நிலாச்சோறு


நிலாச்சோறு

கூடி உண்ணும் போது உணவிற்குத் தனிசுவை வந்துவிடுகிறது. அதுவும் நிலாவெளிச்சத்தில் அனைவரும் ஒன்று கூடி அருகமர்ந்து உண்ணுவது இன்பமானது. சிறுவயதில் பல இரவுகள் அனைவரும் ஒன்றுகூடி அமர ஆச்சி சோற்றை உருட்டி உருட்டி தருவார். அந்த உருண்டைக்கென்றே தனிருசியிருந்தது.
அந்தக் காலத்தில் சித்ரா பௌணர்மி நாளில் ஆற்றின் கரைகளுக்குச் சென்று உணவருந்தும் வழக்கமிருந்தது. வண்டி போட்டுக் கொண்டு ஆற்றின் கரைதேடி போவோம். மணலில் அமர்ந்தபடியே நிலவின் வெண்ணொளியை ரசித்தபடியே சாப்பிட்ட நினைவு அடிமனதில் ஒளிர்ந்து கொண்டேதானிருக்கிறது
திடீரென அப்படி நிலாச்சோறு சாப்பிடலாமே என்ற எண்ணம் தோன்றியது. சென்ற பௌர்ணமி நாளில் வீட்டின் மொட்டை மாடியில் மனைவி பிள்ளைகள் பையனின் நண்பர்கள் என இருபது பேர் ஒன்று கூடினோம்,
வீட்டில் தயாரித்த உணவுகள். கூடுதலாக உணவகத்தில் வாங்கி வந்தவை என அத்தனையும் எடுத்துக் கொண்டு மாடிக்குச் சென்றோம். பழைய பாடல்கள் கேட்பதற்காகச் சிடிபிளேயர், சாப்பாட்டினை பரிமாறுவதற்கான தட்டு. டம்ளர், குடிநீர் எனச் சகலமும் மொட்டை மாடிக்கு வந்து சேர்ந்தன.
சென்னை போன்ற பெருநகரில் வசிப்பவர்கள் வானத்தைக் காணுவதே அபூர்வம். அதில் இப்படி நிலா பார்த்தபடியே சாப்பிடுவது என்பது அறியாத பழக்கம்.
என் பையனுடன் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு இது புதுவகை அனுபவம். எட்டுமணிக்குத் துவங்கியது மொட்டைமாடி கச்சேரி.
வானில் நிலா தெளிவாகயில்லை. கலங்கிய நிலையில் மேகங்களுக்குள் ஒளிந்திருந்தது. நிலா வரும் வரை காத்திருந்தோம். நல்ல காற்று. சென்னையில் பகலில் எவ்வளவு வெயில் இருக்கிறதோ அதைச் சமன் செய்வது போல அருமையான கடற்காற்று வீசுகிறது. காற்றின் தாரை ஒடுவது போலக் குபுகுபுவெனப் பாய்ந்தோடிக் கொண்டிருந்தது. அந்தக் காற்றின் அரவணைப்பில் பாயில் இரண்டு தலையணைகள் போட்டு சாய்ந்து கொண்டபடியே பழைய எம்.எஸ்.வி பாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.
பையன்கள் அவரவர் மொபைலில் மூழ்கிக்கிடந்தார்கள். ஆகாசத்தில் ஒன்றிரண்டே நட்சத்திரங்கள். தொலைவில் தெருவிளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
இரவில் கிராமமங்கள் முழுமையாக அடங்கிவிடுவது போலச் சென்னை அடங்குவதில்லை. இரவிலும் பரபரப்பாகவே இருக்கிறது. கிராமங்களில் கோடை காலத்தில் வெட்டவெளியில் படுத்துஉறங்குவார்கள். நானும் அப்படி உறங்கி வந்தவனே. தற்போது மூடிய அறைக்குள் ஏசிபோட்டு உறங்குவது மூச்சடைக்கவே செய்கிறது.
நிலா வானில் வெளிப்படத்துவங்கியது. அதன் தூய வெளிச்சத்தில் நனைந்தபடியே வானைப் பார்த்துக் கொண்டிருந்தோம். பார்க்க பார்க்க பரவசமாகவே இருந்தது. நிலவை தன்னில் ஏந்திக் கொள்ளும் குளம் போல ஆக முடியாதா என ஏக்கமாகயிருந்தது. நிலா வெளிச்சம் மொத்த இரவையும் அழகாக்கியது.
நாங்கள் கொண்டுவந்திருந்த உணவை கூடி உண்ண ஆரம்பித்தோம். அன்றாடம் சாப்பிடும் இட்லிக்கு இப்படியொரு ருசி வந்தது நிலா வெளிச்சத்தினால் தான் என்று நினைத்தேன். கூடி உண்ணும் போது நிறையச் சாப்பிடுகிறோம் என்பதே நிஜம். அனைவரும் ஆசை தீர வேண்டியதை கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். இப்படித் திறந்தவெளியில் ஒன்று கூடி சாப்பிட்டு எவ்வளவு நாட்கள் ஆகிவிட்டது எனத் தோன்றியது.
சாப்பிட்டு முடித்தபிறகு ஆங்காங்கே உட்கார்ந்து அரட்டையடிக்கத் துவங்கினார்கள். கல்லூரி மாணவர்களுக்கென்றே தனி உரையாடல் இருக்கிறது. அவர்கள் எதற்காகச் சிரிக்கிறார்கள். எதை ரசிக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடியாது. அது ஒரு தனியுலகம்
நிலாச்சோறு சாப்பிட்டதும் ஊர்கதை பேச ஆரம்பித்தோம். நிலாவெளிச்சம் நினைவுகளைத் தூண்டிவிடக்கூடியது. பனிரெண்டு மணி வரை பேச்சும் சிரிப்புமாக நீண்டது. பின்பு பேச்சு ஒடுங்கியது. மொட்டைமாடியில் தனியே படுத்துக்கிடந்தேன். துணைக்குப் பழைய பாடல்கள். கண் அசர மறுத்தது.
நிலாவின் துணையோடு உறங்குவது எத்தனை பாக்கியம். நிலாச்சோறு உண்ட இந்த நாள்  மாநகர வாழ்வின் கசடுகள், பரபரப்புகளையும் தாண்டி மனதை குதூகலம் கொள்ள வைத்தது.
நீண்ட நேரம் எனது வீதியை பார்த்துக் கொண்டிருந்தேன். எந்த மொட்டை மாடியிலும் ஆளில்லை. பெரும்பான்மை மாநகரவாசிகளுக்கு மொட்டைமாடி என்பது ஈரத்துணி உலர்த்தும் இடம் மட்டும் தான்,
நகரவாழ்வின் சலிப்பை போக்கிக் கொள்ளக் கூடி உண்ணுங்கள். மாடி இல்லாதவர்கள் கடற்கரைக்கோ, வெட்டவெளிக்கோ தேடிச் சென்று உண்ணலாம். குறைந்தபட்சம் வீட்டில் நிலா கண்ணில்பட அமர்ந்து உண்ணலாம்.
நிலாச்சோறு உண்பதை தொடர்ந்து செய்யலாம் என்றே தோன்றியது. கூடி உண்ணுவது வெறும் பசியைப் போக்கிக் கொள்ளும் செயல்மட்டுமில்லை. அன்பை வெளிப்படுத்தும் முறை. வாழ்க்கையைச் சந்தோஷமாக்கி கொள்வது நம் கையில்தானிருக்கிறது. அதற்கு இது போன்ற எளிய முயற்சிகளே உதாரணம்.
••
Archives
Calendar
August 2018
M T W T F S S
« Jul    
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Subscribe

Enter your email address: