காலத்தின் அதிபதி.

நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரான கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் தனது புகழ்பெற்ற நாவலான தனிமையின் நூற்றாண்டுகளைப் படமாக்குவதற்கான உரிமையை வழங்க மறுத்துவிட்டார். வாசகர் மனதில் அந்த நாவல் பெற்றுள்ள கற்பனையான வடிவத்தைச் சினிமா சிதைத்துவிடும் என்பதே காரணம்.

தனிமையின் நூறு ஆண்டுகள் (One Hundred Years of Solitude) நாவல் 1967இல் வெளியானது. மூன்று கோடி பிரதிகளுக்கும் மேல் விற்றுள்ளதாகக் கருதப்படும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. தமிழில் கவிஞர் சுகுமாரன் இதனை மொழியாக்கம் செய்துள்ளார். கொலம்பியாவைச் சேர்ந்த மார்க்வெஸ் 1982ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றார்.

கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலக மொழிகளில் வெளிவந்த நாவல்களில் தலைசிறந்தது தனிமையின் நூறு ஆண்டுகள் என்று புகழ்பாடுகிறார் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி.

இந்நாவல் மகோந்தா என்ற ஊர் உருவாவதில் இருந்து அழிவது வரை அதை உருவாக்கிய புயெந்தியா குடும்பத்தின் ஏழு தலைமுறை நிகழ்வுகளை விவரிக்கிறது.

ஹோஸே ஆர்காடியோ புயெந்தியா தன் ஊரை விட்டு பத்தொன்பது குடும்பங்களுடன் வெளியேறுகிறார். மரணத்தின் காலடிபடாத ‘மகோந்தா’ என்னும் புதிய ஊரை அவர்கள் உருவாக்குகிறார்கள். வெளியுலகம் அறியாத இந்த ஊரைத் தேடி எங்கிருந்தோ ஜிப்சிக்கள் வருகிறார்கள். மகோந்தாவாசிகள் ஜிப்சிகள் வழியாகவே காந்தக் கல்லின் விசித்திரத்தை அறிகிறார்கள். மெல்குயாடெஸ் என்ற ஜிப்சி மாசிடோனியாவின் தேர்ந்த ரசவாதிகளின் எட்டாவது அதிசயம் தன்னிடம் இருப்பதாக அறிவிக்கிறான். பொருட்களுக்கும் அவற்றுக்கே உரிய உயிர் உண்டு. அவற்றின் ஆன்மாக்களைத் தட்டி விழிக்கச் செய்ய வேண்டும். அவ்வளவுதான் எனக் கூறுகிறான். ஊரும் வாழ்க்கையும் உருமாற ஆரம்பிக்கின்றன.

புயெந்தியாவின் வாரிசுகளின் காலத்தில் மகோந்தாவிற்கு ரயில் வருகிறது. தொடர்ந்து உள்நாட்டுப் போரும் வருகிறது. பசியும், பஞ்சமும், மரணமும் ஊரை ஆக்ரமித்துக் கொள்கின்றன. தொழிலாளர்களின் எழுச்சி உருவாகிறது. புதிய நீதிபதி வருகிறார். ராணுவம் வருகிறது. தேவாலயம் உருவாகிறது. இரு கட்சிகள், அதன் தலைவர் என மாறி மாறி அதிகாரப் போட்டி நடக்கிறது. முடிவில் மகோந்தா தன் இயல்பை இழந்து வெறுமையாகி அழிந்து போகிறது. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை மேஜிகல் ரியலிச பாணியில் அற்புதமாக மார்க்வெஸ் எழுதியிருக்கிறார்.

நோபல்பரிசு பெற்ற இந்நாவலை வாங்குவதற்காக நானும் கோணங்கியும் 1987ல் எங்கெங்கோ அலைந்தோம். முடிவில் நாவல் டெல்லியில் கிடைத்தது.

நாவலை வாங்கி வாசித்த போது ஒன்றுமே புரியவில்லை. லத்தீன் அமெரிக்க வரலாற்றை வாசித்துப் புரிந்து கொண்டால் நாவலை உள்வாங்கிக் கொள்ளமுடியும் என்று பேராசியர் ஜோசப் தெளிவுபடுத்தினார். லத்தீன் அமெரிக்க வரலாற்றை வாசித்த போதும் நாவலை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியவில்லை. பின்பு லத்தீன் அமெரிக்க இலக்கியங்களைத் தொடர்ந்து வாசித்தபிறகு மார்க்வெஸின் கதை சொல்லும் முறையும், அதன் விசித்திர, மாயக் கதைஎழுத்தும் வசீகரிக்கத்துவங்கியது.

இந்நாவலை புரிந்து கொள்வதற்கு The Fragrance of Guava: Conversations with Gabriel Garcia Marquez என்ற நூல் பெரிதும் பயன்பட்டது. இது மார்க்வெஸின் விரிவான நேர்காணல் தொகுப்பு. தனது பாட்டி சொன்ன கதைகளில் இருந்தே தனது புனைவுலகம் துவங்கியதாக மார்க்வெஸ் கூறுகிறார்.

தனிமையின் நூற்றாண்டுகள் நாவலில் இடம்பெற்றுள்ள விசித்திரமான நிகழ்வுகள், நம்பிக்கைகள் நம் கதைமரபிலும் இடம்பெற்றவையே. இரண்டு ஆண்டுகள் முன்பாகத் திருவண்ணாமலையில் மார்க்வெஸ் பற்றி விரிவான உரையொன்றை நிகழ்த்தினேன். அதில் இந்நாவலுக்கும் தமிழ் கதைமரபிற்குமான உறவு குறித்து விரிவாகவே குறிப்பிட்டேன்.

என் விருப்பத்திற்குரிய One Hundred Years of Solitude நாவலை இருபது முறைகளுக்கும் மேலாக வாசித்திருப்பேன். இதன் பல்வேறு பதிப்புகளை என் நூலகத்தில் வைத்திருக்கிறேன். அதில் ஒன்று இதன் ஸ்பானிஷ் பதிப்பு. ( வாசிக்கத் தெரியாத போதும் அதன் மூலவடிவம் என்னிடம் இருக்க வேண்டும் என வாங்கி வைத்துக் கொண்டேன் )

One Hundred Years of Solitude நாவலை தழுவி ஒரு திரைப்படம் எடுக்கபட்டுள்ளளது என்ற தகவலை சில மாதங்களுக்கு முன்பாக ஒரு சினிமா கட்டுரையில் வாசித்தேன். என்ன திரைப்படமது. யார் உருவாக்கினார்கள் எனத் தேடிக் கொண்டேயிருந்தேன். அமெரிக்க நண்பர் ராஜன் அதனைப் பற்றிய விபரங்களைத் தேடி அனுப்பியிருந்தார். Farewell to the Ark என்ற அந்தப் படத்தை இணையத்தில் வாங்கிப் பார்த்தேன்.

மார்க்வெஸ் நாவல் தந்த மனவெழுச்சியைத் தரவில்லை என்ற போதும் திரைக்கு மாற்றுவதற்கு மிகுந்த சவால் தரும் நாவலை வெற்றிகரமாக உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுஜி தெரயாமா (Shūji Terayama.) கவிஞரும் நாடக ஆசிரியருமான தெரயாமா ஜப்பானிய மாற்றுசினிமாவில் முக்கிய இயக்குனராகக் கருதப்படுகிறார்.

Farewell to the Ark திரைப்படம் மிகவும் கவித்துவமாக உருவாக்கபட்டுள்ளது. நாவலை வாசித்திருந்தால் மார்க்வெஸை எப்படி ஜப்பானுக்கு ஏற்றார் போல உள்வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை ரசித்துக் காண முடியும். நாவலை வாசிக்காதவர்களும் படத்தை அதன் மாய யதார்த்த அழகியலுக்காக ரசிக்கலாம்.

சுஜி தெரயாமா நாவலின் முக்கிய நிகழ்வுகளை மட்டுமே படத்திற்குப் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாக அரசியல் சார்ந்த பிரச்சனைகளை, மாற்றங்களை முற்றிலும் தவிர்த்திருக்கிறார்.

மகோந்தா போலவே சின்னஞ்சிறிய தீவு கிராமம் ஒன்றில் படம் துவங்குகிறது. ஒரு தள்ளுவண்டி நிறையக் கடிகாரங்களை அள்ளிக் கொண்டு வந்து ஒருவன் மணலில் போட்டுப் புதைக்கிறான். ஊரிலுள்ள எல்லாக் கடிகாரங்களையும் புதைத்துவிட்டேன். இனி காலத்தை அறிந்து கொள்ள என்னிடம் மட்டுமே வரவேண்டும். நானே காலத்தின் அதிபதி என்று சொல்வதுடன் படம் துவங்குகிறது. காலத்தைப் புதைப்பதிலிருந்து காலத்தை மீட்பதை நோக்கி செல்வதே படத்தின் மைய இழை.

மகோந்தோ போலவே அங்கேயும் விசித்திரமான ஒரு நம்பிக்கையிருக்கிறது. ஒன்றுவிட்ட சகோதரன் முறையுள்ள ஒருவனை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டால் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை நாய்வாலோடு பிறந்துவிடும் என்ற அச்சமிருக்கிறது.

சூ என்ற இளம்பெண்ணும் சுடேஷிகி என்ற இளைஞனும் காதலிக்கிறார்கள். அவர்களுக்கும் இது போல நாய்வாலோடு பிள்ளை பிறந்துவிடும் என ஊர்காரர்கள் கேலி செய்கிறார்கள். சூ இதனை நினைத்து மிகவும் பயப்படுகிறாள்.

அவளது தந்தை அவளுக்கு இரும்பில் செய்த கற்புகவசம் ஒன்றை அணிவித்திருக்கிறார். அதை உடைத்து அவளுடன் உறவு கொள்ளச் சுடேஷிகியால் முடியவில்லை. அவன் சேவற்சண்டையிடுவதில் விருப்பமுள்ளவன். ஒரு நாள் சண்டையில் அவனது சேவல் ஜெயித்த போது நீ ஆண்மையற்றவன். சேவலை போல உன்னால் ஆண்மையை நிரூபிக்க முடியுமா என டய்ஷகி என்பவன் கேலி செய்கிறான். ஆத்திரத்தில் அவனைக் கொன்றுவிடும் சுடேஷகி மனைவியைத் தேடிப்போகிறான். அவளுடன் உறவு கொள்ள முயற்சிக்கையில் ஆவியாக வந்து டய்ஷகி அருகில் நின்று வேடிக்கை பார்த்தபடியே இருக்கிறான். அதன்பிறகு படம் முழுவதும் டய்ஷகியின் ஆவி அவனைப் பின்தொடர்ந்தபடியே இருக்கிறது. குற்றவுணர்விலிருந்து அவனால் விடுபடமுடியவில்லை

அந்த ஊரின் நடுவே பெரிய பள்ளம் ஒன்று காணப்படுகிறது. அதன் வழியே இறந்து போனவர்களுக்குப் பரிசுப்பொருட்களை அனுப்பி வைக்கமுடியும் என ஊர்மக்கள் நம்புகிறார்கள். நாவலில் வரும் மெல்குயாடெஸ் போலப் படத்திலும் ஒருவன் வருகிறான். அவனே கடிகாரங்களை மீட்டுக் கொண்டுவருகிறான். உர்சுலாவின் கதாபாத்திரம் படத்தில் வேறுவிதமாகச் சித்தரிக்கபட்டுள்ளது

நாவலைப் போலவே பெயர்கள் மறந்து போய்விடுகிறது எனச் சுடேஷகி எல்லாப் பொருட்களின் மீதும் பெயர்களை எழுதி ஒட்டுகிறான். காதலும் விலக்கபட்ட காமமும், , குற்றவுணர்வும் அழிவற்ற நினைவுகளின் அலைக்கழிப்பும் படத்தில் கனவுக்காட்சிகள் போல விவரிக்கபடுகின்றன. அரங்க அமைப்பு. ஒளிப்பதிவு. இசை அபாரமாகவுள்ளன.

இப்படம் வெளியாகும் முன்பாகத் தனது 47 வயதில் சுஜி தெரயாமா இறந்து போய்விட்டார். 1985 கான்ஸ் திரைப்படவிழாவில் பங்கேற்ற இப்படம் சிறப்பான பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

ஜப்பானிய சினிமாவில் சுஜி தெரயாமா மிகவும் தனித்துவமானயிருக்கிறார். அவர் உருவாக்கி காட்டும் திரை அழகியல் மிகவும் வசீகரமாகயிருக்கிறது.

Emperor Tomato Ketchup , Throw Away Your Books, Rally in the Streets, Death in the Country, Boxer, Fruits of Passion, Grass Labyrinth, Video Letter, Farewell to the Ark ஆகிய  படங்களை இயக்கியுள்ளார்.

மார்க்வெஸ் நாவலின் மாயத்தை மிகுந்த கவித்துவமாகத் திரையில் உருவாக்கி காட்டமுடிந்துள்ளது அரிய சாதனையே.

••

.

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: