விஷமாகும் காய்கனிகள்

காரைக்காலில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தேன். வழியில் வாரச் சந்தையொன்றைக் கண்டேன். காரை விட்டு இறங்கி சந்தைக்குச் சென்றேன். காலையில் பறித்து வந்த பசுமையான காய்கறிகள். பழவகைகள். மிகப்பெரிய சந்தையது. மக்கள் பைநிறைய காய்கறிகளை வாங்கிக் கொண்டு போனார்கள்.

புதுச்சேரி மாநிலத்தில் வாரச்சந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. விவசாயிகள் நேரடியாக வணிகம் செய்கிறார்கள். தமிழகத்தில் திட்டமிட்டு உழவர்சந்தை அழிக்கபட்டது. கலைஞர் ஆட்சி கொண்டு வந்த சிறந்த திட்டங்களில் ஒன்று உழவர் சந்தை. அதன் பயன் நேரடியாக மக்களுக்குக் கிடைத்தது.

நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். எங்கள் நிலத்தில் விளைந்த காய்கறிகளை மட்டுமே எனது பள்ளிவயது வரை சாப்பிட்டிருக்கிறேன். பீன்ஸ், பட்டர் பீன்ஸ், முட்டைக்கோஸ், கேரட் ,பீட்ரூட் போன்றவை மட்டுமே மதுரைக்குப் போய் அப்பா வாங்கி வருவார். அந்தக் காய்கறிகளுக்குச் சீமைக் காய்கறிகள் என்றே பெயர்.

நாட்டுகாய்கறிகளாக அறியப்படும் கத்திரிக்காய்,துவரங்காய், சுரைக்காய், பீர்க்காங்காய், அவரைக்காய். நாட்டுதக்காளி, சுண்டைக்காய், வெண்டைக்காய், பூசணி போன்றவையே அன்றாட உணவில் இடம் பெற்றன. நாட்டுக் கத்திரிக்காய்களுக்கு மண்ணுக்கு ஏற்பவே ருசியிருக்கும். ஆகவே எந்த ஊர் கத்தரிக்காய் என்று கேட்டு வாங்கியே சமைப்பார்கள். அதிலும் பிஞ்சுக் கத்திரிக்காய்களை அப்படியே பறித்துச் சாப்பிடுவதும் வழக்கம்.

காய்கறிகளைத் தேடிப்பார்த்து வாங்குவது எனக்குப் பிடிக்கும். காய்கறிகளின் மணம், நிறம் எனக்கு விருப்பமானது. இதற்காக நேரடியாக நானே சென்று காய்கனிகளை வாங்கி வருவேன்.

சென்னையின் கோயம்பேட்டில் கிடைக்கும் காய்கறிகள் பிரெஷ்ஷாக உள்ளன. ஒப்பீட்டளவில் விலையும் குறைவே. ஆனால் சில்லறை விற்பனை நிலையங்களில். அதுவும் குளிர்சாதன கடைகளில் கிடைக்கும் காய்கறிகளில் பெருமளவு மோசடிகளே.

காய்கறிகளின் சில்லறை வணிகம் முற்றிலும் சீர்கெட்டுப் போயிருக்கிறது. காய்கறிக்கடைகளை ஏசி செய்து வைப்பார்கள் எனக் கனவில் கூட நான் நினைத்து பார்த்திருக்கவில்லை. அந்தக் கடை நடத்துபவர்கள் எந்தக் காயை உலர வைக்க வேண்டும். எதைக் குளிர்ச்சியில் வைக்க வேண்டும் என்று அறிந்திருக்கவில்லை.

நாள்பட்ட காய்கறிகளைக் காலையில் கடையைத் திறந்தவுடன் துடைத்து அதற்கென்று உள்ள ரசயான கலவையைப் பூசி பழையபடி பிரெஷ்ஷான காய்கறியாக உருமாற்றுகிறார்கள். காலை ஏழுமணிக்கு இது போன்ற கடை ஒன்றுக்குக் கேரட் வாங்கச் சென்ற போது அங்கே இரண்டு பணிப்பெண்கள் ஸ்பிரே மூலம் காய்கறிகளைத் துடைத்துச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள்.

அது என்ன ஸ்பிரே எனக்கேட்டேன்.

இதைக் காய்கறிகள் மீது தெளித்தால் பளிச்சென்றிருக்கும். மூன்று நாட்கள் வரை கெட்டுப்போகாது என்றார்கள்.

இந்த ஸ்பிரே செய்யப்பட்ட காய்கறிகளைச் சாப்பிட்டால் உடல் நலனுக்குக் கெடுதி. அதை அறியாமல் மக்கள் குளிர்சாதனமிட்ட கடைகளில் விற்பனை செய்யும் காய்கறிகளை அநியாயவிலை கொடுத்து வாங்குகிறார்கள்.

காய்கறி கடை என்றாலே வாசனை வர வேண்டும். திறந்த வடிவில் அமைக்கப் பட்டிருக்க வேண்டும். பசுமை மாறாமல் இருக்க வேண்டும். கிழங்கு வகைகள் வெயில் பட வேண்டும், அதை எந்தப் புத்திசாலி கண்ணாடி கதவுகள் கொண்ட குளிர்சாதன அறைக்குள் கொண்டு போய் வைத்தவன்.

பெருநகர மக்கள் அன்றாடம் விஷமாகும் காய்கனிகளைத் தான் விலை கொடுத்து வாங்கி உண்ணுகிறார்கள்

காய்கனிகள் விற்பனையில் ஒரு தரக்கட்டுபாடும், பரிசோதனைகளும் கிடையாது. விலையும் அவர்கள் முடிவு செய்வதே. குறிப்பாக விசேச நாட்களில் காய்கறிகளின் விலை அநியாயமான விற்கபடுகிறது. காய்கனி சந்தையில் நடைபெறும் முறைகேடுகளுக்கு விடிவே கிடையாதா.

இவ்வளவிற்கும் இந்தச் சந்தையில் ஈடுபடும் வணிகர்களில் பலரும் எளிய மனிதர்களே. அவர்கள் எதையும் எப்படியும் விற்று பணமாக்கிவிட வேண்டும் என்ற சிந்தைக்கு எப்படி மாறினார்கள். வாடிப்போன காய்கறி என்றால் விலை குறைத்துவிட வேண்டும் என்று தான் முந்தைய தலைமுறை வணிகம் செய்தது. இதிலும் நேற்று காய்கறி என்றால் ஒரு பெண்ணும் வாங்க மாட்டார்கள். இன்றைக்குக் குளிர்சாதனமிட்ட கடைகளில் விற்கபடும் காய்கறிகள் பத்து நாட்களுக்கு முந்தியவை. அதைப் பற்றி யாரும் கவலைப்படுவதேயில்லை.

நாம் செய்ய வேண்டிய முதற்காரியம் குளிர்சாதன காய்கனி கடைகளைப் புறக்கணிக்க வேண்டியதே.

காய்கறிகள் வாங்க இத்தனை பாடு என்றால் நல்ல பழங்கள் வாங்குவதற்கு அடையும் சிரமங்கள் அளவில்லாதவை. பெட்டிகடைகளில் இருந்து நாட்டு வாழைப்பழங்கள் மறைந்து போய்ப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன. சென்னையில் ஒரு இடத்தில் கூட நாட்டுவாழைப்பழம் விற்கபடுவதில்லை. காரணம் குளிர்பான நிறுவனங்கள் அதை விற்ககூடாது எனத் தடுக்கிறார்கள்.

இலவசமாகக் குளிர்பதப்பெட்டியை வழங்கி அது கண்ணில் படும்படியாக இருக்க வேண்டும் என வாழைத்தார்களை வைக்கவிடுவதில்லை. இன்னொரு பக்கம் நாட்டுவாழைப்பழங்கள் சந்தையில் கிடைப்பதில்லை. பச்சை, மஞ்சள், கற்பூரம் போன்ற வாழைபழங்கள் மட்டுமே சந்தையில் அதிகம் கிடைக்கின்றன.

அதுவும் காயாகப் பறிக்கபட்டு ரசாயனத்தில் மூலம் நிறம் மாற்றம் செய்யப்பட்டவை. இந்தக் காய்களைக் குடோனில் வைத்து தெளிப்பான் மூலம் நிறமாற்றம் செய்கிறார்கள். மஞ்சளாகக் கனிந்த நிலையில் பழம் வெளித் தோற்றமிருக்கும். ஆனால் உள்ளே இருப்பதோ காய். அதைச் சாப்பிடுகிறவர்களுக்கு நிச்சயம் வயிற்றுஉபாதைகள் உருவாகும் என்பதே நிஜம்.

இது போலவே ஆப்பிள் பழத்தில் மெழுகுபூசிவிடுகிறார்கள். இந்த மெழுகை கழுவினால் கறுப்பாக வழிந்தோடுகிறது. சில மெழுகு வகைகள் எவ்வளவு கழுவினாலும் போகாது. ஆகவே தோலைத் துண்டித்துவிட்டுச் சாப்பிடுங்கள் எனப் பழக்கடைக்காரர்களே கூறுகிறார்கள். ஆரஞ்சு பழத்தை வாங்கிச் சுளைகளை எடுத்து வாயில் போட்டால் கசப்பு நாக்கில் படிகிறது. எப்படி இவ்வளவு கசப்பு வந்தது. காரணம் பழக்கடைக்காரருக்குத் தெரியாது. எந்த ஊர் ஆரஞ்சு எனக் கேட்டால் நாக்பூர் எனப் பொதுவாகச் சொல்கிறார்கள். ஆனால் இது நாக்பூரில் விளையும் ஆரஞ்சு பழமில்லை. நஞ்சூட்டப்பட்ட பழங்கள் என்றே சொல்வேன்

கிராம சந்தையைப் புதுச்சேரி அரசு முறையாக நடத்துகிறது. இரண்டு பை நிறையக் காய்கறிகளை வாங்கினேன். விலை ரூபாய் 180 மட்டுமே. இந்தக் காய்கறிகளை ஒருவேளை சென்னையில் வாங்கியிருந்தால் ஆயிரம் ரூபாய்களுக்கு மேலாக ஆகியிருக்கும்.

சந்தையில் விற்கபட்ட அன்னாசிபழம் ஒன்றை வாங்கி அங்கேயே துண்டு செய்து சாப்பிட்டேன். அவ்வளவு ருசியான அன்னாசி பழத்தை சமீபத்தில் சாப்பிட்டதேயில்லை. ஒரு பழத்தின் விலை ரூ15 மட்டுமே. எப்படி இவர்களால் குறைந்த விலைக்கு விற்க முடிகிறது.

விவசாயி நேரடியாக விற்கிறார். பேராசை கிடையாது. சாப்பிடுகிறவன் வயிற்றில் அடிக்கிறோம் என்ற மனசாட்சியிருக்கிறது. ஏன் தமிழகத்தில் காய்கறி விற்பனையில் இத்தனை மோசடிகள். ஏமாற்றுதனங்கள்

இவ்வளவு நடந்தும் எந்த நடவடிக்கையும் ஏன் எடுக்கபடுவதில்லை. தரக்கட்டுபாடுகள் ஏன் பின்பற்றபடுவதில்லை

நல்ல காய்கறிகள். கனிவகைகள் கிடைக்காமல் அநியாயவிலை கொடுத்து நோயை உருவாக்கும் இந்தக் காய்கனிகளுக்கு மாற்றாக இயற்கையாக விளைந்தவை என விற்கபடும் ஆர்கானிக் கடைகளில் காய்கறிகள் மற்றும் கனி வகைகளின் விலை ஐந்து மடங்கு அதிகம்.

ஒரு வாழைப்பழத்தின் விலை ரூ 25 முதல் 35 வரை விற்கிறார்கள். இயற்கை விவசாயம் நிச்சயம் மாற்றுமுறை தான். ஆனால் அதைச் சந்தைப்படுத்துவதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளன. நல்ல காய்கறிகள். பழங்களைத் தேடி மக்கள் ஏக்கத்துடன் அலைகிறார்கள். ஒரு சில ஆர்கானிக் கடைகளைத் தவிரப் பெருமளவு அதிலும் மோசடிகளே.

கூடையில் சுமந்து வந்து காய்கறி விற்பவர்கள், பழம் விற்பவர்கள் இன்றும் மனசாட்சியோடு இருக்கிறார்கள். அவர்களிடமே நான் காய்கனிகளை அதிகம் வாங்குகிறேன்.

வாடிப்போன காய்கறிகள் என்றால் விட்டுவிடுங்கள் வேண்டாம் என்று அவர்களே பரிந்துரை செய்கிறார்கள். தலைச்சுமையாகச் சுமந்துவிற்றால் ஒரு நாளைக்கு அவர்களுக்கு ஐம்பது ரூபாய் கிடைக்கும். ஆனால் அவர்கள் அடுத்தவரை ஏமாற்றி வாழ விரும்பவில்லை. அவர்களின் பிரச்சனை தலைச்சுமையாகச் சுமந்து வருபவர்களை நாம் நம்புவதில்லை. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அனுமதிக்கபடுவதில்லை. காய்கறிகள் வாங்க காரில் போய் வருகிறவர்களுக்கு இவர்கள் அற்ப பிறவியாகத் தெரிகிறார்கள்  என்பதே.

அன்றாடம் நாம் ஏமாற்றப்படுகிறோம் என்ற போதும் இது குறித்துப் பொதுவெளியில் ஒரு குரலுமில்லை. உணவுப்பொருட்களில் நடைபெறும் மோசடிகள் குறித்த விழிப்புணர்வும் நியாயவிலை கடைகளும் உருவாக வேண்டும் என்பதே இன்றைய தேவை

எந்த நாட்டிற்குப் போனாலும் அங்குள் காய்கனி கடைகளைத் தேடிப்போய்ப் பார்த்து வருவேன். ஜப்பானிலுள்ள பெரிய காய்கறி சந்தையொன்றுக்குப் போன போது அதன் சுத்தம் மற்றும் அடுக்கிவைக்கபட்ட அழகினை கண்டு வியந்து போனேன்.

ஆனால் கோயம்பேடு காய்கறி சந்தைக்குள் நீங்கள் ஒருமுறை போய்ப் பாருங்கள். கழிவும், குப்பைகளும் ஈயும் கொசுவும் கூச்சலும் வாகனநெருக்கடியும் திறந்தவெளி கழிப்பறையினுள் போவது போலவே இருக்கிறது. அதற்குள் தான் காய்கறிகள் விற்பனை நடைபெறுகிறது. தினமும் பல்லாயிரம் பேர் வந்து போகிறார்கள்.

தமிழகத்தின் வடமாநிலங்களில் குறிப்பாகத் தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்னமும் கிராமசந்தைகள் முறையாக நடைபெறுகின்றன. சென்னையிலிருந்து இதற்காக அந்தச் சந்தைகளுக்கு மாதம் ஒருமுறை போய்வருகிறேன். அந்தச் சந்தைகள் வெறும் விற்பனை மையமில்லை. அரிதாகக் கிடைக்கும் பழவகைகள். மூலிகைகள். தானியங்கள் யாவும் விற்பனை செய்யப்படுகின்றன. விலையும் குறைவு. சந்தையில் விற்பனை செய்பவர்களில் பலரும் விவசாயிகள்.

விவசாயிகளுக்கு உதவுவதற்காகவே உழவர்சந்தைகள் உருவாக்கபட்டன. சிறப்பான வரவேற்பையும் பெற்றன. வணிகர்களின் சூழ்ச்சியால் திட்டமிட்டு இவை மூடப்பட்டன.

ஒரு பக்கம் மருத்துவத்துறை முழுவதும் தனியார்மயமாகி கொள்ளைக் கூடமாகிவிட்டது. இன்னொருபுறம் ஆதாரமான உணவுப்பொருள்கள், காய்கனிகள் நஞ்சாகிவருகின்றன. படித்த, அறிவுபூர்வமாகச் சிந்திக்ககூடிய, ஆன்லைனில் தேடிப் பொருள் வாங்ககூடிய இன்றைய தலைமுறை தாங்கள் அன்றாடம் உண்ணும் காய்கறிகள். பழங்கள் அநியாயவிலைக்கு விற்கபடுவது பற்றி எந்தக் கவனமும் அக்கறையும் எடுத்துக் கொள்வதில்லை என்பது வேதனையளிக்கிறது

ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் நாற்பது குடும்பங்கள் அவர்களின் தேவைக்குச் சந்தைக்குப் போய் மொத்தமாக வாங்கி வந்து தேவைக்கு ஏற்ப பிரித்துக் கொண்டால் நல்லகாய்கறிகளும் கிடைக்கும். விலையும் பாதியாகக் குறைந்துவிடும். ஆனால் நாற்பது குடும்பங்களும் தனித்தனியாகப் போய்க் காய்கறிகள் வாங்குவார்களே தவிர ஒன்றாகக் கூடி எதையும் செய்யமாட்டார்கள்

பள்ளி.கல்லூரி விடுதிகள், உணவகங்களுக்கு வாங்கபடும் காய்கறிகளில் பெருமளவு தரமற்றவை. கழிவாக வீசப்படும் நிலையில் இருப்பவை. சந்தையில் இவற்றை ஹாஸ்டலுக்கு உரியவை என்றே தனித்து வைத்திருக்கிறார்கள். இந்தச் சக்கைகளை உண்டு தான் பிள்ளைகள் உயர்கல்வி பெறுகிறார்கள். எத்தனை கல்வி நிறுவனங்கள் தங்கள் மாணவர்களின் தேவைக்காகத் தாங்களே காய்கறிகள். பழங்களை விவசாயம் செய்து உருவாக்குகிறார்கள்.

சில்லறை விற்பனை செய்யும் காய்கறி கடைகளுக்குப் போய் வரும் ஒவ்வொரு முறையும் ஏமாற்றத்துடன் வருத்தத்துடனே வீடு திரும்புகிறேன். நம்மைத் திட்டமிட்டு நோயாளியாக்குகிறார்கள். நாம் இதைப்பற்றிய பிரக்ஞையின்றிச் சொன்ன விலைக்குக் காய்கறிகளை வாங்கி வந்து அவசரமாகச் சமைத்து அவசரமாகச் சாப்பிட்டு வாழ்வை அழித்துக் கொள்கிறோமே எனக் கவலையாக இருக்கிறது

கையில் மஞ்சள் பையோ, கூடையோ எடுத்துக் கொண்டு காய்கறிகடைகளுக்குப் போவது கேவலம் என்ற மனநிலை எப்படி உருவானது. யார் இந்த எண்ணத்தை உருவாக்கியது. ஒரு காய்கறி கடையில் தேங்காய் கிலோ இவ்வளவு என்று விலை போட்டிருந்தார்கள். தேங்காயை எடை போட்டு விற்கும் இந்தப் புத்திசாலி யார்.

நம் சமையலறையில் நஞ்சு புகுந்துவிட்டது. அன்றாட உணவை நஞ்சாக்கிக் கொண்டேவருகிறார்கள். திட்டமிட்டு நோயை உருவாக்குகிறார்கள். இது போன்ற அடிப்படைகளைப் பற்றிக் கவலை கொள்ளாமல் எப்போதும் போலவே மக்கள் தொலைக்காட்சியின் ஆடல்பாடல்களில், பரபரப்பான தலைப்புச் செய்திகளில் மூழ்க்கிடக்கிறார்கள் என்பது கூடுதலாகவே வருத்தம் தருகிறது

•••

0Shares
0