46 வது தலைமுறை

வெற்றிகரமாக நடத்தப்படும் தொழில்கள் கூட இரண்டோ, மூன்றோ தலைமுறைக்கு அப்புறம் கைவிடப்பட்டுகின்றன. அரிதாக ஜவுளி மற்றும் தங்க நகை வணிகத்தில் ஐந்து தலைமுறை ஒரே தொழிலைத் தொடர்வதைக் காண்கிறோம். ஆனால் ஜப்பானிலுள்ள Hōshi Ryokan என்ற தங்கும்விடுதி ஹோன்சு தீவின் இஷிகவா பகுதியில் கி.பி.718ல் துவங்கப்பட்டு இன்று வரை நடைபெற்றுவருகிறது.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களால் நடத்தப்படும் இந்தத் தங்கும்விடுதியை தற்போது நடத்திவருபவர் அதன் 46 வது தலைமுறையைச் சேர்ந்தவர். 1300 ஆண்டுகள் ஒரு தொழிலை ஒரு குடும்பம் செய்து வருவது என்பது அபூர்வமானது. ஆகவே இந்தத் தங்கும்விடுதி குறித்து ஆவணப்படம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள்.

Fritz Schumann இயக்கியுள்ள இந்த ஆவணப்படம் 13 நிமிஷங்கள் கொண்டது. மெல்லிய நீரோட்டத்தின் ஊடே கடந்தகால வரலாறு பேசப்படுகிறது. நீரோட்டம் போல அவ்வளவு இயல்பாக காட்சிகள் நகர்கின்றன

குடும்பத்தின் மூத்த ஆண்மகனே தங்கும்விடுதியின் பொறுப்பைக் கவனித்துக் கொள்வது வழக்கம். அப்படித் தான் தலைமுறையாகத் தொடர்கிறது. ஆனால் இப்போதுள்ள பொறுப்பாளரின் மகன் இளவயதிலே இறந்து போய்விடுகிறான். ஆகவே அவரது மகளைப் பொறுப்பு ஏற்க வைக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இப்படிச் செய்யலாமா, அது மரபை மீறியதாக இருக்காதா என்ற குழப்பம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் நிர்வாகத்தைக் கவனிக்க வேண்டிய மகன் இளவயதிலே இறந்துவிட்டானே என்ற சோகம் மறு பக்கம் இரண்டிற்குமிடையில் அலைக்கழிக்கபடுகிறார்.

இயற்கை அழகுமிக்க இடத்தில் அந்தத் தங்கும்விடுதியுள்ளது. பிறந்த குழந்தையாக அந்தத் தங்கும் விடுதிக்குக் கொண்டுவரப்பட்டேன். அந்த நாள் முதல் வளர்ந்து சிறுவனாக ஒடிவிளையாடி ,வளர்த்து பெரியவனாகி திருமணமாகி ஐம்பது ஆண்டுகள் மணவாழ்க்கை கடந்த பிறகும் அதே விடுதியில் அதே முன்னறையில் வசிக்கிறேன் என அதன் உரிமையாளர் சொல்லும் போது வியப்பாக இருக்கிறது

விருந்தினர்களை வரவேற்பது. உபசரிப்பது. விடுதிப் பணிகளை முறையாகப் பார்த்துக் கொள்வது போன்றவற்றில் உரிமையாளரின் மனைவி துணை செய்கிறார். அவர்களின் ஒரே மகள் பொறுப்பில் விடுதி இப்போது நடத்தப்படுகிறது. தனக்கு இந்தத் தொழில் நாட்டமில்லை. ஆனால் தந்தையின் விருப்பத்திற்காக இதைத் தான் ஏற்று நடத்துவதாகச் சொல்கிறார். காலமாற்றம் எல்லாவற்றையும் உருமாற்றிவிடுகிறது. அதன் அழுத்தத்தை படம் அழகாக எடுத்துக்காட்டுகிறது.

சிறியதாக இருந்தாலும் முக்கியமான  ஆவணப்படமது. பண்பாட்டுத் தொடர்ச்சி இன்று எதிர்கொள்ளும் புறவய நெருக்கடியைப் பற்றிப் பேசுவதால் முக்கியமானதாகிறது.

தமிழ்நாட்டில் எத்தனையோ தொழில்கள் அந்தக் குடும்பத்தினர் தொடர விருப்பமற்று போனதால் கைவிடப்பட்டிருக்கின்றன. தவறாக நடத்தப்பட்டு வீழ்ச்சியடைந்திருக்கின்றன. ஆனால் 1300 வருஷங்களாக அதே நற்பெயருடன் ஒரு குடும்பம் தொழிலை நடத்தி வருகிறது என்பது வியப்பூட்டுகிறது

ஆவணப்படத்தின் ஒரு காட்சியில் இறந்து போன மகனது சமாதியில் அவர்கள் ஒன்றுகூடி வணங்குகிறார்கள். அப்போது அவர்கள் முகத்தில் வெளிப்படும் இழப்பின் வலி நம்மை  வலிமையாகத் தாக்குகிறது

ஜப்பானியர்களின் உழைப்பும், நேர்மையும், காலந் தவறாமையும் கலை நுணுக்கமும், இயற்கையை பேணும் விதமும் ஒன்று சேர்ந்தே தொழில் வெற்றியை தந்திருக்கிறது என்பதற்கு இந்தத் தங்கும் விடுதியும் அதை நிர்வகிக்கும் குடும்பமும் ஒரு உதாரணம். நாம் கற்றுக் கொள்ள வேண்டியது அதையே.

இணைப்பு

https://vimeo.com/114879061

••

Archives
Calendar
September 2018
M T W T F S S
« Aug    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
Subscribe

Enter your email address: