ரே பிராட்பெரியின் நேர்காணல்கள்.

ஒரு புத்தகத்தை வாசிக்கையில் அது எழுப்பும் நினைவுகளே அதன் மீதான விருப்பத்தை உருவாக்குகின்றன. நேற்று ரே பிராட்பெரியின் (Ray Bradbury) நேர்காணல்கள் அடங்கிய தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். ரே பிராட்பெரி எனது விருப்பத்திற்குரிய எழுத்தாளர். அவரது நேர்காணல்களின் வழியே அவரது புனைவின் பின்புலத்தையும், அவர் எழுத்தாளராக உருவான சூழலையும் புரிந்து கொள்ள முடிந்தது. உலகெங்கும் எழுத்தாளர்கள் ஒன்று போலத் தான் உருவாகிறார்கள் போலும்.

பிராட்பெரியின் நேர்காணல்களில் வெளிப்படும் கேலியும் கிண்டலுமான பதில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

புதிதாக எழுத விரும்புகிறவர்களுக்கு உகந்த வடிவம் சிறுகதையே. வாரம் ஒரு சிறுகதை என ஒரு ஆண்டிற்குத் தொடர்ந்து எழுதிப்பாருங்கள். நிச்சயம் அதில் எட்டோ, பத்தோ நல்ல சிறுகதைகள் இருக்ககூடும். அதை விடுத்து நேரடியாக ஒரு நாவலை எழுத ஆரம்பித்து ஒன்றிரண்டு ஆண்டுகள் செலவழித்துவிட்டு நாவல் சரியாக வராமல் போனால் காலம் வீணாகிவிடும் என்கிறார் ரே பிராட்பெரி.

அது உண்மை. எழுத்து கைவரவேண்டும் என்றால் எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். குறிப்பாகச் சிறுகதையின் வடிவமும் மொழியும் கைகூடுவதற்குத் தொடர்ந்து எழுதுதல் தேவை. எழுதிய அத்தனையும்  அச்சில் வெளியாக வேண்டிய அவசியமில்லை. ஆரம்பக் காலத்தில் பத்தில் இரண்டு என வெளியிடத் தேர்வு செய்தால் போதும்.

எந்த வயதில் ஒரு எழுத்தாளன் உருவாகிறான். ரே பிராட்பெரி எழுத துவங்கிய போது அவரது வயது 12. அவர் வாசித்த காமிக்ஸ் புத்தகங்களும் அம்மாவோடு சேர்ந்து பார்த்த சினிமாவும் தான் அவரை எழுதத் தூண்டின என்கிறார்.

தன்னைச் சுற்றிய மனிதர்களைத் தான் அவர் எழுத்தில் உருவாக்கியிருக்கிறார்.

தேவாலயத்திற்குப் போவதை விடவும் நூலகத்திற்குப் போவதற்கு அதிகம் விரும்புகிறவன் என்று தன்னைப் பற்றிக் கூறிக் கொள்கிறார் பிராட்பெரி. நூலகத்தில் தான் ஒரு மனிதன் தன்னை அடையாளம் கண்டு கொள்கிறான், எந்தப் புத்தகத்தைப் படிப்பது, எது தனது விருப்பம் எனத் தேடி கண்டுபிடிக்கிறான். புத்தகத்தின் வழியே தனது ரசனையை, ஆளுமையை அறிந்து கொள்கிறான். பாலுணர்வு குறித்த கிளர்ச்சிகளும் கனவுகளும் புத்தகம் வழியாகவே அறிமுகமாகின்றன. உலகைப் பற்றிய வியப்பும் கேள்விகளும் புத்தகங்களின் வழியாகவே அறிமுகமாகின்றன. ஆகவே நூலகத்தில் இருந்தே எழுத்தாளர்கள் உருவாகிறார்கள்.

ஜார்ஜ் பெர்னாட் ஷாவின் புத்தகங்களை விரும்பி வாசித்த பிராட்பெரி தானும் அவரும் இரட்டையர்கள் என்பது போல உணர்ந்ததாகக் கூறுகிறார்.

பிராட்பெரியின் விஞ்ஞானக்கதைகளுக்கு மூலம் அவரது சொந்த வாழ்க்கையின் நினைவுகள். நிகழ்வுகள். அதைக் கால வெளியில் உருமாற்றம் செய்து புதிய புனைவாக உருவாக்குகிறார்.

சர்க்கஸ் அவருக்குப் பிடித்தமான உலகம். தானும் ஒரு சர்க்கஸ் கலைஞனாக மாற வேண்டும் என்று ஆசை கொண்டிருந்திருக்கிறார். ஆனால் அது நிறைவேறவில்லை. வறுமையான குடும்ப சூழல் காரணமாக பேப்பர் போடும் பையனாக வேலை செய்திருக்கிறார். கதை எழுதி சம்பாதித்து வாழ வேண்டும் என்பதற்காகவே விதவிதமான சிறுகதைகளை எழுதி அனுப்பியிருக்கிறார். 24 வயதில் தான் அவருக்கான இடம் எழுத்துலகில் உருவாகத்துவங்கியது.

ஹெமிங்வேயிற்குப் பிறகு அமெரிக்க இலக்கியத்தில் அதிகம் பிரபலமான பெயர் பிராட்பெரி. அமெரிக்க வாசகர்கள் அவரது எழுத்தை தேடிப் படித்துக் கொண்டாடினார்கள்.

பிராட்பெரியின் A Sound of Thunder கதையில் டினோசர்களை வேட்டையாடச் சென்ற காலப்பயணி ஒருவன் எதிர்பாரத விதமாக ஒரு பட்டாம்பூச்சியை நசுக்கிவிடுவான். இதனால் உலகில் எதிர்பாராத பல மாற்றங்கள் உருவாகின்றன. எல்லா உயிர்களும் ஒன்றிணைந்து ஒரு சமநிலையை உருவாக்கியிருக்கின்றன. இதில் எது சீர்கெட்டுப் போனாலும் உலகம் பாதிக்கபடும் என்ற உண்மையை  பிராட்பெரி அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

எது உங்களது முதல் நினைவு என்ற கேள்விக்கு நான் பிறந்த நாளில் என்ன நடந்தது என்பது கூட நினைவில் இருக்கிறது. இது உளவியல் ஆய்வாளர்களுக்கு வியப்பளிக்கக் கூடும். ஆனால் என் வரையில் அது உண்மை. என்னால் துல்லியமாக அந்த நாளை நினைவு கொள்ள முடிகிறது அதற்குக் காரணம் நான் தாயின் கர்ப்பத்தில் பத்து மாதங்கள் இருந்தேன். மற்றவர்கள் ஒன்பது மாதம் முடிந்தவுடன் பிறந்துவிடுவார்கள். ஒரு மாதம் அதிகம் இருந்த காரணத்தால் என் நினைவு முன்னதாகவே துவங்கிவிட்டது, இதை என் அம்மாவிடம் சொன்ன போது அவரால் கூட நம்பமுடியவில்லை. என்கிறார் பிராட்பெரி.

அம்மாவுடன் மூன்று வயதில் பார்த்த திரைப்படங்களின் நினைவுகளை மிகச் சுவாரஸ்யமாக விவரிக்கிறார். The Hunchback of Notre, Ben-Hur: A Tale of the Christ, Intolerance போன்ற படங்களைப் பார்த்துவிட்டு வீடு திரும்பி அந்தப் படத்தின் நினைவிலே வாழ்ந்து கொண்டிருந்தையும் கூனன் போல நடந்து பார்த்த நினைவையும் சந்தோஷமாக கூறுகிறார்

பிராட்பெரியின் சினிமா நினைவுகளை வாசிக்கையில் இதே அனுபவம் எனக்கும் நடந்திருப்பதை உணரமுடிந்தது

என் அம்மாவும் இது போலவே சினிமா விரும்பிப் பார்ப்பார். சினிமாவின் முதல் நினைவுகள் யாவும் அம்மாவோடு தான் இணைந்திருக்கின்றன. அதுவும் அம்மா மாலைக்காட்சி மட்டுமே பார்ப்பார். இரவு சினிமா விட்டு பாதி இருண்ட வீதியில் நடந்து வீடு திரும்பும் போது சினிமா பற்றிப் பேசியபடியே வருவோம். சினிமா விளம்பரத்திற்காக வரும் தள்ளுவண்டி வீதியை கடந்து போகையில் நோட்டீஸ கேட்டு வாங்கிச் சேகரித்திருக்கிறேன். சினிமா தலைப்புகளை வைத்து விளையாடுவோம். பார்த்த சினிமாவைப் பற்றிச் சிறார்கள் கூடிக் கதை பேசுவோம். எந்த தியேட்டரில் எப்போது எந்த படம் பார்த்தேன் என்பதை பதிவு செய்வதற்காக சினிமா டிக்கெட்டுகளைப் பத்திரமாகச் சேகரித்து ஒரு நோட்டு ஒன்றில் ஒட்டி வைத்திருந்தேன். அந்த நோட்டில் படத்தின் பெயரை எழுதியிருந்தேன். ஒருமுறை பழைய வார இதழ்களைக் கடைக்குப் போடும்போது அந்த நோட்டையும் சேர்த்துப் போட்டுவிட்டார்கள். ஒரு பொக்கிஷம் தொலைந்து போனது போலவே உணர்ந்தேன்.

பால்யத்தில் பார்த்த திரைப்படங்களின் பெயர்கள் மறந்துவிட்டன. ஆனால். படத்தின் சில காட்சிகள் சில முகங்கள் நினைவில் இருக்கின்றன. குறிப்பாகத் திரையரங்கத்தின் நடுவில் இருந்த தூண் ஒன்று நினைவில் பசுமையாக இருக்கிறது. எந்த ஊரில் எந்தத் திரையரங்கத்தின் தூண் என நினைவில்லை. சிறுவயதில் படம் பார்க்கும் எதிரேயிருப்பவரின் முதுகு மறைக்கும். அல்லது தலை மறைக்கும். எட்டி எட்டி பார்க்க வேண்டியது வரும். தரைடிக்கெட் என்றால் இந்தப் பிரச்சனை கிடையாது. ஆகவே நிறையப் படங்களைத் தரை டிக்கெட்டில் பார்த்திருக்கிறேன்.

தனக்குள் எப்போதும் ஒரு சிறுவன் இருக்கிறான். அவனே தன்னை இயக்குகிறான். சிறுவனின் வியப்பும் வேடிக்கையுமே உலகை ரசிக்க வைக்கின்றன. என்கிறார் பிராட்பெரி. பொம்மைகளை நேசிக்கும் மனிதராகவே எப்போதுமிருக்கிறார் பிராட்பெரி

Every time I go anywhere, I go to the toy store. Every Christmas I always told my wife to give me toys. There are two stuffed cats over there. There are stuffed animals all over my house. I love them. So I don’t let my kids or my wife give me anything but toys. I love them. They cause you to use your imagination.

பிராட்பெரியின் வீடெங்கும் பொம்மைகள் நிறைந்திருக்கின்றன. கதைகளின் வழியே அந்தப் பொம்மைகளுடன் தான் உரையாடுவதாகக் கூறுகிறர்.

The Parrot Who Met Papa? என்ற சிறுகதையில் ஹெமிங்வே கியூபாவில் வசித்த போது மதுவிடுதியில் இருந்த கிளி ஒன்றுக்கு பேச கற்றுக் கொடுத்த்தாகவும் அந்தக் கிளி அவரைப் போலவே பேசக்கூடியது என்றும். அந்தக் கிளியிடம் ஹெமிங்வே தனது கடைசிகதையைச் சொன்னதாகவும் பிராட்பெரி எழுதியிருக்கிறார். பிராட்பெரியின் விருப்பத்திற்குரிய எழுத்தாளர்களில் டிக்கன்ஸ், ஹெமிங்வே இருவரும் முக்கியமானவர்கள்.

இரண்டாம் உலகப்போரின் போது நாஜிகளால் புத்தகங்கள் தீவைத்து எரிக்கபட்டன. நூலகங்களை அப்படியே கொளுத்தினார்கள். வீதியின் நடுவே புத்தகங்களைக் குவித்து எரிக்கும் காட்சிகளை இப்போதும் ஆவணப்படங்களில் காணமுடிகிறது. அந்த நினைவுகளில் இருந்தே புத்தகம் இல்லாத உலகம் எப்படியிருக்கும் என Fahrenheit 451 நாவலை பிராட்பெரி எழுதியிருக்கிறார். இந்நாவலில் புத்தகங்கள் உலகில் இருந்து முற்றாக அழிக்கபட்டாலும் அது வாசித்தவர்களின் மனதில் உயிர்வாழ்ந்து கொண்டேதானிருக்கும் என்ற உண்மை அழுத்தமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒவ்வொரு மனிதனும் தான் வாசித்த புத்தகம் ஒன்றின் நடமாடும் உருவமே என நாவலின் இறுதியில் விவரிக்கபடுவது மிகவும் கவித்துவமானது. இந்நூல் வெளியான போது தீயால் எரிக்கப்பட முடியாத காகிதம் மூலம் இதன் சிறப்பு பிரதிகளை அச்சிட்டிருந்தார்கள்.

எழுத்தைத் தவிரப் பிராட்பெரிக்கு கட்டிடக்கலையின் மீது அதிக ஆர்வம் உண்டு. அவரே பல முக்கியக் கட்டிடங்களை வடிவமைத்திருக்கிறார். இதுபோலவே சினிமாவின் பின்ணணி இசை கேட்பதிலும், ஒவியத்திலும் அவருக்கு ஆர்வம் அதிகம்.

அவருக்கு மிகவும் பிடித்தமான ஒவியம். Georges-Pierre Seurat. வரைந்த A Sunday Afternoon on the Island of La Grande Jatte. தானும் அந்த ஒவியவெளியில்  ஒய்வுஎடுக்க விரும்புவதாகப் பிராட்பெரி கூறுகிறார்

ஒவ்வொரு நாளும் குறைந்த பட்சம் இரண்டாயிரம் வார்த்தைகள் எழுதுவேன். ஞாயிறு கூட விடுமுறையில்லை. மனச்சோர்வு என்பது சோம்பிக் கிடப்பவர்களின் வெளிப்பாடு. எழுதிக் கொண்டேயிருக்க வேண்டும். படிப்பு ,இசை, எழுத்து என அயராமல் இயங்கிக் கொண்டேயிருக்க வேண்டும். அதுவே வாழ்வின் மீதான தனது பற்றுதல் என்கிறார் பிராட்பெரி

தமிழில் பிராட்பெரியின் சிறுகதைகளில் ஒன்றிரண்டு மொழியாக்கம் செய்யப்ப்பட்டிருக்கின்றன. அவரது ஃபாரென்ஹீட் 451 க்ரியா பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இன்னும் அவரது புகழ்பெற்ற சிறுகதைகள் தமிழுக்கு வரவேண்டும். அது புனைவின் புதிய சாத்தியங்களை  நமக்கு அறிமுகம் செய்யும் என்பதே நிஜம்

••

Archives
Calendar
February 2019
M T W T F S S
« Jan    
 123
45678910
11121314151617
18192021222324
25262728  
Subscribe

Enter your email address: