பாண்டிச்சேரியில் ஒரு நாள்.

எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களின் மகன் திருமண வரவேற்பில் கலந்து கொள்வதற்காகப் பாண்டிச்சேரி சென்றிருந்தேன். புகைப்படக்கலைஞரும் எனது நண்பருமான இளவேனில் வரவேற்று சிறப்பான உபசரிப்புகளைச் செய்தார்.

மாலையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணன் அவர்களைச் சந்திப்பதற்காக அவரது வீட்டிற்குச் சென்றிருந்தேன். முன்னதாகத் திரைக்கலைஞர் சிவக்குமார் அவரைக் காண்பதற்காக வந்திருந்தார். சிவக்குமார் எழுத்தாளர்களின் மீது மிகுந்த அன்பு செலுத்துபவர். கி.ரா குடும்பத்துடன் அவர் மகிழ்ச்சியாக உரையாடிக் கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் உற்சாகமாக வரவேற்றார்.

கி.ரா பூரண ஆரோக்கியத்துடன் தெளிவான நினைவாற்றலுடன் இருந்தார். கி.ராவைச் சந்தித்து உரையாடுவது மிகுந்த உத்வேகம் தரக்கூடியது. அவரது குடும்பத்தினர்கள் அனைவரையும் அறிவேன் என்பதால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தேன்.

கோபல்ல கிராமம் நாவல் பிரெஞ்சில் வெளியாகியிருப்பதைக் காட்டினார். இதை நோபல் பரிசுக்கு சிபாரிசு செய்ய வேண்டும் எனக்கூறினேன். என்னோடு வந்திருந்த பாலாவும் ஹர்சினியும் கி.ராவை நிறையப் புகைப்படங்கள் எடுத்தார்கள்.  எதற்கு இவ்வளவு புகைப்படங்கள் எனக் கி.ரா சிரித்துக் கொண்டார்.

தான் பிறந்து வாழ்ந்த இடைசெவல் இப்போது மாறிவிட்டது.. தன் நண்பர்கள் பலரும் இறந்துவிட்டார்கள். ஆகவே ஊருக்குப் போக வேண்டும் என்ற நினைப்பேயில்லை என்றார் கிரா.

பேச்சு மதகுரு நாவலைப் பற்றித் திரும்பியது. செல்மா லாகெர்லவ்வின் நாவலை தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார். தேவமலர் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். பேச்சின் நடுவில் காபியும் வடையும் தந்தார்கள்.

ஞானபீடம் விருது அவருக்குக் கிடைக்க வேண்டும் என்ற ஆசையைச் சொன்னேன். அது ஒன்றும் பெரிய விஷயமில்லை என்பது போலத் தலையாட்டினார்.

இளந்தலைமுறையினர் கிராவை வாசிக்கிறார்கள். அவரது புனைவுகளின் தனித்துவம் குறித்துப் பேசுகிறார்கள் என்பதை எடுத்துச் சொன்னேன். அது தான் அவரை மிகுந்த மகிழ்ச்சிக்குள்ளாக்கியது

முன்னதாக எழுத்தாளர் ரமேஷ் பிரேதனைச் சந்திக்கச் சென்றிருந்தேன். பக்கவாதம் தாக்கி கைகால்கள் செயல்படாமல் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருகிறார். இணையத்தின் வழியே என் வாசகர்கள் பலர் அவருக்கு நிதி உதவி அளித்தவிஷயம் பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். அதற்காக உணர்ச்சிபூர்வமாக நன்றி சொன்னார்.

ஒரு விரலைக் கொண்டு தான் தொடர்ந்து எழுதி வருவதாகச் சொன்னார். ரமேஷ் சிறந்த கவிஞர். நாவலாசிரியர். கோணங்கியோடு பலமுறை அவரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். எப்போதும் உற்சாகமாக இருப்பார். இப்போது ஒற்றை அறைக்குள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாதபடியே அவர் வாழ்ந்து வருவதைக் காண வருத்தமாகயிருந்தது.

பிரபஞ்சனின் கடைசிப் பையன் திருமணமது. வரவேற்பில் பேராசிரியர் பஞ்சாங்கம், பேராசிரியர் ரவிக்குமார். சுந்தரபுத்தன். வேடியப்பன் உள்ளிட்ட பல நண்பர்களைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன். ஏராளமான அரசியல்பிரபலங்கள், தலைவர்கள் வந்து வாழ்த்திப் போனார்கள்.

பிரபஞ்சன் பட்டுவேஷ்டி சட்டையில் மிக அழகாகயிருந்தார். தனது கடைசிக் கடைமையை முடித்துவிட்டேன். இனி நிம்மதியாக இருப்பேன் என்றார். ஒரு தந்தையின் சந்தோஷமது.

சண்டே பஜாருக்குப் போய்ப் பழைய புத்தகக் கடைகளில் தேடி இரண்டு புத்தகங்கள் வாங்கினேன். புகைப்படக்கலைஞர் மது எங்களுடன் வந்திருந்தார். தேநீர் விடுதியில் வைத்து அவர் எடுத்த புகைப்படங்களைக் காட்டிக் கொண்டிருந்தார். மிகச்சிறந்த புகைப்படங்கள். ஒவியத்தின் நேர்த்தியும் அழகும் கொண்டதாகயிருந்தன. வியந்து பாராட்டினேன்.

இளவேனில் என்னை நிறையப் புகைப்படங்கள் எடுத்தார். எழுத்தாளர்கள் சுந்தர ராமசாமி, கிரா. எனத் துவங்கி பலரையும் இளவேனில் அற்புதமாகப் படம் எடுத்திருக்கிறார். அவர் தொழில்முறை புகைப்படக்கலைஞர். கிரா பற்றிச் சிறந்த ஆவணப்படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார்.

மதியம் நான் வந்தது முதல் இரவு பத்துவரை தனது எல்லாவேலைகளையும் போட்டுவிட்டு இளவேனில் உடனிருந்தது மிகுந்த மகிழ்ச்சி தந்தது. நன்றி இளவேனில்

இரவில் காரில் வீடு திரும்பி வந்து கொண்டிருந்த போது கிராவின் முகம் மனதில் அலையாடிக் கொண்டேயிருந்தது. மகாபாரதத்தில் வரும் பீஷ்மர் போன்றவர் கிரா. மண்ணையும் மனிதர்களையும் இவர் போல எழுதியவர் எவருமில்லை. கரிசல் இலக்கியத்தின் பிதாமகர். அவருக்குப் பத்மவிபூஷன் விருது அளிக்கபட்டிருக்க வேண்டும். எழுத்தாளர்களின் சார்பில் நாம் அனைவரும் இதற்காகக் குரல் கொடுக்க வேண்டும் என்று தோன்றியது.

முன்னோடிகளின் ஆசியே ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கும் சிறந்த பரிசு. அந்த வகையில் கிராவின் அன்பும் ஆசியும் பெற்றதும் நிறைவான மகிழ்ச்சியைத் தந்தது.

•••

11.02.2018

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: