விடுதலை நாயகன்

ஸ்பானிய காலனியாக இருந்த நாடுகளின் விடுதலைக்குப் போராடி லத்தீன் அமெரிக்க நாடுகள் யாவும் ஒரு குடையின் கீழ் கொண்டுவர கனவு கண்டவர் சிமோன் பொலிவார். இவரது வாழ்க்கை வரலாறு The Liberator என்ற திரைப்படமாக வெளிவந்துள்ளது.

பொலிவார் வெனிசூலாவின் உயர்குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஒரு ராணுவ அதிகாரி. கிரியோல் குடும்பத்தைச் சேர்ந்த இவர்கள் ஸ்பானிய அரசில் உயர்பதவிகளை வகித்தார்கள். சிமோனின் குடும்பத்திற்குப் பெரிய பண்ணைகளும், சுரங்கங்களுமிருந்தன. அதில் வேலை செய்யப் பண்ணையடிமைகள் இருந்தார்கள். வெளிநாட்டில் ஆரம்பக் கல்வி கற்று திரும்பிய பொலிவார் ஆடம்பர வாழ்க்கையில் முழ்கிக்கிடந்தார்.

ஒருமுறை அரண்மனையில் இளவரசர் பெர்டினென்ட் உடன் பாட்மிடன் விளையாடும் போது அவரது முகத்தில் அடித்து விட்டார். அது இளவசரை கோபப்படுத்தவே இனி ஒருமுறை அவரை அரண்மனைக்குள் அனுமதிக்கக்கூடாது எனத் துரத்தப்பட்டார் பொலிவார். அந்த விளையாட்டின் போது தான் பொலிவார் முதன்முறையாக இளம்பெண் மரியாவை கண்டார்

முதற்பார்வையிலே காதல் பிறந்த்து. பின்பு மரியாவை திருமணம் செய்து கொண்டார். அப்போது அவரது வயது பதினெட்டு. மரியாவோடான காதல் வாழ்க்கை ஒரு ஆண்டுச் சந்தோஷமாகக் கழிந்தது. திடீரென நோயுற்று மரியா இறந்துவிடுகிறார். மரியாவின் மரணம் அவரை நிலைகுலையச்செய்தது. இறந்து போன மனைவியை நினைத்து நினைத்து ஏங்கிய பொலிவார் அதிலிருந்து விடுபடப் பாரீஸ் புறப்பட்டுச் சென்றார். அங்கே அவரது ஆசிரியரான சிமோன் ரோட்ரிட்ஜ் வழியாக அவருக்குச் சமூகமாற்றம் குறித்த போதனைகளும் வழிகாட்டுதல்களும் கிடைத்தன.

தன் வாழ்வின் லட்சியம் வெனிசூலாவின் விடுதலையே என உணர்ந்த பொலிவார் அதற்காகப் போராடத் துவங்கினார். அவரது முயற்சிகளுக்கு வணிகர்கள் உதவிசெய்தார்கள். குறிப்பாகப் பிரிட்டனின் பேங்கரான மார்டின் பொருளாதார உதவிகள் செய்தார். மக்களைத் திரட்டி ராணுவத்தை எதிர்த்து சண்டையிட்டார் பொலிவார். பழங்குடி மக்களின் ஆதரவு அவருக்கு முழுமையாகக் கிடைத்தது. ஆகவே ஸ்பானிய அரசை எதிர்த்து சண்டையிட்டு பெரும்வெற்றிகளைப் பெற்றார். தென் அமெரிக்காவின் விடுதலைப் போராட்ட வரலாற்றின் கதாநாயகன் பொலிவாரே.

தென் அமெரிக்கக் கண்டத்தில் நடைபெற்ற பல்வேறுவிதமான புரட்சியிலும் பொலிவார் பங்கேற்றிருக்கிறார். வெனிசுலா, பொலிவியா, கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் பனாமா ஆகிய நாடுகளின் விடுதலைப்போருக்கு முக்கியதளபதியாக இருந்திருக்கிறார்.

சிமோன் பொலிவரைப் பற்றிய இப்படம் அவர் காட்டிக் கொடுக்கப்படும் இரவில் துவங்குகிறது. படைவீரர்கள் வீட்டை முற்றுகையிட்டு அவரைத் தேடுகிறார்கள். உயிர் தப்பியோடுகிறார் பொலிவார். அவரது வாழ்க்கை காட்சிகள் பின்னோக்கி நகர்கின்றன. வெனிசூலாவின் அழகான நிலப்பகுதி. கவித்துவமான காட்சிகள். பதினெட்டு வயது மிடுக்கான இளைஞராக வலம் வருகிறார் பொலிவார். அவரது காதலும் மனைவி மரியாவோடு அவர் மழைக்குள் பயணிப்பதும் அற்புதமாகப் படமாக்கபட்டிருக்கின்றன. கொய்யாபழத்தை காதலின் கனியாகப் பொலிவார் கொண்டாடுகிறார். மழையில் நனைந்த மரியா நோயுறுகிறாள். மஞ்சள் காய்ச்சல் நோயில் மரணமடைகிறாள். தனது பத்தொன்பதாவது வயதில் மனைவியை இழந்த பொலிவார் அதன்பிறகு திருமணம் செய்து கொள்ளவேயில்லை. ஆனால் காதல் உறவுகள் இருந்தன.

18ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வட அமெரிக்காவின் பதின்மூன்று மாகாணங்களும் ஒன்றிணைந்து போராடி பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டன. இந்த எழுச்சி ஸ்பெயினின் ஆதிக்கத்தில் இருந்து வெனிசூலாவும் பிற லத்தின் அமெரிக்க நாடுகளும் விடுதலை அடைய முடியும் என்ற எண்ணத்தை உருவாக்கியது.

ஸ்பெயின் ராணுவத்தை எதிர்த்து சண்டையிட பழங்குடி மக்களை ஒன்று திரட்டினார். வெனிசூலா தேசம் ஸ்பானிய அரசால் கொள்ளையடிக்கபடுகிறது என்பதை உணர வைத்தார். மக்களின் எழுச்சியால் உருவான புரட்சியைச் சாத்தியப்படுத்தினார். ஆன்டிஸ் பனிமலையைக் கடந்து செல்வதற்காக அவரும் அவரது படையினரும் செய்யும் முயற்சிகள் மெய்சிலிர்க்கவைக்கின்றன. இறந்தவர்களை அப்படியே பனியில் விட்டுவிடாமல் தூக்கி கொண்டு வந்து உரிய முறையில் அடக்கம் செய்கிறார்கள். மக்கள் படையின் வேகத்தை ராணுவத்தால் சமாளிக்க முடியவில்லை. வெற்றி மீது வெற்றிக் கிடைக்கிறது. ஆனால் உடனிருந்தவர்களின் துரோகம் மற்றும் பதவிவெறி அவரது கனவுகளை நிர்மூலமாக்கியது. கைக்கூலிகள் அவரைக் காட்டிக் கொடுக்கத் துவங்கினார்கள். பொலிவார் இறுதிவரை போராடிக் கொண்டேயிருந்தார். படத்தின் இறுதிகாட்சி மிக அழகாக உருவாக்கபட்டிருக்கிறது. அந்தப் படகு என்னவானது. பொலிவாருக்கு என்ன நடந்தது என்பது காட்டப்படவேயில்லை.

ஒரு தேசத்தை வழிநடத்தியவர் எங்கிருந்து வாழ்க்கையைத் துவங்கினார். எப்படி அவரது வளர்ச்சி உருவானது. எவ்வாறு எதிரிகளைச் சந்தித்தார். போரிட்டார் என்பதைத் துல்லியமாகப் படம் விவரிக்கிறது. குறிப்பாக இளவயதிலே தாயை இழந்த சிமோன் பொலிவார் தனது தாதியை அன்னையாக மதித்து அன்பு செலுத்துகிறார். அவரை நீண்டகாலத்தின் பின்பு இடிந்த வீட்டிற்குள் பொலிவார் சந்தித்து ஆசிபெறும் காட்சி அபாரமானது.

எல்லையாக உள்ள நதியை கடந்து வருவதற்கு தயங்கும் வீர்ர்களிடம் அவர் உரையாடும் காட்சியும், அதிகாரத்தை கைப்பற்ற உங்களை பகடையாக பயன்படுத்துகிறார்கள் என மேனுலா நடனமாடியபடியே அவரிடம் எச்சரிக்கை செய்வதும், தன் கண்முன்னே தனது நண்பர்கள் கொல்லப்படுவதை பொலிவார் காண்பதும் என நுட்பமான தருணங்கள் அழகாக காட்சிப்படுத்தபட்டுள்ளன.

போராளிகள் எதிரிகளிடம் எச்சரிக்கையாக இருப்பதை விட பல மடங்கு நண்பர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதே படம் சொல்லும் நியதி.  பொலிவார் பெரிய ராணுவத்தை  வழி நடத்துகிறார். ஆனால் அவரை வழிநடத்துபவள் மேனுலா. அவளது தைரியம் வியக்க வைக்கிறது. நதியோடு பொலிவாருக்குள்ள உறவு விசித்திரமானது.வாழ்வில் பாதியை நதியிலும் பாதி நதிக்கரையிலுமாக  கழித்திருக்கிறார்

படத்தின் ஒளிப்பதிவு Xavi Giménez, நிலக்காட்சிகளை ஒவியனை போல வசீகர வண்ணத்தில் தருகிறார்.  இசை Gustavo Dudamel,  நடனக்காட்சியிலும் போர்களத்திலும் அபாரமாக இசை வெளிப்பட்டுள்ளது.

சிமோன் பொலிவார் மீதான அன்பில் அவரைப்பற்றி The General in His Labyrinth என்ற நாவலை எழுதியிருக்கிறார் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளர் காப்ரியல் கார்சியா மார்க்வெஸ். அதில் வரும் பொலிவாரின் சித்திரம் வேறுவிதமானது. நாவலை எழுதுவதற்காக மார்க்வெஸ் பொலிவார் மேற்கொண்ட பயணத்தை அதே வழியில் தானும் சென்று வந்திருக்கிறார். துல்லியமான தகவல்கள் குறிப்புகளுடன் இந்த நாவலை எழுதியிருக்கிறார். ஆனால் மார்க்வெஸின் மற்ற நாவல்கள் அளவிற்கு இந்நாவல் கொண்டாடப்படவில்லை.  இன்று லத்தீன் அமெரிக்காவில் பொலிவார் கடவுளாகவே கொண்டாடப்படுகிறார்.

The Liberator படத்தின் முற்பகுதி காதலும் விளையாட்டுதனமும் கொண்ட பொலிவாரின் கதை. பிற்பகுதி போராளியான பொலிவாரின் கதை. லத்தீன் அமெரிக்க விடுதலைப்போரை பற்றிய வரலாற்றை அறிந்து கொண்டிருந்தால் படம் மிகச் சுவாரஸ்யமாக இருக்கும். மற்றவர்களுக்கு இப்படம் யுத்த திரைப்படங்களில் ஒன்றாகவே இருக்ககூடும்.

சிமோன் பொலிவராக நடித்திருப்பவர் Édgar Ramírez. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். குறிப்பாக ஆவேசமாக உரையாற்றும் காட்சிகளில் அவர் கண்கள் ஒளிர்கின்றன.Alberto Arvelo படத்தைச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.

**

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: