அம்ரிதா ஏயெம்

ஈழத் தமிழ் சிறுகதையுலகில் தனிக்குரலாக ஒலிப்பவர் அம்ரிதா ஏயெம். விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள் என்ற இவரது சிறுகதை தொகுப்பை எழுத்தாளர் எஸ்.எல்.எம். ஹனீபா இலங்கை சென்றிருந்த போது கொடுத்து வாசிக்கச் சொன்னார். விமானத்தில் திரும்பி வரும் போது ஒன்றிரண்டு கதைகளை வாசித்தேன். பின்பு தொகுப்பை எங்கோ வைத்துவிட்டுக் காணாமல் தேடிக் கொண்டிருந்தேன். நேற்று  வேறு ஒன்றை தேடிக் கொண்டிருக்கையில் அந்தச் சிறுகதை தொகுப்பு கையில் அகப்பட்டது. உடனே வாசித்து முடித்தேன்.

அம்ரிதா ஏயெம் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் சிறுகதைகள் எழுதத் துவங்கியவர். என் கையிலுள்ள இந்நூல் அதன் மூன்றாவது பதிப்பாக வெளிவந்துள்ளது.

அம்ரிதா ஏயெம் ஈழத்தின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர். இவரது சிறுகதைகள் தமிழ் சிறுகதையுலகிற்குப் புதிய வாசலைத் திறந்துள்ளன. அபாரமான மொழி நடையும் கற்பனையும் கொண்ட கதைகளை எழுதியிருக்கிறார். தொகுப்பில் 16 சிறுகதைகள் உள்ளன.

குடும்பம். சொந்த வாழ்வின் சிக்கல்கள். சமூகப் பொருளாதாரப் பிரச்சனைகள், ஆண் பெண் உறவு என்ற வட்டத்திற்குள்ளே தமிழ் சிறுகதை நூறு வருஷமாகச் சுற்றிக் கொண்டே வருகிறது. அந்த வட்டத்திற்கு வெளியே தனது கற்பனையாலும் யதார்த்தமான விஷயங்களைப் புதிய கோணத்தில் அணுகுவதிலும் அம்ரிதா கூடுதல் கவனம் செலுத்தி கதைகளை எழுதியிருக்கிறார்.

ஈழச்சிறுகதைகளில் யதார்த்தமான கதைகளே அதிகம். கனவுநிலைப்பட்ட, மாய எழுத்துவகைக் கதைகள் ஒன்றிரண்டை வாசித்திருக்கிறேன். போருக்குப் பிறகான சிறுகதைகளில் அதிகம் இழப்பையும், மரணத்தையும் வன்முறையையும் புலம்பெயர்தலின் துயரத்தையும் பேசுபவை. அம்ரிதா ஏயெம் போரின் பாதிப்பை மனிதர்களுக்கு மட்டுமேயானதாகக் கருதுவதில்லை. மாறாக இயற்கையின் பேரழிவாகக் கருதுகிறார். போர்சூழலை விலங்குகளின் வாழ்விலோடு பொருத்திக்காட்டுகிறார்.

விலங்குகளுக்குப் பெயரிட்டு கொச்சைப்படுத்துவது அவைகளின் கால நேர இடப் பரிமாணங்களை அமுக்கி மூட்டை கட்டுவது போலத் தான் அமையும் என அம்ரிதா ஏயெம் முன்னுரையில் கூறுகிறார். முக்கியமான அவதானிப்பு

அமிர்தா ஏயெமின் இயற்பெயர் ரியாஸ் அகமட். கிழக்குப் பல்கலைகழக விலங்கியல் துறையில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறார். இவரது கதைகளில் விலங்குகள் மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன. போரின் துயரக்கதையைக் கூறுவதற்காக விலங்குகளின் நடத்தையுலகை குறீயிடாகக் காட்டுகிறார். யுத்தத்தால் நசுக்கபட்ட சிறுவர்களின் உலகம், இராணுவத்தின் பாதுகாப்பிற்காக அழிக்கபடும் காடுகள், போலீஸ் விசாரணையின் குரூர முகம், வன்முறையின் வெளிப்பாடு என நீளும் இக்கதையுலகில் யதார்த்தமான நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட படிமங்களாக, குறியீடுகளாக விலங்குகளை உருமாற்றிக் கதை சொல்வது புதுவகை எழுத்தாக உள்ளது. குறிப்பாகக் குரங்குளை பற்றிய இவரது இரண்டு சிறுகதைகளும் அபாரமான மனஎழுச்சியைத் தருகின்றன. பரா என்ற குரங்கின் முகம் மனதில் தங்கிப் போய்விட்டது.

நேர்கோட்டில் கதையை வளர்த்துக் கொண்டு போவதற்கு இவர் ஒரு போதும் விரும்புவதில்லை. சிதறுண்ட வடிவத்திலே கதையைச் சொல்லிப் போகிறார். சில கதைகளில் முன்பின்னாகக் காலம் ஊடுருவுகிறது. இவரது மொழி வசீகரமானது.

தாவும் குரங்கு பிடிநழுவி கண்முன்னே செத்துப் போவதைக் கண்ட மற்ற குரங்குகளின் நிலையை சமகால அரசியல் சூழலுடன் அவர் பொருத்திக்காட்டுகிற விதமும் குரங்குகளின் ராஜ்ஜியமே இன்றும் தொடர்கிறது என அதிகாரத்திற்கு எதிராக சுட்டுதலும் மிகச்சிறப்பாகவுள்ளன.

பாம்பை பற்றிய இன்னொரு கதையில் பாம்பு குறித்த பொதுப்புத்தியின் எண்ணங்கள் சிதறடிக்கபடுகின்றன. அம்மாவைக் கொன்ற பாம்புகளில் ஒன்று இப்போது கதைக்கத் துவங்கியது என அக்கதை முடிகிறது. ஒணான்களும் கடல் ஆமைகளும் பாம்புகளும் குரங்குகளும் என விலங்குகளின் வாழ்வியல் வழியே சமகால ஈழத்தமிழ் மக்களின் வாழ்க்கை துயரங்களைக் கதையாக்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

இந்நூலிற்கு மிகச்சிறப்பான முன்னுரை ஒன்றை பேராசிரியர் எம்.ஏ.நுஃமான் எழுதியிருக்கிறார்.

இந்த நூலை வாசிக்கத் தூண்டிய என்னருமை ஹனீபா காக்காவிற்கு மனம் நிரம்பிய நன்றி.

••

விலங்குகள் தொகுதி ஒன்று அல்லது விலங்கு நடத்தைகள்

அம்ரிதா ஏயெம்

புதுப்புனைவு பதிப்பகம்

224 காரியப்பர் வீதி, மருதமுனை 05

32314

இலங்கை

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: