டி.எஸ். எலியட்டின் காதல்


கல்லூரி நாட்களில் நோபல் பரிசு பெற்ற கவிஞர் டி.எஸ். எலியட்டின் வேஸ்ட் லேண்ட் கவிதையைப் பாடமாக வாசித்திருக்கிறேன். பின்பு எலியட்டின் (T.S.Eliot) கட்டுரைகளைப் பலமுறை விரும்பி வாசித்திருக்கிறேன். ஆனால் கல்லூரி நாட்களில் ஒரு பேராசியர் கூட எலியட்டின் வாழ்க்கை குறித்தோ, அவருக்கும் எஸ்ரா பவுண்டிற்குமான நட்பு குறித்தோ, யார் வேஸ்ட் லேண்ட் என்ற கவிதையின் தலைப்பை வைத்தவர் என்றோ எதுவும் சொல்லிக் கொடுத்ததில்லை. பாடமாக இலக்கியம் கற்கும் போது மதிப்பெண் மட்டுமே முதன்மையாகி விடுகிறது. ரசித்து ரசித்து எலியட்டினைக் கற்றுத்தரும் பேராசிரியர்கள் வெகு குறைவே.

நவீனத்துவத்தின் பிதாமகராகக் கருதப்படும் டி. எஸ். எலியட்டின் கவிதைகளும் விமர்சனங்களும் ஆங்கில இலக்கிய உலகை அடுத்தக் கட்டத்திற்குக் கொண்டு சென்றன. எலியட்டின் பாழ்நிலம் கவிதை தமிழில் மொழிபெயர்க்கபட்டுள்ளது. ஆனால் அக்கவிதை தமிழ் மனதிற்கு நெருக்கமாகயில்லை. உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதே கவிதை என நினைக்கும் தமிழ் மனதிற்கு உணர்ச்சிகளிடமிருந்து விடுபடுவது அல்லது தப்பித்தலே கவிதை என அடையாளம் காட்டுகிறார் எலியட். மரபின் தொடர்ச்சியாக நவீனம் எவ்வாறு உருவாகிறது என்பதைத் தனது கட்டுரைகளின் மூலம் அழகாக விளக்குகிறார் எலியட்.

தாமஸ் ஸ்டியன்ஸ் எலியட் எனப்படும் டி.எஸ். எலியட். அமெரிக்காவில் பிறந்தவர். தனது 25-வது வயதில் தத்துவம் பயிலுவதற்காக இங்கிலாந்து வந்தார். பின்பு தன் வாழ்நாளை இங்கிலாந்திலே கழித்ததோடு பிரிட்டீஷ் பிரஜையாகவும் மாறிக் கொண்டார். தத்துவம் படித்த கவிஞர் என்பதே அவரது தனிச்சிறப்பு. பெட்ரண்ட் ரஸ்ஸலின் நண்பராக இருந்தவர் எலியட்.

இங்கிலாந்தில் தங்கிய நாட்களில் விவியன் ஹைவுட் என்ற இளம்பெண்ணைச் சந்தித்தார் எலியட். துடிப்பான, வெகுளித்தனமான, வேடிக்கைகள் செய்யக்கூடிய அவளை மிகவும் பிடித்துப் போனது. விவியனுக்கும் அவரைப் பிடித்திருந்தது. விவியனின் குடும்பம் மிகவும் வசதியானது, அவளது சகோதரன் மௌரீஸ் ராணுவத்தில் பணியாற்றினான். எலியட் மீதான காதலால் வீட்டை விட்டு வெளியேறிய விவியன் அவசர அவசரமாகப் பதிவு திருமணம் செய்துகொண்டாள்.

புதுமணத்தம்பதிகள் பெட்ரண்ட் ரஸ்ஸல் தந்த இடம் ஒன்றுக்கு குடிபோனார்கள். சின்னஞ்சிறிய அறை. அடிப்படை வசதிகள் கூட இல்லாத இடத்தில் சாய்வுநாற்காலியில் அமர்ந்தபடியே தான் எலியட் உறங்கினார்.

விவியனுக்குச் சீரற்ற மாதவிடாய்க் காரணமாக அடிக்கடி குருதிப்பெருக்கு பீறிடுவது வழக்கம். ஆகவே படுக்கை முழுவதும் ரத்தமாகிவிடும். அவளே படுக்கை விரிப்பைத் துவைத்து காயவைப்பாள். அத்துடன் ஹார்மோன் கோளாறு காரணமாக அவளது மனம் சதா குழப்பத்தில் தடுமாறிக் கொண்டேயிருந்தது. தலைவலியும், தூக்கமின்மையும், மயக்கமுமாக நோயாளியாக இருந்தாள். இதனால் பயமும், வெறித்தனமும் மேலோங்கியது.

திருமணத்திற்கு முன்பு வரை அவளின் இந்தப் பிரச்சனைகள் பற்றி எலியட் அறிந்திருக்கவில்லை. ஆனால் திருமணமாகி அவர்கள் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கிய போது சீரற்ற குருதிப் போக்குக் காரணமாக அங்கிருந்த பொருட்களை உடைத்து சிதைத்து களேபரமாக்கியதுடன் தேவைக்கு அதிகமாக மருந்தை உட்கொண்டு மயங்கிப் போனாள் விவியன். இச்செயல் எலியட்டினை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஆனாலும் அவள் மீதான காதலால் அவளை அரவணைத்துக் கொண்டு அவள் விருப்பபடியே அவளது பெற்றோரை சந்திக்கச் சென்றார்.

விவியனின் தாய் தன் மகளின் உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளை வெளிப்படையாக விவாதித்தோடு, அவரைப் போல அன்பான கணவர் கிடைத்தது அவளது அதிர்ஷ்டம் என்று பாராட்டினாள். எலியட் அப்போது எந்த வேலையிலும் இல்லை. ஒரேயொரு கவிதை தொகுதி மட்டுமே வந்திருந்தது. அதுவும் 200 பிரதிகளே விற்பனையாகியிருந்தன. கவிஞராக மட்டுமே வாழ்வது கடினம் என்பதை எலியட் உணர்ந்திருந்தார்.

விவியனோ அவர் கவிஞராக மட்டுமே வாழ வேண்டும். தான் அவர் கவிதை எழுதுவதற்கு உதவிகள் செய்வதாகக் கூறியதோடு தன்னுடைய பெரும்பான்மை நேரத்தை டைப் அடிப்பதற்காகச் செலவழித்தாள். அவள் தான் எலியட்டின் வேஸ்ட் லாண்ட் கவிதைக்கு அந்தத் தலைப்பை வைத்தவள் என்கிறார்கள்.

விவியனால் குழந்தை பெற்றுக் கொள்ளமுடியாது. அத்துடன் மனக்கொந்தளிப்புக் காரணமாக அவளது நடவடிக்கைகள் மாறிக் கொண்டேயிருக்கும். சில நேரம் அது எல்லை மீறிப் போய் அடிப்பதும் உதைப்பதும் உச்சபட்ட கோபத்தைக் காட்டுவதுமாக இருக்கும் என்பதை எலியட் நன்றாக உணர்ந்திருந்தார்.

திருமணத்தின் பின்பும் தான் ஒரு பிரம்மசாரியை போல வாழ்வதாகத் தனது நாட்குறிப்பில் எலியட் எழுதியிருக்கிறார். எஸ்ரா பவுண்டிற்கு எழுதிய கடிதத்தில் விவியனின் மனப்பிரச்சனைகளைத் துல்லியமாக எழுதியிருக்கிறார் எலியட்.

விவியன் கோபத்தில் என்ன செய்வாள் என்பதை அவரால் கணிக்கவே முடியவில்லை. ஒருமுறை அவரது உடைகளை அள்ளி ஜன்னல் வழியாக வீதியில் வீசி எறிந்துவிட்டாள். இன்னொரு முறை அவர் பார்ட்டி ஒன்றில் விருந்தினர்களுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு மேஜையைக் கவிழ்த்திவிட்டாள். வீட்டில் உணவு மேஜையில் வேண்டுமென்றே அரசியல் பேசி அவளது தந்தையின் கோபத்தைத் தூண்டினாள். கோவித்துக் கொண்டதற்காக அதிகமான மருந்தை குடித்துக் குளியலைறையில் மயங்கிவிழுந்தாள். இப்படிச் சதா கொந்தளிப்பான மனநிலையில் இருந்த போதும் விவியனை எலியட் தீவிரமாகக் காதலித்தார். இயல்பில் அவள் நல்லவள். நரம்புக் கோளாறு அவளை இப்படி எல்லாம் செய்யவைக்கிறது என நம்பினார். மற்றவர்கள் அவளைப் பற்றிக் குறை கூறும் போது அது பொய், தன் மனைவி அன்பானவள். சிறந்த இலக்கியங்களைக் கற்றவள். பண்பானவள் என்று மறுமொழி கூறினார் எலியட்

வசதியான மாமனார் வீட்டில் இருந்தபடியே கவிதை எழுதிக் கொண்டிருக்க மனமில்லாமல் ஒரு வங்கிப் பணியில் சேர்ந்தார் எலியட். ஒரு கவிஞர் இப்படி வங்கிப் பணியில் தன்னை அழித்துக் கொள்ளக்கூடாது என விவியன் தடுத்தாள். சண்டையிட்டாள். ஆனால் எலியட் தான் பிறரைச் சார்ந்து வாழ விரும்பவில்லை என்று வேலைக்குப் போய் வரத்துவங்கினார். அது விவியனின் மனக்கொந்தளிப்பை மேலும் அதிகப்படுத்தியது. தன்னை விட்டு விலகிப் போவதற்காகவே அவர் வேலைக்குப் போவதாகக் கருதினாள். அதைத் தடுத்து நிறுத்த முயன்றாள்.

எலியட் ஒரு நாள் ஆப்ரிக்காவிலிருந்து திரும்பிய மைத்துனரை வரவேற்க சென்ற போது விவியனும் உடன் வந்திருந்தாள். புதிய காரில் திரும்பி வந்து கொண்டிருந்த போது அவர்கள் பேசி சிரித்தபடியே வந்தார்கள். திடீரென ஆத்திரமான விவியன் காரை ஒட்டிக் கொண்டிருந்த எலியட் மீது பாய்ந்து காரை வேறுபக்கம் திரும்பச் செய்து விபத்திற்கு உள்ளாக்கினாள். இதனால் மௌரீஸின் பல் உடைந்து போனது. நல்ல வேளையாக எலியட் உயிர் தப்பினார்.

எலியட்டின் கவிதைகள் நூலாக வெளியாகி புகழ்பெற்றன. அவரைத்தேடி எழுத்தாளர்களும் கவிஞர்களும் பத்திரிக்கையாளர்களும் வரத்துவங்கினார்கள். பார்ட்டி நாடகம் இசைநிகழ்ச்சி என நாட்கள் கடந்தன. எங்கே அவர்கள் எலியட்டை தன்னிடமிருந்து பிரித்துவிடுவார்களோ எனக் கற்பனை செய்து கொண்ட விவியன் விருந்தில் மிக மோசமாக நடந்து கொண்டாள். சிலரை அவமதித்துத் துரத்திவிட்டாள். பார்ட்டியில் ஒயின் பாட்டிலை உடைத்து கூச்சலிட்டாள். இதனால் அவளைக் கண்டு பலரும் பயந்தார்கள்.

விவியன் தன் தாயின் பேச்சிற்கு மட்டுமே கட்டுப்பட்டாள். தாயும் மகளை நன்றாகப் புரிந்து வைத்திருந்தாள். நல்ல படிப்பாளியாக, கலைகளில் நாட்டம் உள்ளவாக இருக்கும் விவியன் ஏன் இப்படி நரம்பு கோளாறால் மோசமாக அவதிப்படுகிறாள் என்று கவலைப்பட்டுக் கொண்டேயிருந்தாள் அவளது தாய். எலியட் தன் குடும்பப் பிரச்சனைகளை வெளியே பகிர்ந்து கொள்ளாமல் விவியன் மீது மாறாத அன்பு செலுத்தியது அவளை நெகிழச் செய்தது.

பேபர் அண்ட் பேபர் பதிப்பகத்தில் எலியட் எடிட்டராக வேலைக்குச் சேர்ந்தார். அலுவலகத்திற்கே தேடி வந்து விவியன் தொல்லை கொடுக்க ஆரம்பித்தாள். அதனால் அவளை உள்ளே விட அனுமதி மறுத்தார்கள். இதனால் மேலும் கோபமடைந்த விவியன் எலியட்டிற்குப் பிடித்தமான சாக்லெட்டை ஒரு பாத்திரம் நிறையக் காய்ச்சி எடுத்து வந்து அலுவலக நுழைவாசலில் கொட்டினாள். ஊழியர்களைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டினாள்.

ஒரு புறம் பாலின்பம் கிடைக்காத தவிப்பு, மறுபுறம் மனைவியின் தீவிரமான கோபம் எனத் தத்தளிந்த எலியட் விவியனை சமாளிக்கமுடியாமல் திணறிப் போனார்.

ஒருநாள் லண்டன் வீதியொன்றில் தற்செயலாக விவியனை சந்தித்த எழுத்தாளர் வர்ஜீனியா வுல்ப் அவளிடம் அன்பாகப் பேச முற்பட்ட போது, தான் விவியன் இல்லை என்று பொய்யாக நடித்ததோடு கைப்பையிலிருந்த கத்தியை எடுத்து நீட்டி அவளைக் கொல்லப் போவதாக மிரட்டினாள் விவியன். வர்ஜீனியா வுல்ப் போன்ற எழுத்தாளர்கள் தன்னிடமிருந்து கணவனைப் பிரித்துக் கொண்டு போய்விடுவார்கள் என அவளாகக் கற்பனை செய்து கொண்டதே காரணம்.

வீட்டிலும் வெளியிலும் அலுவலகத்திலும் விவியன் தொடர்ந்து ஏற்படுத்திய பிரச்சனைகளைத் தாங்கிக் கொண்டு அவளுடன் அமைதியாக வாழ்ந்தார் எலியட். சில நாட்கள் இரவில் முன்பு போல அவளுடன் கவிதைகள் குறித்துப் பேசுவதில்லை என்று அவள் கோபத்தில் கத்துவாள். ஒரு சில நாட்கள் தனது தவற்றை உணர்ந்து கொண்டவளைப் போலக் கண்ணீர்விட்டு உங்களை நிச்சயம் சந்தோஷமாக வைத்துக் கொள்வேன் என்று உறுதியளிப்பாள். ஆனால் அவள் மனதை உடல்உபாதைகள் ஆக்ரமித்து ஆட்டுவைத்துக் கொண்டிருந்தன. அதை மீற அவளால் முடியவில்லை.

இந்த அவதிகளுக்குள், பிரச்சனைகளுக்குள், வெறுமைக்குள் தான் எலியட் தொடர்ந்து கவிதைகள் எழுதினார். துண்டிக்கபட்ட காட்சிகள். வெறுமையை எதிரொலிக்கும் வரிகள். பல்குரல்தன்மை கொண்ட நீள்கவிதைகள் என்று மொழியை அவர் முற்றிலும் புதிய தளத்தில் கைக்கொள்ளத் துவங்கியதற்கு அவரது சொந்த வாழ்க்கையே முதற்காரணம். எலியட்டின் கடிதங்கள் ஏழு தொகுதிகளாக வெளிவந்துள்ளன. அதில் அவரது மனவேதனைகள், விவியனுடன் ஏற்பட்ட பிரச்சனைகள். எழுத்தாளர்களுடன் இருந்த உறவு அத்தனையும் துல்லியமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன

விவியனின் தந்தை இறந்து போகவே குடும்பச் சொத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு எலியட் மற்றும் மௌரீஸிடம் வந்தது. இது விவியனை மேலும் கோபப்படுத்தியது. தன்னை ஒரு நாள் எலியட் நிச்சயம் விரட்டியடித்து விடுவார். ஆகவே தனக்குத் தனியாகச் சொத்து வேண்டும் என்று பொய்யாகச் சண்டையிட்டாள். தாயின் சமாதானத்தால் பின்பு எலியட்டே பராமரிக்கட்டும் என்று விட்டுக் கொடுத்தாள்

அமெரிக்கப் பல்கலைகழகம் எலியட்டை பேராசிரியராகப் பணியாற்ற அழைத்தது. அதை ஏற்றுக் கொண்டு அவர் அமெரிக்கா புறப்படப் போகிறார் என்ற செய்தி அவளது மனக்குழப்பத்தை அதிகப்படுத்தியது. அவர் தன்னை விட்டு எங்கும் போகக்கூடாது என்று பிடிவாதமாகச் சண்டையிட்டாள். ஆனால் எலியட் தான் அமெரிக்கா போகப் போவதாக உறுதியாகச் சொன்னார். அவரைத் தடுத்து நிறுத்த மருந்தை அதிகம் எடுத்துக் கொண்டு மயங்கி விழுந்தாள் விவியன். மருத்துவரின் சிகிட்சையால் காப்பாற்றப்ட்டாள்.

விவியனுக்கும் பெட்ரண்ட் ரஸ்ஸலுக்கும் இடையில் ரகசிய உறவு இருந்தது. ரஸ்ஸல் அவளைக் காதலித்தார். விவியனும் பெட்ரண்ட் ரஸ்ஸலும் ஒன்றாகப் பயணம் செய்தார்கள். தன் நண்பனின் மனைவி என்று அறிந்த போதும் ரஸ்ஸல் விவியனுடன் நெருக்கமாகப் பழகினார். இதை அறிந்த எலியட் அவர் மீது கோபம் கொண்ட போதும் ஒரு ஆசானைப் போலப் பழகிய அவரை வெறுத்து ஒதுக்கவில்லை என்கிறார்கள்

தனது பதினேழு ஆண்டுகாலத் திருமண வாழ்க்கை போதும் என்று 1933ல் விவியனை விவகாரத்துச் செய்தார் டி. எஸ். எலியட். ஆனால் இதை விவியன் அங்கீகரிக்கவில்லை. எலியட்டை யாரோ ஒருத்தி மயக்கி செய்த வேலை. தன் மீதான அவரது அன்பு ஒரு போதும் மாறாது என நம்பினாள் விவியன்.

ஒருமுறை அவரது சொற்பொழிவு நிகழ்ச்சி ஒன்றுக்கு வளர்ப்பு நாயுடன் வந்த அவள் முன்வரிசையில் இருந்தபடியே அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். தனது புத்தகங்களில் அவரிடம் கையெழுத்து வாங்கினாள். இன்னொரு முறை அவரது கூட்டத்தில் எலியட்டால் விரட்டி அடிக்கபட்ட மனைவி என்ற பதாகையை ஏந்தியபடியே வாசலில் நின்று கொண்டிருந்தாள் விவியன்.

தன்னைத் தொடர்ந்து அவமதிக்கிறாள். தொல்லை கொடுக்கிறாள் என்று உணர்ந்த எலியட் தான் எங்கேயிருக்கிறேன் என்ற தகவலை அவள் அறியாமல் இருக்கும்படி பார்த்துக் கொண்டார். இதனால் பெருமளவு வெளியே வராமலே வீட்டிற்குள் இருந்தார் எலியட்.

தொடர்ந்து வீட்டிலும் வெளியிலும் தொல்லைகொடுத்து வந்த விவியனை மனநலக்காப்பகத்தில் சேர்த்துவிடலாம் என்ற முடிவை அவளது சகோதரன் மௌரீஸ் எடுத்தான். அதை எலியட்டும் ஏற்றுக் கொண்டார். தன் மகளை அப்படிக் கைவிடக்கூடாது என அவளது தாய் வருந்தி கண்ணீர் விட்ட போதும் எலியட் முடிவை மாற்றிக் கொள்ளவில்லை

மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு விவியனுக்கு மனநலக்கோளாறு இருப்பது உறுதி செய்யப்பட்டுக் காப்பகத்தில் சேர்க்கபட்டாள். மனநலக்காப்பகத்தில் அனுமதிக்கபட்ட விவியனை ஒருமுறை கூட எலியட் சென்று பார்க்கவேயில்லை.

மௌரீஸ் ஒரேயொரு முறை அவளைக் காணச் சென்ற போது அவள் எலியட் பற்றியே பேசிக் கொண்டிருந்தாள். அவள் பேச்சில் அத்தனை அன்பிருந்தது. ஒரு மனநோயாளி போல அவளிடம் துளியும் அடையாளமில்லை என்று மௌரீஸ் கண்ணீருடன் பதிவு செய்திருக்கிறான்

விவியனின் அன்பு மூர்க்கமானது. தன்னால் எலியட் எண்ணிக்கையற்ற பிரச்சனைகளுக்கும் அவமானத்திற்கும் உள்ளான போதும் அவள் அதை உணரவேயில்லை. அவள் எலியட்டை உறுதியாக நேசித்தாள். தன்னை அவர் ஒரு போதும் கைவிடமாட்டார் என்று நினைத்துக் கொண்டிருந்தாள். எலியட்டும் அப்படித்தானிருந்தார். ஆனால் தாங்கமுடியாத மனஉளைச்சலின் உச்சத்தில் தான் அவளிடமிருந்து பிரிந்து போனார்.

தான் விரும்பிக் காதலித்து மணந்து கொண்ட விவியனை பின்பு அவர் ஒரு போதும் சந்திக்கவேயில்லை. விவியன் தனது 58வது வயதில் மாரடைப்புக் காரணமாக மனநலக் காப்பகத்திலே இறந்து போனாள். பத்து ஆண்டுகாலம் அவள் மனநலக் காப்பகத்தில் வசித்திருக்கிறாள். எவரும் அவளைத் தேடிப் போகவேயில்லை. அந்த நாட்களில் அவள் எழுதிய டயரிக்குறிப்புகள் அவளது மரணத்தின் பின்பு தனிநூலாக வெளிவந்துள்ளது.

விவியனின் மரணத்திற்குப் பிறகு எலியட் தனது உதவியாளராக இருந்த வெலரி பிளெட்சர் என்ற இளம்பெண்ணைத் திருமணம் செய்து கொண்டார். அப்போது எலியட்டின் வயது 68 வெலரி பிளெட்சரின் வயது 30. 1948ம் ஆண்டு எலியட்டிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.

ஒரு கவிஞனின் சொந்தவாழ்க்கை என்பது அவன் கவிதை உருவாக்கதில் பங்குபெறுகிறதா என்ற விவாதம் இன்றும் தொடர்ந்து வருகிறது. உளவியல் ஆய்வாளர்கள் எலியட்டின் கவிதைகளில் பாதி அவரது சொந்த வாழ்வின் வெளிப்பாடே என்று கூறுகிறார்கள். அத்துடன் விவியனுடன் ஏற்பட்ட விலகலே அவரை எஸ்ரா பவுண்டோடு நெருக்கமாக்கியது என்றும் கூறுகிறார்கள்.

வோர்ட்ஸ்வெர்த்தின் இயற்கை எழிலைப் பாடும் கவிதைகளை வாசித்த ஆங்கில இலக்கிய வாசகர்களுக்கு எலியட்டின் கவித்துவ வெளிபாடும் கவிதைப் பொருளும் மொழியும் விநோதமாய்த் தெரிந்தன. பாழ் நிலம் கவிதையில் ஒலிக்கும் அக்குரல் அன்றைய ஐரோப்பிய சமூகத்தின் வெளிப்பாடே. அவநம்பிக்கையும் குழப்பங்களும் கொண்ட அக்குரல் காலத்தின் முன்பின்னாகச் சஞ்சரிக்கிறது. கைவிடப்பட்ட மனிதனின் அந்தரங்க குரலாகவே எலியட்டின் கவித்துவ மொழி அமைந்துள்ளது.தீவிரமான மன அழுத்தமும் வெறுமையும் கொண்ட நிலையிலிருந்தே இக் கவிதைகள் உருவாகியிருக்கின்றன

எஸ்ரா பவுண்ட் எலியட்டின் கவிதைவரிகளைக் கச்சிதமாக வெட்டித்திருத்தி புதிய வடிவம் தந்திருக்கிறார்.

எலியட்டிற்கும் விவியனுக்குமான உறவு பற்றி Michael Hastings ஒரு நாடகம் எழுதியிருக்கிறார். Tom & Viv என்ற அந்த நாடகம் திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. இப்படத்தில் எலியட்டாக நடித்திருப்பவர் Willem Dafoe.

The progress of an artist is a continual self-sacrifice, a continual extinction of personality. எனக்கூறுகிறார் எலியட். இது அவரது சொந்தவாழ்வின் எதிரொலியே.

••

Archives
Calendar
October 2018
M T W T F S S
« Sep    
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
Subscribe

Enter your email address: