இயற்றமிழ் வித்தகர் விருது

தமிழ் இலக்கியத்தின் மீதும் இலக்கியவாதிகளின் மீதும் பெரும் பற்றும் அன்பும் கொண்டவர்  வைகோ.

கலிங்கத்துபரணி, கம்பராமாயணம், சிலப்பதிகாரம், திருக்குறள் என அவர் ஆற்றிய விரிவான இலக்கிய உரைகளைக் கேட்டிருக்கிறேன். மடைதிறந்த வெள்ளம் போலக் கருத்துகளைப் பொழிவார்.

வாழும் காலத்திலே எழுத்தாளர்களைக் கௌரவித்துக் கொண்டாட வேண்டும் என்ற எண்ணத்தில் பைந்தமிழ் மன்றம் என்ற அமைப்பை அவர் உருவாக்கியுள்ளார். இந்த அமைப்பு ஆண்டிற்கு ஒரு இலக்கியவாதியைத் தேர்வு செய்து பொற்கிழியோடு விருது வழங்க முடிவு செய்திருக்கிறது.

இந்த ஆண்டிற்கான இயற்றமிழ் வித்தகர் விருதிற்காக என்னைத் தேர்வு செய்துள்ளதாகத் திரு. வைகோ நேற்று அறிவித்துள்ளார்.

விருது வழங்கும் விழா மார்ச் 16 வெள்ளிகிழமை மாலை கலைவாணர் அரங்கில் நடைபெறவுள்ளது. விழாவில் விருது வழங்கி சிறப்புரையாற்றுகிறார் வைகோ.

வைகோ தமிழிலும் ஆங்கிலத்திலும் நிறைய வாசிக்கக் கூடியவர். அது குறித்து விரிவாக விவாதிக்கவும் கூடியவர். தமிழக அரசியல்வாதிகளில் தமிழ் இலக்கியங்களை வாசிப்பவர்கள் குறைவு. அதிலும் நவீன தமிழ் இலக்கியங்களை வாசிப்பவர்கள் ஒரு சிலரே.

ஆனால் வைகோ அவர்கள் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக எனது படைப்புகளைத் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறார்.

எனது புதிய நாவலோ, கட்டுரைகளோ வெளியாகும் தருணத்தில் அதைப்படித்துவிட்டுத் தொலைபேசியில் அழைத்து பாராட்டுகளைத் தெரிவிப்பது வழக்கம்.

எனது இந்தியா தொடராக வெளிவந்து கொண்டிருந்த போது வாரம் தோறும் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டுவார். தேர்தல் பணிகளுக்குள் இருந்த நாட்களில் கூட மறக்காமல் வாசித்துப் பேசியதை கண்டு வியந்திருக்கிறேன்.

எனது இந்தியா நூலிற்குத் தனியாக ஒரு பாராட்டு விழா நடத்த வேண்டும் என விரும்பினார். அதற்கான முயற்சிகளும் கூட நடந்தன. ஒருங்கிணைப்பாளர் செய்த குழப்பத்தால் அது நடைறெவில்லை.

சில வாரங்களுக்கு முன்பு என்னைத் தொலைபேசியில் அழைத்து இப்படியொரு விருது வழங்கதிட்டமிட்டு இருப்பதாகச் சொன்னார்.

மூத்தபடைப்பாளிகள் பலரும் இருக்கிறார்கள். அவர்களை முதலில் கௌரவப்படுத்துங்கள் என்று சொன்னேன்.

நீங்கள் என் விருப்பத்திற்குரிய இலக்கியவாதி . ஆகவே முதலில் உங்களைக் கௌரவிக்க விரும்புகிறேன். ஆண்டுத் தோறும் நல்ல படைப்பாளிகள் நிச்சயம் கௌரவிக்கபடுவார்கள். அதன் முதல் அடையாளமாக இதை நினைக்கிறேன். என்று சொன்னார்.

மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன் என்று நன்றி தெரிவித்தேன்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக எழுதி வருகிறேன். எத்தனையோ சந்தர்ப்பங்களில் அரசியல் தலைவர்களுடன் பழக நேர்ந்திருக்கிறது. அதில் ஒரு சிலரே இலக்கியம் அறிந்தவர்கள். இலக்கியவாதிகளை  நேசிக்ககூடியவர்கள்.

அவர்களில் கலைஞர் முதன்மையானவர். அவர் எழுத்தாளர்களை மிகுந்த அன்புடன் நேசிக்ககூடியவர். அந்தப் பண்பையும் அன்பையும் அப்படியே வைகோ அவர்களிடம் காண்கிறேன்.

கரிசல் நிலத்திலிருந்து உருவாகி வந்த தலைவர் என்ற முறையில் வைகோ அவர்கள் மீது எனக்கு எப்போதும் தனி அன்புண்டு. கரிசல் மண்ணின் வாழ்வை அறிந்த அவர் அந்த மண்ணையும் மக்களையும் எழுத்தில் படைத்துள்ள என்னைக் கௌரவிப்பது மிகுந்த சந்தோஷம் தருகிறது.

விருது வழங்கும் நிகழ்வை பிரம்மாண்டமான விழாவாக ஏற்பாடு செய்து வருகிறார்.

என்னையும் எழுத்தையும் நேசிக்கும் அனைவரும் இந்த நிகழ்விற்கு வந்து சிறப்பிக்க வேண்டும் என அழைக்கிறேன்.

•••

Archives
Calendar
June 2018
M T W T F S S
« May    
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
Subscribe

Enter your email address: