சலூனுக்குள் புத்தகங்கள்
காலையில் தூத்துக்குடியிலிருந்து ஒருவர் தொலைபேசியில் அழைத்து நான் மில்லர்புரத்தில் சலூன் வைத்திருக்கிறேன். புத்தகம் படிப்பதில் ஆர்வம் அதிகம். சலூனுக்கு வருபவர்கள் படிப்பதற்காகச் சிறிய புத்தக அலமாரி ஒன்றை வைத்திருக்கிறேன். அதில் நாற்பது ஐம்பது புத்தகங்கள் உள்ளன. நிறையப் பேர் ஆர்வமாகப் புத்தகம் எடுத்துப் படிக்கிறார்கள். இது மட்டுமின்றி யூடியூப்பிலுள்ள உங்களது இலக்கிய உரைகளை ஆடியோவாக்கி அதை ஸ்பீக்கரில் ஒலிக்கவிடுகிறேன். பலரும் ஆர்வமாகக் கேட்கிறார்கள். இன்னும் அதிகமான புத்தகங்கள் சலூனில் வைக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். எது போன்ற புத்தகங்களை வாங்கி வைக்கலாம் என ஆலோசனை கேட்டார்.
புத்தகங்களை வாசிக்க வைப்பதற்குப் பெரிய கல்லூரிகளும் பல்கலைகழகங்களும் எந்த முயற்சியும் எடுக்காத சூழலில் ஒரு சிறிய சலூன் நடத்துகிறவர் தான் படிப்பதுடன் மற்றவர்கள் படிக்கட்டும் எனச் சலூனுக்குள் நூலகம் ஒன்றை அமைத்திருப்பது மிகுந்த பாராட்டிற்குரியது.
தூத்துக்குடியிலுள்ள மில்லர்புரத்தில் சுசில்குமார் ப்யூட்டி கேர் என்ற சலூனை நடத்திவருபவர் பொன்மாரியப்பன்.. இவரது சலூனுக்குப் போனால் புத்தக அலமாரியைக் காணலாம்.
பெருநகர ப்யூட்டிபார்லர்களில் அகன்ற திரை கொண்ட டிவி ஒடிக் கொண்டிருக்கிறது. விதவிதமான ஆங்கில இதழ்கள் வாசிக்கக் கிடைக்கின்றன. ஆனால் தமிழ் புத்தகங்களை, இதழ்களைக் கண்ணில் பார்க்க முடியாது. தமிழ் நாளிதழ்களை வாங்கிப் போட்டால் லோக்கல் சலூன் ஆகிவிடும் ஆகவே அதை நாங்கள் வாங்குவதில்லை எனப் பெருமையாகச் சொல்கிறார்கள்.
இதற்கு மாற்றாகத் தனது குறைவான சம்பாத்தியத்தில் விரும்பிய இலக்கியப் புத்தகங்களைத் தேடி வாங்கி படிப்பதுடன் மற்றவர்களைப் படிக்கவைக்கும் பொன் மாரியப்பனை மனம் நிரம்பப் பாராட்டினேன்.
அவர் நெகிழ்ந்து போய் என்னால் முடிந்தஅளவிற்கு நான் மற்றவர்களை படிக்க வைக்கிறேன், நம்ம சலூன்ல பாட்டுப் போடுறது கிடையாது என்று சொன்னார்
இவரைப் போலவே புதுக்கோட்டை அருகே தமிழ்வரதன் என்ற இளைஞர் தான் நடத்தும் சலூனில் எல்லா இலக்கிய இதழ்களையும் வாங்கி வாசிக்கப் போட்டிருப்பதுடன் புத்தக வாசிப்பில் தீவிரமாகச் செயல்பட்டு வருவதை அறிவேன். அவரும் சிறந்த நூல்களைக் கொண்ட புத்தக அலமாரியை உருவாக்கி வைத்து சேவை செய்து வருவதைப் பற்றிப் பொன்மாரியப்பனிடம் சொன்னேன்.
உற்சாகத்துடன், இது போல ஊருக்கு நாலு சலூன் இருந்தால் போதும், படிக்க ஆரம்பித்து விடுவார்கள் என நம்பிக்கையோடு சொன்னார்.
ஒரு பக்கம் பொது நூலகங்கள் ஆட்கள் வராமல் காத்தாடுகின்றன. இன்னொரு பக்கம் பள்ளி கல்லூரிகளில் பாடப்புத்தகங்களுக்கு வெளியே வாசிப்பதேயில்லை. நூலகங்கள் பெயரளவில் மட்டுமே இயங்குகின்றன.
சினிமா , டிவி இந்த இரண்டும் மட்டுமே உலகம் என நம்பிக் கொண்டிருக்கும் பொதுமக்களுக்கு நடுவே வாசிப்பை பரவலாக்குவதற்குப் பொன் மாரியப்பன் போன்றவர்கள் செய்யும் முயற்சி புதுவழியாகும்.
அவசியம் உங்களை நேரில் வந்து சந்திக்கிறேன் என்று மாரியப்பனிடம் சொன்னேன்.
மனம் மகிழ்ந்து சொன்னார்.
புத்தகத்தோட அருமை பலருக்கும் தெரியலை சார். நாம தானே எடுத்து சொல்லணும்
இது வெறும் ஆதங்கமில்லை. நாம் அனைவரும் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய வழிகாட்டல்.
••