நீதியின் பதாகை

இந்த ஆண்டிற்கான ஆஸ்கார் விருது பரிந்துரையிலுள்ள Three Billboards Outside Ebbing, Missouri படத்தை நேற்று பார்த்தேன். இப்படம் கோல்டன் க்ளோப் விருது பெற்றுள்ளது. நிச்சயம் இதற்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆஸ்கார் விருதுகள் கிடைக்ககூடும். குறிப்பாக நீதிக்காகப் போராடும் தாயாக நடித்துள்ள Frances McDormand விருதை வெல்வார் என நம்புகிறேன்.
ஏழு மாதங்களுக்கு முன்பு, வன்புணர்ச்சி செய்து கொலை செய்யப்பட்ட தனது மகளுக்கு நீதி வேண்டும் எனக் கேட்டு மில்ட்ரட் போராடுகிறாள். காவல்துறை குற்றவாளி யாரெனக் கண்டறிந்து கைது செய்ய மறுக்கிறது.
மறுக்கபடும் நீதியைப் பெறுவதற்காக அவள் புதிய வழி ஒன்றை கையாளத் துவங்குகிறாள். படம் அங்கிருந்தே துவங்குகிறது.
பிரதான சாலையின் ஒரு பக்கம் மூன்று விளம்பர பலகைகள் காணப்படுகின்றன. மூன்றும் இப்போது உபயோகத்தில் இல்லாதவை. உடைந்து, சிதைந்து காணப்படுகின்றன. அதைத் தனது காரில் இருந்தபடியே மில்ட்ரட் பார்வையிடுகிறாள்.
அந்த விளம்பர நிறுவனத்தைத் தேடிப் போய் மூன்று விளம்பர பலகைகளையும் வாடகைக்கு எடுக்கிறாள். இரவோடு இரவாக அந்த விளம்பர பலகைகளில் காவல்துறைக்கு எதிராக”RAPED WHILE DYING”, “AND STILL NO ARRESTS?”, “HOW COME, CHIEF WILLOUGHBY?” எனப் பெரிய விளம்பரத்தை வைக்கிறாள்.
இது காவல்துறையின் கோபத்தைத் தூண்டுகிறது. குறிப்பாகக் காவல்துறை அதிகாரி ஜேசன் டிக்சன் ஆத்திரம் கொள்கிறான். விளம்பர நிறுவனத்தை மிரட்டுகிறான். மில்ட்ரட்டை எச்சரிக்கச் செய்கிறான். ஆனால் அவள் ஏன் இப்படியொரு விளம்பரம் வைத்தேன் எனத் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேர்காணல் தருகிறாள். இதனால் விஷயம் பரபரப்பாகிறது.
காவல்துறை உயரதிகாரி வில்லோ மில்ட்ரெட்டின் ஆவேசத்தைப் புரிந்து கொண்டு மறுவிசாரணையைத் துவக்குகிறார். அவர் புற்றுநோயால் பாதிக்கபட்டவர். உள்ளுற மரணம் அவரைத் துரத்திக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் மில்ட்ரட்டை பாதிரியார் துவங்கி பல்டாக்டர் வரை பலரும் போராட்டத்தைக் கைவிடும்படியும் விளம்பர பலகையை நீக்கும்படியும் கண்டிக்கிறார்கள். மில்ட்ரட் உறுதியாக இருக்கிறாள். ஆவேசத்துடன் அவர்கள் மீது பாய்கிறாள். பல்டாக்டரின் கையைத் துளையிட்டு ரத்தம் கொப்பளிக்க வைக்கிறாள்.
இதனால் காவல்துறையால் விசாரணைக்கு அழைக்கபடுகிறாள். அவளது மகன் பொய்குற்றத்தின் காரணமாகக் கைது செய்யப்படுகிறாள். நீதி கேட்கும் அவளது வாயை அடைப்பதற்காகக் காவல்துறை எல்லா வழிமுறைகளையும் கையாளுகிறது.
இதனிடையில் வில்லோ தற்கொலை செய்து கொண்டுவிடுகிறார். இதற்குக் காரணம் மில்ட்ரட் தந்த மனஉளைச்சலே எனக்கருதும் ஜேசன் விளம்பர நிறுவன உரிமையாளரை அடித்து உதைத்ததோடு விளம்பர பலகைகளையும் தீவைத்து எரிக்கிறான்.
இதனைப் பொறுக்கமுடியாத மில்ட்ரட் பழிவாங்கும் விதமாகக் காவல்நிலையத்திற்குத் தீவைக்கிறாள். மில்ட்ரட்டிற்கு நீதி கிடைத்தா, ஜேசன் என்ன ஆனான் என்பதையும் யார் கொலை செய்திருப்பார்கள் என்பதையும் நோக்கி படம் நகருகிறது
படம் துவங்கிய மூன்றாவது நிமிசமே பரபரப்பாகிவிடுகிறது என்பதே இத்திரைக்கதையின் வெற்றி. காவல்துறைக்கு எதிராகப் போராட்டம் செய்யும் பெண்ணின் கதையைக் கூற வந்த இயக்குனர் காவல்துறைக்குள் உள்ள மனிதர்களின் மனசாட்சியை, குடும்ப வாழ்க்கையை, உறவை அழகாக விளக்குகிறார் என்பதே இப்படத்தின் தனித்துவம். அதிலும் குறிப்பாக மோசமான மனிதனாகச் சித்தரிக்கபடும் ஜேசனுக்கும் அவனது அம்மாவிற்குமான உறவு அழகாகச் சித்தரிக்கபட்டுள்ளது
பிரான்செஸ் மெக்டோர்மாண்ட் மில்ட்ரட்டாக நடித்துள்ளார். காரில் இருந்தபடியே விளம்பர பலகையை வெறித்துப்பார்க்கும் முதற்காட்சியில் துவங்கி படத்தின் இறுதிவரை அவரது முகத்தில் வெளிப்படும் ஆவேசம், இறந்து போன மகளுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோபம், காவல்துறையின் அடக்குமுறையை மீறும் தைரியம், தன்னை யாரும் புரிந்து கொள்ள மறுக்கிறார்களே என்ற ஆதங்கம் என அற்புதமாக நடித்திருக்கிறார்.
ஒரு காட்சியில் அவளது முன்னாள் கணவன் வீடு தேடி வந்து அவளை மிரட்டும் போது அவளிடம் காணப்படும் அலட்சியம், கொப்பளிக்கும் கோபம், அவளைக் கொன்றுவிடுவேன் எனக் கணவன் கழுத்தை நெறிக்க முற்படும் போது அவளது மகன் கத்தியோடு பாய்ந்து வருவது. பின்பு எதுவும் நடக்காதது போல அவள் உணவுமேஜையில் அமர்ந்து கணவனைப் பார்க்குமிடம் எனத் தேர்ந்த நடிப்பின் உச்சத்தை வெளிப்படுத்துகிறார்.
வில்லோ என்ற புற்றுநோய் பாதித்த காவல்துறை அதிகாரியாக வூடி ஹாரெல்சன் சிறப்பாக நடித்துள்ளார். இனவெறியுள்ள காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள சாம் ராக்வெலின் உடல்மொழி அபாரமானது. குறிப்பாக விளம்பர நிறுவன உரிமையாளரைத் தாக்குவதற்காக அவர் ஆவேசத்துடன் செல்லும் காட்சி, காவல்நிலையத்தில் மில்ட்ரட் வந்து தனது மகனை விடுவிக்கும்படி கேட்கும் காட்சி, தீவிபத்தில் இருந்து மீண்டுவரும் காட்சி என வெகுசிறப்பாக நடித்துள்ளார்.
மார்டின் மெக்டோனாக் படத்தை இயக்கியுள்ளார். இவர் சிறந்த நாடக ஆசிரியர். திரைக்கதையைச் சிறப்பாக எழுதியிருக்கிறார். சிறந்த திரைக்கதைக்கான கோல்டன் க்ளோப் விருது கிடைத்திருக்கிறது. படம் மெல்ல சூடுபிடித்து உச்சத்தைத் தொடுகிறது. கதையை விட்டு விலகாமல் படம் பயணித்திருப்பதும். அழுத்தமான கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பதும் இப்படத்தின் தனிச்சிறப்பு.
பென் டேவிஸ் ஒளிப்பதிவு நேர்த்தியாகவுள்ளது. குறிப்பாகக் காவல்நிலையத்தைத் தாக்கும் காட்சி, விளம்பர பலகைகளை எரிக்கும் காட்சி, மில்ட்ரட்டின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக அவளுடனே பயணிக்கும் கேமிரா கோணங்கள் என அழகாகப் படமாக்கியிருக்கிறார்.
விளம்பர பலகைகள் என்பது வர்த்த நிறுவனங்களுக்கானது. நுகர்வோரை வசீகரிக்கச் செய்யப்படும் தந்திரம் என்றே அறிந்திருந்திருக்கிறோம். அந்த விளம்பர பலகைகைளை மில்ட்ரட் நீதிகேட்கும் பதாகைகளாக மாற்றுகிறார் என்பதில் இருந்தே படம் உண்மையை நோக்கி நகரத்துவங்குகிறது. விளம்பர பலகைகளை வாசித்துக் கடந்துவிடுகிறவர்களின் மனசாட்சியை மில்ட்ரட்டின் வாசகங்கள் தொடுகின்றன. ஒரு நேரத்தில் காவல்துறை அதிகாரி வில்லோவே அந்த விளம்பர பலகைக்காக ஒரு மாத கட்டணத்தைச் செலுத்துகிறான் என்பது அபாரம்.
நீதி மறுக்கபடும் எளியோர் இப்படித்தான் நீதிகேட்பார்கள். படத்தில் இறந்து போன இளம்பெண் ஏஞ்சலா பற்றிக் காட்சிகள் இல்லை. அவள் கொல்லபட்ட இடத்தில் மில்ட்ரட் நின்று கொண்டிருக்கும் போது ஒரு மான் அருகில் வந்து நிற்கிறது. அந்த மானிடம் மில்ட்ரட் பேசுகிறாள். அந்தக் காட்சி இறந்து போன மகளின் மீதான அன்பை வெளிப்படுத்தும் சிறந்த உதாரணம்
இப்படம் ஏழு ஆஸ்கார் விருதுகளுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இரண்டோ மூன்றோ வெல்லக்கூடும் என்றே தோன்றுகிறது
••.
Archives
Calendar
February 2018
M T W T F S S
« Jan    
 1234
567891011
12131415161718
19202122232425
262728  
Subscribe

Enter your email address: