கேரள புத்தகக் கண்காட்சி

கேரள சாகித்ய அகாதமி சார்பில் திருச்சூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியைத் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றுவதற்காகச் சென்றிருந்தேன்.

தமிழகத்தில் எத்தனையோ புத்தகக் கண்காட்சிகள் நடைபெறுகின்றன. சென்னை புத்தகக் கண்காட்சி உள்ளிட்ட தமிழகத்தின் முக்கியப் புத்தகக் காட்சிகள் எதையும் எழுத்தாளர் எவரும் துவக்கி வைத்ததேயில்லை. தமிழகம் தரத்தயங்கிய கௌரவத்தைக் கேரளம் தந்திருக்கிறது. எழுத்தாளர்களை, கலைஞர்களை மதித்துக் கௌரவிப்பதில் கேரளம் முன்னோடி என்பதற்குச் சாட்சியாகவே இதைக் காண்கிறேன்.

விமான டிக்கெட் கொடுத்து ஐந்து நட்சத்திரவிடுதியில் தங்கவைத்துச் சிறப்பு விருந்தினராகச் சிறப்பான மரியாதைகள் செய்து என்னைக் கௌரவித்தது கேரள சாகித்ய அகாதமி.  அதன் தலைவர், செயலர் உறுப்பினர் எவரையும் எனக்கு முன்அறிமுகம் கிடையாது.

புத்தகக் கண்காட்சி துவக்கவிழா மேடையில் இருந்தவர்களில் 90 சதவீதம் எழுத்தாளர்கள். நிகழ்ச்சியில் முக்கிய எழுத்தாளர்கள். ஒவியர்கள். இசைக்கலைஞர்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

வைக்கம் முகமது பஷீர், தகழி, கேசவதேவ். பொன்குன்னம் வர்க்கி, பாரப்புரத்து, காக்கநாடன், பொற்றேகாட், உருபு, விகேஎன், மாதவிக்குட்டி, எம்.டி.வாசுதேவன் நாயர். மாதவிக்குட்டி, சேது, முகுந்தன், ஆனந்த், ஒ.வி. விஜயன், கோவிலன், லிலதாம்பிகை, சக்கரியா, சாராஜோசப், சி.வி. பாலகிருஷ்ணன், ஆற்றூர் ரவி வர்மா, டி.பி.ராஜீவன், கே. சச்சிதானந்தன், அய்யப்ப பணிக்கர், சுகுமார் ஆழிக்கோடு, குஞ்சுண்ணி மாஸ்டர், புனத்தில் குஞ்ஞப்துல்லா, அய்யப்பன், பாலச்சந்திரன் சுள்ளிகாடு, அசோகன் செருவில் ,உண்ணி, சந்தோஷ் ஏச்சிக்கானம், கே.ஆர்.மீரா, டாக்டர் ரகுராம், மனோஜ் குரூர் . கல்பட்றா நாராயணன், பென்யாமின், சிஹாபுதீன் பொய்த்தன்கடவு, என மலையாள எழுத்துலகின் முக்கியப் படைப்பாளிகள் அனைவரும் தமிழுக்கு அறிமுகமாகியிருக்கிறார்கள். மொழிபெயர்ப்பில் அவர்கள் நூல்கள் வாசிக்கக் கிடைக்கின்றன.

ஆனால் மலையாள இலக்கிய உலகிற்குச் சமகாலத் தமிழ் இலக்கியப் படைப்புகள் குறித்தும் கடந்த 25 வருஷங்களில் அறியப்பட்ட முக்கிய எழுத்தாளர்கள் பற்றியும் தெரிந்திருக்கவில்லை. ஒன்றிரண்டு தமிழ் எழுத்தாளர்களின் நூல்கள் மட்டுமே மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

ஆற்றூர் ரவிவர்மா முயற்சியால் தமிழ் நவீன கவிதைகள் மலையாளத்திற்கு அறிமுகமாகியுள்ளன. ஆனால் முக்கிய நாவல்கள், சிறுகதைகள் மலையாளத்திற்கு மொழிபெயர்க்கபடவில்லை. அதைச்சுட்டிக்காட்டி சமகாலத் தமிழ் சிறுகதைகளின் தொகுப்பு நூல் ஒன்றை மலையாளத்தில் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன். ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இதுபோலே மலையாள தமிழ் கவிஞர்களின் சந்திப்பு ஒன்றையும் கேரள சாகித்ய அகாதமியுடன் இணைந்து தேசாந்திரி சென்னையில் விரைவில் ஏற்பாடு செய்யும் என்றும் கூறினேன்.

டாக்டர் கே.பி.மோகனன் கேளர சாகித்ய அகாதமியின் செயலாளராக உள்ளார். இவரது தந்தை செருகாட் புகழ்பெற்ற எழுத்தாளர். மோகனனும் சிறந்த விமர்சனக்கட்டுரைகளை எழுதியிருக்கிறார். தேசாபிமானி இதழின் ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பும் தேர்ந்த இலக்கிய ரசனையும் கொண்டிருக்கிறார்

எழுத்தாளர் வைஷாகன் கேளர சாகித்ய அகாதமியின் தலைவர். இவரது மூன்று நூல்கள் தமிழில் வெளியாகியுள்ளன. ரயில்வேயில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்.

திருச்சூரிலுள்ள பழமையான கட்டிடம் ஒன்றில் கேரள சாகித்ய அகாதமி செயல்படுகிறது. முன்பு நீதிமன்றமாக இருந்த கட்டிடம் என்றார்கள். அதனுள் ஒரு லட்சம் புத்தகங்களுக்கும் மேல் உள்ள ஆய்வு நூலகம் செயல்பட்டு வருகிறது. அதைப் பார்வையிட்டேன். அரிய நூல்களை டிஜிட்டில் முறையில் ஆவணப்படுத்தி இணையத்தில் இலவசமாகப் பகிர்ந்து தருகிறார்கள். இதுவரை 7000 நூல்கள் அப்படிப் பதிவேற்றம் செய்துள்ளதாகத் தெரிவித்தார்கள். இந்த நூலகத்தில் அரிய தமிழ் நூல்களும் இடம்பெற்றுள்ளன.

கவிஞர் ஆற்றூர் ரவிவர்மா திருச்சூரில் வசிக்கிறார். அவரை இரண்டுமுறை சென்னை இசைவிழாவின் போது ம்யூசிக் அகாதமியில் சந்தித்திருக்கிறேன். சிறந்த கவிஞர், தேர்ந்த இசை ஆர்வலர். அவரது இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து உரையாடினேன். 87 வயதான அவருக்கு நினைவு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இலக்கியம் சார்ந்த விஷயங்களைக் கவனமாகவே எடுத்துச் சொல்கிறார். எனது நூல்களை அவருக்கு அளித்தேன். அவரது கவிதைத் தொகுதிகளில் கையெழுத்திட்டு எனக்கு அளித்தார்.

மலையாள எழுத்தாளர் ஆனந்த் என் விருப்பத்திற்குரியவர். அவரது எழுத்துமுறை அபாரமானது. தத்துவ வெளிச்சம் கொண்ட எழுத்து. அவரைச் சந்திக்க விரும்பினேன். சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

புத்தகக் கண்காட்சி துவங்கிய காலையில் எழுத்தாளர் டி.டி. ராமகிருஷ்ணனைச் சந்தித்தேன். 2005ல் அவர் என்னை வந்து சந்தித்து ஒரு நேர்காணல் செய்திருக்கிறார். பாஷாபோஷினியில் வெளியாகியிருக்கிறது. ரயில்வேயில் பணியாற்றியவர் என்பதால் சென்னை வரும்போதெல்லாம் வீட்டிற்கு வந்து போவார். இப்போது மலையாளத்தில் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவராக உச்சத்திலிருக்கிறார். அவரைச் சந்தித்த போது அதே அன்பும் நட்புடன் பழகினார்.

இரண்டு புத்தகங்கள் என்ற சிறுகதை மூலம் அறிமுகமான அசோகன் செருவில் மலையாளத்தின் முக்கியச் சிறுகதையாசிரியர். அவரைச் சந்தித்துப் பேசியது கூடுதல் மகிழ்ச்சி அளித்தது. அவரது சிறுகதைகளைச் சுஹானா மொழியாக்கம் செய்திருக்கிறார். வம்சி வெளியீடாக வந்துள்ளது. மலையாள சிறுகதையுலகில் அசோகன் செருவில் ஒரு தனிக்குரல். கவித்துவமான கதைகளை எழுதுகிறார். அவருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தேன்.

புத்தகக் கண்காட்சியில் நிறைய மொழிபெயர்ப்பு நூல்களைக் கண்டேன். சர்வதேச இலக்கியத்தின் சமகாலப் படைப்புகள் உடனுக்கு உடன் மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுவிடுகின்றன. இலக்கியப் புத்தகங்கள் மட்டுமின்றி அரசியல், சமூகவியல். ஆய்வு நூல்கள் என உலக அளவிலுள்ள முக்கியப் புத்தகங்கள் உடனடியாக மலையாத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன.

புத்தகக் கண்காட்சியில் ஆயிரம் பக்கங்களுக்கும் மேலாக உள்ள அகநானூறு புத்தகத்தைக் கண்டேன். விரிவான உரையுடன் கூடிய மலையாள மொழிபெயர்ப்பு. அதை ஒரு இளைஞன் ஆசையோடு வாங்கிக் கொண்டு போனான்.

புத்தகக் கண்காட்சியில் மதியம் துவங்கி மாலை வரை எழுத்தாளர்களின் சந்திப்பு, நூல்வெளியீடு, விவாத அரங்கு போன்றவற்றை நடத்துகிறார்கள். இரவில் இசைநிகழ்ச்சிகள். 7 மணி துவங்கி 10 வரை இசைநிகழ்ச்சி. தமிழில் இருந்து கரிசல்குயில் கிருஷ்ணசாமியை அழைத்திருக்கிறார்கள். நேற்று கஜல் கச்சேரி சிறப்பாக இருந்தது. வழக்கமான பட்டிமன்றம் சொற்பொழிவுகளுக்கு மாற்றாக இது சிறப்பான ஏற்பாடாகயிருந்தது.

புத்தகக் கண்காட்சியினை முன்னிட்டுச் சிறப்பு புல்லடின் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். அதில் என்னைப் பற்றிய அறிமுகக்குறிப்புடன் விரிவான கட்டுரை இடம்பெற்றுள்ளது.

கேரள புத்தகக் கண்காட்சியில் உரையாற்றும் போது எந்த மொழியில் எழுதினாலும் எழுத்தாளர்கள் யாவரும் ஒரே குடும்பதைச் சேர்ந்தவர்கள். சுதந்திரமே அவர்களின் வாழ்க்கைமுறை. உண்மையை எடுத்துச் சொல்வதும். உண்மைக்காகச் சமர் செய்வதுமே அவர்களின் வேலை. காலமே அவர்களின் ஆசான். நினைவுகளைக் கொண்டே அவர்கள் புனைவை உருவாக்குகிறார்கள்.

உங்கள் துயரை எனக்குத் தாருங்கள் என எழுத்தாளனே கைநீட்டி யாசிக்கிறான். அவன் உலகின் சகலதுயரங்களையும் உருமாற்றத் தெரிந்தவன். மொழியை வெளிச்சம் போலப் பரவச் செய்பவன்.

ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு கேரளா தமிழகத்தின் ஒரு பகுதியே. அன்றிருந்த அதே ஆறு, இன்றும் ஒடுகிறது. அன்றிருந்த சூரியன். அன்றிருந்த நிலவு. அன்றிருந்த காடு அப்படியே இருக்கிறது. மனிதர்கள் தேசங்களைப் பிரித்துவைக்கிறார்கள். இயற்கை ஒன்று சேர்த்துவைக்கிறது.

மதுரையில் இருந்து வஞ்சி நகருக்கு வந்த பாணன் கவிதை பாடி யானையைப் பரிசுபெற்றுப் போனதாகச் சங்க இலக்கியம் கூறுகிறது. நானும் அப்படியொரு மதுரையிலிருந்து வந்துள்ள பாணன் தான். என் கதைகளை உங்களிடம் கொண்டுவந்திருக்கிறேன். நான் யாசிப்பது உங்களது அன்பின் ஒரு துளியை மட்டுமே. அதைச் சுமந்து செல்வதையே பெரிதாகக் கருதுவேன்.

நீண்ட காலத்தின் பின்பு ஜென் கவி பாஷோ தனது வீடு திரும்பினார். அவரது அன்னை இறந்து போய்விட்ட போது கூடப் பாஷோ இறுதி சடங்குகளில் கலந்து கொள்ளவில்லை.

நீண்ட நாட்களின் பின்பு வீடு வந்து சேர்ந்த பாஷோவிற்கு அவரது சகோதரன் ஒரு பரிசை அளித்தான். என்ன பரிசு தெரியுமா. தாயின் நரைமுடி. அதை நகைப்பெட்டி ஒன்றில் பாதுகாத்து வைத்திருந்தான். தாயின் கூந்தலில் இருந்த ஒற்றை நரைமயிரை அவன் பாஷோவிடம் வைத்து ஒப்படைத்தான். அதைக் கண்டு நெகிழ்ந்து பாஷோ கவிதையொன்றைப் பாடியிருக்கிறார்.

மௌனம் தான் வெண்ணிற நரைமயிராக மாறிவிடுகிறதோ எனத்தோன்றுகிறது.

மௌனத்திற்கு நிறம் ஒன்று இருந்தால் அது வெண்மையாகத் தான் இருக்குமோ

சங்க இலக்கியத்தில் பெயர் அறியாத கவிஞர்களின் 102 கவிதைகளும் இடம்பெற்றுள்ளன. கபிலருக்கும் பரணருக்கும் நிகராகப் பெயர் அறியாதவனின் கவிதையை முதன்மைப்படுத்தியது தமிழ் இலக்கியம். அந்த மரபின் தொடர்ச்சியாக எழுதுகிறவன் என்ற பெருமையோடு இங்கே நிற்கிறேன்.

மலையாள இலக்கியத்தின் மகத்தான எழுத்தாளர்கள் பலரையும் கற்றிருக்கிறேன். அவர்களும் எனக்கு ஆசான்களே. எனக்கூறி பல்வேறு முக்கிய மலையாள எழுத்தாளர்களைப் பற்றியும் அவர்களின் படைப்புகள் பற்றியும் எடுத்துப் பேசினேன். நிகழ்ச்சியில் தமிழில் தான் உரையாற்றினேன். பொதுமக்கள் புரிந்து கொள்வதில் ஒரு சிரமமும் ஏற்படவில்லை. ரசித்துக் கேட்டுப் பாராட்டினார்கள்

மாலையில் பத்திரிக்கையாளர்கள் பலர் நேர்காணல் செய்தார்கள். இன்று விரிவான செய்தியுடன்  உரையின் சாரம் நாளிதழ்களில் வெளியாகியுள்ளது.

இந்தப் பயணம் சகோதரனின் வீட்டிற்குச் சென்று உறவாடித்திரும்பியது போலவே இருந்தது. இந்த நட்புறவும் அன்பும் வளர வேண்டும் என்றே விரும்புகிறேன்.

கேரள சாகித்ய அகாதமிக்கு மனம் நிறைந்த அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்

••

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: