குப்ரிக்கின் காரோட்டி

S Is for Stanley – திரைப்பட இயக்குனர் ஸ்டான்லி குப்ரிக்கின் காரோட்டியாகப் பணியாற்றிய எமிலியோ பற்றிய ஆவணப்படம்.

எமிலியோ முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகக் குப்ரிக்கிடம் பணியாற்றியிருக்கிறார்.  அந்த நாட்களின் நினைவுகளை எமிலியோ துல்லியமாக விவரிக்கிறார். தனது பணிக்காலத்தின் போது சேகரித்த பொருட்களைச் சாட்சியமாக முன்வைக்கிறார். குப்ரிக்கின் சிறுகுறிப்புகளும் புகைப்படங்களுமாக விரிகிறது ஆவணப்படம்.

பிரபலமான இயக்குனரையோ, அவரது குடும்பத்தினரையோ ஆவணப்படமாக்குவது வழக்கம். ஆனால் இப்படம் குப்ரிக்கின் காரோட்டியை பற்றியது. அவர் வழியாக குப்ரிக் என்ற மனிதரின் மேன்மையைப் பேசுகிறது

பிரெஞ்சு எழுத்தாளர் மார்செல் பிரவுஸ்ஸின் காரோட்டியாக இருந்த ஆல்ஃபிரட் அகஸ்டின்ல்லி தனது நினைவுகளை ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். அதில் மார்செல் பிரவுஸ்ஸிற்கும் அவருக்குமான உறவைச் சிறப்பாகப் பதிவு செய்திருப்பார்.

உலக சினிமாவில் ஸ்டான்லி குப்ரிக் தனிப்பெரும் ஆளுமை. ஒவியங்களின் நேர்த்தியும் அழகும் கொண்ட திரைக்காட்சிகளை உருவாக்கியவர். மாறுபட்ட கதைக்களன்களை படமாக்கியவர். திரை அழகியலில் தனித்துவம் கொண்டவர். இவரது திரைப்படங்கள் உலகெங்குமுள்ள திரைப்படக் கல்லூரிகளில் பாடமாக நடத்தப்படுகின்றன. உலகின் நூறு சிறந்த படங்களின் பட்டியலை எவர் உருவாக்கினாலும் அதில் குப்ரிக்கின் படம் நிச்சயமிருக்கும்.

ஹாலிவுட் ஸ்டுடியோக்களின் தணிக்கை மற்றும் குறுக்கீடு காரணமாக லொலிடா திரைப்படத்தை உருவாக்க இங்கிலாந்திற்கு இடம் மாறினார் ஸ்டான்லி குப்ரிக். அப்போது அவருக்கு ஒரு காரோட்டி தேவைப்பட்டார். குப்ரிக்கின் நிறுவனம் ஆட்களைத் தேடிக் கொண்டிருந்தது.

இத்தாலியரான எமிலியோ பல்வேறு சின்னஞ்சிறு வேலைகள் செய்து எதிலும் காலூன்ற முடியாத நிலையில் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறத் துவங்கினார். ஆனால் கார் பந்தயத்தை நம்பி வாழ்க்கை நடத்த முடியவில்லை. ஆகவே டாக்சி ஒட்டுனராக வேலை செய்து வந்தார்.

குப்ரிக்கின் நிறுவனம் மூலம் எமிலியோ வேலைக்கு அழைக்கபட்டார். கடுமையான பனிப்பொழிவு லண்டன் நகரைச் ஸ்தம்பிக்கச் செய்திருந்த சூழலில் எமிலியோ சிறப்பாகப் பணியாற்றியது குப்ரிக்கிற்குப் பிடித்துவிடவே அவரைத் தனது காரோட்டியாக நியமித்துக் கொண்டார்.

அந்த உறவு வெறும் காரோட்டிக்கும் இயக்குனருமான உறவாகயில்லை. தந்தை மகன் உறவைப் போலவே இருந்தது.

திரைப்பட அலுவல்கள். சொந்தப்பணிகள்.. குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள். படப்பிடிப்பு தளத்திற்கான வேலைகள். பராமரிப்பு எனச் சகல விஷயங்களிலும் குப்ரிக்கின் உதவியாளராக எமிலியோ இருந்திருக்கிறார். குப்ரிக்கின் அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட ஒன்றிரண்டு வரிகள் கொண்ட சிறு துண்டுசீட்டுகள் அவர்களின் உறவுக்குச் சாட்சியமாக உள்ளன.

நாய், பூனை, கழுதை எனப் பல்வேறு வளர்ப்புமிருகங்களை குப்ரிக் வைத்திருந்தார். அவற்றைப் பராமரிக்கத் தீவிர கவனமும் காட்டுவார். பதினெட்டாம் நூற்றாண்டு அரண்மனையான அவரது வீட்டின் புறவெளியில் இந்த விலங்குகள் சுதந்திரமாக உலவின. வீட்டின் ஒரு பகுதியை திரைப்படப் பணிக்கான அலுவலகமாக வைத்திருந்தார்.

S Is for Stanley படம் குப்ரிக்கின் வாழ்வோடு எமிலியோவின் குடும்ப வாழ்க்கையை. மனைவி மகள் பற்றியும் விவரிக்கிறது

எமிலியோ ஒரு காட்சியில் சொல்கிறார்

“என்னிடம் குப்ரிக் எதைக்கேட்டாலும் மறுக்கமாட்டேன். அவர் ஸ்டான்லி குப்ரிக். அவர் கேட்கும் போது எப்படி மறுப்பது. சில நேரம் குழந்தையைப் போல அவர் பிடிவாதமாக இருப்பார். அதை என்னால் புரிந்து கொள்ள முடியும் “

காலை முதல் இரவு வரை குப்ரிக்கின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றியிருக்கிறார் எமிலியோ. இதனால் ஒரு நாளில் பலமுறை அவர் லண்டனுக்குப் போய் வர வேண்டியதாக இருந்தது. விடுப்பு எடுத்துக் கொள்ள முடியாத நிலை. அலுவலக நெருக்கடி. ஒரு கட்டத்தில் தான் இந்த வேலையில் இருந்து விலகிக் கொள்ளப் போவதாக அறிவித்த போது அதைத் தன்னால் ஏற்கமுடியாது. எமிலியோவிற்குப் பதில் இன்னொருவர் அந்த வேலைகளைக் கவனமாகச் செய்ய முடியாது என்று குப்ரிக் தடுத்திருக்கிறார்.

30 ஆண்டுகள் பணியில் இருந்திருக்கிறார் எமிலியோ. குப்ரிக்கை பற்றிப் பேசும் போது எமிலியோவின் கண்களில் அன்பு பீறிடுகிறது.

குப்ரிக் இறந்த நாளை பற்றிய நினைவுகளைச் சொல்லும் போது மனிதர் கசிந்துவிடுகிறார். அந்த நாள் துல்லியமாக அவரது நினைவில் இருக்கிறது. இறப்பதற்குச் சில நாட்களுக்கு முன்பு குப்ரிக் எப்படியிருந்தார் என்பதை நடித்தே காட்டுகிறார். குப்ரிக் இறந்த பிறகும் அவரது குடும்பத்துடன் எமிலியோவிற்கு நல்ல உறவு இருந்து வந்தது.

இந்த ஆவணப்படத்திற்காக நீண்ட காலத்தின் பின்பு அவர் குப்ரிக் நினைவகத்திற்குச் செல்கிறார். அவரது கண்கள் கலங்குகின்றன. கார் நுழைவாயிலில் நிற்பதுடன் படம் நிறைவு பெறுகிறது.

புகழ்பெற்ற ஒரு இயக்குனருக்கும் உலகம் அறியாத அவரது காரோட்டிக்குமான நட்பையும் அன்பையும் சொல்லும் இந்த ஆவணப்படம் குப்ரிக் எவ்வளவு மேன்மையான மனிதர் என்பதன் சாட்சியமாக உள்ளது.  ஒரு நாவலை போல காட்சிகள் நீள்கின்றன.

தனது திரைப்படம் ஒன்றில் எமிலியோவை ஒரு காட்சியில் நடிக்க வைத்திருக்கிறார். டாம் குரூஸ் உடன் தான் நடித்தது மறக்கமுடியாத அனுபவம் என்கிறார் எமிலியோ

நண்பர்கள். மற்றும் தனது படத்தில் நடித்த நடிகர்கள் வீடுகளுக்குத் தேடிப்போய்ப் உரையாடுவது குப்ரிக்கின் வழக்கம். தெரிந்தவர்கள் அனைவரையும் அக்கறையோடு தொலைபேசியில் நலம் விசாரிப்பார். அந்தக் குரல் மறக்கமுடியாதது என்கிறார்கள் அவரோடு பணியாற்றியவர்கள். குப்ரிக் மூன்று முறை திருமணம் செய்து கொண்டார். மகள் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தார். அமைதியான மனிதர். ஜாஸ் இசையில் அதிக ஆர்வம் கொண்டவர். பத்திரிக்கைகளின் பரபரப்பை விட்டு ஒதுங்கி வாழ்ந்தார்.

மார்ச் 7 1999ல் தனது 70 வயதில் மாரடைப்பால் இறந்து போனார்.

S Is for Stanley ஆவணப்படம் ஐரோப்பிய திரைப்படவிழாவில் முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறது.

எமிலியோ தனது அனுபவங்களை Stanley Kubrick & Me என்ற புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.

**

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: