கதைகள் செல்லும் பாதை- 9

தலைகீழ் மாற்றம்

எட்கர் கெரெட் (Etgar Keret ) இஸ்ரேல் நாட்டின் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர். 1967 இல் டெல் அவிவ் நகரில் பிறந்தவர்.

சர்வதேசப் புகழ் பெற்ற இவரது நூல்கள் 25க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகியுள்ளன.

நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பாரிஸ் ரிவ்யூ இதழ்களில் இவரது சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இவரது பசை (Crazy Glue) என்ற குறுங்கதையை வாசித்தேன். சொல்வனம் இணையஇதழில் இக்கதை மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது.

420 சொற்கள் கொண்ட மிகச்சிறிய கதை..

கதையின் துவக்கத்தில் புதிதாக ஒரு பசை டப்பாவை தன் வீட்டில் காணுகிறான் கணவன். அவன் மனைவியிடம் இது என்ன பசை என்று கேட்கிறான். அவள் அதைத் தொடாதே என்று சொல்கிறாள். எதற்காக இந்தப் பசை என்று மறுபடியும் கேட்கிறான் கணவன்.

இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன என்கிறாள்.

இந்தப் பதில் தான் கதையின் மையப்புள்ளி. வெற்று உரையாடலாகத் தோன்றும் இந்த வரிகளைக் கதை முடிந்தபிறகு வாசித்துப் பாருங்கள். எத்தனை முக்கியமானது என்று உணர்வீர்கள்.

இங்கே இருப்பவை எவற்றையும் ஒட்டத்தேவையில்லை. அநாவசியமாக இதை ஏன் வாங்கினாய் எனக் கணவன் கோவித்துக் கொள்கிறான். அதைக் கேட்ட மனைவி உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட அதே காரணத்திற்காக எனப் பதில் தருகிறாள்

இந்தப் பதில் வழியாக அவர்களுக்குள் நல்லுறவு இல்லை. அவள் கசப்பான அனுபவத்துடன் இருக்கிறாள் என்பது வெளிப்படுத்தபடுகிறது. அந்தக் கணவன் அவளுடன் சண்டையிட விரும்பாமல் அமைதியாகிறான்

பசை டியூப் இருந்த உறையில் ஒருவன் வீட்டின் உட்கூறையிலிருந்து  தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் படம் காணப்படுகிறது. இது போல எவரும் கூரையில் ஒட்டிக் கொள்ள முடியாது. இது வெறும் தந்திரம் என்று கணவன் சொல்கிறான்..

பின்பு வேலைக்கு நேரமாகிவிட்டது எனச் சம்பிரதாயமாக மனைவியை முத்தமிட்டுவிட்டுக் கிளம்புகிறான்.

அடுத்தப் பத்தியில் உள்ள உரையாடலில் வேறு ஒரு பெண்ணுடன் அவனுக்குத் தொடர்பு இருப்பது வெளிப்படுத்தபடுகிறது. அதில் அந்தப் பெண் ஏன் அவளுடன் இருக்கிறாய். உங்கள் இருவரும் சேர்ந்து எதுவுமே செய்வதில்லை. சண்டை கூடப் போடுவதில்லை என்று சொல்கிறாள்

இந்த உரையாடல் வழியாக அவர்கள் ஒரே வீட்டிற்குள்ளாகத் தனித்தனியாக வாழ்கிறார்கள் என்பது தெளிவாக உணர்த்தபடுகிறது.

அன்றிரவு கணவன் வீடு திரும்புகிறான். வீட்டில் யாரும் இருப்பது போலவே தோன்றவில்லை. பசை டியூப் காலியாக உள்ளது. உட்காருவதற்காக அருகிலிருந்த ஒரு நாற்காலியை நகர்த்துகிறான். அது நகரவில்லை. தரையுடன் சேர்த்து ஒட்டப்பட்டிருக்கிறத. இது போலவே ப்ரிட்ஜைத் திறக்க முடியவில்லை. அதையும் அவன் மனைவி ஒட்டியிருக்கிறாள் . அவளைப் பற்றிக் குறை சொல்ல அவளது அம்மாவிற்குத் தொலைபேசி செய்ய முயற்சிக்கிறான். அதுவும் ஒட்டப்பட்டிருக்கிறது.

திடீரென ஒரு சிரிப்புச் சப்தம் கேட்கிறது. திரும்பிப் பார்த்தால் வீட்டுக் கூரையில் இருந்து அவள் தொங்கிக் கொண்டிருந்தாள்.

பசை விளம்பரத்தில் இருந்த அதே காட்சி.

செருப்பில்லாமல் அவள் கால்கள் கூரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்றன. தலைகீழாகத்தொங்கிக் கொண்டிருக்கிறாள்.

இதைக் கண்டு அதிர்ந்து போய் உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா எனக் கணவன் கத்துகிறான். அவள் பதில் சொல்லாமல் சிரிக்கிறாள்.

அவளைக் கிழே இறக்கிவிடுவதற்காக முயற்சிக்கிறான். ஸ்டுல் எதையும் நகர்த்த முடியவில்ல. அகவே தடிமனான புத்தகங்களை எடுத்துப் போட்டுக் கோபுரம் போலாக்கி அவளைப் பலம் கொண்ட மட்டும் கிழே இழுக்கிறான்

தலைகீழாக அவள் தொங்கும் போது மிக அழகாகத் தோன்றுகிறாள். அவளது நீண்ட கூந்தல் வசீகரமாக ஆடுகிறது. வெண்ணிற மேலாடையின் உள்ளே செதுக்கி வைக்கபட்ட சீரான இரு கண்ணீர்த் துளிகள் போல் அவளது மார்பகங்கள் தெரிகின்றன. அவளை வியந்து ரசிக்கிறான். .

பின்பு அவளை முத்தமிடுகிறான்.. அவளும் இணங்கி நாவோடு நாவு கவ்வ முத்தமிடுகிறாள். சட்டெனக் காலடியில் இருந்த புத்தகங்கள் சரிகின்றன. அவளது உதட்டினை கவ்வியபடியே அவன் தொங்கிக் கொண்டிருப்பதாகக் கதை முடிகிறது

••

கசந்த உறவை எந்தப் பசையால் ஒட்டமுடியும் என்று கதை கேள்வி எழுப்புகிறது. அதே நேரம் உறவை ஒட்டும் பசை காமம் மட்டுமே என்று அடையாளமும் காட்டுகிறது. தலைகீழான மாற்றத்தால் மட்டுமே அவர்களுக்குள் புதிய ஈர்ப்பு உருவாகிறது. இந்த மாற்றத்தை அவள் தான் ஏற்படுத்துகிறாள்.

அந்த வீட்டில் இருந்த பொருட்கள் யாவும் பசையால் ஒட்டப்பட்டுவிடுகின்றன. ஆனால் புத்தகங்கள் ஒட்டப்படவில்லை. அவற்றைக் கணவன் கையாளுகிறான். புத்தகம் ஏணி போலப் பொருளாக மாறுகிறது. அவனது படிப்பு இப்படி உருமாற வேண்டும் என்றே அவள் நினைக்கிறாள். தலைகீழாகத் தொங்கும் அவளைப் பார்க்கும் போது யாரோ ஒருத்தியை போலத் தெரிகிறாள். அவளது உடல் வசீகரமாகத் தெரிகிறது.

கதையின் கடைசிவரியில் அவன் உதட்டினை கவ்வியபடியே தொங்கிக் கொண்டிருக்கிறான். உடலின் ஒன்றிணைவு வழியாகவே உறவு வலுப்படுகிறது. காமம் குடும்ப உறவின் ஆதாரம். அதன் சீரான தன்மையே கணவன் மனைவி உறவை வலுப்படுத்துகிறது.

கதையின் முதல்வரிக்கு திரும்ப வாருங்கள்.

தொடாதே என்று அவன் மனைவி கூறுகிறாள்.

கதையின் கடைசி வரியில் அவளது உதட்டை கவ்வியபடியே கணவன் தொங்குகிறான்.

எவ்வளவு கச்சிதமாகக் கதை உருவாக்கபட்டிருக்கிறது. குறைவான சொற்களைக் கொண்டு அற்புதமான கதையை ஒரு மரச்சிற்பம் போலச் செதுக்கியிருக்கிறார் எட்கர் கிரெட்.

வீட்டிலுள்ள எல்லாப் பொருட்களையும் அவள் பசை ஒன்றின் மூலம் நகரவிடாமல் செய்கிறாள். இதன் மூலம் நகர்வு எளிதானதில்லை என்பதை அவனுக்குப் புரிய வைக்கிறாள். பசை விளம்பரத்தை பார்த்த மாத்திரம் அது விரையம் எனக் கணவன் நினைக்கிறான். அது தான் அவளை அவன் புரிந்து வைத்துள்ள விதம். ஆனால் அவள் நிதானமாக, விசித்திரமாக, தனது எண்ணங்களைச் செயல்படுத்துகிறாள். கணவனிடம் காணப்படும் பதட்டம் அவளிடமில்லை.

இன்றைய இளம் தம்பதிகளின் வாழ்க்கை இப்படிப் பட்டது தான். ஆனால் தலைகீழ் மாற்றம் அவர்களுக்குள் நடப்பதேயில்லை.

சிறுகதை ஆசிரியன்  கதையில் நிறைய  சொல்லத்தேவையில்லை. குறைவான, கச்சிதமான உரையாடல்களின் வழியே கதையினை நேர்த்தியாக உருவாக்கிவிட முடியும். கனவுத்தன்மை கொண்ட இக்கதை யதார்த்தத்தை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது. இது முக்கியமான உத்தி. சிறுகதை ஆசிரியர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமிது.

இக் கதை 9 முறை குறும்படமாக்கபட்டுள்ளது. அதில் இரண்டு குறும்படங்களைப் பார்த்தேன்

கதையைப் போலக் குறும்படம் உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்தவில்லை.

——

பசை

எட்கார் கெரட்- தமிழில் :மாது

“அதைத் தொடாதே” என்றாள் அவள்.

“என்னது அது” என்றேன்.

“பசை. மிகச் சிறப்பான பசை. இருப்பவற்றிலேயே மிகச் சிறந்தது”

“எதற்காக வாங்கினாய் அதை”

“இங்கே ஒட்ட வேண்டியவை நிறைய இருக்கின்றன”

“இங்கே இருப்பவை எவற்றையும் ஒட்டத் தேவையில்லை. இதையெல்லாம் எந்தக் காரணத்துக்காக அனாவசியமாக வாங்குகிறாய் என்று தெரியவில்லை”

“உன்னைக் கல்யாணம் செய்து கொண்ட அதே காரணத்திற்காகத்தான்….நேரம் கழிப்பதற்க்கு”

அவளுடன் சண்டையிட எனக்கு விருப்பமில்லை. அமைதியாய் இருந்தேன். அவளும் அமைதியாய் இருந்தாள்.

“இது என்ன அவ்வளவு நல்ல பசையா?” என்றேன். பசை டப்பாவின் மேல் ஒட்டப்பட்டிருந்த படத்தைக் காட்டினாள். உட்கூறையிலிருந்து ஒருவன் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்தான்.

“எந்தப் பசையாலும் ஒருவனை அப்படிக் கூரையில் ஒட்ட வைக்க முடியாது. படத்தைத் தலைகீழாக எடுத்திருப்பார்கள். விளக்கை தரையில் வைத்து கூரையிலிருந்து தொங்குவதுபோல் காட்டியிருப்பார்கள்” என்று அவள் கையிலிருந்து பசை டப்பாவை வாங்கி உற்று நோக்கினேன். “இங்கே பார் இந்த ஜன்னலை. அதன் படுதாக்கள் மேலிருந்து கீழே தொங்கிக் கொண்டிருக்கின்றன. கீழிருந்து மேல் தொங்குவது போல் கூடக் காட்டத் தெரியவில்லை இவர்களுக்கு.” அவள் பார்க்கவில்லை.

“அட எட்டு மணி ஆகிவிட்டதே ! நான் வேலைக்குக் கிளம்பவேண்டும்” என்று கூறி என் பெட்டியை கையிலெடுத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டேன். “நான் வர சற்று நேரமாகும் … நான் …”

“ஓவர்டைம். எனக்குத் தெரியும்.”

~oOo~


அலுவலகத்திலிருந்து அபிக்கு போன் செய்தேன் “இன்றைக்கு வர முடியாது. வீட்டிற்குச் சீக்கிரம் போக வேண்டும்”

“ஏன் ஏதாவது நடந்ததா” என்றாள் அபி.

“இல்லை….அவள் சந்தேகப் படுகிறாள் என்று தோன்றுகிறது”

நீண்ட மொளனம். மறுமுனையில் அபியின் பெருமூச்சு கேட்டது.

“ஏன் அவளுடன் இருக்கிறாய் என்று எனக்குப் புரியவில்லை,” என்றாள் மெல்லிய குரலில். “நீங்கள் இருவரும் சேர்ந்து எதுவுமே செய்வதில்லை. சண்டைகூடப் போடுவதில்லை”. சிறு இடைவெளிக்குப் பின், “புரியவில்லை..” என்று மீண்டும் இழுத்தாள்.

“அபி கொஞ்சம் இரு…யாரோ உள்ளே வருவது போல் தெரிகிறது” என்று பொய் சொன்னேன். “சரி போனை வைக்கிறேன். சத்தியமாக நாளைக்கு வருகிறேன். எல்லாவற்றையும் பற்றி அப்போது பேசலாம்”.

~oOo~

சீக்கிரமாக வீடு திரும்பினேன். உள்ளே நுழைந்தவாரே “ஹலோ” என்றேன். பதில் வரவில்லை. ஒவ்வொரு அறையாகத் தேடினேன். எந்த அறையிலும் அவள் இல்லை. சமையல் மேடையில் பசை ட்யூபைப் பார்த்தேன். காலியாய் இருந்தது. உட்காருவதற்காக அருகிலிருந்த ஒரு நாற்காலியை நகர்த்தினேன். அது நகரவில்லை. மீண்டும் முயற்ச்சித்தேன். அசைவதாய்த் தெரியவில்லை. தரையுடன் சேர்ந்து ஒட்டியிருக்கிறாள். ப்ரிட்ஜை திறக்க முடியவில்லை. அதையும் ஒட்டியிருக்கிறாள். என்ன நடக்கிறதென்று எனக்குப் புரியவில்லை. இப்படிச் செய்ய அவளைத் தூண்டியது எது. அவள் அம்மாவிற்குப் போன் செய்வதற்காகக் கூடத்திற்குச் சென்றேன். போனின் பேசு முனையைத் தூக்க முடியவில்லை. அதையும் ஒட்டியிருக்கிறாள். அருகிலிருந்த மேஜையை ஒரு எட்டு விட்டேன். அது துளியும் அசையவில்லை. என் கால் கிட்டத்தட்ட உடைந்ததுதான் மிச்சம்.

அப்போது அவளின் சிரிப்பைக் கேட்டேன். எனக்கு மேலிருந்து வந்தது சிரிப்பொலி. அன்னாந்து பார்த்தேன். அங்கே அவள். மேற்கூறையிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தாள். செருப்பில்லா அவளது கால்கள் மேற்கூரையில் ஒட்டியிருந்தன.

வாய் பிளந்து பேசாது நின்றேன். “என்ன…பைத்தியம் கியித்தியம் பிடித்துவிட்டதா” என்று மட்டுமே கேட்க முடிந்தது.

அவள் பதில் சொல்லாமல் சிரித்தாள். புவியீர்ப்பினால் பிளந்த அவள் உதடுகளிலிருந்து வந்த புன்னகை இயற்கையாய்த் தோற்றமளித்தது.

“கவலைப் படாதே உன்னைக் கீழே இறக்கி விடுகிறேன்” என்று சொல்லியவாறே அலமாரியிலிருந்து தடிமனான புத்தகங்களை அவசரமாக எடுத்தேன். என்சைக்ளோபிடியா தொகுதிகளைப் கொண்டு ஒரு கோபுரம் அமைத்து அதன் மீது தட்டுத் தடுமாறி ஏறினேன்.

விழாமல் சுதாரித்த படியே “கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கோ” என்றேன். அவள் புன்னகைத்தபடி இருந்தாள். பலம் கொண்ட மட்டும் அவளை இழுத்தேன். ஏதும் நடக்கவில்லை. மெதுவாகக் கீழே இறங்கினேன்.

“கவலைப்படாதே…பக்கத்து வீட்டுக்காரர்களைக் கூட்டி வர முடியுமா என்று பார்க்கிறேன்” என்றேன்.

“சரி…எனக்கு எங்கும் போக உத்தேசமில்லை” என்று கேலியாகச் சிரித்தாள்.

நானும் சிரித்தேன். பொருத்தமற்று தலைகீழாகத் தொங்கியதில் அவள் மிக அழகாகத் தோன்றினால். அவளது நீண்ட கூந்தல் தலைகீழாக ஊஞ்சல் ஆடியது. வெள்ளை நிற மேலாடையின் உள்ளே திறம்பட வார்க்கப்பட்ட சீரான இரு கண்ணீர்த் துளிகள் போல் தோன்றின அவளது மார்பகங்கள். அழகோ அழகு. மீண்டும் புத்தகக் குவியல் மேல் ஏறி அவளை முத்தமிட்டேன். அவளது நாக்கை என் நாக்கில் உணர்ந்தேன். என் காலின் கீழ் புத்தகங்கள் சிதறின. அந்தரத்தில் அவள் உதட்டிலிருந்து தொங்கிக் கொண்டிருந்தேன்

நன்றி

சொல்வனம் இணையஇதழ்

https://solvanam.com/2016/12/%E0%AE%AA%E0%AE%9A%E0%AF%88/

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: