கவிதையே வாழ்க்கை.

சையத் மிர்ஸா, இந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர். பூனே திரைப்படக்கல்லூரியில் பயின்ற இவர் இந்திய சினிமாவின் நவீன அலை இயக்குனர்களில் குறிப்பிடத்தக்கவர். இவரது வாழ்க்கை மற்றும் திரையுலகப் பங்களிப்பு பற்றிய ஆவணப்படமாக உருவாக்கபட்டுள்ளது Saeed Mirza: The Leftist Sufi.

சூபியும் இடது சாரி எண்ணங்களும் கொண்டவர் என்ற தலைப்பே அவரது ஆளுமையின் தனித்துவத்தைக் காட்டுகிறது. இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர் என்ற போதும் எவ்விதமான மதக்கட்டுபாடுகளும் இல்லாமல் வளர்க்கபட்டதாக நினைவு கூறுகிறார். இவரது பத்து வயதில் பிறந்த நாள் பரிசாகப் புரொஜெக்டர் ஒன்றை தந்தை வாங்கிப் பரிசளிக்கிறார். வீட்டிலே சினிமா காட்டத் துவங்கி அங்கே உலகப்புகழ்பெற்ற படங்களைக் கண்டதாக மிர்ஸா கூறுகிறார்.

இந்த ஆவணப்படத்தின் சிறப்பு மிர்ஸாவின் உலகப்பார்வை. தெளிவாக, துல்லியமாக தனது கருத்துக்களை முன்வைக்கிறார். கவித்துவமாகப் பேசுகிறார்.

மருத்துவரோ, என்ஜினியரோ, பேராசிரியரோ யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் கவிதை இல்லாத மருத்துவம், கவிதை இல்லாத கட்டிடக்கலை என்பது அர்த்தமற்றது. கவிதை தான் வாழ்க்கையின் சாரம். எனது திரைப்படங்கள் யாவும் கவிதையே.வாழ்க்கை குறித்த எனது தேடுதலில் கவிதை உருவாகிறது.

“Leftism is inclusive. It does not discriminate between religion, caste, creed and ethnicity. That’s poetry!” எனக்கூறுகிறார் மிர்ஸா

படத்தின் ஒரு காட்சியில் ஒரு சம்பவத்தை நினைவுகூறுகிறார்

ஒரு நாள் சாலையில் ஒரு இளைஞனைக் கண்டேன். அவனது மிடுக்கான நடை உலகமே தனக்கு மட்டுமே சொந்தம் என்பது போல இருந்தது. எப்படி அந்த உணர்வு ஏற்பட்டது. நாளை அந்த இளைஞனுக்கு என்ன நடக்கும். அவன் உலகம் உருவாக்கிய வைத்துள்ள பயம், வெறுப்பு. வன்முறை எதுவும் தன்னைத் தீண்டாது என நினைக்கிறானா. அந்த இளைஞன் என் மனதில் ஒரு படிமமாக உருவாகிப்போனான்.

நாம் வாழும் உலகை ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்கிறார்கள். எவ்வாறு உணருகிறார்கள். அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். எவ்விதம் நாம் அதிகாரத்தால் ஒடுக்கபடுகிறோம். வணிகத்தால் ஏமாற்றப்படுகிறோம் என்பதையே எனது படங்கள் பேசுகின்றன.

நகரம் தான் படத்தின் மையக்குறியீடு. தனது அடையாளங்களைக் குறித்துச் சிந்திக்கத் துவங்கும் இளைஞர்களே எனது கதாநாயகர்கள். மும்பையின் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையைத் தான் படமாக்கியிருக்கிறேன் என்று கூறும் சையத் மிர்ஸா தனது படங்களுக்கெனத் தனி அழகியலை உருவாக்கிக் காட்டியவர்

பிரபல இயக்குனர்களான மணிகௌல். ரித்விக் கடாக், ஜான் ஆபிரகாம், குமார் சஹானி. குந்தன் ஷா போல இவரது திரைமொழியும் கவித்துவ மௌனத்தால் உருவானது.

ஆவணப்படத்தின் படப்பிடிப்பிற்காக முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தான் படமெடுத்த களங்களை நேரில் கண்டறிகிறார் சையத் மிர்ஸா. அப்போது ஒரு காட்சியில் அவரை அடையாளம் தெரிந்து கொண்ட பெண்ணோடு பேசுகிறார். இது போலவே பல்லாயிரம் மில் தொழிலாளர்கள் மேற்கொண்ட ஸ்ட்ரைக் பற்றி நினைவுகளைக் கூறும் மிர்ஸா இன்று அந்தப் போராட்டம் நடத்த இடம் ஒரு பெரிய ஷாப்பிங் மாலாக மாறியிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்.

அந்த மாலுக்குள் அவர் நடக்கும் போது நினைவுகளில் அவர் வேறுகாலத்தில் நடக்கிறார். காலமாற்றம் எல்லாவற்றையும் வெறும் நினைவுகளாக மட்டுமே மீதம் வைத்திருக்கிறது எனக்கூறும் அவர் மனிதனின் இருப்பு குறித்த தேடல் தன்னைத் தொந்தரவு செய்கிறது. நிச்சயமான பதில் என எதுவும் கிடையாது என்றே உணர்ந்திருக்கிறேன்.

வாழ்க்கை என்பது வெறும் பணம் தேடும் முயற்சி மட்டுமில்லை. சுதந்திரமும் சந்தோஷமும் கொண்ட மனிதன் எப்படி இத்தனை இடர்களை எதிர்கொள்ள முடியும்.

இடதுசாரி எண்ணங்களும் சூபியின் தேடலும் கொண்டிருப்பதே தனது வாழ்க்கை பார்வை எனக்கூறும் மிர்ஸா லடாக்கிற்குப் பயணம் மேற்கொள்கிறார். புத்தகோவிலில் உள்ள பிரார்த்தனை மணியை ஒலிக்கிறார். பெரிய ஏரியின் முன்பாகத் தனி ஒருவராக நின்று கொண்டிருக்கிறார். காற்று ஏகாந்தமாக வீசுகிறது

கோவாவிலுள்ள தனது வீட்டை தாங்களே கட்டியதாக அதைச் சுற்றிக்காட்டுகிறார்

தனது அடையாளங்களைத் துறந்து இயற்கையோடு அவர் ஒன்றிணையும் தருணங்கள் வெகுஅழகாகப் படமாக்கபட்டிருக்கிறது. இவரது மனைவி ஜெனிபர் ,கிறிஸ்துவர். மிர்ஸாவோடு இணைந்து திரைப்பட உருவாக்கத்தில் பங்குபெற்றவர். அவர்களின் குடும்ப வாழ்க்கை , மகன் என ஆவணப்படம் அவரையும் ஒரு கதாபாத்திரம் போலவே கையாளுகிறது.

திரைப்பட இயக்குனராக மட்டுமின்றி எழுத்தாளராகவும் சிறந்து விளங்கியவர். இவரது Ammi என்ற புத்தகம் விருதுகள் பெற்றது. தனது அம்மாவைப்பற்றிய நினைவுகளுடன் தனது பால்யகாலத்தின் நினைவுகளையும் இதில் விவரித்துள்ளார். ஹெமிங்வே, பாக்னர், ஸ்டீன்பெக் எனத் தீவிர இலக்கியத்தின் மீது ஈர்ப்பு கொண்டவர் மிர்ஸா.

எண்பதுகளில் துவங்கிய இந்திய மாற்றுசினிமா முயற்சிகளுக்கு இவரது திரைப்படங்கள் உத்வேகம் அளித்தன. தனது திரைப்படங்கள் வணிக ரீதியாகப் பெரும்வெற்றி பெற்றவையில்லை. புகழ்பெற்ற நடிகர்களின் படங்கள் கூடத் தோற்றுப்போகத் தானே செய்கின்றன. தனக்குத் தெரிந்த வாழ்க்கை படமாக்குவதே தனது வேலை. அதன் வெற்றி தோல்வியைத் தான் முடிவு செய்வதில்லை என்கிறார் மிர்ஸா.

இவரது இயக்கத்தில் வெளியான தொலைக்காட்சி தொடரான Nukkad பெரும் வரவேற்பைப் பெற்றது. பாப்ரி மஸ்ஜித் இடிப்பின் போது மனம் உடைந்து போன மிர்ஸா மதவாதம் குறித்த தனது கவலைகளை Naseem என்ற திரைப்படமாக உருவாக்கினார். இப்படம் தேசிய விருது பெற்றது.

ஆவணப்படத்தின் ஒரு பகுதியில் தான் படித்த பூனே திரைப்படக்கல்லூரி வளாகத்திற்குப் போகிறார் மிர்ஸா. அந்த வளாகம் எத்தனை அழகாக அமைந்திருக்கிறது. சுவரோவியங்கள். பருத்த மரங்கள். அமைதியான சூழ்நிலை. அங்குள்ள போதி மரத்தடியில் அமர்ந்து தனது இளமைக் கனவுகளை நினைவு கூறுகிறார். பூனே திரைப்படக் கல்லூரி அமைந்துள்ள வளாகத்தை அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார்கள்.

அவருடன் படித்தவர்கள் இன்று சினிமாவில் உச்சத்தைத் தொட்டிருக்கிறார்கள். அவர்களின் நேர்காணலை விடவும் அவருக்காகப் பணியாற்றிய கார் ஒட்டுனரின் நேர்காணல் படத்தில் இடம்பெற்றுள்ளது. அவர் தன்னை ஒரு தந்தையைப் போல மிர்ஸா நேசித்தார் என நெகிழ்ச்சியாகக் குறிப்பிடுகிறார். இயக்குனர் மகேஷ்பட்டின் நேர்காணல் சிறப்பானது. அவர் மிர்ஸாவின் கலைநேர்த்தியை, ஆளுமையைத் துல்லியமாக அடையாளம் காட்டுகிறார்

இது போன்ற ஆவணப்படங்கள் இன்றைய தலைமுறைக்கு இந்திய மாற்றுசினிமாவின் நாயகர்களை. அவர்களின் பங்களிப்பை அடையாளப்படுத்துகின்றன என்ற வகையில் இது முக்கியமானது.

இன்று ஹிந்தி சினிமாவில் புகழ்பெற்றுள்ள அத்தனை பிரபல நடிகர்களும் இது போன்ற மாற்றுசினிமா முயற்சியிலிருந்து உருவானர்களே என்பது வியப்பளிக்கிறது. மிர்ஸாவின் சகோதரே ஷாரூக்கானை தொலைக்காட்சியில் அறிமுகம் செய்தவர். ஒம்பூரி, நஸ்ருதீன் ஷா ஸ்மிதா பாடீல் போன்றவர்கள் இவர்களால் உருவாக்கபட்டவர்களே.

மிர்ஸாவைப் பற்றிய இந்த ஆவணப்படத்தை என்எப்டிசி தயாரித்துள்ளது. படத்தில் அவருக்கு விருப்பமான கபீரின் பாடல்கள் பொருத்தமான இடங்களில் ஒலிக்கின்றன. சிறந்த இசை சிறந்த ஒளிப்பதிவு, நேர்த்தியான படத்தொகுப்பு எனத் தேர்ந்த தொழில்நுட்ப குழு பணியாற்றியிருக்கிறது. சையத் மிர்ஸாவின் புகழ்பெற்ற படங்களான

Arvind Desai Ki Ajeeb Dastaan (1978) Albert Pinto Ko Gussa Kyoon Aata Hai (1980)Mohan Joshi Hazir Ho! (1984)Naseem (1995) போன்றவை cinema India வழியாக டிவிடியாகக் கிடைக்கின்றன. அமேசானில் இவை விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவை அவசியம் காண வேண்டிய மாற்றுசினிமா முயற்சிகளாகும்.

*

19.3.2018

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: