நிலவொளியின் பாடல்கள்

தமிழில் ஜப்பானிய இலக்கியம் அறிமுகமான அளவிற்குச் சீன இலக்கியம் அறிமுகமாகவில்லை. ஜென் கவிதைகள். ஹைக்கூ கவிதைகள் தமிழில் அதிகம் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டிருக்கின்றன. ஜென் கவிதைகள் குறித்து நான் கூழாங்கற்கள் பாடுகின்றன என்ற கட்டுரை தொகுதி ஒன்றை எழுதியிருக்கிறேன். அதில் பாஷோ, ரியோகான் என முக்கியமான ஜென் கவிஞர்களின் கவிதையுலகை அறிமுகம் செய்திருக்கிறேன். பாஷோவின் கவிதையுலகம் பற்றி விரிவான உரையொன்றையும் சென்னையில் நிகழ்த்தியிருக்கிறேன். அது தற்போது டிவிடியாகவும் கிடைக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பாக வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை என்ற பயணியின் மொழியாக்கத்தில் வெளியான சீனக்கவிதை நூல் மிகுந்த கவனமும் பாராட்டுகளும் பெற்றது. எழுத்தாளர் ஜெயந்தி சங்கர், கவிஞர் யுவன் சந்திரசேகர், உதயகுமார் ஆகியோர் சீனக் கவிதைகளில் முக்கியமானவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார்கள்.

சீனக் கவிதைகளின் பொற்காலமாக டாங் அரச வம்சம் ஆட்சி செய்த காலத்தைக் கூறுகிறார்கள். அந்தக் காலகட்டத்தில் 2500 கவிஞர்கள் இருந்ததாகவும் அவர்கள் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகளை எழுதியதாகவும் இலக்கிய வரலாறு கூறுகிறது. இதில் துஃபு, , லீ போ, பாய் ஜுய் மூவரும் மிக முக்கியமான கவிஞர்கள், இவர்களின் கவிதைகள் இன்றும் விரும்பி வாசிக்கப்படுகின்றன.

தமிழ் இலக்கியத்தைப் பாடமாகக் கற்பிக்கும் தமிழ்துறையில் பெரும்பான்மை ஆசிரியர்கள் மரபான பார்வையும் பழந்தமிழ் இலக்கியத்தில் மட்டும் தேர்ச்சி கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். கடந்த பத்தாண்டுகளில் நவீன இலக்கியத்தின் மீது தீவிரம் நாட்டம் கொண்ட பேராசிரியர்கள் தமிழ் துறையில் இடம்பெற்றுள்ளது ஆறுதலான விஷயம்.  இவர்கள் சமகால இலக்கியங்களை ஆய்வுப்பொருளாக எடுத்துக் கொள்ள வழிகாட்டுகிறார்கள். அத்துடன் படைப்பிலக்கியத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

நான் அறிந்தவரையில் பேராசிரியர்கள் ரவிக்குமார், பச்சையப்பன். கல்பனா, பழனி. ஜார்ஜ், ராமன், ஸ்டாலின் ராஜாங்கம், வேணுகோபால், பிரபாகர், தவசி, ஆனந்தகுமார், சுந்தர்காளி, ஆ.ராமசாமி, பார்த்திபராஜா, இளங்கோவன், காமராஜ், ஸ்டீபன், பூமிச் செல்வம், சாந்தி, காயத்ரி, ராமசந்திரன், நேசன் .ரத்தினகுமார், சேரலாதன் போன்றவர்கள் தமிழ் துறையில் நவீன இலக்கியத்தைச் சிறப்பாகக் கற்பிக்ககூடியவர்கள். சிறந்த கட்டுரையாளர்கள். படைப்பாளுமை கொண்டவர்கள்.

ப.கல்பனா தமிழ் பேராசிரியராகப் பாரதி மகளிர் கல்லூரியில் பணியாற்றுகிறார். பார்வையிலிருந்து சொல்லுக்கு என்ற கவிதை நூலை வெளியிட்டிருக்கிறார். கல்லூரி நாட்கள் முதல் மொழிபெயர்ப்பில் ஆர்வத்துடன் இயங்கிவருகிறார். இவரது மொழியாக்கத்தில் 1999-ல் சீனக்கவிதைகளின் தொகுப்பு வெளியானது. ஆனால் அத்தொகுப்புப் பரவலான கவனத்திற்கு உள்ளாகவில்லை.  ஆகவே தற்போது அந்தத் தொகுப்பு உதிர்ந்த இலைகளின் பாடல் என்ற தலைப்பில் மறுபிரசுரம் செய்யப்பட்டிருக்கிறது.

ப.கல்பனா தான் வாசித்த சீனக் கவிதைகளில், 42 சிறந்த கவிஞர்களைத் தேர்வு செய்து அவர்களின் 81 கவிதைகளையும், 6 நாட்டுப்புறப் பாடல்களையும் மொழிபெயர்த்துத் தந்துள்ளார். இதில் எட்டு பெண்கவிஞர்கள் அடக்கம். இந்தத் தொகுப்பில் பழமையான கவிதைகளும் உண்டு தற்காலக் கவிதைகளும் உள்ளன.

சீனக்கவிதைகளை மிகவும் நுட்பமாக, செறிவாக மொழியாக்கம் செய்துள்ளார். கவிதைகளின் ஆதாரத்தொனியை, கவித்துவ மொழியைச் சரியாகத் தமிழுக்குக் கொண்டு வந்துள்ள கல்பனா மிகுந்த பாராட்டிற்குரியவர்.

சமீபத்தில் நான் வாசித்த மிக முக்கியமான நூல் இதுவென்பேன்.

நாம் ஏன் சீனக்கவிதைகளை வாசிக்க வேண்டும். ?

தமிழ் கவிதைமரபிற்கு அதிகம் நெருக்கமாகயிருப்பதே முக்கியக் காரணம். மேற்குலகின் பாதிப்பில்லாத அசலான பார்வையும் மொழியும் கொண்டவை சீனக்கவிதைகள். சித்திரவடிவ எழுத்துகளால் உருவான மனச்சித்திரங்களே இக்கவிதைகள். இக்கவிஞர்களின் பெரும்பான்மையினர் எளிய மனிதர்கள். அரச சபை கவிஞர்கள் ஒரு சிலரே. விவசாயிகளும் உழைப்பாளர்களும், சிறுவணிகர்களும் மீனவர்களும் நெசவாளிகளும்  கவிஞர்களாக இருந்திருக்கிறார்கள்.

1950களுக்குப் பிறகு ராதுகா மற்றும் முன்னேற்ற பதிப்பகம் வழியாக ரஷ்ய இலக்கியங்கள் மொழிபெயர்க்கபட்டு மலிவு விலையில் தமிழகத்தில் விற்பனை செய்யப்பட்டன. இதன் காரணமாகப் புதிய ஜன்னல் திறந்து தமிழ் இலக்கியம் திசைமாற்றம் கொண்டது. இது போன்ற அலையொன்றை உருவாக்க விரும்பிய சீன அரசு அவர்களின் இலக்கியங்களை, தத்துவத்தை அறிமுகம் செய்யும் விதமாக மலிவு விலை பதிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்தன.

25 ஆண்டுகளுக்கு முன்பாக நியூசெஞ்சரி புத்தக விற்பனையகமே இந்த நூல்களையும் விற்பனை செய்தன. அந்நாட்களில் நிறையச் சீன நாவல்கள், நாடகங்கள். நாட்டார் கதைகள். கவிதைகள் விற்பனையாகின.  சீனாவின் Foreign Languages Press, காலாண்டு இதழாக Chinese Literature Quarterly என்ற இதழை இந்தியாவில் விற்பனை செய்தது. நான் அந்த இதழ்களை வாசித்திருக்கிறேன். அந்த இதழ்களில் இருந்தே கல்பான சீனக்கவிதைகளைத் தேர்வு செய்து மொழியாக்கம் செய்திருக்கிறார்.

என் கல்லூரி நாட்களில் ரஷ்ய இலக்கியங்களைப் போலச் சீன இலக்கியங்களையும் தேடித்தேடி வாசித்திருக்கிறேன். ஆனால் ரஷ்ய படைப்புகள் போலச் சீன இலக்கியங்கள் என்னை வசீகரிக்கவில்லை. லூசுனை மட்டும் விரும்பி வாசித்தேன். இன்று சீனக்கவிதைகளை விரும்பி படிக்கிறேன். குறிப்பாகச் சீனாவின் செவ்வியல் கவிதைகளே எனக்கு அதிகம் விருப்பமானவை. ஆங்கிலத்தில் நிறையத் தொகுதிகள் வாசிக்கக் கிடைக்கின்றன. தமிழில் பயணியின் தொகுதி ஒன்றே விரிவாக இந்தக் கவிதைகளை அறிமுகம் செய்துள்ளது.

கல்பனா ஒரு கவிஞர் என்பதால் அவரால் சீனக் கவிதைகளை ஆழ்ந்து ரசிக்கவும் தோய்ந்து பொருள் கொள்ளவும் முடிந்திருக்கிறது. அவர் கவிதைகளை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை மொழியாக்கம் செய்யவில்லை. மாறாகக் கவிதையின் மையம் எதுவென அடையாளம் கண்டுகொள்கிறார். சீனக்கவிதையின் எளிமையைப் போலவே எளிய வார்த்தைகளைக் கொண்டு மொழியாக்கம் செய்திருக்கிறார். உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் சீனச்சொற்களுக்கு இணையான தமிழ்சொற்களை கண்டறிந்து பயன்படுத்தியுள்ளது இத் தொகுப்பின் தனித்துவமாகக் கூறுவேன்.

சீனக்கவிதைகள் சீனாவில் மட்டும் எழுதப்படவில்லை. உலகெங்கும் இடம்பெயர்ந்துள்ள சீனர்கள் தாங்கள் எங்கே வாழ்ந்தாலும் தங்களின் பண்பாட்டையும் இலக்கியத்தையும் அறத்தையும் கைவிடாமல் உயர்த்திப் பிடித்தபடியே இருக்கிறார்கள். சமகாலச் சீன இலக்கியத்திற்கான பங்களிப்பு பல்வேறு நாடுகளில் இருந்து வழங்கப்படுகிறது. இன்றைய தமிழ் இலக்கியமும் அப்படிதானேயிருக்கிறது.

கி.மு. 600ல் வெளியான The Book of Poetry நூலே சீனக்கவிதையின் துவக்கப்புள்ளி. நிலக்காட்சிகளைச் செவ்வியல்கவிதைகள் பிரதானமாகச் சித்தரிக்கின்றன. பிரிவையும் காத்திருப்பினையும் துளிர்விடும் நினைவுகளையும் பாடும் பாடல்கள் அதிகமிருக்கின்றன. ஊரைப்பிரிந்து சென்ற மனிதனின் ஏக்கத்தையும் வீடு திரும்புதலின் ஆசையையும் கவிதைகள் தொடர்ந்து பாடியிருக்கின்றன. விண்ணுலக வாழ்வு குறித்தும், மண்ணுலகில் வாழும் போது செய்ய வேண்டிய அறங்கள் பற்றியும் கவிதைகள் எடுத்துக் கூறுகின்றன. புகழ்ந்து பாடுவதும் அறம் உரைத்தலுமே பழஞ்சீனக்கவிதைகளின் மையப் பொருளாகும்.

வாழ்வு நிலையானதில்லை. நீர்க்குமிழி போல உடைந்து போய்விடும் அற்பவாழ்வினை நினைத்து அடக்கமாக இருந்தல் வேண்டும் என்பதைக் கவிதைகள் தொடர்ந்து வலியுறுத்தின.

இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கையை அடையாளப்படுத்துவதும் இயற்கையிடமிருந்து கற்றுக் கொள்வதும் இயற்கையைப் புரிந்து கொள்ள முற்படுவதுமே கவிதையின் செயல்பாடாகயிருந்தது.

அலைந்து திரியும் மனிதனே கவிஞனாகயிருந்தான். பயணியின் முடிவற்ற பாடல்களாகவே இக்கவிதைகள் ஒலித்தன.

அசைவும் அசைவின்மையும், தொலைவும் அண்மையும், கூடுதலும் பிரிவும், சந்தோஷமும் கண்ணீரும் போன்ற எதிர்நிலைகளை இக்கவிதைகள் ஆராய்கின்றன. நிலக்காட்சியை வரைய முற்படும் ஒவியன் வண்ணங்களை தேர்வு செய்வது போலவே கவிஞனும் துல்லியமாக தனது சொற்களைத் தேர்வு செய்கிறான். சொற்களைக் கொண்டு வரையப்பட்ட ஒவியமே கவிதை என்கிறது சீனப்பழமொழி.

காதலும் காமமும் தமிழின் சங்க கவிதைகளைப் போலவே சீனக்கவிதையிலும் முதன்மையாக இடம்பெற்றுள்ளன. வெளிப்படையாகக் காம உணர்வுகளை எழுதுவது தடை செய்யப்பட்டிருந்தது. கூடிக்குடிப்பதும் நடனமிடுவதும் பாடுவதும் கவிஞர்களின் இயல்பாகயிருந்தது.

துஃபு, , லீ போ இருவரும் சிறந்த கவிஞர்கள். நெருக்கமான நண்பர்கள். ஒன்றாகச் சுற்றித்திரிந்தவர்கள். இருவரில் லீ போ கட்டுபாடற்ற மனதைக் கொண்டவர். கலகம் செய்யக் கூடியவர். நிதானம் இழக்கும்படி குடிக்ககூடியவர். ஆற்றுநீரைப் போலக் குளிர்மையான கவிதைகள் பாடியவர்.

கல்பனாவின் இந்த மொழியாக்க தொகுதிகள் எனக்கு விருப்பமான நிறையக் கவிதைகள் இருக்கின்றன. உதாரணத்திற்குச் சில கவிதை வரிகளைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்

சந்திப்பு

மரங்களடியில் மழைக்காக ஒதுங்கிய போது

நாம் சந்தித்துக் கொண்டோம்

நீயோ

உன் துடிப்பான மனைவியுடன்.

பத்துவருடங்களின் மாயை

ஒரே நொடியில் அழிக்கபட்டது

பத்து வருடங்களின் காத்திருப்பு

அதன் பொருளை இழந்தது

நான்

என் இதழ்களை இறுக்கினேன்

ஒரு மெல்லிய முறுவலுக்குள்

கண்ணீர்

என் முகத்தில் வழிந்துவிடக்கூடும்

வியந்து போய் நிற்கும்

உன் மனைவியைப் பார்த்து

என் முகத்தை

அழுந்த துடைத்துக் கொண்டு சொன்னேன்

“ஒ ! இந்த மழை“

••

இக்கவிதை காதலின் பிரிவைப் பாடுகிறது. மழை தான் காதலின் சாட்சி. மழையைப் போல எதிர்பாராமல் இச்சந்திப்பு நடக்கிறது. மழையின் மௌனம் போலவே அவர்களின் காதலும் பேசப்படாமல் கடந்து போகிறது. மழை கரைத்துப் போவதைப் போல அவர்கள் கடந்த காலத்தைக் கரைத்துக் கொள்கிறார்கள். அந்தப் பெண்ணின் காதலன் இந்தத் தருணத்தை எப்படி எதிர்கொண்டான் எனக் கவிதை சித்தரிக்கவில்லை. ஆனால் அந்தப் பெண் அவனது மனைவியிடமே பேசுகிறாள். அதுவும் தங்களைச் சந்திக்க வைத்த அந்த மழையைச் சலித்துக் கொள்வது போல ஒ ! இந்த மழை“  என அடையாளப்படுத்துகிறாள்.

ஒ ! இந்த மழை“என்பது வெறும் காரணமில்லை. சொல்லப்படாத துயரத்தின் வெளிப்பாடு. இனி தான் காத்திருப்பது பயனில்லை என அந்தப் பெண் உணர்ந்து கொண்ட தருணமது. அவள் கண்ணீர் விட விரும்புகிறாள். ஆனால் விடக்கூடாது எனத் தடுத்துக் கொள்கிறாள். அவளது கண்ணீருக்குப் பதிலாக மழை பெய்கிறது. காதலின் இழப்பை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவள் வலிந்து புன்னகை செய்கிறாள். அப்படித் தானே நடந்து கொள்ள வேண்டும். அது தானே பண்பாடு என்கிறது சமூகம். பொய்யாக அப்படி நடந்து கொள்ளும் போது உள்ளுற மனது அவளது ஏமாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. அவள் வலிந்து புன்னகை செய்கிறாள்.

கவிதைக்குள் அழகான, மறக்கமுடியாத, துயரமிக்கக் காட்சி ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதை எழுதிய சென் சுங்கியாங் ஒரு பெண் கவிஞர். இது சமகாலச் சீனக்கவிதையின் வல்லமைக்குச் சான்று.

இன்னொரு கவிதை இப்படித்துவங்குகிறது

நானொரு தப்பியோடிய மேகம்

மாலையொளியில்லா ஒரு வானத்தில் திரிகிறேன்

எனக்கு வீடில்லை துணையில்லை

எந்தக் கதவும் திறந்திருக்கவில்லை

என் முழுஆன்மாவும் மிதக்கிறது களிப்பில்

என் முழுநிழலும் மூழ்கியிருக்கிறது குழப்பத்தில்

தொலைதூரப் பகுதியிலிருந்து மற்றொன்றிற்குச் செல்லும்

என் வாழ்க்கை ஒரு பயணம்

என் பாதச்சுவடுகள் என் துணைகள்

நானொரு தப்பியோடிய மேகம்

••

நீண்ட கவிதையின் முதற்பகுதியிது. தப்பியோடிய மேகம் என்பது வசீகரமான சொல்லாடல். யாரிடமிருந்து எங்கே தப்பியோடுகிறது மேகம். மேகம் என்பது நிலையில்லாதது. அலைந்து கொண்டேயிருக்கக் கூடியது. வானம் மேகத்தின் வீடில்லை. மேகம் கடந்து செல்லும் பாதை. காற்றிடம் தன்னை ஒப்படைத்துவிட்டு மேகம் களிப்பில் கிறங்கிவிடுகிறது. மேகமாக இருக்கவே நாம் விரும்புகிறோம். மிதத்தலின் பரவசத்திற்கே ஆசைப்படுகிறோம். ஆனால் உலகியல் வாழ்க்கை நம்மைப் பறக்க அனுமதிப்பதில்லை. ஒற்றை மேகம் தனித்து அலைவது போலத் தான் கலைஞனின் வாழ்க்கையிருக்கிறது. குழப்பங்களுடன் இருந்தாலும் அவன் ஒரு தப்பியோடிய மேகமே.

••

லி பெய்யின் குடித்துக் கொண்டிருக்கையில் நிலாவின் பிரதிபலிப்புகள் என்ற கவிதை இப்படித்துவங்குகிறது

வானத்தில் நிலா

எப்பொழுது முதன்முதலாகத் தோன்றியது

இந்த வினாவை எழுப்புவதற்காக

நான் குடிப்பதை நிறுத்துகிறேன்

எளிமையான இக்கேள்வி தற்கணத்தினை விசாரணை செய்கிறது. நிலா ஒரே நேரத்தில் கடந்தகாலத்தின் மிச்சமாகவும் நிகழ்காலத்தின் அடையாளமாகவும் மாறிவிடுகிறது. பல்லாயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் பார்த்து ரசித்த நிலவை தான் நாமும் பார்த்துக் கொண்டிருக்கிறோமா, இல்லை இந்த நிலா இந்தத் தருணத்தின் அனுபவமா. நிலா ஏன் எப்போதும் ஆச்சரியப்படுத்திக் கொண்டேயிருக்கிறது. நிலா பார்த்தல் என்பது என்ன ?

இதே கவிதையில் இன்னொரு கண்ணி இப்படியிருக்கிறது

இன்றைய மக்களால் காணமுடியாது

கடந்த தலைமுறைகளின் நிலாவை

இருந்தாலும் இன்றைய நிலா

நம் மூதாதையர்களின் மேல் ஒளி வீசியது

எத்தனை அற்புதமான கவிதை வரிகள். கடந்த தலைமுறைகளின் நிலவை இந்தத் தலைமுறை அறியாது. நிலாவோ என்றைக்குமாக ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. குடிபோதை சிந்திப்பதை தடுத்துவிடும் என்பார்கள். கவிஞரோ ஆழ்ந்து சிந்திக்க ஆரம்பிக்கிறார். நிலவொளி அவருக்குத் துணையாகிறது. ஒளிர்தலை வாழ்வு எனப்புரிகிறது. நிலவொளி என்றைக்குமான அன்பை போன்றதாக உருமாறுகிறது கவிதையில்

••

உதிர்ந்த இலைகளின் பாடல் என்ற சீனக்கவிதைகளின் மொழியாக்க தொகுப்பு கவிதையை நேசிக்கும் அனைவரும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகமாகும்.

**

உதிர்ந்த இலைகளின் பாடல்-    தமிழில் ப. கல்பனா

பரிசல் வெளியீடு-    விலை ரூ 150.

**

பரிசல் வெளியீடு.

216. முதல்தளம் திருவல்லிக்கேணி நெடும்சாலை

திருவல்லிக்கேணி  சென்னை   - 5

தொலைபேசி -9382853646

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: