கதைகள் செல்லும் பாதை- 3

இல்லாத கண்கள்

ரஸ்கின் பாண்ட் இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் ஒருவர். குழந்தைகளுக்காக நிறைய எழுதியிருக்கிறார். 1992ல் Our trees still grow in Tehra என்ற நூலிற்காக சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளார்

ரஸ்கின் பாண்ட் இமாச்சலப் பிரதேசத்தில் கசோலி என்ற இடத்தில் பிறந்தார். அவரது தந்தை ஆப்ரி அலெக்சாண்டர் பாண்ட் இரண்டாம் உலகப் போரின் போது பிரிட்டீஷ் வான்படையில் பணியாற்றினார். ரஸ்கின் பாண்ட் குஜராத்தின் ஜாம்நகரிலும்,டேராடூனிலும், ஷிம்லாவிலும் வளர்ந்தார். குழந்தைகளுக்காக முப்பது நூல்கள் எழுதி உள்ளார். அத்துடன் தனது சுயசரிதையை இரண்டு பாகங்களாக எழுதி வெளியிட்டுள்ளார். 1999—இல் இந்திய அரசு இவருக்குப் பத்மஸ்ரீ விருது அளித்துக் கௌரவித்துள்ளது

இவரது நீலக்குடை என்ற கதை விஷால் பரத்வாஜ் இயக்கத்தில் திரைப்படமாக உருவாக்கபட்டுள்ளது. ஹிமாசல் பிரதேசத்திலுள்ள மலையடிவார கிராமத்தில் வசிக்கும் பினியா என்ற சிறுமி, ஒரு நாள் வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் ஊரின் இயற்கை எழிலைக் காண வருவதைக் காண்கிறாள். அதில் ஒரு பயணியிடம் அழகான நீலக்குடை ஒன்றிருக்கிறது. அக் குடையைத் தன்னிடம் உள்ள புலிநகம் ஒன்றைக் கொடுத்து மாற்றாக வாங்கிக் கொள்கிறாள்.

தனது நீலக் குடையை எல்லோரிடமும் காட்டிச் சந்தோஷம் கொள்கிறாள். ஆடிப்பாடுகிறாள். அந்த ஊரில்  பெட்டிக்கடை வைத்திருப்பவர் நந்தகிஷோர். அவர் நரித்தனம் கொண்டவர். தந்திரமாக பேசி பினியாவின் குடையைப் பறித்துக் கொள்ள முயற்சிக்கிறார். ஆனால் பினியா தரவில்லை.

ஆத்திரமான நந்தகிஷோர் குடையைத் திருடி ஒளித்து வைத்துக் கொள்கிறார். குடையைக் காணாமல் தேடி அலையும் பினியா அதை நந்தகிஷோர் தான் திருடியிருப்பார் என்று நம்புகிறாள். ஆனால் அதை மெய்பிக்க வழியில்லை. திருடப்பட்ட குடையை எப்படி மீட்கிறாள் என்பதே படத்தின் கதை.

ரஸ்கின் பாண்ட் பள்ளிவயதிலே ஆங்கிலத்தில் கவிதை எழுதத்துவங்கியவர் எளிமையாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் கதைகள் எழுதக்கூடியவர். சிறுவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய எழுத்தாளர்.

ரஸ்கின் பாண்டின் இல்லாத கண்கள் என்ற சிறுகதையை வாசித்தேன்.

இக்கதை ஒரு ரயில் பயணத்தைப் பற்றியது. ரொஹானா செல்லும் ரயிலில் ஒரு இளம்பெண் பயணம் செய்கிறாள். அவளது பெற்றோர் அவளை ரயில் ஏற்றிவிட்டுப் பத்திரமாகப் பயணிக்கும்படி அறிவுரை சொல்கிறார்கள்.

அந்த ரயில் பெட்டியில் ஒரு பார்வையற்ற இளைஞன் பயணம் செய்கிறான். அவனது பார்வையில் தான் கதை சொல்லப்படுகிறது. அழகான இளம் பெண் தன் எதிரே உட்கார்ந்திருக்கிறாள் என்பதை அவன் உணருகிறான்.

அவளிடம் எந்த ஊருக்குப் போகிறீர்கள் எனக்கேட்கிறான்

சஹரான்பூருக்குப் போகிறேன் . அத்தை வந்து அழைத்துப் போவார் என்று கூறுகிறாள்.

அத்தைகள் கடுமையான ஜந்துகள். நான் ஒதுங்கியே இருந்து கொள்கிறேன் எனக் கேலி செய்கிறான்

அவள் நீங்கள் எங்கே போகிறீர்கள் எனக்கேட்கிறாள்

டேராடூன் என்கிறான்.

ரயில் வேகமாக ஒடத்துவங்குகிறது.

அந்தப் பெண் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டுவருவதை அவனால் உணர முடிகிறது.

மரங்கள் ஒடுகின்றன. நாம் நிலையாக இருக்கிறோம் என்று சொல்கிறான்.

அப்படிதானிருக்கும் என்று அவள் பதில் சொல்கிறாள்.

தான் பார்வையற்றவன் என அவள் உணர்திருப்பாளா என நினைக்கிறான். அவளுடன் பேச வேண்டும் என்ற ஆசை பொங்குகிறது

உங்கள் முகம் கவனித்துப் பார்க்க வைக்கிறது என்று சொல்கிறான்.

அதைக் கேட்டு அவள் வெட்கத்துடன் சிரிக்கிறாள்.

அவர்களுக்குள் அதிக உரையாடல் நடக்கவில்லை. ஆனால் அவளது அருகாமையும் அவள் இருப்பு ஏற்படுத்திய பரவச உணர்வும் அவனைத் தீவிரமாக ஆட்கொள்கின்றன.

அடுத்த ரயில் நிலையத்தில் அவள் இறங்குகிறாள்.

கிளம்பும் போது வருகிறேன் என்று சொல்லிவிட்டு விடைபெறுகிறாள்.

ரோஜாவின் மணம் பூவை வீசி எறிந்தபிறகும் இருப்பது போல அவளது நினைவு அவனுக்குள் நிரம்புகிறது.

வேறு பயணிகள் அடித்துப் பிடித்துக் கொண்டு ரயிலில் ஏறுகிறார்கள் கதவு சாத்தப்படுகிறது. ரயில் கிளம்புகிறது

புதிய பயணி ஒருவன் அருகில் வந்து அமர்கிறான். அவன் கேலியான குரலில் உங்களுக்கு ஏமாற்றமாக இருக்கும். அந்தப் பெண்ணைப் போல நான் ஒன்றும் கவர்ச்சியான ஆள் இல்லை என்கிறான்.

கவனிக்க வைக்கும் பெண். எனப் பார்வையற்றவன் முணுமுணுத்தபடியே எதிரில் இருந்த பயணியிடம் அவள் தலைமுடி எப்படியிருந்தது. குட்டை மயிரா இல்லை நீண்ட கூந்தலா எனக்கேட்கிறான்

கவனிக்கவில்லை என்று சொல்லிய பயணி அவளது கண்களை மட்டும் தான் பார்த்தேன். எவ்வளவு அழகான பெண். ஆனால் முழுமையாகப் பார்வையற்றவள், அதை நீங்கள் கவனிக்கவில்லையா என்கிறான்

அத்தோடு கதை முடிந்துவிடுகிறது. அது பார்வையற்ற இளைஞன் பார்வையற்ற இளம் பெண் இருவரது சந்திப்பு. இருவருக்கும் எதிரில் இருப்பவருக்குப் பார்வையில்லை என்ற உண்மை தெரியாது. அந்தச் சந்திப்பும் அவர்களுக்குள் ஏற்படும் சலனமும் அழகாகக் கதையில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தக் கதையை வாசிக்கையில் ரேமண்ட் கார்வரின் கதீட்ரல் சிறுகதை நினைவிற்கு வந்து போனது. அது மனைவியின் நண்பனான ஒரு பார்வையற்றவனைப் பற்றியது. ரஸ்கின் பாண்டின் சிறுகதை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகியிருக்கிறது.

நான்கே பக்கங்கள். சிறுகதை எழுத விரும்புகிறவர்களுக்கு இக்கதை ஒரு உத்தியைக் கற்றுக் கொடுக்கிறது. பார்வையற்ற கதாபாத்திரம் என ஒருவரை அறிமுகப்படுத்தியவுடனே வாசகன் எதிரே இருப்பவர் இன்னொரு பார்வையற்றவர் என யோசிக்கவே மாட்டான். இது ஒரு தந்திரம். அதைக் கொண்டு கதையை அழகாகப் புனைந்துவிட முடியும்

கதையில் அவர்களுக்குள் நடைபெறும் உரையாடல் அவளுக்குப் பார்வையில்லை என்பதை மறைமுகமாகக் குறிப்பிடுகிறது. குறிப்பாகக் கதையின் துவக்கவரிகளில் அவளது பெற்றோர் அவளது பெட்டியை தாங்களே கொண்டுவந்து ரயில் பெட்டியில் வைத்து அவளுக்கு அறிவுரை கூறுவது. ஆனால் இது இயல்பான காட்சி என்பதால் அவளுக்குப் பார்வையில்லை என நாம் தெரிந்து கொள்வதில்லை.

அவர்கள் ஒடும் மரங்களைத் தங்களின் உணர்விலிருந்தே அறிந்து கொள்கிறார்கள்.

மேஜிக் செய்பவன் காகிதத்தைப் பூவாக உருமாற்றிக் காட்டுவது போன்ற விந்தையைச் சிறுகதையும். கண்முன்னே உள்ள காட்சியை ஒரு வரியில் புதியதாக மாற்றிக் காட்டுகிறார் ரஸ்கின் பாண்ட்.

அந்த இருவரும் திரும்பச் சந்தித்துக் கொண்டால் என்னவாகும். அல்லது அந்த இளைஞனே அவளை தேடிப்போனால் என்னவாகும் என்று யோசித்தால் கதை வளரத்துவங்கிவிடுகிறது.  வாசகன் கதை வழியாக இப்படியான கற்பனை பயணத்தை மேற்கொள்ள முடிவதே கதையின் சிறப்பு.

ரஸ்கின் பாண்ட்டின் சிறுகதைகள் அதன் எழுத்துநடைக்காகக் கொண்டாடப்படுபவை. இவரது சிறார் கதைகளை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டிருக்கிறது.

••

Archives
Calendar
July 2018
M T W T F S S
« Jun    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
Subscribe

Enter your email address: