காளியின் மைந்தர்கள்

மத்திய இந்தியாவில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் தக் அல்லது தக்கீ என அழைக்கபட்டார்கள். ரகசிய குழுக்களாகச் செயல்பட்ட இவர்கள் காளியை வணங்கக் கூடியவர்கள். இந்தியா முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்களாக இயங்கி வந்த இவர்களால் கொலை செய்யப்பட்டவர்கள் ஏராளம். இவர்கள் எங்கிருந்து வருகிறார்கள். எங்கே மறைந்து போய்விடுகிறார்கள் என்பதைக் கண்டறிவது சிரமம். ஆகவே இவர்களைக் கைது செய்வதோ, கட்டுபடுத்துவதோ எளிதாகயில்லை என்கிறது The Thugs or Phansigars of India என்ற நூல்.

குரூரமாகக் கழுத்தை நெறித்துக் கொலை செய்வதே இவர்களின் பாணி. அதற்கு விசேசமான கயிறு ஒன்றை பயன்படுத்துவார்கள். அது போலவே கொலை செய்தவர்களை ஆங்காங்கே புதைத்துவிட்டும் போய்விடுவார்கள். ஆகவே இறந்த உடல்களைக் கண்டுபிடிப்பதும் கடினம். இருள்மனிதர்களாகக் கருதப்படும் இவர்களை ஒடுக்குவதற்காகக் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங்க் மற்றும் கேப்டன் வில்லியம் ஸ்லீமன் தீவிரமாகச் செயல்பட்டார்கள்.

திருமணத்திற்குச் செல்லும் கோஷ்டிகளில் தாங்களும் உறுப்பினர்கள் போலக் கலந்துவிடும் கொள்ளையர்கள் பயணவழியில் அவர்களைத் தாக்கி கொலை செய்து நகைகளை அபகரித்துப் போய்விடுவார்கள். . இது போலவே வணிகக்குழுக்கள் பயணிப்பதை அறிந்தாலும் தாக்கி கொலை செய்து பொருளை அபகரித்துப் போய்விடுவார்கள். வழிப்பறிக் கொள்ளையர்களால் உயிரிழந்தவர்களில் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளும் உண்டு.

பிராமணர்களைக் கொல்லக்கூடாது. பெண்கள் காளியின் அவதாரம் என்பதால் அவர்களைக் கொலை செய்யக்கூடாது. ஆட்களை அடித்துக் கொன்ற பிறகே அவர்களின் பொருளை அபகரிக்க வேண்டும். நோயாளிகளைக் கொன்றால் பாவம் என்பது போன்ற கட்டுபாடுகள் இவர்களிடமிருந்தன. இந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் தலைமுறையாகச் செய்து வந்தார்கள். தந்தை தன் மகனை வழிப்பறிக்கு பழக்குவதும் உண்டு. வணிகக்குழுவினர்களுடன் வரும் நாய்களைக் கூட இவர்கள் கொன்றுவிடுவதே வழக்கம்.

கொள்ளையடிக்கபட்ட பொருட்களில் பாதியை அதன் தலைவன் எடுத்துக் கொள்வான். ஒரு பகுதி கொள்ளையில் ஈடுபட்டவர்களுக்கும் ஒரு பகுதி கோவில் பூசாரிக்கும் வழங்கப்படுவதுண்டு. இவர்களுக்குள் ரகசிய மொழியும் சங்கேதங்களும் இருந்தன. சகுனம் பார்ப்பதில் மிகவும் நம்பிக்கை கொண்டவர்கள். தீய சகுனங்கள் தெரிந்தால் அன்று கொள்ளைக்குப் போக மாட்டார்கள். அது போலவே கொள்ளையடித்த பிறகு ஒன்று கூடி போதை தரும் நாட்டுசாராயத்தைக் குடித்துக் கொண்டாடுவார்கள். காளிக்கு படையல் செய்த ரத்தம் கலந்த நாட்டுசக்கரையைப் பிரசாதமாகச் சாப்பிட்டபிறகே கொள்ளைக்குக் கிளம்புவார்கள். இவர்களை ஒடுக்க விசேச சட்டம் ஒன்றையும் பிரிட்டீஷ் அரசு கொண்டு வந்தது.

ஜெய் பவானி எனக் காளியை வணங்கிய இவர்கள் தங்களைக் காளியின் மைந்தர்கள் என்றே அழைத்துக் கொண்டார்கள்.

பிலிப் மெடோவ்ஸ் டெய்லர் என்ற ஆங்கில எழுத்தாளர் 1839 ஆண்டு Confessions of a Thug என்ற நாவலை எழுதினார். இது வழிப்பறிக் கொள்ளையர்களின் உலகை விரிவாகச் சித்தரித்தது. இந்நூல் தமிழிலும் வெளியாகியுள்ளது. இந்த நாவலை தான் தற்போது Thugs of Hindostan என்ற பெயரில் அமீர்கானும் அமிதாப்பச்சனும் நடிக்கிறார்கள். அமீர் அலி என்ற வழிப்பறிக் கொள்ளைக்காரன் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்கிறார். பிரிட்டீஷ் அரசின் கண்ணில் விரலை விட்டு ஆட்டிய வழிப்பறிக் குழுவாகத் திரைக்கதையை உருவாக்கியிருக்கிறார்கள்

இதே கதைகளத்தில் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கபட்டபடமே The Deceivers. இப்படத்தை இஸ்மாயில் மெர்சண்ட் திரைப்பட நிறுவனம் தயாரித்துள்ளது. படத்தை இயக்கியிருப்பவர் நிகோலஸ் மேயர். ஜான் மாஸ்டரின் நாவலை மையமாகக் கொண்டு இப்படம் உருவாக்கபட்டுள்ளது.

வழிப்பறிக் கொள்ளையர்களை ஒடுக்குவதற்காக அவர்களின் குழுவிற்கு ரகசியமாக இணைந்து கொண்டு கூடவே பயணம் செய்து அவர்களைக் கைது செய்த கேப்டன் வில்லியம் சேவேஜின் கதையே இப்படம். வில்லியமாக நடித்திருப்பர் பியர்ஸ் பிராஸ்னன் 1825ல் மத்திய இந்தியாவில் கதை நடைபெறுகிறது.

வழிப்பறிக் கொள்ளையர்கள் பயணிகளைத் தாக்கி கொள்ளையடிப்பதிலே படம் துவங்குகிறது. குரூரமாகக் கொலை செய்து பொருளை அபகரித்துப் போகிறார்கள்.

தன் இளம்மனைவியோடு கிழக்கிந்திய கம்பெனி அதிகாரியாக இந்தியா வந்து சேருகிறார் வில்லியம். இவரை வரவேற்று வங்கத்தின் நவாப் உபசாரம் செய்கிறார். ஒரு நாள் வில்லியம் இந்த வழிப்பறிக் கொள்ளையர்கள் ஆட்களைக் கொன்று புதைப்பதை தற்செயலாகக் கண்டறிந்துவிடுகிறார். அதிலிருந்து இந்தக் கும்பலை எப்படியாவது கண்டறிய வேண்டும் என நினைக்கிறார். அவர்களைப் பற்றித் துப்பு கிடைக்குமா எனத்தேடுகிறார்.

இதற்கிடையில் சதி எனும் உடன்கட்டை ஏறும் சடங்கு ஒன்றை நேரில் காணும் வில்லியம் அதைத் தடுத்து நிறுத்தி இளம்பெண்ணைக் காப்பாற்றுகிறார். இது அவர் மீது உள்ளுர்மக்களுக்குக் கோபத்தை உருவாக்குகிறது.

தற்செயலாக ஒரு ஆள் வழியாக அவருக்கு வழிப்பறிக் கும்பல் ஒன்றைப்பற்றிய தகவல் கிடைக்கிறது. தன்னை அதில் சேர்த்துவிடும்படியாகச் சொல்கிறார் வில்லியம். தன்னுடைய உறவினர் என அவரது அடையாளத்தை மாற்றிக் கொள்ளை கும்பலில் சேர்த்துவிடுகிறார் அந்த முதியவர்.

வழிப்பறிக் கொள்ளையர்கள் எவரையும் நம்புவது கிடையாது. ஆகவே வில்லியமை பரிசோதனைகள் செய்கிறார்கள். தன்னை நிரூபிக்க அவர் கொலையும் செய்கிறார். மேல்துண்டு போன்ற துணியில் கல்லைக் கட்டி அந்தத் துணியைக் கழுத்தில் போட்டு நெருக்கிக் கொலை செய்வதே அவர்களின் பாணி.

வில்லியம் அந்தக் கும்பலில் ஒருவராக இணைந்து கொள்கிறார். அவர்கள் எவ்வாறு வழிப்பறிக்கு தயார் ஆகிறார்கள். எப்படிக் காளியை வணங்கி கொள்ளைக்கு உத்தரவு கேட்கிறார்கள். எப்படி வழிப்பறி செய்கிறார்கள் என்பதை உடனிருந்து அறிந்து கொள்கிறார். அந்தக் கும்பலில் ஒருவன் வில்லியமை சந்தேகப்பட்டபடியே இருக்கிறான்.

இதற்கிடையில் வில்லியமின் மனைவி தன் கணவனைக் காணவில்லை என்று பயந்து அவரைக் கண்டுபிடிக்க நவாபின் உதவியை நாடுகிறாள். அவர் கண்டுபிடிப்பதற்கு ஆட்களை அனுப்புகிறார்.

வில்லியம் எவ்வாறு முடிவில் வழிப்பறிக் கொள்ளையர்களைக் கைது செய்கிறார் என்பதுடன் படம் நிறைவுபெறுகிறது

இதே கதை முன்னதாக Stranglers of Bombay (1959) என்ற பெயரில் படமாக வெளிவந்துள்ளது.

வெள்ளையர்களின் வீரதீரப் பெருமையைக் கூறுவதற்காகவே எடுக்கபட்ட இப்படம் வழக்கமான பொழுதுபோக்கு படமாகவேயுள்ளது.

மாறுவேஷத்தில் கொள்ளைக்கூட்டத்தில் சேர்ந்து அவர்களைக் கண்டுபிடிக்கும் கதாநாயர்களில் ஒருவராகவே வில்லியமும் உருவாக்கபட்டிருக்கிறார். வழக்கமான காதல், நட்பு. துரோகம் போன்ற மசாலாக்களும் தூவப்பட்டிருக்கின்றன. ஐவரி மெர்சண்ட் தயாரிப்பின் ஆஸ்தான நடிகரான சசிகபூர் இதில் வங்கத்தின் நவாப்பாக நடித்துள்ளார். பழைய ஹிந்தி படம் ஒன்றைக் காண்பது போலவே இருக்கிறது.

இந்தியாவில் இது போன்ற வழிப்பறிக் கொள்ளையர்கள் கூட்டம் நிஜமாக இருந்ததா. அதற்கு என்ன சான்று எனக் கேள்வி எழவே செய்கிறது. Martine van Woerkens என்ற சரித்திர ஆய்வாளர் உண்மையில் இப்படியான கொள்ளைக்கும்பல்கள் எதுவும் இந்தியாவில் கிடையாது. சிறிய குற்றக்கும்பல்களே இருந்தன. இந்தியாவைத் தங்களின் கட்டுபாட்டிற்குள் கொண்டு வருவதற்காகப் பிரிட்டீஷ் திட்டமிட்டு உருவாக்கிய கதையே வழிப்பறிக் கொள்ளையர்கள். 1929ல் பெங்கால் கெஜட்டில் வெளியிடப்பட்ட ஒரு சிறிய தகவலில் இருந்தே இந்தக் கட்டுக்கதை உருவாக்கபட்டது. இதை ரகசிய சுற்றறிக்கையாகக் கிழக்கிந்திய கம்பெனி அதிகாரிகளுக்குள் பரவச் செய்தார்கள். பின்பு இக்கதையை நிஜமாக்க பழங்குடி மக்களைக் கைது செய்து வழிப்பறிக் கொள்ளையாக அடையாளம் காட்டினார்கள்.

இந்தக் கட்டுக்கதையை நிஜமான தகவல்களாகப் பதிவு செய்தவர்கள் அத்தனை பேரும் பிரிட்டீஷ் அதிகாரிகள். மத்திய இந்தியாவின் பழங்குடி மக்களைக் கட்டுபடுத்துவதற்காக இந்தத் தந்திரத்தை பிரிட்டீஷ் அரசு மேற்கொண்டது என்கிறார் மார்டினி. இது பற்றி COLONIAL IMAGININGS AND THE THUGS OF INDIA என விரிவான புத்தகம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

வில்லியம் ஸ்லீமன் எழுதிய குறிப்புகளே வழிப்பறிக் கொள்ளையர்கள் பற்றிய ஒரே முக்கிய ஆவணம். இந்தப் படத்திலும் வில்லியம் ஸ்லீமன் கதாபாத்திரமே முக்கியமாக்கபட்டிருக்கிறது

மேற்குலகிற்கு இந்தியாவைப் பற்றிய தவறான சித்தரித்தை உருவாக்கியத்தில் இது போன்ற படங்களுக்கும், கட்டுக்கதைகளுக்கும் முக்கியப் பங்குண்டு. இன்று ஆய்வாளர்கள் இது போன்ற கட்டுகதைகளின் மூலத்தை ஆராயத் துவங்கிவிட்டார்கள். எது உண்மை என்பது உலகிற்குத் தெரியத் துவங்கிவிட்டது

The Deceivers படம் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் இன்றும் ஆய்வாளர்கள் மத்தியில் இந்தியாவில் நடைபெற்ற வழிப்பறிக் கொள்ளை குறித்த கருத்திற்கு ஆதரவாக இப்படம் காட்டப்பட்டே வருகிறது

••

.

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: