உலகின் மறுபக்கம்

ஆன்லைன் வர்த்தகம். காகிதமில்லா பரிவர்த்தனை என உலகம் அதிநவீன வர்த்தகத்தை நோக்கி  ஒரு பக்கம் போய்க்கொண்டிருக்கையில் மறுபக்கம் இன்னமும் பண்டமாற்றுமுறையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கவே செய்கிறது என்பதைக் காட்டுகிறது தி டிரேடர் என்ற ஆவணப்படம்.

25 நிமிஷங்களே ஒடக்கூடிய இந்த ஆவணப்படம் நாம் உண்மையிலே வளர்ச்சியடைந்த உலகில் தான் வாழ்கிறோமோ என்றே கேள்வியை முன்வைக்கிறது.

ஜார்ஜியா என்பது கருங்கடலின் கிழக்குக் கரையில் அமைந்துள்ள நாடாகும்.இதன் வடக்கே ரஷ்யா, தெற்கே துருக்கி மற்றும் ஆர்மீனியா, கிழக்கே அஜர்பைஜான் ஆகிய நாடுகள் உள்ளன , பெரும்பாலான மக்கள் கத்தோலிக்கர்கள், இதன் தலைநகர் திபிலிசி பெரிய நகரமாகும். இயற்கை எழில் கொண்டது ஜார்ஜியா . கருங்கடல் கரையின் இனிய வானிலை, மறுபுறம் காகஸஸ் மலைகளின் குளிர் என ஜார்ஜியா ரம்மியமான தேசம்.

சுற்றுலா பயணிகளைக் கவருவதற்காக அரசு பல்வகையிலும் முயற்சிகள் செய்கிறது. தமிழ்படங்கள் உள்ளிட்ட பல்வேறு இந்திய திரைப்படங்கள் இங்கே எடுக்கபடுவதற்கு முக்கியக் காரணம் அரசு தரும் ஒத்துழைப்பும் சலுகைகளுமே.

ஜார்ஜியாவின் கிராமப்புறங்களில் இன்றும் பண்டமாற்று வணிகமே நடந்து வருகிறது என்பதையே The Trader ஆவணப்படம் சுட்டிக்காட்டுகிறது.

மலிவான காலணிகள். வீட்டுஉபயோகப் பொருட்கள். ஒப்பனை பொருட்கள், பிஸ்கட், சாக்லேட். சிறார்களின் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றை நகரில் வாங்கிச் சேகரிக்கிறான் கேலா என்ற வணிகன். இந்தப் பொருட்களை ஒரு வேனில் ஏற்றிக் கொண்டு ஜார்ஜியாவின் கிராமப்புறத்தை தேடிச் செல்கிறான்

அங்குள்ள விவசாயக் குடும்பங்கள் உருளைகிழங்கு விளைவிக்கிறார்கள். அந்தக் கிராமத்திற்குள் வேன் போய் நிற்கிறது. தனது கடையை விரிக்கிறான் கேலா. எந்தப் பொருள் வேண்டும் என்றாலும் அதற்கு ஈடாக உருளைகிழங்கு தர வேண்டும் என்பதை வணிகம். ஒரு காலணிக்கு ஈடாக 25 கிலோ உருளைகிழங்கு வேண்டும் என்கிறார். ஒரு துப்பட்டாவிற்குப் பத்துகிலோ உருளைகிழங்கு. சிறுவர்களுக்கான விளையாட்டுப் பொருட்களுக்கு ஐந்து முதல் இருபது கிலோ உருளைகிழங்கு என அறிவிக்கிறான்.

பெண்களும் ஆண்களும் கூடி தங்களிடமுள்ள உருளைகிழங்கைக் கொடுத்து மலிவான பொருட்களை வாங்கிப் போகிறார்கள். ஒரு பெண் அழகான துப்பட்டா ஒன்றை வாங்க விரும்புகிறாள். ஆனால் அதற்கு ஈடாகத் தர வேண்டிய உருளைகிழங்கு இல்லை என்பதால் உணவிற்காக வைத்துள்ள உருளைகிழங்குகளை அள்ளி வந்து கொடுத்து அதை வாங்கிப் போகிறாள். ஒரு முதியவர் லிப்ஸ்டிக் என்ன விலை என்று கேட்கிறார். மற்றவர்கள் அவரைக் கேலி செய்கிறார்கள்.

ஈரோ, டாலர், ரூபிள் என எந்த நாட்டு கரன்சியையும் விட உருளைகிழங்கே தங்களின் பணம். எவ்வளவு உருளைகிழங்கு கொடுத்தால் பொருள்கிடைக்கும் என்ற வணிகமே தங்களுடையது என்கிறார்கள் இந்த மக்கள்.

வணிகன் நகரில் விற்கும் இரண்டாம் தரமான பொருட்களை வாங்கிக் கொண்டு போய் விற்று கொள்ளை லாபம் சம்பாதிக்கிறான். படத்தில் அவனது தந்திரம் அழகாகப் படமாக்கபட்டிருக்கிறது. சிறுவர்களை அழைத்துத் தன்னிடமுள்ள கதைப்புத்தகம், நோட்டு, விளையாட்டுப் பொருட்கள் ஆகியவற்றைக் காட்டி போய் வீட்டிலுள்ள பெற்றோரிடம் சொல்லுங்கள். அவர்களிடம் உள்ள உருளைகிழங்கை கொண்டு வந்து கொடுத்து வாங்கிப் போங்கள் என்கிறார். அந்தச் சிறுவர்களின் கண்களில் ஆசை மினுங்குகிறது. ஆசையாக எடுத்து எடுத்துப் பார்க்கிறார்கள்

ஒரு கிழவி தனக்கு யாருமேயில்லை என்று சொல்லியபடியே தனக்கு ஏதாவது ஒரு பொருளை அவன் பரிசாகத் தரமுடியுமா எனக்கேட்கிறாள். அவன் தரமறுக்கிறான். இன்னொரு முதியவர் தான் எப்படியாவது படித்துப் பட்டம் வாங்கி இந்தக் கிராமத்தை விட்டு நகரிற்குப் போய் வாழ வேண்டும் எனக் கனவு கண்டதாகவும், அது நிறைவேறாமலே போய்விட்டது என்றும் ஆதங்கப்படுகிறார்

மலிவுப் பொருட்களை விற்று உருளைகிழங்கை வாங்கிக் கொண்டு போய் நகரச்சந்தையில் அதிக விலைக்கு விற்கிறான் வணிகன் கேலா. அவனைப் பொறுத்தவரையில் இரண்டு நாள் பயணத்தில் அவனது வணிகம் எளிதாக முடிந்துவிடுகிறது

இந்த ஆவணப்படத்திலுள்ளது போன்ற சந்தையை ஒரிசாவிலுள்ள கோராபுட்டில் கண்டிருக்கிறேன். ஆதிவாசிகள் அதிகம் வசிக்கும் மலைப்பகுதியது. அங்கேயுள்ள ஆதிவாசிகள் வாரம் ஒருமுறை இது போலத் தங்களின் விளைபொருட்களைக் கொண்டு வந்து சந்தையில் கடைவிரிக்கிறார்கள். இதே சந்தையின் மறுபக்கம் நகரிலிருந்து கொண்டுவரப்பட்ட மலிவு விலைப் பொருட்கள் கொட்டிக் கிடக்கின்றன. தானியங்கள். பழங்கள். காய்கறிகளைக் கொடுத்து பிளாஸ்டிக் பொருட்களை, சோப்பு படவுர் போன்றவற்றை வாங்கிப் போவதை கண்டிருக்கிறேன்.

என் சிறுவயதில் பாட்டி வீட்டிலுள்ள பருத்தியை இரண்டு கை நிறைய அள்ளிக் கொடுத்து அதற்கு ஈடாகக் கடையில் மிட்டாயோ, காரச்சேவோ, மிக்சரோ வாங்கிக் கொள்ளச் சொல்வார். பெட்டிக்கடைகளில் ஒரு ஈடு பருத்திக்கு இரண்டு ஈடாகத் தின்பண்டங்கள் தருவார்கள். மாம்பழம் விற்பவன் கூட மாம்பழத்திற்கு ஈடாகப் பருத்தி வேண்டும் என்றே கேட்பான். மெல்ல என் கண்முன்னே பண்டமாற்று வணிகம் மறைந்து போய்ப் பணம் மட்டுமே வணிகமாற்றாக மாறியது.

ஆனால் ஜார்ஜியாவில் இன்றும் உருளைகிழங்கு தான் பண்டமாற்றுப் பொருள் என்பது வியப்பூட்டுகிறது. இந்த ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு சிறுவனிடம் அவன் எதிர்காலத்தில் என்ன ஆகப்போகிறான் என்ற கேள்வியை ஒருவர் கேட்கிறான். அவன் பதில் சொல்லாமல் திணறுகிறான். பத்திரிக்கையாளன் ஆகப்போகிறேன் என்று சொல் என அவனது அம்மா உதவிக்கு வருகிறாள். ஆனாலும் அந்தப் பையன் தடுமாறுகிறான். அவனுக்கு என்ன ஆகப்போகிறோம் என்று தெரியவில்லை.

இது சிறுவனின் நிலை மட்டுமில்லை. தங்களின் வளத்தை, உணவை மலிவுவிலைப் பொருட்களை வாங்குவதற்காகச் செலவிடும் மக்கள் அனைவருக்குமான குழப்பமது.

ஒரு காலத்தில் ஜார்ஜியா சோவியத் குடியரசில் அங்கம் வகித்தது. கலையிலும் இசையிலும் நடனத்திலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேசமது. ஜார்ஜிய கலைஞர்களின் கூட்டு இசையும் நடனமும் அற்புதமாக இருக்கும். சென்னையிலுள்ள ரஷ்ய கலாச்சார மையம் அவர்களின் நடனநிகழ்வை ஏற்பாடு செய்திருந்த போது கண்டிருக்கிறேன்.

கலையும் இசையும் நடனமும் கொண்ட ஒரு தேசம் இப்படி வறுமையில், சுரண்டலில் சிக்கியிருப்பதைக் காணும் போது வருத்தம் அளிக்கவே செய்தது

படத்தில் வரும் வணிகனுக்குக் குற்றவுணர்ச்சியே கிடையாது. அவன் ஒரு சுற்றுலா பயணி போலச் சிரித்தமுகத்துடனே வலம் வருகிறான். தாங்கள் விளைவித்த உருளைகிழங்கிற்கு என்ன விலை சொல்வது என விவசாயிக்கே தெரியவில்லை.

படத்தின் இறுதிக்காட்சியில் அந்த வணிகன் சூதாடுகிறான். அவனது பணம் யாராலோ எளிதாகச் சுரண்டப்படப் போகிறது என்று சுட்டிக்காட்டுவதோடு படம் முடிகிறது. சூதின் விதிகள் கூடப் பொதுப்படையானவை. வணிகவிதிகள் சூதை விடவும் தந்திரமானவை.

எளிய மக்கள் எப்போதும் போலத் தாங்கள் ஏமாற்றப்படுவதை உணராமல் கிடைத்த சந்தோஷங்களைப் பகிர்ந்து கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதேயே இந்த ஆவணப்படம் உலகிற்கு அடையாளம் காட்டுகிறது

••

Archives
Calendar
March 2018
M T W T F S S
« Feb    
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Subscribe

Enter your email address: