கோபமெனும் முகத்திரை

A Man Called Ove ஸ்வீடிஷ் நாட்டுத் திரைப்படம். 2012ல் Fredrik Backman எழுதிய நாவலை திரைப்படமாக்கியிருக்கிறார்கள். இது ஒரு Feel-Good Movie. 59 வயதான உவே தனியே வசிக்கிறார். மிகுந்த கோபக்காரர். அவர் வசிக்கும் காலனியில் சின்னஞ்சிறு தவறுகள் நடந்தால் கூடச் சண்டை போடக்கூடியவர். அவரும் நண்பர் ரூனும் இணைந்து அந்தக் காலனிக்கான  நல சங்கத்தை உருவாக்கினார்கள்.

ரூன் சுயநலமாக நடந்து கொண்டு அவரைச் சங்க பொறுப்பிலிருந்து  நீக்கிவிடுகிறார். ஆனாலும் உவே விதிகளைக் கறாராகக் கடைபிடிக்கக் கூடியவர். மற்றவர்கள் அதைச் செய்யத் தவறும் போது மிகுந்த கோபம் அடைகிறார். இதனால் குடியிருப்பில் அவரை யாருக்கும் பிடிக்காது.

பக்கத்துவீட்டிற்குக் கர்ப்பிணியான பர்வேனா தனது கணவர் பிள்ளைகளுடன் குடிவருகிறாள். அவர்கள் வேனில் சாமான்களைக் கொண்டு வந்து இறக்கிக் கொண்டிருக்கும் போதே உவேயுடன் சண்டை துவங்கிவிடுகிறது. ஆனால் மற்றவர்களைப் போல அவள் உவேவை வெறுக்கவில்லை. அவர் சொல்வது நியாயமாகத் தானே இருக்கிறது என உணர்க்கிறாள். அவளும் பிள்ளைகளும் கோபக்கார உவேயை நேசிக்கத் துவங்குகிறார்கள்.

உவே 43 ஆண்டுகளாகப் பார்த்து வந்த அவரது வேலை ஒரு நாளில் பறிப் போகிறது. இனி எதற்காக உயிர்வாழ வேண்டும் என நினைத்த உவே தற்கொலை செய்து கொள்ள முயற்சிக்கிறார். அப்போது பக்கத்து வீட்டிலிருந்த பர்வேனா அழைப்பு மணியை அழுத்துகிறாள். தூக்குகயிற்றை அப்படியே விட்டுவிட்டு வெளியே வருகிறார். அவர் செய்த உதவிக்கு நன்றியாக வீட்டில் சமைத்த உணவை தருகிறாள். வேண்டாவெறுப்புடன் அதை ஏற்றுக் கொள்கிறார்.

இந்தக் காட்சியைக் காணும் போது ஜி. நாகராஜன் சிறுகதையில் ஒரு வேசை தூக்குபோட தயார் செய்து கொண்டிருக்கையில் வாடிக்கையாளன் வந்து கதவை தட்டுவான். அந்தக் காட்சி நினைவில் வந்து போனது.

உவே வசிக்கும் காலனியின் உட்புறசாலை வழியாக யாரும் காரில் போகக்கூடாது என்பது விதி. ஆனால் அதை ஒருவன் அறிந்தே மீறும் போது அவருக்குக் கோபம் வருகிறது. ஆவேசமாகச் சண்டையிடுகிறார். அவன் அவரை அலட்சியம் செய்து போகிறான். இதனால் உச்சபட்ச ஆத்திரத்திற்கு உள்ளாகிறார். யாரும் எந்த விதியையும் பின்பற்ற மறுக்கிறார்களே என மனைவி கல்லறையில் போய்ப் புலம்புகிறார்

ஒவ்வொரு முறை அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யும் போதும் அவரது கடந்தகாலம் பீறிடுகிறது. குறிப்பாக அவருக்கும் அவரது அப்பாவிற்குமான உறவு மிக அழகாக வெளிப்படுத்தபட்டுள்ளது. காரும் வீடும் தான் உவேயின் அப்பாவிற்குத் தெரிந்த உலகம். அதைச் சொல்லி சொல்லியே மகனை வளர்ககிறார். மகன் பரிட்சையில் வெற்றி பெற்ற சந்தோஷத்தை அவர் வெளிப்படுத்தும் விதம் மிகச்சிறப்பு. ரயில்வே ஊழியராக அவர் வாழும் காட்சிகள் அழகாக உள்ளன.

உவேயின் காதல்கதை சுவாரஸ்யமானது. அவர் சோஞ்சாவை முதன்முதலில் ரயிலில் சந்திப்பதும். பின்பு அவளுக்காக அதே ரயிலில் பயணிப்பதும் பின்பு அவளிடம் காதலை வெளிப்படுத்த முயலும் போது அவள் சப்தமாகச் சொல்லுங்கள் எனச் சீண்டுவதும் காதலின் தெறிப்புகள். அவர்கள் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆசிரியரான சோஞ்சா கவிதைகளை நேசிக்கிறாள். நிறையப் படிக்கிறாள். வீட்டில் சிறிய நூலகம் ஒன்றை அமைத்துக் கொள்கிறாள். புற்றுநோயின் காரணமாகத் திடீரெனச் சோஞ்சா இறந்து போகிறாள். அதன்பிறகு அவளது நினைவாகவே வாழுகிறார் உவே.

ஒருமுறை தற்கொலை செய்து கொள்வதற்காக ரயில் நிலையத்திற்கு வரும் உவே தற்செயலாகத் தடுமாறி தண்டவாளத்தில் விழுந்த ஒருவனைக் காப்பாற்றுகிறார். அவருக்குள் அப்போதும் மனிதாபிமானம் இருந்து கொண்டேயிருக்கிறது. ஒரு காட்சியில் பர்வேனா உவேயிடம் சொல்கிறாள்

“எந்த ஒருவராலும் எதையும் தனியே செய்துவிட முடியாது. மற்றவர்கள் உதவி என்பது அவசியமானது. அதை நீங்கள் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள் “

‘அவர் தனது பிடிவாதத்தைப் புரிந்து கொள்கிறார்.

இன்னொரு முறை தன்னைப் பேட்டிகாண வரும் பத்திரிக்கையாளரை கார்ஷெட்டில் வைத்து பூட்டிவிட்டு அவர் நடக்கும் போது பர்வேனா அந்தப் பத்திரிக்கையாளரை விடுவிக்கிறாள். அதன் பிறகு அவளும் உவேயும் ஒன்றாக நடக்கிறார்கள். கார்ஷெட்டில் அந்தப் பெண்ணைப் பூட்டிவைத்துவிட்டால் அவள் மாயமாக மறைந்து போய்விடுவாள் என நினைத்தீர்களா எனக் கேலி செய்கிறாள். அவரும் அந்தக் கேலியை புரிந்து கொண்டு வெட்கபடுகிறார். அற்புதமான காட்சியது

அன்றாட வாழ்வில் உவே போலப் பலரை நாம் சந்தித்திருக்கிறோம். அவர்களைப் புரிந்து கொள்ளாமல் நாமும் கோபப்பட்டிருக்கிறோம். வெறுத்து ஒதுக்கியிருக்கிறோம். இப்படம் அவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். உண்மையில் அவர்கள் நல்லவர்கள். அன்பானவர்கள். அதை வெளிப்படுத்த தெரியாதவர்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது

காரை வைத்துக் கொண்டே வாழ்க்கையின் ஆதாரங்களை உவே விளக்குவது சிறப்பு. உவே போன்றவர்கள் சுயஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறவர்கள். தன்னால் அடுத்தவருக்குத் தொந்தரவு வரக்கூடாது என நினைப்பவர்கள். அவர்களுக்கு இன்றைய உலகம் எந்த ஒழுங்குமற்றதாக இருப்பது சகிக்கமுடியாமல் போகிறது. அதனாலே கோபம் கொள்கிறார்கள். சண்டையிடுகிறார்கள்.

ஒருமுறை உவே இதயவலியால் மயக்கமடைந்துவிழும் போது கூட உவே ஆம்புலன்ஸ் உட்சாலை வழியாக வரக்கூடாது என்பதில் கறாராக இருக்கிறார். தனிமையும் நிராகரிப்புமே அவரை இறுக்கமானவராக உருவாக்கியிருக்கிறது. உவேயின் கடந்தகாலம் படம் முழுவதும் மிக அழகாகச் சித்தரிக்கபட்டுள்ளது. குறிப்பாக அவர் காதலியுடன் காரைப் பற்றிப் பேசுவது. ரூனிற்கும் அவருக்கும் கார் வாங்குவதில் ஏற்பட்ட போட்டி. பின்பு ஒரு நாள் ரூனிடம் மன்னிப்பு கேட்பது, மனைவியிடம் படித்த மாணவன் அவளைப்பற்றிப் பெருமையாகப் பேசுவதைக் கல்லறையில் நினைவு கொள்வது என நெகிழ்ச்சியான காட்சிகள் மனதை ஈர்க்கின்றன.

ஒருவரின் வெளித்தோற்றத்தை வைத்து எதையும் எடை போட வேண்டாம். மிகுந்த கோபக்காரர்கள் கூட யாரோ சிலரின் அன்பிற்குக் கட்டுபட்டவர்களே என்பதைப் படம் அழகாக வெளிப்படுத்துகிறது.

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: