டோக்கியோ செல்லும் ரயில்.

ஜப்பானின் புகழ்பெற்ற இயக்குனரான யசுஜிரோ ஒசு இயக்கிய டோக்கியோ ஸ்டோரி படத்தை எப்போது பார்த்தாலும் மனது கனத்துவிடுகிறது. அதன்பிறகு சில நாட்களுக்கு வேறு படம் எதையும் பார்க்க முடியாது. டோக்கியோ ஸ்டோரி திரையில் உருவான காவியம். ஒசு  ஜப்பானியர்களின் ஆன்மாவை அறிந்தவர். அவரது சினிமா பௌத்த சாரத்தைக் கொண்டது. காத்திருப்பும் நிதானமும் தனிமையும் பிரிவும் என வாழ்வின் நுண்மையான தருணங்களை அடையாளம் காட்டியவர் ஒசு . அவரது திரைமொழி மற்ற ஜப்பானிய இயக்குனர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

ஒசு வின் கேமிரா ஜப்பானிய பண்பாட்டின் அழகியலை முதன்மைப்படுத்துகிறது. ஒரு போதும் அவர் எண்பதடி கிரேனில் கேமிராவை பொருத்தி அலைய விடுபவரில்லை. அவரது படங்களில் வன்முறையே கிடையாது. குடும்பத்தின் நுண்ணிழைகளை இத்தனை நுட்பமாக யாரும் திரையில் சொன்னதேயில்லை. இந்திய சமூகத்தைப் போலவே ஜப்பானிய சமூகமும் உறவுகளுக்கே முக்கியத்துவம் தரக்கூடியது. அதிலும் குறிப்பாகத் திருமணம் தான் ஒசு படங்களின் மையப்பொருள். மகளின் திருமணத்திற்காக அலையும் தந்தை, வயதான தந்தையை விட்டு மணமாகி போய்விட்டால்  தனிமையில் துயரம் அடைவாரே என அவருக்காகப் பெண் தேடும் மகள், சகோதரிகளுக்குள் உள்ள உறவு என ஒசு  ஜப்பானிய குடும்பத்தின் வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார். குறிப்பிட்ட சில நடிகர்களே அவரது பெரும்பான்மை படத்தில் நடித்திருக்கிறார். ஆகவே ஒரு குடும்பத்தின் கதையை விரிவாக காண்பது போல தோன்றுகிறது.

1953ல் வெளியான டோக்கியோ ஸ்டோரி திரைப்படம் தன்பிள்ளைகளைத் தேடி மாநகருக்கு வரும் முதிய பெற்றோர்களின் அலைக்கழிப்பை கூறுகிறது. இன்றைக்கும் பொருத்தமான கதைக்களமது. ஷுகிச்சியும் அவரது மனைவி டோமி-யும்  முதியவர்கள். படத்தின் துவக்க காட்சிகளிலே ஷுகிச்சி வீட்டின் அருகில் ரயில் ஒடுகிறது. அது டோக்கியோ செல்லும் ரயில். அந்த ரயில் அவர்களைக் கடந்து போகிறது. அதில் போனால் மாநகரில் வாழும் தன்னுடைய பிள்ளைகளைப் பார்த்து நலம் விசாரித்து அவர்களுடன் தங்கி வரலாம் என நினைக்கிறார்கள்.

அந்த ரயில் நவீனத்தின் குறியீடு. மாறிவரும் காலத்தின் அடையாளம். ஏழ்மையிலும் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து வரும் அந்த முதியவர்கள் நகரம் நோக்கி செல்கிறார்கள். அவர்களை யார் வைத்துக் கொள்வது என்பதில் பிள்ளைகளுக்குள் சண்டை. ஒருவருக்கும் பெற்றோர்களை உடன் வைத்துக் கொள்ள விருப்பமில்லை. கைவிடப்பட்ட பெற்றோர்கள் பெருநகரில் அலைகழிக்கபடுகிறார்கள். படத்தின் பல காட்சிகள் கண்ணீர் வரவழைப்பவை. ஒசு  கதபாத்திரங்களின் உணர்வை மிகையின்றி அழகாகக் கையாண்டிருக்கிறார். அந்த முதிய தாய் தந்தை முகங்கள் வாழ்நாளில் ஒரு போதும் மறக்கமுடியாதவை.  டோக்கியோவிற்குச் செல்லும் ரயில் எப்போதும் போலப் படத்தின் கடைசியிலும் வேகமாக ஒடிக் கொண்டேயிருக்கிறது. அதைக் காணும் போது பயமாக இருக்கிறது.

ஜெர்மனியின் புதிய அலை திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான விம் வெண்டர்ஸ் ஒசு வை தனது குருவாக் கொண்டவர். ஒசு வின் திரைப்படங்களே தனது திரைப்படங்களுக்கு ஆதாரம் என வெளிப்படையாக அறிவித்துக் கொண்டவர். திரைப்படப் பள்ளியில் பயின்ற நாட்களில் அவர் ஒசு வின் மௌனப்படங்களைக் கண்டிருக்கிறார். பின்பு நியூயார்க்கில் ஒசு வின் முக்கியத் திரைப்படங்களைப் பார்த்திருக்கிறார். அவரது பாதிப்பிலே தனது படங்களை உருவாக்கி வெற்றியடைந்திருக்கிறார்.

ஒசு வின் மீதான ஈடுபாட்டால் அவரைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை விம் வெண்டர்ஸ் இயக்கியிருக்கிறார். 1985ம் ஆண்டு வெளியான Tokyo-Ga என்ற இந்த ஆவணப்படம் ஒசு வின் உலகைப் பற்றியது. வழக்கமான ஆவணப்படங்களைப் போல ஒசு வின் வாழ்க்கை வரலாற்றை விம் வெண்டர்ஸ் பதிவு செய்யவில்லை. மாறாக ஒசு வைப் போலவே ஜப்பானிய வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கிறார். அதிலும் நவீன உலகின் மாற்றங்கள் ஜப்பானை எப்படி உருமாற்றியிருக்கின்றன என்பதைத் துல்லியமாகப் பதிவு செய்திருக்கிறார். ஒசு வின் திரைப்படங்களைப் பார்த்திருந்தால் இந்தப் படம் எப்படி அதன் மறுபக்கத்தைப் பதிவு செய்துள்ளது என்பதைப் புரிந்து ரசிக்க முடியும்.

தனது படப்பிடிப்புக்கு ஏற்றபடி ஒசு  கேமிராவில் சில மாற்றங்களைச் செய்து வடிவமைத்துக் கொண்டிருக்கிறார். ஒளிப்பதிவாளர் தரையில் மண்டியிட்டபடியோ, படுத்துக் கொண்டபடியோ தான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும். அவ்வளவு தாழ்வாகக் கேமிராவை பொருத்தியிருப்பார். பக்கவாட்டு அசைவுகளே பிரதானமானவை. 50 எம்.எம். லென்ஸை அதிகம் உபயோகிக்கக் கூடியவர். அது தரும் அனுபவத்தை வேறு லென்ஸ் தருவதில்லை என்கிறார் ஒசு ,. இவரது படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் Yûharu Atsuta. கேமிரா உதவியாளராகப் பணியாற்றத்துவங்கி பல ஆண்டுகள் உடன் வேலை செய்து பின்பு கேமிராமேன் ஆனவர். ஒசு வின் கடைசிகாலம் வரை உடனிருந்து பணியாற்றியிருக்கிறார். ஒரே இயக்குனருடன் மட்டுமே அதிகக் காலம் பணியாற்றியிருக்கிறேன். அவரது மறைவிற்குப் பிறகு சில திரைப்படங்களில் வேலை செய்த போதும் எனது திறமை அதில் முழுமையாக வெளிப்படவில்லை. ஒசு வை போல என்னைப் புரிந்து கொண்டவரில்லை. அவரது மரணம் என்னைத் தனிமையில் ஆழ்த்திவிட்டது என இந்த ஆவணப்படத்தில் அட்சுதா கூறுகிறார்.

இவரைப் போலவே ஒசு வின் முக்கிய நடிகரானChishū Ryū வின் நேர்காணலும் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இவரே டோக்கியோ ஸ்டோரியில் முதியவராக நடித்திருப்பவர்.

பள்ளி ஆசிரியராகத் தனது வாழ்க்கையைத் துவக்கிய ஒசு  பின்பு டோக்கியோ சென்று சினிமாவிற்குள் நுழைய முயற்சிகள் செய்தார், ஒளிப்பதிவு உதவியாளராகச் சில ஆண்டுகள் ஸ்டுடியோவில் பணியாற்றினார், பின்பு தனது திரைக்கதை ஒன்றின் மூலம் இயக்குனராக உயர்வு பெற்றார். ஸ்டுடியோவிற்குள்ளாகவே பல ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதால் இவரது படங்களில் பெரும்பகுதி அரங்கத்திற்குள்ளாகவே எடுக்கபட்டவை. கேமிராவை நகரவிடாமல் ஒரு கோணத்தில் வைத்துவிட்டுக் கதாபாத்திரங்கள் அதற்குள் இயங்க செய்வது அவரது பாணி. படப்பிடிப்புத் தளத்தில் அதிகம் பேசாதவர். காட்சிகளை முழுமையாக ஒத்திகை பார்த்துவிட்டே படப்பிடிப்பு செய்யக்கூடியவர். இதனால் இவரது படங்களில் தேர்ந்த நடிப்பை காணலாம். ரயில் காட்சிகள் இவரது படங்களில் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன. அவற்றை மட்டும் நிஜமான ரயில் தண்டவாளங்களில். நிஜ ரயிலின் வேகத்தையே படம் பிடித்திருக்கிறார். கதாபாத்திரங்கள் கேமிராவை நேரடியாகப் பார்த்து உரையாற்றுவது இவரது பாணி.

தந்தைக்கும் மகளுக்குமான உறவை ஒசு  மிக அழகாகப் பதிவு செய்திருக்கிறார். இந்திய திரைப்படங்களில் இந்த உறவு அதிகமும் மிகைப்படுத்தபட்டிருக்கும். பல நேரங்களில் அழுது கண்ணீர்விட்டு கதறிவிடும் தந்தைகளே சினிமாவில் சித்தரிக்கபட்டிருக்கிறார்கள். ஆனால் ஒசு  காட்டும் தந்தைகள் மனதிற்குள் மகள் மீதான ப்ரியத்தைக் கொண்டவர்கள். சற்றுவிலகிய நிலையில் மகளுடன் பேசி பழகுகிறவர்கள். ஆனால் திருமணமாகி மகள் போய்விடுவாளே என்ற நிலையில் அதைத் தாங்கிக் கொள்ளமுடியாமல் தத்தளிப்பவர்கள். ஒசு  படத்தின் பலம் அன்றாட நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியது. அதுவும் அன்றாட மொழியிலே உரையாடல்கள் அமைத்தது. பல நேரங்களில் நாம் ஒரு ஜப்பானிய குடும்பத்தினுள் கலந்துவிட்டது போன்ற உணர்வை தருவதே அவரது திரைப்படத்தின் வெற்றி.

ஒசு வைப் புரிந்து கொண்டவர் என்ற முறையில் விம் வெண்டர்ஸ் ரயில் நிலையத்தையும் ரயிலையும் காட்சிபடுத்தியிருக்கிறார். ஒசு  காட்டுவது பழைய கால ரயில்கள். விம் வெண்டர்ஸ் காட்டுவது நவீன அதி வேக ரயில். இரண்டும் மாற்றத்தின் குறியீடு தானே.

பௌத்த சாரமும் சமய அறமும் வாழ்க்கையாகக் கொண்ட ஜப்பான் உருமாறிக் கொண்டேயிருக்கிறது. பூக்களை அலங்கரிக்கும் கலை கொண்ட ஜப்பானில் தான் பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது என்பதை விம் வெண்டர்ஸ் சுட்டிக்காட்டுகிறது

இந்த ஆவணப்படம் ஒசு வைப் பற்றிய தனது டயரிக்குறிப்புகள். திரையில் எழுதப்பட்ட டயரியாகவே இதைக் கருத வேண்டும் என்கிறார் விம் வெண்டர்ஸ். ஒசு வை ஆராதிக்கும் ஒருவரால் மட்டுமே இது போன்ற ஆவணப்படத்தை உருவாக்க முடியும்

நீங்கள் இதுவரை TOKYO STORY பார்க்கவில்லை என்றால் உடனே பார்த்துவிடுங்கள். இணையத்தில் காணக் கிடைக்கிறது. உங்கள் வாழ்வில் மறக்கமுடியாத திரைஅனுபவத்தை அடைவீர்கள் என்பதே நிஜம்.

•••

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: