தமிழின் வரலாறு

தமிழ் மொழி, இலக்கியம், பண்பாட்டின் வரலாற்றை விரிவாக ஆய்வு செய்து மிகச்சிறப்பான நூலாக எழுதியிருக்கிறார் டேவிட் சுல்மான். தமிழாய்வில் மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் அறிஞர். ஜெருசலம் பல்கலைக்கழகத்தில் இந்தியவியல் மற்றும் சமய ஒப்பீட்டுத் துறையில்  பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அதன் உயராய்வு மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார்.

2000 வருட தமிழ் இலக்கிய வரலாற்றை எழுதுவது எளிதானதில்லை. தனது ஆழ்ந்த வாசிப்பு மற்றும் ஆய்வின் வழியே தமிழ் இலக்கிய வரலாற்றின் மீது புது வெளிச்சம் பாய்ச்சுகிறார் சுல்மான்.

தமிழ் மொழி எவ்வாறு உருவானது என அதன் வேர் சொல் ஆய்வில் துவங்கி தமிழ் எழுத்துகள் உருவான விதம், அதன் பின்னுள்ள தொன்மங்கள், இசைத்தன்மை, வரலாற்றில் தமிழ் மொழியும் தமிழ் இனமும் உருவான விதம், சிந்து சமவெளித் தொடர்பு எனச் சரித்திரப்பூர்வமாக ஆய்வு செய்திருக்கிறார்.

இலக்கண நூல்கள் உருவான விதம், அதன் பின்னுள்ள வரலாற்றுத் தகவல்கள், புராணச்செய்திகள். தொன்மங்கள். மாயக்கதைகள் அத்தனையும் ஒருசேரத்தருகிறார் என்பதால் ஆய்வுநூலை வாசிப்பது போலின்றி மேஜிகல் ரியலிச நாவல் ஒன்றைப் படிப்பது போல அத்தனை சுவாரஸ்யமாக வாசிக்கமுடிகிறது.

அகத்தியர் மற்றும் தொல்காப்பியரைப் பற்றிச் சுல்மான் உருவாக்கும் சித்திரம் முற்றிலும் புதுவகையானது.

தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியைப் பண்பாட்டுக் காரணிகளுடன் இணைந்து வாசிப்பதுடன் தமிழ் பண்பாட்டின் ஆதார அம்சங்கள் குறித்துச் சுல்மான் குறிப்பிடும் தகவல்கள். ஆய்வுகள் மிக முக்கியமானவை.

குறிப்பாகச் சங்க இலக்கியத் தொகை நூல்கள் மன்னர்களின் தலைமையில் தொகுக்கபட்டிருக்ககூடும் என்ற அவரது கண்ணோட்டம், பல்லவர்கள் தமிழ் இலக்கியத்திற்குச் செய்த பங்களிப்பு. தண்டி அலங்காரம் பற்றிய ஆய்வு போன்றவை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. சிலப்பதிகாரம், திருக்குறள் இரண்டினையும் பற்றி விரிவான அத்தியாயம் ஒன்றை எழுதியிருக்கிறார். அது இந்த நூலில் மிக முக்கியமான பகுதி. அது போலவே கவி காளமேகம் குறித்தும் இதுவரை இப்படியொரு தனித்துவமான பதிவை வாசித்ததில்லை. உரையாசிரியர்களின் முக்கியத்துவம், சமணப் பௌத்த தமிழ் கவிகள். இலக்கண ஆசிரியர்கள் பற்றிய விரிவான ஆய்வும் சிறப்பாக உள்ளது.

இலக்கண நூல்கள் உருவான விதம் குறித்து இத்தனை கதைகள். தொன்மங்கள் இருப்பதை அறியும் போது வியப்பாக இருக்கிறது. கடவுளே வந்து நேரடியாக இலக்கண சூத்திரங்களை அருளுகிறார் என்பதும், கடவுள் கவிஞராகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு தனது கவிதைக்கான அங்கீகாரம் கேட்பதை பற்றியும் சுல்மான் அழகாக விளக்குகிறார். கண்ணகி அறுத்தெறிந்த முலை தான் மதுரை மீனாட்சியின் மூன்றாம் முலையாகிவிட்டதோ எனக் கேட்கும் கேள்வி அதிர்வை உருவாக்கியது.

மாணவர்களுக்கு வகுப்பெடுக்கும் பேராசியர் போலவே கட்டுரைகளின் இடையில் இதுவரை படித்ததை நினைவில் வைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வது பாடம் கேட்பது போன்ற தொனியை ஏற்படுத்துகிறது.

பல்லவர்கள் பற்றி இலக்கியத்தில் ஏன் அதிகம் குறிப்புகள் காணப்படவில்லை. தமிழ் சங்கங்கள் உருவாக்கபட்ட விதம் எவ்வாறானது. அகத்தியர், தொல்காப்பியர், நக்கீரர், ஒட்டக்கூத்தர், சேக்கிழார், கம்பர். காரைக்கால் அம்மையார், ஆண்டாள், காளமேகம், மாணிக்கவாசகர், சித்தர்கள், நம்மாழ்வார், கடிகை முத்துப்புலவர் எனச் சுல்மான் தமிழின் ஒப்பற்ற கவியாளுமைகளின் காலத்தையும் அவர்களின் நிகரற்ற பங்களிப்பையும் விரிவாகச் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக அவர்களது காலத்தின் அரசியல் சமூகச் சூழல்கள். சமயத்தின் தாக்கம். வாழ்க்கை முறை இவற்றைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார்.

மணிப்பிரவாள நடை உருவான விதம். மலையாளத்தில் காணப்படும் மணிப்பிரவாளம். சமஸ்கிருத மொழிக்கும் தமிழுக்குமான தொடர்பும் எதிர்ப்புகளும், சிற்றிலக்கியங்களின் வருகை, தனிப்பாடல்கள் மரபின் தொடர்ச்சியாக உருவான விதம் எனச் சுல்மான் அடையாளம் காட்டும் செய்திகளும் ஆய்வு முடிவுகளும் விவாதிக்கவும் விரிவாக ஆய்வு செய்யவும் வேண்டிய களங்களாகும். அந்த வகையில் தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இது ஒரு தனித்துவமான ஆய்வு.

சங்க காலம் துவங்கி திராவிட இலக்கியம் வரை சுல்மானின் ஆய்வு விரிவாக அமைந்திருக்கிறது. தமிழ் நவீனத்துவம் உருவான விதம், அதன் பின்னிருந்த சமூகக் காரணிகள். காலமாற்றத்திற்கேற்ப தமிழ் தன்னைப் புதுப்பித்துக் கொள்ளும் விதம் என இந்த ஆய்வு தமிழின் சிறப்புகளை உலகறியச் செய்கிறது.

**
Tamil
A Biography
David Shulman
Harvard University Press
416 pages

**

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: