அம்மாவின் கடைசி நீச்சல்

புதிய சிறுகதை ( அச்சில் வராதது)

அம்மா நீந்தக்கூடியவர். நாங்கள் தெக்குடி என்ற சிறிய கிராமத்தில் குடியிருந்தோம். எங்கள் வீட்டிலிருந்து தென்பக்கமாகச் செல்லும் சாலை வழியாகச் சென்றால் ஏரியை அடையலாம். மிகப்பெரிய ஏரியது. பாண்டிய மன்னர் காலத்தில் உருவாக்கியது என்றார்கள். அந்த ஏரியைச் சுற்றிலுமாக மூன்று கிராமங்கள் இருந்தன. கிராமத்து விவசாயிகள் ஏரி தண்ணீரையே விவசாயத்திற்குப் பயன்படுத்தினார்கள்.

ஏரியின் நடுவில் சிறிய திட்டுப் போலிருக்கும். அதில் நீராட்சியம்மன் கோவில் இருந்தது. ஆண்டிற்கு ஒரு முறை நீராட்சி அம்மனுக்கு விழா எடுப்பார்கள். அந்த நாளில் ஏரியைச் சுற்றிலும் பந்த விளக்குகள் வைப்பார்கள். ஏரியிலும் அகல் விளக்குகளை மிதக்கவிடுவார்கள். ஏரியின் மீது படரும் தங்க நிற வெளிச்சத்தினைக் காணுவது அற்புதமாகியிருக்கும். மற்ற நாட்களில் ஏரிக் கரையில் ஆடு மாடுகளை ஒட்டிக் கொண்டு போகிறவர்களைத் தவிர ஆள் நடமாட்டமிருக்காது. ஏரி கரை முழுவதும் மருதமரங்கள். புதர்செடிகள். அதற்குள் பாம்பு இருக்கிறது என ஆட்கள்  போகப் பயப்படுவார்கள்.

ஏரியில் பெண்கள் குளிப்பதற்கெனத் தனியிடம் இருந்தது. அங்கே காலை நேரத்தில் பெண்கள் துணிகளைத் துவைப்பதும், பாயை அலசிக் காயவைப்பதும், குளிப்பதும் உண்டு. ஒன்றிரண்டு பெண்களே நீந்தக்கூடியவர்கள். அவர்களும் கூட ஏரியின் மையத்திலிருக்கிற நீராட்சி கோவில் வரை நீந்திப் போவது கிடையாது. ஆனால் அம்மா நீந்திப் போவார்.

அம்மா யாரிடம் நீச்சல் கற்றுக் கொண்டார் என்று தெரியாது. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே அம்மா ஏரியில் நீந்தித்தான் குளிக்கிறாள். மழைக்காலமாக இருந்தாலும் அவள் வீட்டில் குளிப்பதில்லை. அப்பாவிற்கு நீந்தத் தெரியாது. அவர் உள்ளுரின் தபால்காரராக வேலை செய்தார்.

அப்பாவின் பணிக்காகத் தெக்குடிக்கு வந்த நாங்கள்  அங்கேயே வீடு வாங்கி தங்கிவிட்டோம். என் தங்கை இந்த ஊரில் தான் பிறந்தாள். அப்பாவின் வேலை அந்த வட்டாரத்திற்குள்ளாகவே மாறியது. ஆகவே நாங்கள் வீடு மாறவேயில்லை. தெக்குடியின் ஆரம்பப் பள்ளியிலே நான் படித்தேன்.

ஆரம்பத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தை ஒட்டிய வீதியில் குடியிருந்தோம். அம்மா தான் அக்ரஹாரத்தில் பழைய வீடு ஒன்றை விலைக்கு வாங்கச் செய்தவள். அந்த அக்ரஹாரம் ஒரு காலத்தில் மிக செல்வாக்காக இருந்திருக்கிறது. பலரும் ஊரை விலக்கிப் போனதால் வெறிச்சோடியது. ஒன்றிரண்டு வீடுகளிலே ஆட்கள் குடியிருந்தார்கள். இரண்டு வீடுகள் மொத்தமாக இடிந்து போயிருந்தன. இடிந்த சுவர்களுக்குள் செடி வளர்ந்து போயிருந்தது.  அதன் உரிமையாளர்கள் அமெரிக்கா போய்விட்டதால் யாரும் அதைச் சீர்செய்யவேயில்லை.

நாங்கள் விலைக்கு வாங்கிய வீடு கூட லண்டனில் போய்ச் செட்டில் ஆன ஒருவரின் வீடு தான். மிகவும் குறைந்த விலைக்குக் கிடைத்தது. நீண்டோடும் வீடது. ஆறு அறைகள் இருந்தன. பெரிய மொட்டைமாடி. பின்புறம் கிணறு. வாழைமரங்கள். நாங்கள் நாலே பேர். இவ்வளவு பெரிய வீடு எதற்கு என அப்பா கேட்டபோது அம்மா சொன்னாள்

“வீடாவது பெரிசா இருக்கட்டும். “

அது அவளது கோபத்தின் வெளிப்பாடு. அப்பா அந்தக் கோபத்தைப் புரிந்திருந்தார். அம்மா வீட்டிற்கு அடர் நீலவண்ணம் அடிக்கச் செய்தாள். அந்தக் கிராமத்தில் இப்படி நீலநிறத்தில் வீடு ஒருவரிடமும் கிடையாது. அதுவே எங்கள் வீட்டின் அடையாளமாக மாறிப்போனது.

அம்மா அதிகம் பேசமாட்டாள். எப்போதும் ஏதோ யோசனையிலே இருப்பாள். அவளுக்கு வீடு எப்போதும் நிசப்தமாக இருக்கவேண்டும். மரத்திலிருந்து காக்கா சப்தம் போட்டால் கூட முகம் சுழிப்பாள்.  யாராவது உரத்துப் பேசினால் பிடிக்காது. தெருவில் மோர் விற்பவள் சப்தமாகக் கூவினால் கூடக் காதை பொத்திக் கொள்வாள்.

ரேடியோ மெல்லிய குரலில் தான் பாட வேண்டும். பாத்திரம் ஏதாவது கிழே விழுந்து சப்தம் எழுப்பினால் அவள் உடல் நடுங்கிவிடும். அவளால் உரத்த சப்தம் எதையும் தாங்க முடியாது.

அப்பா மிகுந்த கோபக்காரர். சட்னியில் உப்பு அதிகமாகிப் போனால் கூடக் கத்துவார். பாத்திரங்களை வீசியடிப்பார். அந்த நாட்களில் அம்மாவின் முகம் சிவந்து போய்விடும். அப்பாவின் உறவினர்கள் அடிக்கடி வந்து போனார்கள். அதிலும் ராஜி அத்தை வந்து போகும் நாட்களில் அம்மா அடிக்கடி பற்களைக் கடித்துக் கொள்வாள். சிறுவயதில், எதற்காக அம்மா அப்படி நடந்து கொள்கிறாள் எனப்புரியாது

அம்மா தனது கோபம். ஆத்திரம் எல்லாவற்றையும் தீர்த்துக் கொள்வதற்கு நீந்துவதை வழியாகக் கொண்டிருந்தாள்.

நீந்தும் போது அவளைப் பார்க்க வியப்பாக இருக்கும். தண்ணீரிலே பிறந்து வளர்ந்தவள் போல மிதந்து கொண்டிருப்பாள். அடர்ந்த கூந்தல் நீரில் படர அவள் கைகள் தண்ணீரை தள்ளியபடியே முன்சென்று கொண்டிருக்கும். அவள் கால்களை வீசும் அழகு விசித்திரமாகயிருக்கும். சில நேரம் அசைவற்றுத் தண்ணீரில் மிதந்து கொண்டிருப்பாள்.

கரையில் அமர்ந்தபடியே நான் அம்மா நீந்துவதைப் பார்த்துக் கொண்டேயிருப்பேன். நீந்தி, நீந்தி அவள் நீராட்சியம்மன் கோவில் மண்டபத்திற்குப் போய்விடுவாள். அந்த மண்டபத்தில் யாரும் இருக்கமாட்டார்கள். ஒற்றை ஆளாக அவள் உட்கார்ந்து கொண்டிருப்பது புள்ளி போலத் தெரியும். ஒருவேளை திரும்பி வராமல் அங்கேயே இருந்துவிடுவாளோ எனப் பயமாக இருக்கும். ஆனால் சிறிது நேரத்தின் பின்பு திரும்ப நீந்த ஆரம்பித்து விடுவாள். அலுப்பில்லாமல் அவள் நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டு சில பெண்கள் திட்டுவார்கள்.

யார் குரலும் அவளுக்குக் கேட்காது. நீண்ட நேரத்தின் பிறகு அவள் கரையேறுவாள். சிவந்து போன கண்களுடன் ஈரப்புடவையுடன் நீர்சொட்டும் கூந்தலும் ஒளிரும் முகமாக அவளைக் காண சந்தோஷமாக இருக்கும். என்னைப் பார்த்து சிரித்தபடியே துவைத்து வைத்திருந்த ஈரஉடைகளைத் தோளில் அள்ளி போட்டுக் கொள்வாள். இருவரும் வீடு நோக்கி நடப்போம்.

ஈரமான அவளது கைகளைப் பற்றிக் கொள்வேன். எவ்வளவு குளிர்ச்சி. பனிக்கட்டியை தொடுவது போலவேயிருக்கும். அம்மா நிதானமாக வீடு நோக்கி நடப்பாள். அவள் கூந்தலில் வடியும் நீர் வழியெல்லாம் சொட்டிக் கொண்டிருக்கும்

அக்ரஹாரத்தின் வடக்குவீட்டின் திண்ணையில் இருந்த பெரியவர் அவளை முறைத்து பார்த்து ஏதோ முணங்கியபடி தலை குனிந்து கொள்வார். அம்மா யாரையும் ஏறிட்டு பார்க்க மாட்டாள். வீடு திரும்பி உடை மாற்றிக் கொண்டு சாமி கும்பிட்டு திருநீறு பூசிய நெற்றியோடு அவள் தன் கூந்தலுக்குச் சாம்பிராணி போட்டுக் கொள்வாள். அந்த வாசனை வீடெல்லாம் நிரம்பும். அம்மாவின் மணமென்றால் மனதில் நிற்பது சாம்பிராணி வாசனை தான்.

அம்மா நீந்துவதன் வழியே மட்டுமே சந்தோஷத்தை அடைகிறாள் என்பதை வளர்ந்த நாட்களில் தான் உணர்ந்து கொண்டேன். அதுவரை அம்மாவைக் கண்டால் எனக்குப் பயமாகவே இருந்தது.

சந்தோஷமாக இருந்தாலும், கவலையாக இருந்தாலும். கோபமாக இருந்தாலும் அவளுக்கு நீந்த வேண்டும். தண்ணீரை தவிர வேறு துணையில்லை என்று நம்பியிருந்தாள். எங்கள் எவருக்கும் அம்மாவைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு நாளிரவு அப்பா வீட்டுச் செலவு செய்யக் கொடுத்த பணத்திற்குக் கணக்குச் சரியாக இல்லை என்று கோவித்துக் கொண்டார். சமையற்கட்டிலிருந்து சில்லறை காசு உள்ளிட்ட மீதமுள்ள பணத்தை அம்மா வீசி எறிந்தாள்.

அப்பா குனிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு “உனக்கு திமிரு கூடிப்போச்சுடீ.. பத்து ரூபா சம்பாதிக்க வக்கில்லை. கோவம் மட்டும் வந்துருது.. இனிமே வீட்டு செலவுக்குப் பணம் வேணும்னா உங்கப்பனை கொண்டு வந்து குடுக்கச் சொல்லு“ என்று கத்தினார்

“எங்கப்பாவை ஏன் பேசுறீங்க“ என முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு அம்மா கேட்டாள்

“உன்னை மாதிரி ஒரு தெண்டத்தைப் பெத்து என் தலையில கட்டி வச்சானே. அந்த ஆளை சொல்றதுல என்னடீ தப்பு“

“என்னை அடிங்க. உதைங்க. ஆனா.. அவர் பேரைச் சொல்லக்கூட உங்களுக்கு யோக்யதை கிடையாது“ என்றாள் அம்மா

அப்பா ஆத்திரத்தில் குடையை எடுத்து வந்து அம்மாவை ஒங்கி அடித்தார். அவள் தடுக்கவில்லை. அப்பா ஆத்திரம் தீரும்வரை மாறி மாறி அடித்துவிட்டு “சொரணை கெட்ட நாயி.. உனக்கு இந்த வீட்ல இடம் கிடையாது. உங்கப்பன் வீட்டுக்கே போ“ என்று கத்தினார்

அம்மா அடிவாங்கிய போதும் அழாமல் நின்றிருந்தாள். நானும் தங்கையும் பயந்து போய் ஒரமாக நின்றபடியே அம்மாவை பார்த்துக் கொண்டிருந்தோம்.

“போய்ப் படுங்க“ என்று அப்பா எங்களை நோக்கி திட்டினார்

இருவரும் உள்அறையில் விரித்திருந்த பாயில் படுத்துக் கொண்டோம்

அம்மா சமையல் அறையிலே நின்று கொண்டிருந்தாள். அப்பா சிகரெட் பிடிப்பதற்காக வெளியேறி சென்றார். அம்மாவின் காலடியிலே குடை கிடந்தது.

அப்பா போனபிறகு நான் தயங்கி தயங்கி அம்மா அருகில் போய் வாம்மா. தூங்கலாம் என அழைத்தேன். அம்மா வரவில்லை. அவள் கைகளை இழுத்தபோதும் அசையவில்லை.

“நீ போய்ப் படு“ என்று மட்டும் அழுத்தமாகச் சொன்னாள்

நான் உள்அறையில் போய்ப் படுத்துக் கொண்டேன். அம்மா தாத்தா வீட்டிற்குப் போய்விடுவாளா எனப் பயமாக இருந்தது.

நீண்ட நேரத்தின் பிறகு அப்பா திரும்பி வந்த போது அம்மாயில்லை. அவர் உள் அறைக்கு வந்து “எங்கடா அம்மா“ எனக்கேட்டார். பாதிக் கண்ணை மூடியபடியே “தெரியலைப்பா“ என்றாள் தங்கை

அப்பா டார்ச் லைட்டுடன் அம்மாவை தேடிக் கொண்டு கிளம்பினார். வீதியில் எங்கேயும் அவளைக் காணவில்லை. அப்பா ஏரியை நோக்கி நடந்தார். அடர்இருட்டு. பாதையோரம் வளர்ந்திருந்த புதர்செடியில் வண்டுகள் சப்தமிட்டுக் கொண்டிருந்தன. டார்ச் லைட்டின் வெளிச்சம் பட்டு புளிய மரங்கள் விசித்திரஉருக் கொண்டன.

அப்பா நினைத்தது போலவே அம்மா ஏரியில் நீந்திக் கொண்டிருந்தாள்.

யாருமற்ற ஏரியில் அடர்ந்த இருட்டில் அம்மா ஒற்றை ஆளாக நீந்திக் கொண்டிருந்தாள்.

அப்பா டார்ச் லைட்டை அசைத்து சப்தமிட்டார்

“ருக்மணி. ருக்மணி. “

அம்மா அந்த வெளிச்சம் தன்னைத் தொட்டுவிடக்கூடாது என்பது போல வேகமாக நீராட்சியம்மன் மண்டபத்தை நோக்க நீந்த ஆரம்பித்தாள். அப்பா டார்ச் லைட்டை உயர்த்திப்பிடித்து “ருக்கு. ருக்மணி“ எனச் சப்தமிட்டுக் கொண்டேயிருந்தார். குரல் அவளைத் தொடவேயில்லை. ஏரியின் இருட்டு அவளை விழுங்கியிருந்தது. வானில் அன்றைக்கு இரண்டே நட்சத்திரங்கள் இருந்தன. மரத்தில் அடைந்திருந்த பறவைகள் ஆள் அரவம் கேட்டுப் பதற்றத்தில் சிறகடித்தன. தண்ணீரின் மீது டார்ச் லைட் வெளிச்சம் ஒரு மீனை போலத் தாவி போனது.

அப்பாவிற்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அவர் தன் கோபத்தை மறைத்துக் கொண்டு அவளை அழைத்தபடியே இருந்தார். அந்தக் குரலை அவள் செவிமடுக்கவேயில்லை. இருட்டில் முழுவதுமாக மறைந்திருந்தாள். அப்பா எவ்வளவு நேரம் அங்கேயே நிற்பது எனப்புரியாமல் டார்ச் லைட்டை அசைத்தபடியே இருந்தார். பின்பு அவர் எரிச்சலுடன் வீடு திரும்பினார்.

காலையில் நாங்கள் எழுந்த போது அம்மா வீட்டில் இல்லை. அப்பா ஈசிசேரில் சாய்ந்து உறங்கிக் கொண்டிருந்தார். நானும் தங்கையும் அவரை எழுப்பினோம்

“உங்கம்மா ஏரியில இருக்கா.. போயி கூப்பிடுங்க“ என்று சொல்லிவிட்டுக் கண்களை மூடிக் கொண்டார்

நாங்கள் இருவரும் ஏரிக்கு ஒடினோம். அம்மா ஏரியின் மையமண்டபத்தில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.

“அம்மா. அம்மா“ எனச் சப்தமிட்டோம். அவள் திரும்பி பார்க்கவேயில்லை. எங்களுடன் அக்ரஹாரத்தில் இருந்த சிலரும் சேர்ந்து கொண்டார்கள். “ருக்மணி. ருக்மணி“ என மாறிமாறி அழைத்தார்கள். அந்தக் குரல் கேட்டு ஒரு பறவை திரும்பி பார்த்துப் போனது.

இந்தச் சப்தம் பிடிக்காதவள் போல அம்மா தண்ணீருக்குள் மூழ்கிக் கொண்டாள். அக்ரஹாரத்திலுள்ள ஸ்ரீனிவாசன் ஏரியில் குளித்து நீந்திப் போனார். நீராட்சியம்மன் மண்டபத்தை நோக்கி அவர் போவதை வெறித்துப் பார்த்தபடியே இருந்தோம். அவரால் அம்மாவை கண்டுபிடிக்க முடியவில்லை. என்ன ஆனாள். தண்ணீருக்குள்ளாக அடங்கிவிட்டாளா. இல்லை வேறு கரை பக்கம் போய்விட்டாளா. ஸ்ரீனிவாசன் மையமண்டபத்தில் நின்றபடியே சப்தமிட்டார். அம்மா ஒரு மச்சகன்னியை போலத் தண்ணீருக்குள் வசிக்க ஆரம்பித்துவிட்டாள் போலும். அம்மா இனி திரும்பி வரவே மாட்டாளோ எனப் பயமாக இருந்தது

ஸ்ரீனிவாசன் தனது அழைப்பு பயனற்றுப் போய்விட்டதை உணர்ந்து நீந்தி திரும்பி வந்தார். அப்பா வெறித்த கண்களுடன் கரையில் நின்றபடியே “அவளை விட்ருங்க தானா வருமா“ என்று சொன்னார்

எப்போது வருவார். ஒருவேளை வராமலே போய்விட்டால் என எங்களுக்குப் பயமாக இருந்தது.

நீண்ட நேரத்தின் பிறகு தண்ணீரில் அம்மாவின் தலை தெரிந்தது. கைகளை வீசி அவள் தெற்கு நோக்கி நீந்திப் போய்க் கொண்டிருந்தாள். ஒருவேளை மலையனூர் கரைக்குப் போகிறாளோ.. அந்தக் கரையேறி அப்படியே தாத்தா ஊருக்கு போய்விடுவாளோ. நானும் தங்கையும் “அம்மா அம்மா“ எனக் கத்தினோம். அம்மாவின் உருவம் கண்ணில் இருந்து மறைந்தது.

மாலை வரை நாங்கள் ஏரிக்குப் போவதும் வருவதுமாக இருந்தோம். இதற்குள் ஊரே ஏரிக்கரையில் கூடிவிட்டது. நாலைந்து இளைஞர்கள் நீந்தி அவள் அருகில் போனார்கள். அவர்கள் அம்மாவிடம் ஏதோ சொல்வதைக் காண முடிந்தது. ஆனால் அவள் திரும்பி வரவில்லை.

அப்பா ஆத்திரத்துடன் “அவள் அப்படியே செத்துத் தொலையட்டும்“ என்றார்.

யார் அழைத்தும் அவள் திரும்பி வரவில்லை..

கரையில் நின்றபடியே நாங்கள் “அம்மா, அம்மா“ என உரத்து கத்திக் கொண்டிருந்தோம். அம்மாவிடம் அந்தக் குரல் சென்று சேரவில்லை.

அப்போது விஷயம் கேள்விபட்டு ஏரிக்கு வந்த தோட்டவேலை செய்யும் மாரியம்மாள் தண்ணீரில் நீந்திப் போக ஆரம்பித்தாள். அவள் அம்மாவை நெருங்கிப் போவதும் அவள் கையைப் பற்றி இழுப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம். பின்பு இருவரும் ஒன்றாக நீராட்சியம்மன் மண்டபத்திற்குப் போய் உட்கார்ந்து கொண்டார்கள்.

அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள்.

திரும்பி வந்துவிடுவார்கள் என நாங்கள் நினைத்தது போல நடக்கவில்லை மாலை மறைந்து இருள் படர ஆரம்பித்தது. அந்த இரண்டு பெண்களும் ஏரியின் நடுவில் உட்கார்ந்திருந்தார்கள்.

இருட்டில் நின்றபடியே நான் அம்மா என்று கத்தினேன். அது எனக்குள் இருந்த பயத்தின் ஒலம்.

அம்மாவோ ,மாரியம்மாளோ அக்குரலுக்குச் செவிசாய்க்கவில்லை

இருட்டில் எவ்வளவு நேரம் நிற்பது எனக் கலைந்து நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

பத்து மணி அளவில் அம்மாவை அழைத்துக் கொண்டு மாரியம்மாள் வீட்டிற்கு வந்திருந்தாள். என்ன பேசினாள். எப்படிச் சமாதானம் செய்தாள். எதுவும் தெரியவில்லை

மாரியம்மாள் அப்பாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். அப்பா தலையை ஆட்டிக் கொண்டேயிருந்தார். பின்பு மாரியம்மாள் கிளம்பி போய்விட்டாள்

அம்மா தனது ஈரஉடைகளை மாற்றிக் கொண்டு கூந்தலுக்குச் சாம்பிராணி போட துவங்கினாள். அந்த வாசனை வீடெங்கும் நிரம்பியது

நானும் தங்கையும் அவள் அருகில் போய் உட்கார்ந்து கொண்டோம்

அம்மா முகம் வெளிறிப்போயிருந்தது. அந்தக் கண்களில் சொல்லமுடியாத துயரத்தின் பாரம்.

அம்மா என்னை அருகில் அழைத்துக் கையைப் பிடித்தபடியே கேட்டாள்

“பயந்துட்டயா“

“ஆமாம்“ என்று தலையாட்டினேன். அம்மா என் தங்கையை அருகில் இழுத்து அணைத்துக் கொண்டாள். நானும் ஒட்டிக் கொண்டேன். அம்மாவின் குளிர்ச்சியான உடல்  தண்ணீருக்குள் கிடந்த கூழாங்கல்லைத் தொடுவதைப் போலிருந்தது.

அம்மா நிதானமாகச் சொன்னாள்

“நாம மதுரைக்குப் போகப்போறோம்“

“எப்போ“ எனக்கேட்டாள் தங்கை

“நாளைக்கு“ என்றாள் அம்மா. அதன் சில நாட்களில் அப்பா மதுரையில் ஒரு வீடு பார்த்து எங்களைக் குடிவைத்தார். அப்பா மட்டும் கிராமத்தில் தனது வேலைக்காகக் குடியிருந்தார். வாரம் ஒருமுறை மதுரை வந்து போனார். ஒரு வருஷத்தில் அப்பாவும் மாற்றலாகி மதுரைக்கே வந்துவிட்டார். அதன்பிறகு தெக்குடியில் இருந்த வீட்டையும் விற்றுவிட்டோம். பின்பு கிராமத்திற்குப் போகவேயில்லை.

மதுரைக்கு வந்தபிறகு அம்மா நீந்துவதை நிறுத்திக் கொண்டார். வீட்டில் தான் குளியல். அது போலவே இன்னொரு மாற்றதையும் அவரிடம் கண்டேன்.. அம்மா சின்னஞ்சிறு விஷயங்களுக்கு எல்லாம் கோபம் கொண்டு கத்த ஆரம்பித்தாள் நிசப்தமாக வீடு இருக்க வேண்டும் என்ற சொன்னவளுக்கு வீட்டில் ஏதாவது சப்தம் இருந்து கொண்டேயிருக்க வேண்டியதாகியது. அப்பா அதன்பிறகு சண்டை போடுவதை நிறுத்திக் கொண்டார்.. அம்மா காரணமேயில்லாமல் அப்பாவை எங்களைத் திட்டினார். கோவித்துக் கொண்டார். சமையலறையிலே உறங்கத்துவங்கினார்.

ஒரு முறை ராமேஸ்வரம் கோவிலுக்குப் போயிருந்த போது கடலில் நீராடச் சென்றோம்

அம்மா கரையிலே நின்றிருந்தாள்

“அம்மா. வா.. கடல்ல குளி.. நீந்து“ எனத் தங்கை அழைத்தாள்

“எனக்கு நீச்சல் தெரியாது.. பயமா இருக்கு“ என அம்மா கரையிலே இருந்துவிட்டாள்

மாரியம்மாள் என்ன சொல்லி ஏரியிலிருந்து அம்மாவை அழைத்துக் கொண்டுவந்தாள். அப்பாவிடம் என்ன சொன்னாள், எதுவும் எனக்குத் தெரியாது. ஆனால் நீச்சலைத் துறந்த பிறகு அம்மா உருமாறிவிட்டாள் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது

இத்தனை ஆண்டுகள் ஆகியும் மனதில், இருண்ட ஏரியின் முன்பாக நின்றபடி அம்மா, அம்மா என்று பயத்தில் கத்திக் கொண்டிருந்த சப்தம் ஒலித்துக் கொண்டேதானிருக்கிறது.

இன்றைக்கும் அம்மா பாதித் தெரிந்த பெண்ணும் பாதித் தெரியாத பெண்ணுமாகவே இருக்கிறாள். தண்ணீரைப் போல.

••

.

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: