அவரும் நானும்

அவள் விகடன் இதழில் வெளியாகியுள்ள வசந்தா அக்கா குறித்த கட்டுரை.

அன்பு அக்கறை அக்கா! – எஸ்.ராமகிருஷ்ணன்
அவரும் நானும்
ஆர்.வைதேகி
“ `அவளும் நானும்’ என்பதை `அவரும் நானும்’ என மாற்ற முடியுமா? `அவள்’ எனக் குறிப்பிடுவது எனக்கு நெருடலாக இருக்கிறது’’ – பேட்டிக்கு முன்பான கோரிக்கையின் முதல் வரியிலேயே பெண்களின் பெருமதிப்புக்கும் பேரன்புக்குமானவராக நிற்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
“அவளை, `அவர்’ என்றே குறிப்பிடுவோம்!’’ என்று உறுதியளித்த பிறகே பேசவும் சம்மதிக்கிற அவரது மாண்பு மகிழ்ச்சியளிக்கிறது. அதே மகிழ்ச்சியை அவரது பேட்டி முழுவதிலும் உணர முடிகிறது.
“அவர் எனக்கு வசந்தா அக்கா. மதுரையில் உள்ள தோழர் எஸ்.ஏ.பெருமாளின் மனைவி. வாழ்க்கை முழுவதும் போராட்டம், அரசியல், மக்கள் பிரச்னைகள் என இருக்கும் தோழரை முழுமையாக அந்தப் பணிகளுக்கான அர்ப்பணிப்புடன் இயங்கவிடுவது, அவரை கவனித்துக்கொள்வது… இவற்றையெல்லாம் தாண்டி, தானும் நேரடியாகச் சமூகப் போராட்டங்களுக்கு முன்வரக்கூடியவராக அக்கா எனக்கு எப்போதும் ஆச்சர்ய மனுஷி. எளிமையான விவசாயக் குடும்பத்திலிருந்து வந்தவர் வசந்தா அக்கா. சமூகப் போராட்டங்களுக்காக அர்ப்பணித்துக்கொள்ளும் எல்லோரையும் ஏற்றுக்கொண்டு, எல்லோருக்காகவும் நிற்பது என்பது மிக உயர்ந்த பண்பு. அந்த வகையில் அக்காவை என் வாழ்க்கையின் முக்கியமான ஆளுமையாகப் பார்க்கிறேன்.
நான் படிக்கும் காலத்திலிருந்தே என்னை தன் மகன் போலப் பார்த்துக்கொண்டவர் வசந்தா அக்கா. என் திருமணத்தை முன்னின்று நடத்தியவர். இன்று என் பிள்ளைகளுக்கெல்லாம் பாட்டிபோல இருக்கிறார். என்னுடைய எந்தக் கதையோ, நாவலோ வெளியானாலும் உடனே படித்துவிட்டு அழைப்பார் அக்கா. நன்றாக இருந்தாலும் சொல்வார், விமர்சனங்கள் இருந்தாலும் சொல்வார். இன்னும் சொல்லப்போனால் `இதையெல்லாம் எழுத மாட்டேங்கிறீங்களே!’ என நான் எதையெல்லாம் எழுத வேண்டும் என்றும் சொல்வார்.
அக்கா வீட்டுக்குப் போவது என்பது எனக்கு என் வீட்டுக்குப் போவதைப் போன்றது. விடுமுறையில் என் பிள்ளைகளை அக்கா வீட்டில் விட்டுவிடுவேன். என் பிள்ளைகளை வெளியில் அழைத்துச் செல்வது, விடுமுறை முழுவதும் பார்த்துக்கொள்வது என அக்காவும் தோழரும் அவ்வளவு அன்பாக இருப்பார்கள். என் பிள்ளைகளுக்கு அவர் வசந்தா ஆச்சி. நான் அக்கா, தோழர் என அழைத்தாலும் அவர்கள் எனக்கு அம்மா அப்பா மாதிரி.
எனக்கு ஏதேனும் உடல்நலக் குறைவு ஏற்பட்டால், அக்கா உடனே என் மனைவியை அழைத்து மருந்துகள் பற்றிச் சொல்வார். இல்லையென்றால், எங்களை அங்கே அழைத்துக்கொள்வார்.
சில நேரம் நான் என் இடத்தைவிட்டு வெளியே எங்கேயாவது போய் எழுத நினைத்தால், அவர் வீட்டுக்குத்தான் போவேன். வீட்டு மாடியில் பெரிய நூலகம் வைத்திருக்கிறார்கள். எனக்காகச் சமைத்துக் கொடுத்தும், நான் எழுதும் விஷயங்களைப் படித்துக்கொண்டும் அக்கா என்னை அக்கறையாகக் கவனித்துக் கொள்வார். இந்த அன்பும் அக்கறையும் எல்லோரிடமும் ஒரே மாதிரி வெளிப்படும்.
என்னை மட்டுமன்றி, இலக்கியத்தில் இருக்கும் பலருக்கும் அவர்கள் வீட்டில் சாப்பாடு கொடுத்து, தங்கவைத்துப் பார்த்துக் கொள்ளக்கூடிய அன்பான ஆளுமை அக்கா.
என்னை உருவாக்கியவர்களில் முக்கியமானவர் தோழர் எஸ்.ஏ.பி என்கிற  எஸ்.ஏ.பெருமாள். நான் பள்ளி வயதில் இருந்தபோது, தோழர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராக இருந்தார். என்னை மாதிரியான சிறுவர்கள் தெருவில் ஆங்காங்கே உட்கார்ந்து பேசிக்கொண்டிருப்போம். எங்களை அழைத்து, `என்னடா பசங்களா… ஸ்கூலுக்குப் போகாம இங்க உட்கார்ந்துப் பேசிட்டிருக்கீங்களே’ என்பார். `இப்படி உட்கார்ந்து பேசறதுக்குப் பதிலா ஏதாவது படிங்கடா’ என்று சொல்லி, அவரே எங்களுக்குப் புத்தகங்கள் கொடுத்துப் படிக்கவைப்பார். நான் எழுத்தாளராக அவர் முக்கியமான காரணம். பள்ளி வயதிலிருந்து இன்று வரை அவருடைய அந்த அன்பும் அக்கறையும் தொடர்கின்றன.
தமிழ், ஆங்கிலம் என இரண்டிலும் தீவிர இலக்கியங்கள் எல்லாவற்றையும் வாசிக்கக்கூடியவர் எஸ்.ஏ.பி. உதாரணத்துக்கு, கேப்ரியல் கார்சியா மார்க்கஸுக்கு நோபல் பரிசு கிடைத்ததை அவர்தான் எனக்கு முதலில் சொன்னார். `அவர் லத்தீன் அமெரிக்காவில் எழுதிட்டிருக்கார்… நீங்க எல்லாம் இங்கே என்ன பண்ணிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டார். `போங்கடா… அந்தப் புத்தகத்தை வாங்கிப் படிங்கடா’ என்றார். நாங்கள் எங்கெல்லாமோ தேடி அலைந்து வாங்கி வருவதற்குள், அவர் அந்தப் புத்தகத்தைப் படித்து முடித்திருந்தார். வாசிப்பு மட்டுமின்றி அவர் நல்ல பேச்சாளரும்கூட. எல்லா நேரங்களிலும் எழுதுவது தொடர்பான விஷயங்களை அவரிடம்தான் ஆலோசிப்போம். என்னை மட்டுமல்ல; எழுத்தாளர்கள் கோணங்கி, தமிழ்ச்செல்வன், கே.ஏ.குணசேகரன் எனப் பலரையும் உருவாக்கியவர் அவர்தான். அவருக்கு மகன் இல்லை என்பதால், அவரின் மகன் மாதிரி வீட்டோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. நினைத்தபோதெல்லாம் அவர்கள் வீட்டுக்குப் போய்விடுவேன். அவர்களும் எப்போது வேண்டுமானாலும் எங்கள் வீட்டுக்கு வந்து தங்கிச் செல்வார்கள்.
குடும்ப உறவுகளுக்கு அப்பால் பொது வாழ்க்கையிலும் இருந்துகொண்டு, தனிமனித உறவுகளைப் பேணுவது, என் பிள்ளைகளுக்கு ஆச்சியாக இருப்பது என வசந்தா அக்கா மிகவும் மரியாதைக்குரியவர். என் புத்தகங்கள் எல்லாவற்றையும் வசந்தா அக்கா படித்திருக்கிறார். என்னுடைய எல்லாப் புத்தகங்களிலும் தோழர் எஸ்.ஏ.பெருமாளுக்கு நன்றி செலுத்தத் தவறியதில்லை. சில புத்தகங்களில் அக்காவுக்கு மட்டும் பிரத்யேகமாக நன்றி செலுத்தியிருக்கிறேன்.
என் புத்தக வெளியீட்டு விழாக்களில் அக்கா முதன்மையாக இருந்திருக்கிறார். என்னுடைய `சஞ்சாரம்’ மற்றும் `நெடுங்குருதி’ நாவல்கள் அக்காவுக்கு மிகவும் பிடித்தமானவை. எங்கள் வீட்டுக்கு வரும்போது அக்கா ஒரு பை நிறைய புத்தகங்களை எடுத்துச் செல்வார். படித்துக்கொண்டே இருப்பார். இப்போது சென்னையில் மகள் வீட்டில் பேத்தியைப் பார்த்துக்கொண்டிருக்கிறார். பகல் வேளையில் எங்களுடன் பேசிக் கொண்டிருப்பார். தினசரி எங்கள் நலம் விசாரிக்கிற ஒரு நபர் அவர்.
உண்மையிலேயே என் வளர்ச்சியை, சந்தோஷத்தை விரும்புகிறவர். என் எழுத்தை நேசிக்கக்கூடியவர். நான் மதிக்கும் மிக முக்கியமான மனுஷி, வசந்தா அக்கா.’’

நன்றி

அவள் விகடன்

வைதேகி

Archives
Calendar
May 2018
M T W T F S S
« Apr    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: