தியான நடை

வேகமும் பரபரப்புமாக நகரும் வாழ்க்கைக்கு எதிராக மிகமிக மெதுவாக நடந்து போகிறார் ஒரு பௌத்த துறவி. ஒவ்வொரு எட்டையும் எடுத்து வைப்பது கவனமாக, மிகப்பெரிய செயல்போலிருக்கிறது. உண்மையில் நடத்தலை ஒரு தியான வழியாகக் கருதுகிறது பௌத்தம். WALKING MEDITATION எனப்படும் தியானமுறையில் காலை தரையில் ஊன்றி உடலின் முழுமையை உணருவதும் ஒவ்வொரு அடியிலும் முழு விழிப்புணர்வுடன் நடத்தலும் பயிற்றுவிக்கபடுகிறது.
தெற்கு பிரான்சிலுள்ள Marseilles கடற்கரை நகரில் பௌத்த துறவி மிகமெதுவாக நடப்பதே படம். அவரைப் பின்தொடருகிறார் ஒரு பிரெஞ்சு நடிகர். படத்தின் துவக்ககாட்சியில் அந்த நடிகரின் க்ளோசப்பில் முகம் காட்டப்படுகிறது. கேமிரா நகர்வதேயில்லை. அந்த முகத்தை இயக்கத்தை நாம் சலிக்கும்வரை பார்த்துக் கொண்டேயிருக்கிறோம்.
பின்பு துறவி அறிமுகமாகிறார். சப்வே ஒன்றினுள் அவர் நடப்பது விநோத உலகினுள் காலெடுத்து வைப்பது போல விசித்திரமாக இருக்கிறது. அந்தப் பௌத்த துறவி தலைநிமிர்வதேயில்லை. கனவில் நடப்பவர் போலவே இயங்குகிறார். விநோதமாக நடக்கும் அவரை மக்கள் வெறித்துப் பார்க்கிறார்கள்.
4 வருஷங்களுக்கு முன்பாக நீரிலும் நடக்கலாம் என்றொரு சிறுகதை எழுதியிருக்கிறேன். அக்கதை பின்னாடி திரும்பி நடக்கும் ஒருவரைப் பற்றியது. அவரை எல்லோரும் விசித்திரமாகக் கருதுவார்கள். அவரோ முன்னால் நடப்பது போலப் பின்னாடி திரும்பி நடப்பதும் இயல்பான செயலே என்பார். அவரைப் பின்தொடர்ந்து ஒரு நாள் அவரது பையனும் பின்னால் நடக்க ஆரம்பிப்பான். அவர்களை வீடு ஏற்றுக் கொள்ளாது. அந்தக் கதை இந்தப் படம் பார்க்கும்போது நினைவிற்கு வந்தது.
Zootopia படத்தில் எல்லா வேலைகளையும் மெதுவாகச் செய்யும் Sloth நினைவிற்கு வந்து போனது. 56 நிமிஷங்கள் ஒடும் இப்படத்தில் கதை என எதுவும் கிடையாது. நிகழ்ச்சிகளும் அதிகமில்லை.ஆனால் படம் ஒற்றை உணர்வை அழுத்தமாக உருவாக்கவே முனைகிறது.
அசைவு அசைவின்மை. வேகம் நிதானம் என இந்த எதிர்நிலைகளைப் புரிய வைக்கிறது. குறிப்பாக மிக நிதானமாக நடப்பது என்பது அசைவின்மையின் ஒரு நிலை போலவே சித்தரிக்கிறது படம்.
திரைப்படம் எனும் கலையைக் கொண்டு தியானமுறையைப் போதிப்பது போல இப்படம் உருவாக்கபட்டிருக்கிறது. வழக்கமான சினிமா பார்வையாளர்களுக்கு இப்படம் அறுவையாகவே தோன்றும். ஆனால் சினிமா எனும் கலையைக் கொண்டு பௌத்தசாரத்தை விளக்கமுற்படுகிறது என உணர்கிறவர்களுக்கு இப்படம் புதிய அனுபவமாகவே இருக்கும்.
தைவானைச் சேர்ந்த Tsai Ming-liang இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

**

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: