புதிய சிறுகதை – மீறல்

சமீபத்தில் எழுதிய புதிய சிறுகதை. அச்சில் வராதது.

••

மீறல்

சுகந்தி பேருந்தை விட்டு இறங்கிய போது கோயம்பேட்டில் லேசான தூறலாக இருந்தது. இரவில் நல்ல மழை பெய்திருக்க வேண்டும். சாரலோடு ஒரு ஆட்டோ பிடித்துத் தனது தோழி கல்பனாவின் அறையைத் தேடிப் போனாள். கல்பனாவின் கணவன் துபாய் சென்றபிறகு அவள் வீட்டை காலி செய்துவிட்டு தன்னோடு வேலை பார்க்கும் மிதிலாவின் அபார்ட்மெண்டிற்கு மாறி விட்டாள். பெங்களுரில் இரவு புறப்பட்ட போது போனின் சார்ஜ் குறைந்து கொண்டுவந்தது. காலையில் கண்விழித்த போது போன் ஆப் ஆகியிருந்த்து. கல்பனாவை அழைத்துப் பேசக்கூட முடியவில்லை. அதனால் என்ன ?. அவள் அறையில் இருந்து அலுவலகம் கிளம்ப எப்படியும் எட்டரை ஆகிவிடும் தானே.

சுகந்தி தனது கைக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். மணி ஆறு நாற்பதாகியது. ஒரேயொரு உடை மட்டும் கையோடு கொண்டுவந்திருந்தாள். இரவு ஏழரை மணி பஸ்ஸில் பெங்களுர் திரும்பிப் போக வேண்டும். சென்னைக்கு வந்து இரண்டு வருஷத்திற்கும் மேலாகிவிட்டது. ஊர் நிறைய மாறியிருக்கிறது. அல்லது அப்படித் தனக்குத் தோன்றுகிறது. நாளைக்குப் பெங்களுர் திரும்பி போகும் போது கூட ஒரு நாளில் பெங்களுர் மாறிவிட்டது போலத் தான் தோன்றும். அது ஒரு உணர்ச்சி.

ஈரமான சாலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன. ஆட்டோ அசோக்பில்லர் சிக்னலில் நின்றது.   நகரம் மிகுந்த பரபரப்பாகிவிட்டது. ஆட்டோவில் இருந்தபடியே சாலையைப் பார்த்தாள். குடைக்குள் அமர்ந்தபடியே பூ விற்கும் பெண் ரோஜாக்களின் மீது ஸ்பிரே அடித்துக் கொண்டிருப்பது கண்ணில் பட்டது. பூக்களுக்கும் கூட ஸ்பிரே அடித்து வாசனை தெளிவு செய்கிறார்கள். எதில் தான் ஏமாற்று இல்லை.

ஆட்டோ நவோதயா டவர்ஸ் முன்பாகப் போய் நின்றபோது தனது கைப்பையிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தாள். இருபத்தி நாலு வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு. கல்பனா நான்காவது தளத்தில் இருந்தாள். லிப்ட் வேலை செய்யவில்லை எனப் போர்டு மாட்டப்பட்டிருந்த்து

சுகந்தி ஒவ்வொரு படியாக ஏற ஆரம்பித்தாள். யாரோ போனில் பேசியபடியே அவளைக் கடந்து கிழே போனார்கள். ஒரு வீட்டில் சுப்ரபாதம் ஒலித்துக் கொண்டிருந்தது. நாலு மாடி ஏறுவதற்குள் அவளுக்கு மூச்சுவாங்கியது. கல்பனா வீட்டு காலிங்பெல்லை அழுத்தியபோது மிதிலா தான் வந்து கதவை திறந்தாள்.

“சர்ப்ரைஸ்.. நீ வர்றேனு கல்பனா சொல்லவேயில்லை“ என்றாள்

“மறந்திருப்பா“ என்றபடியே உள்ளே வந்தாள். சுவரில் அடிக்கபட்ட பச்சை வண்ணம் அவளுக்குப் பிடித்திருந்தது. பூப்போட்ட திரைச்சீலைகள் தொங்கிக் கொண்டிருந்தன.

ஹாலில் ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்தபடியே கல்பனா டிவியில் ஜோதிட நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அருகில் சென்ற சுகந்தி என்னடி பண்றே எனக்கேட்டபோது கல்பனா சிரித்தபடியே “என்னோட ராசிக்கு என்ன பலன்னு பாத்துகிட்டு இருக்கேன். உன் ராசி சொல்லு..“ எனக் கேட்டாள்

“நான் தெரிஞ்சுகிட ஒண்ணுமில்ல“ என்றபடியே சுகந்தி அங்கிருந்த இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்டாள்

மிதிலா அவள் வேலை எப்படியிருக்கிறது என விசாரித்துக் கொண்டிருந்தாள்.

கல்பனா அவர்கள் மூவருக்குமாக டீ தயாரிக்கச் சென்றாள்.

சுகந்தி பேஸ்டை எடுத்துக் கொண்டு பல்துலக்க சென்ற போது டீ கொதிக்கும் வாசம் வந்தது

ஆளுக்கு ஒரு டீயோடு உட்கார்ந்து கொண்டார்கள்

கல்பனா கேட்டாள்

“என்ன வேலயா வந்துருக்கே.. எங்க போகணும் “

“ஒரு சின்ன வேலை.. பத்து பதினோறு மணிக்குள்ள முடிஞ்சிரும்னு நினைக்கேன்“ என்றாள் சுகந்தி

“எங்கே போகணும்“ எனக்கேட்டாள் மிதிலா

“தேனாம்பேட்டை“ என்றாள் சுகந்தி

கல்பனா டீயை உறிஞ்சியபடியே “எனக்கு எட்டுமணிக்கு கிளம்பணும்.. திரும்பி வர ஒன்பதாகிடும்“ என்றாள்

“நீ கிளம்பு. நான் பாத்துகிடுவேன்“ என்றாள் சுகந்தி

“பெங்களுர்ல தனியா இருக்கிறது கஷ்டமாயில்லையா“.. எனக் கல்பனா கேட்டாள்

“பழகிருச்சி.. ரெண்டு மாசம் முன்னாடி கூட அம்மா வந்து இருந்தாங்க.. அவங்களுக்கும் இப்போ உடம்பு முடியல“.

“நானும் வேலையை விட்டுட்டு துபாய் போயிடலாம்னு இருக்கேன். அவருக்கு லீவே கிடைக்குறதில்ல“ என்றாள் கல்பனா

மிதிலா பிரெட் பாக்கெட்டை எடுத்துக் கொண்டுவந்தபடியே கேட்டாள்

“பிரெட் டோஸ்ட் சாப்பிடுவேல்ல“

சரியெனத் தலையாட்டினாள் சுகந்தி. கல்பனா தனக்கு வேண்டாம் என்றபடியே குளிப்பதற்காகத் துண்டை எடுத்துக் கொண்டு சென்றாள். டிவி யாரும் பார்க்காமலும் ஒடிக் கொண்டிருந்தது.

சுகந்தி டிவி பார்ப்பதேயில்லை. அலுவலகம் விட்டு வந்தாலும் கூட எதையாவது படித்துக் கொண்டு தானிருப்பாள். மிதிலா சமையல் அறைக்குள் சென்றபிறகு சுகந்தி எழுந்து ஜன்னலை ஒட்டி நின்றபடியே சாலையை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்

ஏதோ ஊரில் இருப்பது போலவே இருந்தது. இந்த ஊரில் எத்தனை வருஷங்கள் வாழ்ந்திருக்கிறோம். அதை விட்டு வேறு ஊர் போய்விட்டால் நினைவுகளும் மறந்து போய்விடுமா..

செல்போனை சார்ஜரில் போட வேண்டும் என்ற நினைவு வந்தது. அப்போது தான் சார்ஜர் கொண்டுவரவில்லை என்பதை உணர்ந்தாள். கல்பனாவின் சார்ஜரை தேடி அதில் போனை சொருகினாள். குளிர்ந்த தண்ணீரில் குளிக்க வேண்டும் போலிருந்த்து. கசகசப்பான கழுத்தை கையால் துடைத்துக் கொண்டாள். வெயில் நகரின் மீது படர்ந்து கொண்டிருந்தது.

மிதிலாவும் கல்பனாவும் அலுவலகம் கிளம்பியிருந்தார்கள். அலுவலக வேஷம் என்று தான் சொல்லவேண்டும். கழுத்துபட்டையுடன் இருவரும் கிளம்பி சென்றபிறகு சுகந்தி தனியாக இருந்தாள். யாருமில்லாத போது அந்த வீடு தன்னுடையது போன்ற உணர்வு ஏற்பட்டது. குளியல் அறையில் ஷவர் வேலை செய்யவில்லை. பக்கெட்டில் பிடித்துக் குளித்துவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டாள்

கண்ணாடியில் பார்க்கும் போது புருவங்கள் வீங்கியிருப்பது போலிருந்தது. ஒன்றிரண்டு நரைமுடிகள் கூந்தலில் மறைந்திருப்பதும் தெரிந்தது. மிதிலா செய்து வைத்த பிரெட் டோஸ்டை சாப்பிட்டாள். பின்பு வீட்டுக்கதவை பூட்டி சாவியை எதிர்வீட்டில் கொடுத்துவிட்டு படி வழியாகக் கிழே இறங்கி வந்த போது மணி ஒன்பதாகியிருந்தது

ஆட்டோ பிடித்துத் தேனாம்பேட்டை போய் இறங்கினாள். அரசு அலுவலகக் கட்டிடங்கள் கொண்ட வளாகமது. இரண்டாவது தளத்திற்குச் சென்றாள். பாதி அலுவலர்களுக்கு மேல் வந்திருக்கவில்லை. காலிநாற்காலிகளாக இருந்தது.

ஒரு அலுவலரிடம் “பாஸ்கர் வந்தாச்சா“ எனக்கேட்டாள்

அந்த ஆள் எட்டிபார்த்துவிட்டு சொன்னார்

“சீட் காலியா இருக்கு.. இன்னும் வரவில்லை“

அவள் பொறுமையற்றவள் போல அந்த நாற்காலியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். நீண்ட அந்த ஹாலில் நாற்பது பேருக்கும் மேலாக அமர்ந்திருந்தார்கள். அரசு அலுவலங்களுக்கென்ற ஒரு வாசனையிருக்கிறது. அந்த வாசனை காற்றில் கலந்திருந்த்து.

பாஸ்கர் வரும்வரை காத்திருக்க வேண்டியது தான் என அவள் கிழே இறங்கி வந்தாள். டெண்டர், அறிவிப்புகள் கொண்ட பலகையைச் சுற்றி சிலர் நின்று கொண்டிருந்தார்கள். அவளும் ஏதோ டெண்டர் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புவளை போல அருகில் சென்று நின்று படித்துப் பார்த்தாள். யாரோ அவள் பின்னால் இடித்தபடியே எட்டி படித்துக் கொண்டிருந்தார்கள்.

டீக் குடிக்கலாம் போலிருந்த்து. மரத்தடியில் இருந்த டீக்கடையை நோக்கி சென்றாள். அங்கே ஒரு பெண் கூடயில்லை. நாலைந்து ஆண்கள் நின்றிருந்தார்கள். ஒருவர் கையில் சிகரெட். மற்றவர் கையில் டீ.

சுகந்தி ஸ்டராங்காக ஒரு டீ வேண்டும் என்று கேட்டாள்.

புகை படிந்த பாத்திரத்திலிருந்த பாலை எடுத்து மாஸ்டர் டீப் போடத்துவங்கினார். ஒரு பெண் தனது குழந்தைகளுடன் மரத்தடியில் நின்று கொண்டிருந்தாள். அவள் கையில் பெரிய பைல் இருந்தது.

டீ கசந்தது. குடிக்கமுடியவில்லை. அப்படியே கிழே கொட்டிவிடலாமா என்று நினைத்தாள். பிறகு பரவாயில்லை என்றபடியே டீயை குடித்து முடித்தாள். பைக் ஒன்றின் மீது அமர்ந்திருந்த காகம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தது. பத்து நிமிஷம் தான் கழிந்திருந்தது.

என்ன செய்வதெனத் தெரியாமல் அந்த வளாகத்திற்குள்ளாகவே நடந்து கொண்டிருந்தாள். சாலையின் முடிவு வரை நடந்து போய்வந்தால் நேரம் ஒடிவிடும் என்று தோன்றியது. அலுவலகத்தை விட்டு வெளியே வந்து வடக்கு நோக்கி நடக்க ஆரம்பித்தாள். மழையில் ஆங்காங்கே தண்ணீர் கட்டியிருந்தது.. தெருமுனை வரை போய்விட்டு திரும்பி வந்த போது மணி பதினோறு தாண்டியிருந்தது.

பாஸ்கர் வந்திருக்ககூடும்

படியேறி மேலே போகும்போது அவளது கைப்பை சரிந்து விழுவது போலிருந்தது. அழுக்கு உடைகளைத் திணித்திருந்த காரணத்தால் பை பெருத்துப் போயிருந்தது. தொங்குபை என்பதால் அதை இழுத்து சரிசெய்தபடியே அவள் இரண்டாவது தளத்திற்குச் சென்றாள். ப்யூன் அவளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

பாஸ்கர் உட்கார்ந்திருப்பது தெரிந்த்து. குனிந்து எதையோ எழுதிக் கொண்டிருந்தான். சுகந்தி அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். பாஸ்கர் அவள் வந்திருப்பதைக் கவனிக்கவேயில்லை. நடந்து அருகில் போன போது பக்கத்து சீட்டுஆள் அவனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். திரும்பிய பாஸ்கர் சுகந்தியை பார்த்தான். அவனது முகம் சட்டென மாறியது.

“என்ன சுகந்தி“ என்று கேட்டான்

சுகந்தி அவனை வெறித்துப் பார்த்தபடியே இருந்தாள். பிறகு கையை ஒங்கி ஆவேசத்துடன் அவனது வலதுகன்னத்தில் அறைந்தாள். அதை அவன் எதிர்ப்பார்க்கவில்லை. அலுவலகமும் கூட எதிர்ப்பார்க்கவில்லை. அவன் முகம் இருண்டு போனது.

“என்னடீ“ என்று பலமாகக் கத்தினான்

அவள் ஆத்திரம் தணியாதவள் போல இன்னொரு அறை கொடுத்தாள். அலுவலகத்தில் பலரும் சப்தமிடத் துவங்கினார்கள்.

எதுவும் நடக்காதவள் போல அவள் விடுவிடுவென ஹாலை விட்டு வெளியேறி படியில் இறங்க துவங்கினாள். பாஸ்கர் கத்திக் கொண்டிருப்பது கேட்டது. ஒரு பெண் அலுவலகத்திற்குள் நுழைந்து ஒருவனை அடித்துவிட்டு போகிறாள் என்ற அதிர்ச்சியினைத் தாங்கமுடியாமல் அலுவலகம் கொந்தளித்துக் கொண்டிருந்தது.

வீதிக்கு வந்த சுகந்தி ஒரு ஆட்டோ பிடித்தாள். எதுவும் நடக்காதது போலத் தலையைச் சரிசெய்து கொண்டாள். உதயம் தியேட்டருக்கு போகும்படி சொல்லிவிட்டு சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்

இரவு ஏழரை மணிக்கு தான் பெங்களுர் பேருந்து. அதுவரை என்ன செய்வது. எங்கே போவது.

அவளுக்குப் பாஸ்கரின் முகம் வெளிறிப்போனது நினைவில் வந்தபடியே இருந்த்து. அவள் ஒடும் கார்களைப் பைக்குகளை வெறித்துப் பார்த்தபடியே வந்தாள்

உதயம் தியேட்டர் வாசலை ஒட்டி அவளை ஆட்டோ இறக்கிவிட்டபோது காசை கொடுத்துவிட்டு வெயிலில் நின்று கொண்டிருந்தாள்

திடீரென்று அவளுக்கு மிகச் சந்தோஷமாக இருந்தது. சப்தமாகச் சிரித்தாள்

யாராவது பார்ப்பார்களோ என்ற கவலையே இல்லாமல் அவள் சிரித்துக் கொண்டிருந்தாள்.

பிறகு இன்னொரு டீக்குடிக்கலாம் என டீக்கடையைத் தேடிக் கொண்டு போனாள்.

அப்போதும் அவளால் சிரிப்பை அடக்கமுடியவில்லை

•••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: