‘பத்மாவத்’: வரலாற்றின் மீது படரும் வெளிச்சம்

மிகுந்த சர்ச்சைகளுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளான ‘பத்மாவத்’ திரைப்படத்தைப் பார்த்தேன்.
வரலாற்றைப் படமாக்குவது எளிதில்லை. பெரும்பொருட்செலவில் பலநூறு மனிதர்களை ஒருங்கிணைத்துப் பிரம்மாண்டமாக படம் இயக்குவது பெரும் சவால். சஞ்சய் லீலா பன்சாலி இதில் பெரும் வெற்றிப் பெற்றிருக்கிறார் . கொண்டாட்டம்தான் படத்தின் ஆதாரத் தொனி. ஒளிரும் ஓவியங்களாக காட்சிகள் நகர்கின்றன. பிரம்மாண்ட அரங்குகள். வியப்பூட்டும் போர்களக் காட்சிகள், இனிமையான ஆடல்பாடல், சிறந்த நடிப்பு என இப்படம் பொழுதுபோக்கு சினிமாவின் அடுத்த அத்தியாயத்தைத் தொடங்கியிருக்கிறது. வீண்சந்தேகத்தின் பெயரால் உருவான எதிர்ப்புகள், போராட்டங்கள் அனைத்தையும் அர்த்தமற்றதாக்கிவிட்டது படம்.
இதுபோன்ற திரைப்படங்கள் இந்திய சினிமாவின் சந்தையை விஸ்தரிக்கின்றன. ஹாலிவுட் படங்களின் பிரம்மாண்டத்துக்கு நிகராக காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
‘காமோஷி’ தொடங்கி ‘பாஜிராவ் மஸ்தானி’ வரை சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான படங்கள் யாவும் வண்ணமயமான அனுபவத்தைத் தரக்கூடிய வெற்றிப் படங்களே.
பத்மாவதி வனத்தில் வேட்டையாடுகிற காட்சி, சித்தோடு அரண் மனையில் நடக்கும் தீபாவளி, ஹோலி, கவுரி பூஜை, சித்தோடை கில்ஜி முற்றுகையிடுவது, மணற்புயல் மற்றும் பனிப் புகையின் ஊடாக ஒளிரும் முகங்கள் என, படம் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஒளிப்பதிவாளர் சுதீப் சட்டர்ஜி மிகுந்த பாராட்டுக்குரியவர்.
நிகரற்ற அழகி பத்மாவதியாக மிடுக்காக வலம் வருகிறார் தீபிகா படுகோனே. பளபளக்கும் பட்டாடைகளும், வைர நகைகளும் மிளிர, தீபிகா திரையைத் தன்வசமாக்கிக் கொள்கிறார். அபாரமாக நடனமாடு கிறார். காதல், அவமானம், துயரம். தியாகம் என அவரது உணர்ச்சி வெளிப்பாடுகள் சிறப்பாகவுள்ளன
போருக்குப் புறப்படும் கணவனுக் குத் தலைப்பாகை அணிவித்து, ஊசியில் மணிகளைத் தைத்துவிடுவதும். நெருப்பை நோக்கி கம்பீரமாகப் போவதிலும் தீபிகா ஒளிர்கிறார். கில்ஜியின் மனைவி மெஹ்ருன்னிசாவாக வரும் அதிதி ராவ் வசீகர அழகுடன் பார்வையாளர்களை கவருகிறார்.
ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜியாகச் சிறப்பாக நடித்திருக்கிறார். வெறுப்பு, கசப்பு, பெண்ணாசை, ஆக்ரோஷம் கலந்து வெளிப்படும் உடல்மொழியும் முகபாவங்களுமாகத் திறமையாக நடித்துள்ளார். கவிதை பாடும்போது ஏற்படும் ஏற்ற இறக்கமும், மாலிக்கபூருடன் தன் காதலைப்பற்றிப் பேசுவதும் அபாரம். ரத்தன் சிங்காக நடித்துள்ள ஷாஹித் கபூர் கச்சிதமான உணர்ச்சி வெளிப்பாட்டின் மூலம் தேர்ந்த நடிகர் என்பதை நிரூபணம் செய்கிறார். படம் முழுவதும் நேரடி வன்முறை காட்சியைத் தவிர்த்திருக்கிறார் பன்சாலி. ராகவ் சாத்தனின் தலை துண்டிக்கபடுவது, நெருப்பில் பத்மாவத் இறங்குவது போன்றவை மறைமுகமாகவே காட்சிபடுத்தப்பட்டுள்ளன
அரண்மனையில் லாந்தர் விளக்கை உயர்த்தும் பத்மாவதியுடன் காதல் வசனம் பேசும் ரானா, பட்டுத் துணியில் கணவனின் கைரேகைகளைப் பதிந்துகொள்ளும் பத்மாவதி, முதன்முறையாகச் சித்தோடு வரும் பத்மாவதியின் அறிமுகம் எனக் கவித்துவமான காட்சிகள் நிரம்பியுள்ளன. கலை இயக்கம், படத்தொகுப்பு. ஒலியமைப்பு போன்ற தொழில்நுட்பத்தில் சர்வதேச தரத்தை தொட்டிருக்கிறது படம். குறிப்பாக நடனக் காட்சிகளிலும் போர்களக் காட்சிகளிலும் அரண்மனை முற்றுகை என ஒலித் துணுக்குகள் நாலா திசைகளில் இருந்தும் அலைவுறுவது அற்புதம். முதற்பகுதியில் திரைக்கதை பலவீனமாக இருப்பதே படத்தின் தொய்வுக்குக் காரணம்.
கவிஞர் மாலிக் முகமது ஜயாஸி என்பவர் பத்மாவதியின் கதையைக் காவியமாக எழுதியிருக்கிறார். அதன் அடிப்படையில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. காவியம் என்பதால் கற்பனை அதிகம் கொண்டுள்ளது.
‘பத்மாவத்’ படத்தின் கதை எளிதானது. கில்ஜி வம்சம் டெல்லியை ஆளத் தொடங்குகிறது. அதிகார வெறிக் கொண்ட அலாவூதின் கில்ஜி, சுல்தான் ஜலாலுதீன் கில்ஜியைக் கொன்று தானே சுல்தானாக மாறுகிறான். இன்னொருபுறம் சிங்கள இளவரசியான பத்மாவதியைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்கிறான் சித்தோடு அரசன் ராவல் ரத்தன் சிங்.
பத்மாவதி பேரழகி. போர்க் கலை அறிந்தவள். சிறந்த நடனக்காரி. அறிவாளி. ரத்தன்சிங்கின் நேசத்துக்குரிய மனைவியாக வாழ்கிறாள். பத்மாவதி யின் அழகைப் பற்றிக் கேள்விப்பட்டு அவளை அடைவதற்காக டெல்லி சுல்தான் கில்ஜி, சித்தோடை கைப்பற்ற சித்தோடு மீது படையெடுக்கிறான். ஆனால், முடியவில்லை. நட்பாக உறவாடுவதுபோல அரண்மனைக்குப் போய்ப் பத்மாவதியைக் காண்கிறான். அதுவும் கண்ணாடியில் தெரியும் பிம்பத்தை மட்டுமே. அவள் மீது மோகம் அதிகமாகி அவளை அடைவதற்காக அரசன் ராவல் ரத்தன்சிங்கை சிறை பிடித்து டெல்லி கொண்டுபோகிறான். பத்மாவதி டெல்லிக்குச் சென்று கணவன் ரத்தன்சிங்கை மீட்கிறாள். சினம் கொண்ட கில்ஜி மீண்டும் சித்தோடு மீது படையெடுக்கிறான். முடிவு என்னவாகிறது என்பதே படம்.
சித்தோடை கில்ஜி தாக்கி, சண்டையிட்டது வரலாற்று உண்மை. பத்மா வதி கதையும் அவளை அடைய வேண்டும் என, கில்ஜி படையெடுத்த தும் கற்பனை. கில்ஜி இறந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு எழுதப்பட்ட காவியத்தில் இருந்து உருவான கற்பனை. சித்தோடு ராணி பத்மாவதி அரண்மனையில் ஆடல் பாடல் எனச் சந்தோஷமாக நாட்களைக் கழிக்கிறாள். ரஜபுத்திர ராணிகள் மக்கள் மத்தியில் ஆடுவதில்லை, அது தவறான சித்தரிப்பு என்று கர்ணி சேனா அமைப்புக் கண்டிக்கிறது. இந்திய சினிமாவில் ஆடாத ராணிகளே கிடையாது. சினிமாவுக்கும் நிஜவரலாற்றுக்கும் உள்ள தொடர்பு என்பது, மகாத்மா காந்தி சாலையில் நடப்பவர்களைக் காந்திய வழியில் நடப்பதாக நினைத்துக்கொள்வது போன்றதே
படத்தில் மாலிக் கபூர் சித்தரிக்கபட்ட விதம் ஏற்புடையதாக இல்லை. இந்திய வரலாற்றில் மறக்க முடியாத மனிதன் மாலிக் கபூர்! திருநங்கை யான அவனுக்கு வைக்கப்பட்ட பெயர் ஹஸர் தினார். அதாவது 1,000 தினார் கொடுத்து வாங்கப்பட்ட அடிமை. மாலிக் கபூர் என்பது மன்னர் கொடுத்த பட்டம். போர்வீரனாக மாலிக் கபூர் பெற்ற வெற்றிகள் ஏராளம். ஆனால், இப்படத்தில் மாலிக் கபூர் அந்தப்புர சேவகன் போலவே சித்தரிக்கப்படுகிறான். ஒரேயொரு இடத்தில் மாலிக் கபூர் கில்ஜியின் மனைவி போன்றவன் என்றொரு வசனம் இடம்பெறுகிறது. வரலாற்றில் இடம்பெற்ற மாலிக் கபூருக்கும் இப்படத்தில் உள்ள மாலிக் கபூருக்கும் பெரிய இடைவெளியுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக்கதை நாடகமாக நிகழ்த்தப்பட்டுள்ளது. 1906-ல் ராணி பத்மினி கதையை கிஷோர் பிரசாத் வங்க மொழி நாடகமாக்கியிருக்கிறார். 1930-ல் இந்தக் கதையை தேவகி போஸ் மவுனப் படமாக எடுத்துள்ளார்
1963-ல் ‘சித்தூர் ராணி பத்மினி’ எனத் தமிழில் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் ‘மகாராணி பத்மினி’ என்ற பெயரில் ஹிந்தியிலும் வெளியானது. இது தவிர, ஷியாம் பெனகல் இயக்கிய டி.வி. சீரியல், ‘ஸோனி’ தொலைக்காட்சி சீரியல். தொடர்கதை, நாவல் எனப் பல விதத்தில் ராணி பத்மாவதி கதை வெளியாகியுள்ளது.
100 ஆண்டுகளாகப் பார்த்தும் கேட்டும் வந்த ராணி பத்மாவதி கதைக்கு இன்று ஏன் இத்தனை எதிர்ப்பு? போராட்டங்கள்? மதவாத சக்திகளின் ஆதாயத்துக்குக் கலையும், இலக்கியமும், பண்பாடும் குறிவைக்கப்படுவது கண்டிக்கத் தக்கது.
வரலாற்றை மையமாகக் கொண்ட கற்பனை என்றாலும் நிறைய இடங்களில் மீறல்களும், தவறான புரிதல் களும், சித்தரிப்புகளும் கொண்டிருப் பது இப்படத்தின் பலவீனம். டெல்லி யில் விஷம் தோய்ந்த அம்பால் கில்ஜி வீழ்த்தப்படுவது, அதைத் தொடர்ந்த சம்பவங்கள் போன்ற தேவையற்ற காட்சிகளை நீக்கி படத்தின் நீளத்தைக் குறைத்திருக்கலாம்.
‘பத்மாவத்’ படம் மூலம் வரலாற்று மனிதர்களைக் கண்முன்னே நிஜமாக உலவ விட்டிருக்கிறார் சஞ்சய் லீலா பன்சாலி. காலத்தின் திரை விலகி நாமே அவர்களை நேரடியாகக் காண்பது போலிருக்கிறது. திரையில் இதுவோர் அரிய சாதனை!
நன்றி
: தி இந்து நாளிதழ்
Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: