பூமியை வணங்குகிறார்கள்

புனித யாத்திரைக்குச் செல்லுவது உலகெங்கும் உள்ள வழக்கம். எல்லாச் சமயங்களிலும் புனித யாத்திரை முக்கியக் கடமையாகக் குறிப்பிடப்படுகிறது. நடந்தே புனித தலங்களுக்குச் செல்வது உயர்வான நிகழ்வாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் பாதயாத்திரை செல்வது தலைமுறையாகத் தொடரும் பழக்கம். கிறிஸ்துவச் சமயத்திலும் இது போன்ற புனித யாத்திரைகள் இருக்கின்றன. காண்டர்பரி தேவாலயத்திற்குப் பாதயாத்திரை போனவர்களின் கதையைத் தான் ஆங்கிலத்தில் சாசர் காண்டர்பரி கதைகள் என எழுதியிருக்கிறார்.

திபெத்திலுள்ள பௌத்த சமயத்தைச் சேர்ந்தவர்கள் செல்லும் புனித யாத்திரை வியப்பூட்டக்கூடியது. லாசாவிலுள்ள பௌத்த ஆலயத்தைத் தரிசனம் செய்வதற்காக அவர்கள் கடினமான பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்கள். அதாவது தரையில் விழுந்து வணங்கிக் கொண்டே நடப்பது.

புனித யாத்திரை மேற்கொள்பவர் சுயநலத்திற்கான பயணம் போகக்கூடாது. பிறர் நலனுக்காகவே இந்தப் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி. அதிலும் நீங்கள் யாருக்கு நன்றி செலுத்த வேண்டுமோ அவரது நலனுக்காகவே இந்தப் புனித யாத்திரையை மேற்கொள்ள வேண்டும்.

வீட்டில் துவங்கி லாசா வரை ஒவ்வொரு ஏழு அல்லது எட்டு அடிக்கும் ஒருமுறை பூமியில் நெற்றி தரையில் பட விழுந்து வணங்கி பின்பு எழுந்து நடக்க வேண்டும். அவசரம் கூடாது. வேறு நினைப்புகள் எதுவும் கூடாது, முழுமையாக உங்களைச் சரணாகதி செய்ய வேண்டும்.

லாசா உலகின் கூரையாகக் கருதப்படுகிறது. இங்குப் பாரம்பரியமிக்கத் திபெத்திய பௌத்த தலங்கள் அமைந்துள்ளன; லாசா என்பதற்கு “கடவுளின் வசிப்பிடம் ” என்பதே பொருள் என்கிறார்கள். புத்தரின் உக்கிர வடிவான டெம்சோக், கைலாய மலைச் சிகரத்தில்தான் அமர்ந்திருப்பதாகப் பெளத்தர்கள் நம்புகிறார்கள்.

பூமியில் விழுந்து வணங்கியபடியே புனிதப் பயணம் வருபவர்கள், பந்தங்களில் இருந்து விடுபட்டு, நிர்வாண நிலை அடைவார்கள் என்பது பௌத்த நம்பிக்கை.

இந்தப் புனித யாத்திரையை விரிவாக ஆவணப்படுத்தியிருக்கிறது. Paths of the Soul . இதனை இயக்கியிருப்பவர் Zhang Yang. இத்தனை கவித்துவமான காட்சியோடு, உணர்வுபூர்வமாக எடுக்கபட்ட ஆவணப்படத்தைச் சமீபத்தில் நான் கண்டதில்லை. பல காட்சிகளில் நெகிழ்ந்து போனேன். அபாரமான மனஎழுச்சி தந்த படமிது

லாசா தற்போது சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தலாய் லாமா இதை விடுவிக்கப் போராடிக் கொண்டிருக்கிறார். திபெத்தின் அரசியல் பிரச்சனை பல ஆண்டுகளாகத் தொடரும் முடிவற்ற போராட்டம்.

இப்படம் தனிநபர்களின் நம்பிக்கையைப் பேசுகிறது. அதிலும் குறிப்பாகப் பௌத்த சமய நம்பிக்கை எவ்வளவு ஆழமாகத் திபெத்தியர்கள் மனதில் பதிந்துள்ளது என்பதை விவரிக்கிறது.

இந்த ஆவணப்படத்தைக் காணும் போது இதே நம்பிக்கையும் அறமும் நம்மிடமும் ஒரு காலத்தில் இருந்தது. ஆனால் அதைத் தொலைத்துவிட்டோம் என்ற பெருமூச்சு உருவானது என்பதே உண்மை

புனித யாத்திரையின் நோக்கம் இறைவேண்டல். அதுவும் நாள்பட்ட நோய் தீரவேண்டும் என்றோ, குடும்பக் கஷ்டங்கள் தீர்ந்து போக வேண்டும் என்றோ, திருமணம், கல்வி, வணிகம் குறித்த வேண்டுதல்களுக்காகவே தான் பெரும்பான்மையினர் யாத்திரை போகிறார்கள். இவர்களின்றி இறந்தவர்களின் ஆன்மா சாந்தி பெறுவதற்காகவும், பிள்ளைகளுக்கு நல்லாசிகள் கிடைக்க வேண்டும் என்று யாத்திரை போகிறவர்களும் உண்டு.

திபெத்தியர்கள் தங்களின் நலனிற்காகப் புனித யாத்திரை போவது தவறு என்கிறார்கள். அடுத்தவர் நலனிற்காகவே நாம் புனித யாத்திரை போக வேண்டும். அதுவும் நம்மை வருத்திக் கொண்டு, பூமியில் மனிதன் கொண்ட எல்லாக் கர்வங்களிலிருந்தும் தன்னை விடுவித்து இயற்கையின் ஒரு பகுதியே தான் என உணர்ந்தபடியே அந்தப் பயணம் அமைய வேண்டும்.

ஆண் பெண் வசதியானவர், வசதியவற்றவர் என எந்தப் பேதமும் இந்தப் பயணத்திற்குக் கிடையாது. 1200 மைல் பயணம். போய் வருவதற்குப் பத்து மாதங்கள் ஆகும். கையும் காலும் தேய்ந்து போய்விடும். மலைப்பாதை என்பதால் சீராகயிருக்காது. பனியும் மழையும் வாட்டி எடுக்கும். பாறைகள் உருண்டு விழும். இதற்குள் தான் பயணிக்க வேண்டும்.

கைலாய யாத்திரை போகிறவர்கள் லாசா வழியாகவே செல்ல வேண்டும். அதே பாதையில் தான் திபெத்தியர்களும் செல்கிறார்கள். மானசரோவரை, கைலாயத்தை இந்து, பௌத்த, சீக்கிய சமணச் சமயங்கள் யாவும் புனித தலமாகவே கொண்டாடுகின்றன.

மாங் கங் என்ற பகுதியிலுள்ள கிராமம் ஒன்றிலிருந்து நைமா (Nyima ) யாங் என்ற இருவர் புனித யாத்திரை போக வேண்டும் என்பதைப் பற்றிப் பேசத்துவங்குகிறார்கள். தனது சகோதரன் புனித பயணம் போக நினைத்திருந்தான். ஆனால் அவன் எதிர்பாராமல் இறந்துவிட்டான். அவனது நினைவிற்காகத் தான் பயணம் செல்ல விரும்புவதாக யாங் கூறுகிறான்.

இந்தப் பயணத்திற்காக அவர்கள் தயார் ஆகிறார்கள். 11 பேர் கொண்ட குழுவாகக் கிளம்புகிறார்கள். அதில் சிரிங் என்ற கர்ப்பிணி பெண்ணும் அடக்கம். கியாட்சே என்ற சிறுமியும் உடனிருக்கிறாள்.

ஊரை விட்டு வெளியேற துவங்கும் போது பூமியை விழுந்து வணங்க துவங்குகிறார்கள். இதற்காகக் கையில் மாட்டிக் கொள்ளும் பலகை. காலில் கனத்த காலணி. நீண்ட அங்கி போன்ற உடை அணிந்திருக்கிறார்கள். தங்கள் மனதிலுள்ள ஆசையைப் பிரார்த்தனை செய்தபடியே ஒவ்வொரு ஏழு அல்லது எட்டு அடிகளுக்கு ஒருமுறையும் அவர்கள் விழுந்து பூமியை வணங்குகிறார்கள். சாஷ்டாங்கமாகச் சாலையில் விழுந்து வணங்கியபடியே செல்வது என்பது எளிதானதில்லை. சொத் சொத் எனச் சப்தம் எழுப்பியபடியே அவர்கள் விழும் காட்சி மனதை தொடுகிறது.

கை, கால் வலிக்கிறது என யாரும் புலம்பவில்லை. சிறுமி கூடச் சிரித்த முகத்தோடு பூமியை வணங்குகிறாள். அந்த வணக்கம் மனதை ஒருமுகப்படுத்தக்கூடியது. அகந்தையை அழிக்கக் கூடியது. பணிவை உணர்த்தக்கூடியது. மனிதனை தவிர வேறு எந்த விலங்கும் பூமியை இப்படி வணங்கி சேவிக்குமா எனத் தெரியாது.

பகல் முழுவதும் இப்படி நடக்கிறார்கள். இரவில் ஏதாவது ஒரு இடத்தில் கூடாரம் அமைத்துத் தங்குகிறார்கள். அவர்களுடன் வரும் டிராக்டர் போன்ற வண்டி ஒன்றில் கொண்டு போயிருந்த உணவை பகிர்ந்து சாப்பிடுகிறார்கள். கனத்த குளிராடைகளை அணிந்து கொண்டு உறங்குகிறார்கள். பத்து மாதங்கள் இப்படி நடப்பது என்பது எளிதான என்ன.

ஒருமுறை இப்படிப் பயணம் செய்துவிட்டால் அந்த மனிதனின் ஆளுமை முற்றிலும் மாறிவிடும். கோபம், வெறுப்பு, ஆவேசம், வன்முறை யாவும் அடியோடு போய்விடும்.

கொட்டும் பனியிலும் இப்படி விழுந்து வணங்கியபடியே நடக்கிறார்கள். அந்தக் காட்சி நம்மை உலுக்கிவிடுகிறது. அதிலும் கர்ப்பிணி பெண் பூமியில் விழுந்து வணங்கும் காட்சி மனதைத் தொடுகிறது. பனியில் செல்லும் பறவைகளைப் போல நிசப்தமாக அவர்கள் செல்கிறார்கள். பிரம்மாண்டமான மலை அவர்களை மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

படத்தில் பின்ணணி இசை கிடையாது. ஆகவே நாமே அவர்களுடன் செல்வது போன்ற நெருக்கம் உருவாகிறது. இதைப் படமாக்கும் குழுவினர் நிழல் போல உடன் செல்கிறார்கள்.

ஒரு இடத்தில் மலைப்பாறைகள் உருண்டு விழுகின்றன. சிதறிய கற்கள் தெரிந்து பறக்கின்றன. அப்போதும் அவர்கள் பயப்படுவதில்லை. இயல்பாகப் பூமியை வணங்குகிறார்கள்.

வழியில் கர்ப்பிணிக்கு பிரவச வலி உருவாகிறது. அவளுக்கு ஆண் பிள்ளை பிறக்கிறது. அதற்குப் பெயர் வைத்துக் கொண்டாடுகிறார்கள். பிரசவித்த பெண் ஒய்வெடுப்பதில்லை. அவளும் தொடர்ந்து நடக்கிறார்கள். எத்தனை மனவலிமை.

இன்னொரு இடத்தில் சாலையைக் கடந்து ஒடிக்கொண்டிருக்கும் ஆற்றுநீருக்குள் விழுந்து வணங்குகிறார்கள். அவர்கள் முகத்தில் சந்தோஷம் தெறிக்கிறது

நெற்றி பூமியில் படுவது என்பது எளிய செயல் இல்லை என்பதைப் படம் பார்க்கும் போது முற்றிலும் உணர்ந்து கொண்டேன். நெற்றியால் பூமியை தொடும் போது மௌனமாக அதை முத்தமிடவே செய்கிறார்கள். உடலை அர்ப்பணிப்பு செய்கிறார்கள். சாலைகள் பாலங்கள். குகைவழிகள், மண்பாதைகள் என எங்கும் உருண்டு விழுகிறார்கள். ஒரு இடத்தில் அவர்களது வாகனம் மோசமான சாலைவிபத்தைச் சந்திக்கிறது.

தன்னை வருத்திக் கொள்வது தான் இறைநிலையை அடைவதற்கான துவக்கபுள்ளி என்று சமயங்கள் யாவும் கூறுகின்றன. உடலின் கட்டுப்பாட்டிற்குள் நாம் இயங்குவதற்கு மாறாக நம் கட்டுபாட்டிற்குள் உடலை கொண்டுவருவதே சரியான வழி என அடையாளம் காட்டுகிறார்கள்.

பயணத்தின் ஒரு இடத்தில் ஒரு விவசாயி அவர்களுக்குத் தங்க இடம் கொடுத்து உதவி செய்கிறான். இதற்குக் கைமாறாக அவனது நிலத்தைப் புனித யாத்திரை போகிறவர்கள் உழுது தருகிறார்கள். பார்லி விவசாயம் செய்வதற்காக நிலத்தை உழுவு செய்யும் போது முதியவர் ஒருவர் காலமாற்றம் விவசாயத்தை எவ்வளவு மாற்றிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டுகிறார்

போவது புனித யாத்திரை என்றாலும் நன்றிகடனுக்காக அவர்கள் உழவுபணியை மேற்கிறார்கள் இல்லையா அது தான் உண்மையான அறம். அவர்கள் செய்வதே உண்மையான புனித செயல்.

விழுந்து வணங்கியபடியே அவர்கள் புனித தலத்தை அடையும் போது நாமும் அவர்களுடன் இணைந்து மகிழ்கிறோம்.

ஆன்மா செல்லும் பாதை எளிதானதில்லை. அந்தப் பாதை முடிவற்ற வானை பறவை கடந்து செல்வதைப் போன்றது. பறவைகள் வானில் தனது தடத்தை விட்டுப் போவதில்லை. ஆன்மாவின் பயணத்தினை இத்தனை அழகாக, ரெனாரின் நிலக்காட்சி ஒவியங்களைப் போல வசீகரமாக யாரும் திரையில் காட்டியதில்லை. Zhang Yang மிகுந்த பாராட்டிற்குரியவர்

நீண்ட நாட்களின் பிறகு ஒரு திரைப்படம் பார்த்தபிறகு சந்தோஷமும் கண்ணீரும் ஒருசேர உருவானது.

அடுத்தவர் நலனுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள். பூமியை வணங்கி முத்தமிடுங்கள். உடலின் கட்டுபாட்டை உங்கள் கையில் வைத்துக் கொள்ளுங்கள். மழையை, பனியை, காற்றை, பாறைகளைத் தடையாகக் கருத வேண்டும். உங்கள் எண்ணம் தூய்மையாக இருந்தால் எதையும் கடந்து போக முடியும். கூட்டுப் பிரார்த்தனை. கூட்டுப் பயணம் முக்கியமானது. இழப்பும் வலியும் இன்றி எதையும் சாதிக்க முடியாது

Paths of the Soul வெறும் திரைப்படமில்லை. உங்கள் மனத்தூய்மைப்படுத்திக் கொள்ள, விழிப்புணர்வு கொள்ள வைக்கும் கலைப்படைப்பாகும்,

***

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: