உலகம் மாறிக் கொண்டிருக்கிறது.

அனிமேஷன் திரைப்படங்கள் என்றாலே பொதுவாக விலங்குகளின் உலகைச் சித்தரிப்பதாகவோ, அல்லது மாய, விநோத, சாகச கதைகளாகவோ தானிருக்கும்.

ஹாலிவுட் அனிமேஷன் படங்களை விடவும் ஜப்பானிய அனிமேஷன் திரைப்படங்கள் சிறந்தவை. அப்படங்களின் கதையும் சித்திரங்களும் காட்சிப்படுத்தும் முறையும் அபாரமாகயிருக்கும். அது போலவே ரஷ்ய அனிமேஷன் திரைப்படங்களும் தனித்துவமானவை. ரஷ்ய இலக்கியத்தின் முக்கிய நாவல்கள், நாட்டார்கதைகள் அனிமேஷன் திரைப்படங்களாக வெளிவந்துள்ளன.

பிரிட்டன் அனிமேஷன் திரைப்படங்கள் பெரிதும் ஹாலிவுட் மரபில் உருவாக்கபடுபவை. ஆனால் இன்று பிரிட்டன் தனக்கான தனித்துவமான உருவாக்கதிலும் வெளிப்பாட்டிலும் முன்னேறிக் கொண்டுவருகிறது.

ஒரு அனிமேஷன் திரைப்படத்தின் வழியே ஒரு கதாபாத்திரத்தின் முழுவாழ்க்கையைச் சித்தரிப்பதன் என்பது அபூர்வமான முயற்சியே. அதுவும் உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒருவனின் இளமை பருவம் முதல் அவனது இறுதிநாள் வரை வாழ்வில் நடைபெற்ற நிகழ்வுகள், வாழ்க்கை போராட்டத்தில் சந்தித்த சவால்கள். சந்தோஷங்கள், கவலைகள். வேதனைகள். காலமாற்றத்தின் வெளிப்பாடு. சரித்திர நிகழ்வுகள் என அத்தனையும் உள்ளடக்கியதாக உருவாக்கபட்டுள்ளது எத்தல் அண்ட் எர்னெஸ்ட்( Ethel & Ernest) அனிமேஷன் திரைப்படம்.

பிரபல ஒவியரும் சிறார் எழுத்தாளருமான ரேமண்ட் பிரிக்ஸ் (Raymond Briggs)எழுதிய கிராபிக் நாவல் ஒன்றின் திரைவடிவமிது. Roger Mainwood இப்படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்திலுள்ள ஒவியங்கள் யாவும் கையால் வரையப்பட்டவை. மிக நேர்த்தியான, சிறப்பான வண்ண வடிவ அழகோடு உருவாக்கபட்டுள்ளன.

ரேமண்ட் பிரிக்ஸ் தனது பெற்றோரின் வாழ்க்கையை ஒரு கதையாக உருவாக்கியிருக்கிறார். அவர்களின் வாழ்க்கை இரண்டாம் உலகப்போரின் நடுவே வாழ்ந்த ஒரு தம்பதிகளின் கதை. சுவாரஸ்யமான நிகழ்வுகளும் மறக்கமுடியாத நினைவுகளும் கொண்டது. லண்டனில் அடித்தட்டு மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதன் உதாரணம் போல இக்கதை அமைந்துள்ளது.

படத்தின் முதற்காட்சியில் வயதான ரேமண்ட் பிரிக்ஸ் தனது வீட்டில் தனியே அமர்ந்தபடியே ஒவியம் தீட்ட ஆரம்பிக்கிறார். வெள்ளை காகிதத்தில் எத்தல் மற்றும் எர்னெஸ்ட் இருவரது உருவங்களையும் வரைகிறார். அப்படியே அவர்களின் வாழ்க்கை திரையில் அசைவுறத்துவங்குகிறது

எத்தல் ஒரு பணக்கார வீட்டில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறாள். ஒரு நாள் அறையைச் சுத்தம் செய்துவிட்டு கண்ணாடி ஜன்னலைத் திறந்து தூசி படிந்த துணியொன்றை உதறும் போது வீதியில் செல்லும் எர்னெஸ்டை தற்செயலாகக் காண்கிறான். எர்னெஸ்ட் துடிப்பான இளைஞன். உழைக்கும் வர்க்கத்தினைச் சேர்ந்தவன். சைக்கிளில் பயணிக்கும் அவன், ஒரு அழகான பெண் மாடியில் இருந்தபடியே துணியை உதறுவதைக் கண்டு தனது தொப்பியை எடுத்து ஆட்டி வணக்கம் சொல்கிறான். அதைக் கண்டு அவள் வெட்கப்படுகிறாள். ஆனால் மனதிற்குள் ரசிக்கிறாள். அடுத்த நாளும் இது போலவே நடக்கிறது. மூன்றாம் நாள் அவன் வருவதற்காக ஜன்னலைத் திறந்தபடியே காத்திருக்கிறாள். அவன் வருகிறான். கையசைக்கிறான். அவளும் புன்னகை செய்கிறாள். எத்தலை விட ஐந்து வயது குறைவான எர்னெஸ்ட் அவளது அழகில் மயங்கிவிடுகிறான்.

ஐந்தாம் நாள் அவன் வரும் போது ஜன்னலுக்கு ஒடுகிறாள் எத்தல். ஆனால் எஜமானி அழைக்கவே அவள் வேறுவேலை செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எர்னெஸ்ட் அவளைக் காணாமல் ஏமாற்றம் அடைகிறான். அதன் பிறகு அவளை ஜன்னலில் காண முடியவில்லை என்பது அவனை வருத்தப்படுத்துகிறது.

எத்தலும் அவனை நினைத்து வருந்துகிறாள். ஒரு நாள் கையில் பூங்கொத்துடன் அவள் வேலை செய்யும் வீட்டுக்கதவை தட்டி அவளிடம் அறிமுகமாகிக் கொள்கிறான். அவள் எதிர்பாராத சந்தோஷத்தில் மிதக்கிறாள். இருவரும் ஒன்றாகச் சினிமா பார்க்கப் போகிறார்கள். படம் பார்த்துவிட்டு திரும்பி வரும் போது கைகோர்த்து நடக்கிறார்கள். அவர்களுக்குள் காதல் அரும்புகிறது. பின்பு ஒருநாள் அவனைத் தனது வீட்டிற்கு அழைத்துப் போகிறாள் எத்தல். எத்தலின் தாய் அவர்களின் திருமணத்திற்குச் சம்மதம் தெரிவிக்கிறாள்.

இருவரும் திருமணம் செய்து கொண்டு புதிய வாழ்க்கையைத் துவக்குகிறார்கள். தெற்கு லண்டனில் ஒரு வீட்டைப் பிடிக்கிறான். புது வீட்டை ஆசையாகச் சுற்றிப்பார்க்கிறாள் எத்தல்.

வீடு தான் வாழ்க்கையின் மையம். எத்தல் எர்னெஸ்ட் ரேமண்ட் என்ற மூன்று கதாபாத்திரங்களைப் போலவே வீடும் ஒரு கதாபாத்திரமாக மாறிவிடுகிறது. படத்தின் பெரும்பான்மை காட்சிகளில் எத்தல் வீட்டிற்குள்ளாக இருக்கிறாள். வீட்டை சுத்தம் செய்கிறாள். வீட்டு வேலைகள் செய்து கொண்டேயிருக்கிறாள். வீட்டில் ஒரு ரேடியோ இருக்கிறது. அதில் செய்திகளை விரும்பி கேட்கிறான் எர்னெஸ்ட். பத்திரிக்கை படிக்கிறான். படம் முழுவதும் எர்னெஸ்ட் தேநீர் குடித்துக் கொண்டேயிருக்கிறான்

அவனது வாழ்க்கையில் இன்பமென்பது ஒரு கோப்பை தேநீரும் ஒரு சிகரெட்டும் மட்டுமே. எவ்வாறு காலமாற்றத்தால் லண்டன் வாழ்க்கை மாறிக் கொண்டேயிருந்தது என்பது படத்தில் அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது.

எர்னெஸ்ட் ரேடியோவில் சர்ச்சில் உரையாற்றுவதைக் கேட்கிறான். பாராட்டுகிறான். பின்பு இரண்டாம் உலகப்போர் துவங்குகிறது. லண்டன் நகரம் நெருக்கடிக்குள் சிக்குகிறது. அந்த நாட்களில் தீயணைக்கும் படைவீரனாகப் பணியாற்றுகிறான். விமானத் தாக்குதலை நேரடியாகக் காண்கிறான். மகன் ரேமண்ட் பிறக்கிறான்.. இரண்டாம் உலகப்போரின் போது லண்டனின் மீது விமானதாக்குதல் நடைபெறுகிறது. அவர்களின் வீடு சேதமடைகிறது. தற்காலிகமாக வேறு இடத்திற்குக் குடிபோகிறார்கள். தீயணைக்கும் பணியின் போது இடிபாடுகளில் சிக்கிய மனிதர்களைக் காப்பாற்றுகிறான் எர்னெஸ்ட். யுத்தம் மனிதவாழ்க்கை சிதைப்பதைக் கண்டு கண்ணீர் விடுகிறான். அவனை ஆறுதல்படுத்துகிறாள் எத்தல்.

வீடு தான் அவர்களின் உலகம். நத்தை முதுகில் தன் வீட்டை சுமந்து திரிவதைப் போலவே எத்தலும் நடந்து கொள்கிறாள். யுத்தகாலத்தில் ஒரு கூண்டு போல மேஜையின் அடிபகுதியை அமைத்துக் கொண்டு அதற்குள் உறங்குகிறார்கள். யுத்தம் முடிகிறது. புதிய வாழ்க்கை துவங்குகிறது.

மீண்டும் அவர்கள் தெற்கு லண்டன் பகுதிக்கே வருகிறார்கள். தந்தைக்கும் மகனுக்குமான உறவு படத்தில் மிகக் கவித்துவமாகச் சித்தரிக்கபட்டுள்ளது. இருவரும் ஒன்றாக விளையாடுகிறார்கள். ஆடிப்பாடுகிறார்கள்

இப்போது எர்னெஸ்ட் பால்காரனாக வேலை செய்ய ஆரம்பிக்கிறான். ரேமண்ட் வளர ஆரம்பிக்கிறான். பள்ளிக்குப் போகிறான். வீட்டில் புதிதாகக் கறுப்பு வெள்ளை தொலைக்காட்சி இடம்பெறுகிறது. செய்திகளை அவர்கள் ஆர்வத்துடன் பார்க்க ஆரம்பிக்கிறார்கள். ரேமண்ட் வளர்க்கிறான். ஒவியக்கல்லூரியில் சேர்ந்து படிக்கிறான். அவனது தோற்றம் மாறுகிறது. பெல்பாட்டம் அணிந்து ஹிப்பிப் போல நீண்ட தலைமயிருடன் இருக்கிறான். அவனைத் தலைசீவிக் கொள்ளும்படி எத்தல் சொல்கிறான். அதற்கு ரேமண்ட் கோவித்துக் கொள்கிறான். தலைமுறை இடைவெளி அழகாகக் காட்சிப்படுத்தபடுகிறது.

எர்னெஸ்ட் புதிதாகக் கார் வாங்குகிறான். மனைவியை அழைத்துக் கொண்டு காரில் பயணம் போகிறான். காலம் அவர்களுடன் போட்டியிடுகிறது.

ரேமண்ட் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். அவளைப் பெற்றோருக்கு அறிமுகம் செய்து வைக்கிறான். எர்னெஸ்ட் தம்பதிகளுக்கு வயதாகிறது . ரேமண்ட் திருமணம் செய்து கொள்கிறான்.

அந்த வீட்டில் ரேமண்ட் வாங்கிய சான்றிதழ்களும் ஒரேயொரு எர்னெஸ்டின் சான்றிதழும் மட்டுமே சுவரில் இருக்கின்றன. அது அவர்கள் வாழ்ந்த வாழ்வின்சாட்சி.

எத்தல் நோயுறுகிறாள். அவளை நேசத்துடன் பராமரிக்கிறான் எர்னெஸ்ட். முடிவில் எத்தல் இறந்துவிடுகிறாள். ஒற்யை ஆளாக வாழ்வதன் தனிமையைத் தாங்கமுடியாமல் எர்னெஸ்ட் துயரமடைகிறான்.

ரேமண்ட் வழியாக அவரது பெற்றோர்களின் முழுவாழ்க்கையும் காட்டப்படுகிறது. மிகப் பெரிய நாவலை வாசித்துமுடிக்கும் போது கிடைக்கும் அனுபவத்தைத் தருகிறது இந்த ஒன்றரை மணி நேர அனிமேஷன் படம். கிராபிக் நாவலாக வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது இக்கதை. ஸ்நோமென் என்ற பனிமனிதன் கதாபாத்திரத்தை வரைந்து புகழ்பெறச்செய்தவர் ரேமண்ட் பிரிக்ஸ்.

காதலித்துத் திருமணம் செய்து கொண்ட எத்தல் வீட்டைப் பராமரிக்கிறாள். மகனை வளர்க்கிறாள். கணவனுக்கு உறுதுணையாக இருக்கிறாள். கிறிஸ்துமஸ் கொண்டாடுகிறாள். பிரார்த்தனைகளில் கலந்து கொள்கிறாள். வீடு மட்டுமே அவளின் உலகம். இடையுறாமல் அதற்குள் ஏதாவது ஒரு வேலை செய்து கொண்டேயிருக்கிறாள். முடிவில் அவளும் ஒரு புகைப்படமாகி சுவரில் இடம்பிடிக்கிறாள். இவ்வளவு தானா வாழ்க்கை என்ற கேள்வியைப் படம் எழுப்புகிறது

எர்னெஸ்டிற்கு வாழ்க்கை என்பது ஒரு கோப்பை தேநீரே. அவன் சந்தோஷம் வருத்தம், ஏமாற்றம் கவலை, பயம் என எல்லாத் தருணங்களிலும் ஒரு கோப்பை தேநீரை அருந்துகிறான். அது தான் வாழ்க்கையை நேசிக்கவும் புத்துணர்வு கொள்ளவும் செய்கிறது. மனைவி மறைந்த பிறகு தனியே இருக்கும் எர்னெஸ்ட் அப்போதும் ஒரு கோப்பை தேநீரை கையில் வைத்திருக்கிறான். அந்தத் தேநீரே ஆறுதல் அளிப்பதாக உணருகிறான்.

காபி, டீ போன்றவை வெறும் பானங்களில்லை. உங்கள் வாழ்க்கையைப் புத்துணர்வு கொள்ள வைக்கும் உந்துசக்தி. வீடு தரும் ஒரு கோப்பை தேநீர் தான் வாழ்க்கை நமக்களிக்கும் உண்மையான பரிசு. அந்த இதமும் சூடும் சக்தியுமே தொடர்ந்து வாழ்வதற்கான உற்சாகத்தைத் தருகிறது. வாழ்க்கையில் எது நடந்தாலும் ஒரு கோப்பை தேநீர் அருந்துங்கள். அது உங்களைச் சாந்தப்படுத்திவிடும் என்கிறது திரைப்படம்.

பிள்ளைகள் வளரும் போது பெற்றோர்கள் கனவு காண ஆரம்பிக்கிறார்கள். அந்தக் கனவின் சிறு துளியை மட்டுமே பிள்ளைகளிடம் தெரிவிக்கிறார்கள். ஆனால் முழுக்கனவும் அவர்களுக்குள் மட்டுமே புதைந்திருக்கிறது. பிள்ளைகள் தனிவழியில் தன்விருப்பத்தில் செல்லும் போது பெற்றோர்களின் கனவு நொறுங்க ஆரம்பிக்கிறது. ஆனால் அது தான் உலக நியதி. பெற்றோர்கள் தங்கள் கனவுகள் தோற்றுப்போனதை விடவும் பிள்ளைகளின் சந்தோஷம் முக்கியம், அவர்கள் மகிழ்ச்சியாக வாழட்டும் என ஏற்றுக் கொள்கிறார்கள். காலம் பெற்றோர்களின் முதுக்குப் பின்னால் நின்று கொண்டு கைகொட்டிச் சிரிக்கிறது.

பிள்ளைகள் வளர வளர பெற்றோர்களின் தனிமை பெரிதாக ஆரம்பிக்கிறது. வாழ்க்கையைத் துவங்கும் போது எப்படி இருவர் மட்டுமே கொண்டதாகத் துவங்கினார்களோ அப்படியே மீண்டும் அதே நிலைக்குத் திரும்புகிறார்கள். நினைவுகள் மட்டுமே துணை. அந்த நினைவின் சாட்சியாக உள்ள புகைப்படங்களும் சான்றிதழ்களும் உடைகளுமே துணை..

மகன் தான் காதலிக்கும் பெண்ணை அழைத்துக் கொண்டு வரும் போது தானும் ஒரு நாள் அதே பெண்ணைப் போலத் தானே இருந்தோம் என எத்தல் நினைத்துக் கொள்கிறாள். காலம் மாறிவிட்டது. தலைநரைத்துவிட்டது. கண்ணீருடன் அவர்களை ஆசிர்வாதம் செய்கிறாள்.

பெற்றோர்களின் காலம் அவசரமில்லாதது. நிதானமாக அவர்கள் வாழ்க்கையை எதிர்கொண்டு ஒவ்வொரு படியாகக் கடந்து வாழ்ந்தார்கள். ஆனால் பிள்ளைகளின் காலம் அவசரமயமானது. பரபரப்பானது. ரேமண்ட் வேகமாகக் காரை ஒட்டுகிறான். வேகமாக வீட்டிற்கு வருகிறான். வேகமாக வெளியேறுகிறான்

வீட்டிற்குள் கலர் டிவி அறிமுகமாகிறது. மருத்துவமனையில் நோயாளிகள் கூட டிவி பார்க்கிறார்கள். புதிய உலகம் அறிமுகமாகிறது. எல்லா மாற்றங்களையும் தாண்டி மனிதர்கள் உறவுகளின் மீதே அதிகக் கவனமும் நாட்டமும் கொண்டவர்கள் என்பதைப் படம் அழகாகச் சித்தரிக்கிறது.

இது எர்னெஸ்ட் எத்தல் இருவரின் கதையில்லை. ஒரு நூற்றாண்டின் கதை. அந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு தம்பதிகளின் கதை. மாறிவரும் உலகம் எதை இழந்துவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டும் கதை

படம் பார்த்த இரண்டு நாட்களுக்குப் பிறகும் மனதில் அந்தக் காட்சிகள் ஒடிக் கொண்டேயிருக்கின்றன. நெகிழ்ந்து போய்க் கண்ணீர் வர பார்த்த ஒரே அனிமேஷன் திரைப்படம் இதுவே.

காலமாற்றம் என்பது எவ்வளவு சிறிய வார்த்தை. ஆனால் எவ்வளவு விரிவான அனுபவத்தைச் சொல்லக்கூடியது. இந்த ஒரு வார்த்தைக்குப் பின்னால் எத்தனை எத்தனை அனுபவங்கள். மாறுபாடுகள்.

காலமாற்றத்தின் சாட்சியாக இருப்பவை கலைகளே.

இலக்கியம் காலமாற்றத்தை துல்லியமாகப் பதிவு செய்கிறது. மனிதவாழ்வின் மேன்மையைப் பாடுகிறது. அதைத் தான் இந்த அனிமேஷன் படமும் செய்திருக்கிறது

வழக்கமான ஹாலிவுட் அனிமேஷன் படங்களைப் பார்த்து சலித்தவர்களும் இப்படம் முற்றிலும் புதிய அனுபவத்தைத் தருகிறது என்பதே நிஜம்..

**

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: