பேரலையின் உயரம்

ஜப்பானின் புகழ்பெற்ற ஒவியரான ஹொக்குசாய் பற்றி இரண்டு படங்களைப் பார்த்தேன். ஒன்று ஆவணப்படம். மற்றொன்று திரைப்படம். Edo Porn என்ற திரைப்படம் Kaneto Shindo இயக்கத்தில் 1981ல் வெளியாகியிருக்கிறது. இப்படம் ஹொக்குசாயின் வாழ்க்கை மற்றும் காதலைப் பேசுகிறது. நிர்வாணக்காட்சிகள் அதிகமுள்ளதால் இப்படத்தைச் சில நாடுகள் திரையிட அனுமதிக்கவேயில்லை

BBC தயாரிப்பான Old Man crazy to Paint ஆவணப்படம் ஹொக்குசாய் ஒவியங்களின் சிறப்புகளையும். அவரது தனித்துவத்தையும் விளக்குகிறது.

1760 ல் டோக்கியோவில் பிறந்த ஹொக்குசாய் மரச்செதுக்கு ஒவியராகப் புகழ்பெற்றவர். ப்யூஜி எரிமலையின் தோற்றத்தை 36 விதங்களில் வெவ்வேறு இடங்களில் இருந்து வரைந்திருக்கிறார். அந்த ஒவிய வரிசை மிகவும் புகழ்பெற்றது. அது போலவே சுனாமி அலையின் வேகத்தைச் சித்தரிக்கும்The Great Wave off Kanagawa அவரது சாதனைப்படைப்பாகும். இந்த ஒவியத்தின் நகல்களை டீசர்ட். கைப்பை, விளம்பர பலகை என ஜப்பானில் எங்கும் காணமுடியும்.

தன் வாழ்நாளில் ஹொக்குசாய் பல்லாயிரக்கணக்கான ஒவியங்களை வரைந்திருக்கிறார். அவர் காலத்தில் அவரையும் விட Kitagawa Utamaro என்ற ஒவியருக்கே பேரும் புகழும் அதிகமிருந்தது. தன்னைவிட உதாமரோ பெரிய ஒவியரில்லை என்று கருதிய ஹொக்குசாய் அவர் தேர்வு செய்யும் கருப்பொருளில் தானும் வரைந்திருக்கிறார்.

படத்தில் ஹொக்குசாயும் அவரது மகளும் நண்பர் Sashichi வீட்டோடு இணைந்து வாழ்கிறார்கள். நண்பரின் மனைவிக்கு ஒவியங்கள் என்றாலே பிடிக்காது. ஹொக்குசாயின் நண்பருக்கோ கதை எழுதுவதில் ஆர்வம். மனைவிக்குத் தெரியாமல் ரகசியமாகக் கதை எழுதுகிறார். படிக்கிறார். ஒவியரும் எழுத்தாளரும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே அந்த நாட்களில் புத்தகம் வெளியிட முடியும். ஆகவே ஹொக்குசாய் அவருக்கு உதவி செய்வதாகச் சொல்கிறார்

இந்நிலையில் ஒரு மழைநாளில் ஹொக்குசாய் Ōnao என்ற அழகியை வீதியில் சந்திக்கிறார். பாம்பின் சீற்றம் போன்ற கண்கள். வெண் பளிங்கில் செய்தது போன்ற உடல். போதையூட்டும் உதடுகள். ஒனாவின் வசீகர த்தில் மயங்கி அவளைத் தனது வீட்டிற்கு அழைத்துப் போய் ஒவியம் வரைகிறார். நிர்வாணக் காட்சியை அவர் வரையும் போது மகள் எட்டி எட்டி வேடிக்கை பார்க்கிறாள். அவளை வெளியே போகும்படி துரத்திவிடுகிறார் ஹொக்குசாய்.

ஒனாவின் நிர்வாண உடலை வரைய வரைய அவரது மனதில் காமம் பீறிடுகிறது. ஒனா மீது ஆசை கொள்கிறார். இதை அறிந்து கொண்ட ஒனா வேண்டுமென்றே ஹொக்குசாயை தவிக்க விடுகிறாள்.

ஹொக்குசாயின் அப்பா Nakajima வசதியான ஆள். கண்ணாடி தயாரிப்பவர். ஒரு வேசையோடு ஏற்பட்ட கள்ளஉறவில் பிறந்தவர் என்பதால் ஹொக்குசாயை அவர் தனது மகனாக அங்கீகரிக்கவில்லை. தனது தந்தை வசதியானவர் என்பதால் அடிக்கடி அவரைத் தேடிப்போய் மிரட்டி பணம் கேட்பது ஹொக்குசாயின் வழக்கம். தந்தை வேசைகளின் மீது தீவிர நாட்டம் கொண்டவர் என்பதால் அவரைப் பழிவாங்கும் விதமான தன்னைத் தேடி அந்த ஒனாவை அவருக்கு அறிமுகம் செய்கிறார் ஹொக்குசாய்.

காட்டுத் தீ போலப் பற்றிக் கொள்ளும் ஒனாவின் வசீகரத்தில் ஹொக்குசாயின் அப்பா மயங்கி அவளது காலடியில் மண்டியிடுகிறார். ஒனா தன்னை நேசிப்பவர்களை விடவும் தான் விரும்புகிறவனை அடைவதே தனக்குப் பிடித்தமானது என்று கூறுகிறாள். அது போலவே ஒரு நாள் ஹொக்குசாய் தந்தையின் முன்பாகக் கடைப்பையன் ஒருவனுடன் உடலுறவு கொள்கிறாள் ஒனா. இந்த அதிர்ச்சியில் ஹொக்குசாயின் அப்பா தூக்கு போட்டு இறந்து போகிறார்.

ஹொக்குசாயும் அவரது மகளும் பிழைக்க வழியின்றி வேடிக்கை நிகழ்ச்சிகளை நடத்தி காசு வசூலிக்கிறார்கள். அந்த நிகழ்வில் மிகப்பெரிய ஒவியம் ஒன்றை ஹொக்குசாய் வரைவது பிரமிப்பூட்டுகிறது. Sashichiயின் மனைவி இறந்துவிடவே தன்நெடுநாளைய கனவை நிறைவேற்ற Sashichi எழுத்தாளர் ஆகிறார். அவரைத் தேடி போய்க் குடிக்கப் பணம் கேட்டு தொல்லை தருகிறார் ஹொக்குசாய்.

தன்னை அழித்துக் கொள்வதே கலை என்பதைப் போலவே ஹொக்குசாயின் வாழ்க்கை இருந்திருக்கிறது. தந்தையும் மகளுமாக வறுமையில் வாழ்கிறார்கள். ஒய்வில்லாமல் ஒவியம் வரைகிறார்கள். முதுமை வருகிறது. பிழைப்பிற்காகப் பொம்மைகள் செய்து விற்கிறார்கள். ஒரு நாள் ஒனாவை போன்ற முகச்சாயல் கொண்ட கிராமத்துப் பெண் ஒருத்தியை மறுபடி சந்திக்கிறாள் ஹொக்குசாயின் மகள். அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருகிறாள். அவளைக் கண்டு அதிர்ச்சியடையும் ஹொக்குசாயின் நினைவுகள் புத்துணர்வு அடைகின்றன. அவளை வைத்து நிறைவேறாத தனது ஒவியத்தை மீண்டும் வரையத்துவங்குகிறார்.

••

ஹொக்குசாயை பற்றி இப்படி நிறையக் காதல்கதைகள் இருக்கின்றன. இதில் எவ்வளவு நிஜம். எவ்வளவு பொய் எனப் பிரித்து அறிந்து கொள்ளமுடியாது.

••

ஹொக்குசாயைப் பற்றிய டாகுமெண்டரி பிபிசி உருவாக்கியது. இப்படம் அவரது ஒவியத்தின் சிறப்புகளைக் கூறுகிறது. ஹொக்குசாயின் ஒவியங்களை ஆராயும் கலைவிமர்சகர் டேவிட் பார்வையில் விவரிக்கபடுகிறது. அலைகளை எவ்வளவு தனித்துவமாக ஹொக்குசாய் வரைந்திருக்கிறார். அந்த அலைகளின் உயரம் ப்யூஜி எரிமலையை விடவும் ஏன் அதிகமாகயிருக்கிறது. அந்த அலையினுள் காணப்படும் படகும் மீனவர்களும் எவ்வளவு துல்லியமாக வரையப்பட்டிருக்கிறார்கள் என்பதைச் சிறப்பாக விளக்குகிறது ஆவணப்படம்.

படத்தின் ஒரு பகுதியில் ப்யூஜி எரிமலை பற்றிய ஹொக்குசாயின் ஒவிய வரிசையை இன்றுள்ள நவீன கேமிரா தொழில்நுட்பத்தைக் கொண்டு 8K யில் பதிவு செய்கிறார்கள். பதிவு செய்யப்பட்ட பிம்பத்தைக் கணிணி வழியாக ஆராயும் போது அவர் நிறத்தை எப்படிக் கலந்திருக்கிறார். எத்தனை அடுக்குகள் கொண்டதாக ஒவியத்தை உருவாக்கியிருக்கிறார் என்பது போன்ற விபரங்கள் துல்லியமாகத் தெரியத்துவங்குகின்றன. david hockney என்ற கலைவிமர்சகர்களின் திறனாய்வு படத்தின் சிறப்பு. ஹொக்குசாய் பிகாசோவிற்கு நிகரானவர் எனக்கூறும் இவர் ஹொக்குசாயின் அரிய ஒவியம் ஒன்றை தான் கண்ட நிகழ்வை விவரிக்கும்போது கண்கலங்குகிறார். இன்னொரு காட்சியில் இளம் ஒவியன் ஒருவன் ஹொக்குசாயை நகல் எடுக்க முனைகிறான். அப்போது அவர் தேர்வு செய்துள்ள நிறம் மற்றும் ஒவியத்தின் துல்லியத்தன்மை பற்றி வியந்து கூறுகிறான்.

**

இன்று ஹொக்குசாய் உலகின் மிக முக்கிய ஒவியராகக் கொண்டாடப்படுகிறார். அவரது ஒவியங்கள் ம்யூசியத்தில் வைத்துப் பாதுகாக்கபடுகின்றன. பிரபலமான அவரது ஒவியங்கள் கோடிக்கணக்கில் விலை போகின்றன. ஆனால் வாழுகிற காலத்தில் அவர் வறுமையில் போராடியிருக்கிறார்.

பிரபல ஒவியர்களான வான்கோ, மோனே போன்றவர்களுக்கு உந்துசக்தியாக இருந்தவர் ஹொகுசாய். அந்த வகையில் இந்த இரண்டு படங்களும் கலைஞனின் வாழ்வையும் கலையின் உன்னதத்தையும் சிறப்பாக எடுத்துச் சொல்கின்றன.

**

மாங்கா எனப்படும் சித்திரக்கதை வடிவம் அவரால் தான் பிரபலமானது. அதன் ஆதார உத்திகளை ஹொக்குசாயே உருவாக்கியிருக்கிறார். முப்பதுக்கும் மேற்பட்ட பெயர்களில் ஒவியம் வரைந்திருக்கிறார். Shunga எனப்படும் காமசித்திரங்களையும் அதிகம் வரைந்திருக்கிறார். ஆக்டோபஸ் பிடியிலுள்ள நிர்வாணப் பெண்ணின் ஒவியமான The Dream of the Fisherman’s wife மிகவும் பிரபலமானது. ஜப்பான் போயிருந்த போது ஹொக்குசாயின் ஒரிஜனல் ஒவியங்களைப் பார்த்திருக்கிறேன். வியப்பூட்டும் அழகு கொண்டவை.

Hokusaiயின் புகழ்பெற்ற மேற்கோள் இது..

“From the age of 6 I had a mania for drawing the shapes of things. When I was 50 I had published a universe of designs. But all I have done before the the age of 70 is not worth bothering with. At 75 I’ll have learned something of the pattern of nature, of animals, of plants, of trees, birds, fish and insects. When I am 80 you will see real progress. At 90 I shall have cut my way deeply into the mystery of life itself. At 100, I shall be a marvelous artist. At 110, everything I create; a dot, a line, will jump to life as never before. To all of you who are going to live as long as I do, I promise to keep my word. I am writing this in my old age. I used to call myself Hokusai, but today I sign my self ‘The Old Man Mad About Drawing.”

**

ஜப்பானிய ஒவியங்கள் இயற்கையை நகல்எடுப்பதில்லை. மாறாக அதன் சாரத்தை உள்வாங்கிக் கொண்டு  கலையாக வெளிப்படுத்துகின்றன.  பருவகால மாற்றத்தை பதிவு செய்வது ஜப்பானிய கலையின்  இயல்பு.  ஹைக்கூ கவிதைகள் ஒவியங்களுடன் இணைந்தே வெளியிடப்பட்டன. இன்றும் கூட மாங்கா காமிக்ஸ் என்ற சித்திர கதைவடிவம்  தான் ஜப்பானில் விரும்பி வாசிக்கபடுகிறது. இலக்கியம், வாழ்க்கை வரலாறு, தத்துவம். சரித்திரம். அறிவியல் என சகல துறைகள் சார்ந்தும் மாங்கா வெளியிடப்படுகிறது. அவரவர் வயது சார்ந்து விரும்பியதை தேர்வு செய்து படிக்கலாம்.

Archives
Calendar
January 2019
M T W T F S S
« Dec    
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
Subscribe

Enter your email address: