எப்போதுமே எதிர்காலத்தை முன்னறிவித்துவிடுகிறது எனக் கூறுகிறது.

குறிப்பாக லூவர் ம்யூசியம் இரண்டாம் உலகப்போரின் போது அழியப்போகிறது என்பதைப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே ஒரு ஒவியம் சித்தரிப்பதை சுட்டிக்காட்டுகிறார்.

எதிர்காலத்தை முன்னறிவித்துவிடும் கலை இலக்கியங்கள் அது யாரால் எப்படி நடைபெறப்போகிறது என்பதை அறிவிப்பதில்லை.

படத்தில் நெப்போலியன் ஒரு கதாபாத்திரமாக இடம்பெறுகிறார். தனது ஒவியத்தின் முன்பாக நெப்போலியன் நின்று உரையாடுகிறார். அந்தப் பிம்பமும் நெப்போலியனும் பொருத்திப் போக மறுக்கிறார்கள். ஒவியம் காட்டும் உலகம் முற்றிலும் வேறுவிதமாகயிருக்கிறது

மனித முகங்கள் ஏன் திரும்பத் திரும்ப வரையப்படுகின்றன என்ற கேள்வியை எழுப்பும் சுக்ரேவ். முகங்களே காலத்தின் அடையாளம். ஒவ்வொரு நூற்றாண்டிலும் மனித முகம் மாறிக் கொண்டேவருகிறது என்கிறார். அது உண்மை. ஒவியத்திலுள்ள முகங்களைக் காணும் போது இன்று அது போன்ற தோற்றம் கொண்டவர்கள் இல்லை என்பதை உணர முடிகிறது.

பிரான்ஸ் தேசத்தின் ஆன்மாவை ஒரு பெண்ணாகச் சித்தரிக்கிறார் சுக்ரோவ். சுதந்திரம், சமத்துவம்,. சகோதரத்துவம் மூன்றையும் அவள் வலியுறுத்திக் கொண்டேயிருக்கிறாள். அவளும் நெப்போலியனும் ஒன்றாக உரையாடுகிறார்கள். இது போன்ற கற்பனை அபாரமானது.

இன்னொரு காட்சியில் மோனோலிசா ஒவியத்தின் முன்பாக நின்றபடியே மரியான் பேசுகிறாள். மோனோலிசா நம்மைப் பார்த்துக் கொண்டிருப்பது போலவேயிருக்கிறது. கலைப்பொருட்களை இவ்வளவு கவித்துவமாக இதுவரை யாரும் படமாக்கியதில்லை. டிரோன் கேமிரா பாரீஸ் நகரத்தெருக்களில் மிதந்து செல்கிறது. குறிப்பாக ம்யூசியத்தின் மேலே ஒரு பறவை போலச் செல்லும் காட்சி வியப்பளிக்கிறது.

உண்மையில் சுக்ரோவ் லூவரின் கதையைக் கூறவில்லை. ஐரோப்பிய கலைகளின் ஆன்மா எதுவென ஆராய்ச்சி செய்கிறார். கலைகளின் வழியே மனித குலம் அடைந்த வளர்ச்சியை, உச்சங்களை அடையாளம் காட்டுகிறார். உலகப்போரும் வன்முறையும் கலையின் மகத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகிறார். கலைக்கும் அதிகாரத்திற்குமான உறவையும், கலை தன்னை உயிர்பித்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகளையும் விளக்குகிறார்.

அருங்காட்சியகம் என்பது வெறும் காட்சிக்கூடமில்லை. அது நாகரீகத்தின் அடையாளம். மனித குலம் கலைகளின் வழியே உச்சங்களைத் தொட்டதின் சாட்சி. அருங்காட்சியகத்தின் வரலாற்றைச் சொல்வதன் வழியே ஐரோப்பாவின் வரலாற்றை, நாகரீகத்தை அடையாளப்படுத்துகிறார். விரிவான ஆய்வுக்கட்டுரை ஒன்றை போலப் படம் உருவாக்கபட்டிருப்பதே அதன் தனித்துவம்.

அரிய ஒவியங்கள். சிற்பங்களை லூவரிலிருந்து மறைத்து வைத்தபிறகு ஒன்றிரண்டு சிற்பங்களே  மிச்சமிருக்கின்றன. அதைக் கைப்பற்றும் நாஜி ராணுவம் பெருமையோடு  கண்காட்சியைத் திறந்துவைக்கிறது. காலியான வெற்றிடத்தில் உள்ள ஒவியர்களின் பெயர்கள், சிற்ப மேடைகளைக் கேமிரா நெருங்கிப் போகிறது. அதிகாரத்தால் வெற்றிடத்தை மட்டுமே கைப்பற்றமுடியும் என்பது போலிருந்தது அக்காட்சி.

அழிக்கபட்ட லூவர் ம்யூசியம் மறுஉருவாக்கம் செய்யப்படும் போது மிக அழகாகத் திட்டமிடப்பட்டு உருவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.. லூவரில் ஒவ்வொரு கலைப்பிரிவிற்கும் ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவியங்களைப் பாதுகாக்க மிக விரிவான பாதாள அறைகள் உண்டாக்கபட்டுள்ளன. இன்று பிரான்ஸ் அரசு லூவர் ம்யூசியத்தைப் பாதுகாக்க விசேச ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

இந்தத் திரைப்படத்தைப் பார்க்கிறவர்கள் அரிய ஒவியங்களைத் திருடிப்போக ஜெர்மன் ராணுவம் முயன்ற போது. அதை எப்படிப் பிரான்ஸ் காப்பாற்றியது என்பதை அறிந்து கொள்ள John Frankenheimer இயக்கியThe Train படத்தை அவசியம் பார்க்க வேண்டும்.  ஒவியங்களை ஏற்றிச் செல்லும் ரயிலை எப்படித் திசைமாற்றம் கொள்ள வைத்தார்கள் என்பதைப் பரபரப்பாக எடுத்திருப்பார்கள்.

இது போலவே George Clooney இயக்கியThe Monuments Men நாஜி ராணுவத்தால் கொண்டுபோக்கபட்ட அரிய ஒவியங்களை மீட்பதற்காகச் செல்லும் ராணுவப்பிரிவின் செயல்பாடுகளைப் பற்றியது.

இரண்டாம் உலகப்போரின் போது ஏற்பட்ட அழிவுகளை ஒவியத்திலுள்ள மனிதர்களின் கண்கள் பார்த்தபடியே இருக்கின்றன. அழிவற்ற அந்தக் கண்கள் காலத்தின் சாட்சியம் போலிருக்கின்றன. கலைகளின் வழியே உலகம் தனது நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்கிறது. மீள்உருவாக்கம் செய்து கொள்கிறது என்பதே படம் சொல்லும் செய்தி.

வரலாற்றிலும் கலையிலும் ஆர்வம் கொண்டவர்களுக்கு இப்படம் நிச்சயம் பிடிக்கக்கூடும்

••.

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: