மின்சார மனிதன்

புதிய சிறுகதை

அப்போது எனக்கு வயது பனிரெண்டு.

எங்கள் ஊருக்கு ராயல் சர்க்கஸ் வந்திருந்தது. ஜவகர் மைதானத்தில் தான் கூடாரம் அமைத்திருந்தார்கள். அந்தச் சர்க்கஸிற்கு ஒரு காண்டாமிருகம் வந்திருந்தது.

பாடப்புத்தகங்களில் மட்டுமே பார்த்திருந்த காண்டாமிருகத்தை நேரில் காண வேண்டும் என்பதற்காகவே நான் சர்க்கஸ் போக ஆசைப்பட்டேன். வேறு எந்த மிருகத்தையும் விடக் காண்டாமிருகமே எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இரும்புக் கவசம் போன்ற அதன் உடல் அமைப்பும் ஒற்றைக் கொம்பும் உடலுக்குப் பொருந்தாத குரலும் காண்டாமிருகத்தின் மீது தனியானதொரு ஈர்ப்பை உருவாக்கியிருந்தது.

ஞாயிறு மாலை சர்க்கஸ் போகலாம் என அப்பா சொன்னதில் இருந்தே எப்போது ஞாயிறு வரும் என நாளை எண்ணிக் கொண்டிருந்தேன்.

ஜவகர் மைதானம் ஊரைவிட்டு தள்ளியிருந்த்து. அது ஒரு ஹாக்கி மைதானம். மாநில அளவில் அங்கே ஹாக்கி போட்டிகள் நடப்பதுண்டு ஹாக்கி போட்டிகளைக் காண அப்பாவிற்கு இலவச பாஸ் தருவார்கள். அப்பா ஒருமுறை கூட ஹாக்கி மேஸ் பார்க்க போனதேயில்லை. எங்களையும் போக விடமாட்டார்.

ஒவ்வொரு நாளும் மாலையில் சர்க்கஸ் கம்பெனியின் யானை அலங்காரத்துடன் வீதி வீதியாக ஊர்வலம் வந்தது. பேண்ட் அடிப்பவர்கள் அதன் கூடவே இசைத்தபடி வந்தார்கள். சர்க்கஸின் சிறப்புகள் பற்றிய ரோஸ் மற்றும் நீல நிற நோட்டீஸ்களை விநியோகம் செய்தார்கள். அதில் சிறுவர்களுக்குக் கட்டணம் இரண்டு ரூபாய் என்றிருந்தது.

என் உண்டியலில் இருபது ரூபாய்களுக்கும் மேலிருந்தது. அதிலிருந்து நானே இரண்டு ரூபாயை எடுத்துக் கொண்டு தனியே சர்க்கஸ் பார்க்கப் போய்வரலாமா என்றுகூட நினைத்தேன்.

ஆனால் அப்பாவே வீட்டில் உள்ள எல்லோரும் சர்க்கஸ் பார்க்கலாம் என்று சொன்னது வியப்பாக இருந்தது.

அப்பா எதற்குச் சரியென்று சொல்லுவார். எதற்கு வேண்டாம் என மறுப்பார் என யாருக்கும் தெரியாது.

ஜவகர் திடலுக்கு டவுன்பஸ்ஸில் போவதா அல்லது நடந்து போவதா என்று வீட்டில் ஆலோசனை நடந்து கொண்டிருந்தது.

மாலை நேரத்தில் வெயில் தணிந்திருக்கும். அதனால் நடந்தே போகலாம். சர்க்கஸ் பார்த்துவிட்டு திரும்பும் போது பஸ்ஸில் வரலாம் என்றாள் அம்மா.

அதன்படியே ஞாயிறு மாலை நான்கு மணிக்கெல்லாம் டவுசர் சட்டை போட்டு தயராக இருந்தேன்.

அம்மாவும் தங்கைகளும் கிளம்பி வர மணி ஐந்தரை ஆனது. ஷோ ஆறரை மணிக்கு தான் என்பதால் நேரமிருக்கிறது என்றாள் அம்மா.

நாங்கள் நால்வரும் தந்தி ஆபீஸ் தெரு வழியாக நடந்து செல்ல ஆரம்பித்த போது சர்க்கஸ் யானை வந்து கொண்டிருந்தது. அதன் மீது ஒரு கோமாளி உட்கார்ந்திருந்தான்.

அந்த யானையைப் போலப் பத்து யானைகள் சர்க்கஸில் இருப்பதாக என் தங்கை சொன்னாள்

“உனக்கு எப்படித் தெரியும்“ எனக்கேட்டேன்

“என் பிரண்டு நேத்தே சர்க்கஸ் பாத்துட்டு வந்துட்டா.. அதுல யானை சைக்கிள் ஒட்டுதாம், கிரிக்கெட் விளையாடுதாம்“ என்று சொல்லி சிரித்தாள்

ஜவகர் மைதானத்திற்குப் போகும் வரை மனதில் காண்டாமிருகம் பற்றியே நினைத்துக் கொண்டு வந்தேன்.

சர்க்கஸ் கூடாரம் வட்டவடிவில் அமைக்கபட்டிருந்த்து. நான்கு டிக்கெட் கவுண்டர்கள். கூடாரத்தின் வெளியே கிழட்டு ஒட்டகம் ஒன்று கட்டிப் போடப்பட்டிருந்தது. ஒரு குரங்கு கூடாரத்தின் உயரத்தில் தொப்பி அணிந்தபடியே போகிற வருகிறவர்களுக்கு வணக்கம் சொல்லிக் கொண்டிருந்தது.

அப்பா டிக்கெட் எடுக்கப் போன போது அம்மாவும் நானும் விளம்பர பலகையைப் பார்த்துக் கொண்டிருந்தோம். மெலிந்த உடல்கொண்ட பார் விளையாடும் பெண்களின் உருவத்தை அம்மா ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

சர்க்கஸ் பெண்கள் ஏன் இப்படி டைட்டாக உடை அணிகிறார்கள் என வியப்போடு நான் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அப்போது சர்க்கஸ் நுழைவாயில் சிறிய மேடை போல அமைக்கபட்டிருந்த்து. அதனைச் சுற்றிலும் நிறையக் கூட்டம் இருப்பதைக் கண்டேன்.

“அம்மா அங்கே போவோம் வா“ எனக் கையைப் பிடித்து இழுத்தேன். அம்மாவும் தங்கையும் என்னோடு வந்தார்கள்

சிறியதொரு மேடையது. அதில் ஒரு ஆள் உட்கார்ந்திருந்தான். அவன் தலைக்கு மேலே மின்சார மனிதன் என எழுதப்பட்டிருந்தது.

சிவப்புச் சட்டை சிவப்புப் பேண்ட் அணிந்த அந்த மனிதன் முக்காலி ஒன்றில் உட்கார்ந்திருந்தான். அவன் கையில் ஒரு குண்டு பல்ப் எரிந்து கொண்டிருந்த்து. அவன் காலடியில் அடியில் என்னைத் தொடாதே என்று எச்சரிக்கை பலகை வைக்கபட்டிருந்தது.

சர்க்கஸ் கோமாளிகளில் ஒருவன் அந்த ஆள் அருகில் வந்து விரலால் அவனைத் தொட்டு ஷாக் அடிப்பது போலக் கத்தினான்.

அந்த ஆள் தன் பல் இடுக்கில் ஒரு  வயரை கொடுத்து அதன் முனையில் இருந்த  பல்பை  எரியச்   செய்தான். அந்த பல்ப்  பிரகாசமாக எரிந்தது.

என்னால் நம்பமுடியவில்லை. அவன் உடலில் இருந்து கரண்ட் வெளியாகிறது.

அந்த ஆளை திகைப்போடு பார்த்துக் கொண்டிருந்தேன். முப்பது வயதிருக்கும். ஒடுங்கிய முகம். அதில் லேசான தாடி. சிறிய கண்கள். கழுத்து எலும்பு உயர்ந்திருந்தது. மொட்டை அடித்துச் சில நாட்களே ஆனது போலத் தலைமுடி. அவன் கூட்டத்தில் தன்னை வேடிக்கை பார்க்கிற எவரையும் நிமிர்ந்து பார்க்கவேயில்லை. செதுக்கி வைத்த சிலையைப் போல அவன் சலனமற்றிருந்தான். அவன் கையில் உள்ள பல்ப்பை அருகில் உள்ள மர ஸ்டேண்ட் ஒன்றில் வைத்துக் கொண்டான் அந்த ஸ்டேண்டில் மூன்று நான்கு விதமான குண்டு பல்ப்புகள் இருந்தன.

அந்தப் பல்ப்பில் எதை அவன் கையில் ஏந்தினாலும் அது பிரகாசமாக எரிய ஆரம்பித்து.

“சட்டை பாக்கெட் உள்ளே  சீக்ரெட் கனெக்ஷன் இருக்கும்“ என ஒரு ஆள் சந்தேகத்துடன் சொன்னார்.

அது அவனுக்குக் கேட்டிருக்கக் கூடும். அந்த ஆளை அருகில் அழைத்துச் சட்டையை அவிழ்த்து உதறிக் காட்டினான். மயிர் அடர்ந்த மார்பு. உடம்பில் வயர் எதுவுமில்லை.

கோமாளி இப்போது மைக் ஒன்றை எடுத்துக் கொண்டு வந்து நின்று சப்தமிட்டான்

“உலகில் யாரும் செய்ய முடியாத அதிசயம். இதோ ஒரு அதிசய மின்சார மனிதன். இவன் தொட்டால் எந்தப் பல்ப்பும் எரியும். இவன் உடலில் மின்சாரம் ஒடுகிறது. சந்தேகம் இருந்தால் அருகில் வந்து தொட்டுப்பாருங்கள். ஷாக் அடிக்கும். கையைப் பிடித்துக் கொண்டே இருந்தால் பஸ்பமாகிவிடுவீர்கள் “

கூட்டத்தில் ஒருவரும் அவனைத் தொட்டுப்பார்க்க எத்தனிக்கவில்லை. பயத்துடன் விலகி நின்று கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பல்பாக எடுத்து எரிய வைத்து கைதட்டு வாங்கியதும் குள்ளன் காசு போடும்படி கேட்டுக் கொண்டான். மரப்பெட்டி ஒன்றில் ஆட்கள் சில்லறைகளைப் போட்டார்கள். அவன் தனது வேலை முடிந்தவுடன் தனது முக்காலியில் உட்கார்ந்து கொண்டான்.

“எப்படி அவன் உடலில் மின்சாரம் ஒடுகிறது அவனைத் தொட்டுப்பார்த்தால் எப்படியிருக்கும். “

பயத்தோடு அவனைப் பார்த்தபடியே இருந்தேன். அப்பா டிக்கெட் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.

அவருக்கு மின்சார மனிதனை பிடிக்கவில்லை

“இவனை நம்பவீட்டுக்கு கூட்டிட்டுப் போயிட்டா கரெண்ட் செலவு மிச்சம்“ என்றார்

“இவனுக்கு யாரு சோறு போடுறது“ எனக்கேட்டாள் அம்மா

எனக்கோ அவன் எப்படி மின்சார மனிதனாக இருக்கிறான் என்ற வியப்பு கலையவேயில்லை. சர்க்கஸ் உள்ளே சென்று உட்கார்ந்த போதும் மனதில் மின்சார மனிதன் ஒளிர்ந்து கொண்டேயிருந்தான்.

யானைகள் அணிவகுத்து வந்தன. குதிரைகள், கரடி புலி, சிங்கம் காண்டாமிருகம் என விதவிதமான விலங்குகள் சாசகங்களைச் செய்து காட்டின. எதுவும் என்னைக் கவரவில்லை.

வெளியே எப்போது போவோம் .மின்சார மனிதனை எப்போது காணுவோம் என்பதிலே மனது துடித்துக் கொண்டிருந்தது.

சர்க்கஸில் இடைவேளை விட்டபோது வெளியே எட்டிப்பார்த்தேன். அவனது முக்காலி மட்டுமே கிடந்த்து ஆளைக் காணவில்லை. சர்க்கஸ் முடிந்து வெளியே வரும்போது மின்சார மனிதன் அடுத்த ஷோ பார்வையாளர்களைச் சந்தோஷப்படுத்த பல்பை எரிய விட்டு காட்டிக் கொண்டிருந்தான். நின்று அதை வேடிக்கை பார்க்கலாம் எனத்தோணியது. ஆனால் அப்பா விடவில்லை

வீட்டிற்கு வந்தவுடன் அம்மாவிடம் அவன் எப்படி மின்சார மனிதன் ஆனான் என்று கேட்டேன்

“கரண்டைக் குடிச்சிருப்பான்“ என்று சொல்லி கேலி செய்தாள் என் தங்கை.

அம்மா மறுத்து தலையாட்டியபடி “அது ஒரு மேஜிக்“ என்றாள்

“என்ன மேஜிக்“ எனக்கேட்டேன்

“பேசாம போய்த் தூங்கு. காலையில் உனக்கு ஸ்கூல் இருக்கு“ என அதட்டிப் படுக்க வைத்தாள். பாயை விரித்துப் போட்டு படுத்துக் கொண்ட போது மனதில் மின்சார மனிதனும் அவன் கையில் எரியும் பல்ப்பும் தோன்றியபடியே இருந்தது

பள்ளிக்கூடத்திற்குப் போன போதும் அவனைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று மாலை யாருக்கும் தெரியாமல் அவனை வேடிக்கை பார்க்க நடந்தே ஜவகர் திடலுக்குப் போனேன்.

நான் போன போது நாலரை மணியே ஆகியிருந்த்து. சர்க்கஸ் கூடாரத்தில் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. பார் விளையாடும் பெண்கள் துவைத்து காய வைத்த துணிகளை மடித்துக் கொண்டிருந்தார்கள். சர்க்கஸ் பணியாளர்கள் அத்தனையும் அங்கேயே கூடாரம் அடித்துத் தங்கியிருந்தார்கள். அதில் ஒரு கூடாரத்தில் குழந்தை வீறிட்டு அழும் சப்தம் கேட்டது. ஆறு குட்டிநாய்களை ஒரே சங்கிலியால் இணைத்துப் பிடித்தபடி ஒரு நெட்டையான ஆள் நடந்து போய்க் கொண்டிருந்தான். கூண்டில் அடைக்கபட்ட மிருகங்கள் வெயில் தாங்க முடியாமல் அசந்து கிடந்தன.

சனி ஞாயிறு இரண்டு நாட்கள் மட்டுமே மதியக்காட்சி மற்ற நாட்களில் இரண்டே காட்சிகள் என்பதால் பகலில் சர்க்கஸ் ஆட்கள் ஒய்வெடுத்தார்கள்.

மின்சார மனிதன் உட்கார்ந்திருக்கும் மேடையின் முன்னால் என்னைத் தொடாதே என்ற எச்சரிக்கப் பலகை மட்டும் கிடந்த்து. அதைக் கையில் தொட்டுப் பார்த்தேன். ஷாக் அடிக்கவில்லை.

மின்சார மனிதன் கையில் ஒரு குழந்தையுடன் கூடாரம் ஒன்றின் முன்னால் நின்றிருந்தான். அந்தக் குழந்தை அழுது கொண்டிருந்த்து. அதன் அழுகையை அடக்க உலாத்திக் கொண்டிருந்தான். இப்போது அவன் லுங்கி கட்டியிருந்தான். பச்சை நிற பனியன் அணிந்திருந்தான்.

அவன் கையைத் தொட்டால் அந்தக் குழந்தைக்கு ஷாக் அடிக்காதா எனப் பயமாக இருந்தது.

கூடாரத்தில் இருந்து ஆரஞ்சு வண்ண சேலை கட்டிய ஒரு பெண் வெளியே வந்து குழந்தையை வாங்கிக் கொண்டு ரெண்டு தேயிலை பாக்கெட்டும் அரைமுடி தேங்காயும் வாங்கிட்டு வா எனச் சப்தமாகச் சொன்னாள்.

மின்சார மனிதன் தலையாட்டிக் கொண்டு வெளியே நடந்தான். அப்போது கறுப்பு நிற அம்பாசிடர் ஒன்று கூடாரத்தின் முன் வந்து நின்றது. சபாரி உடை அணிந்த ஒரு ஆள் அதிலிருந்து இறங்கினார்

அந்த ஆளுக்கு மின்சார மனிதன் சல்யூட் வைத்தான். அந்த ஆள் ஏதோ சொல்வது கேட்டது

கைகட்டியபடி தயங்கி தயங்கி மின்சார மனிதன் அந்த ஆளிடம் ஆயிரம் ரூபா அட்வான்ஸ் வேணும் எனக் கேட்டான்.

“சும்மா காசு காசுனு உசிரை எடுக்காதே.. வசூல் ரொம்பக் கம்மி. ஏற்கனவே உனக்கு நாலாயிரம் ஜாஸ்தி குடுத்துருக்கேன்.. அடுத்தவாரம் பாப்போம்“

“இப்படிச் சொன்னா எப்படி முதலாளி. புள்ளைக்கு உடம்பு முடியலை. ரெண்டு நாளா வாந்தி. காச்சல். ஒரே அழுகை. ராத்திரி ஒரு பொட்டு தூங்கலை. “

அந்த ஆள் சபாரி பாக்கெட்னுள் கைவிட்டு இரண்டு பத்து ரூபாயை எடுத்து நீட்டியபடியே சொன்னார்

“இதுக்கு மேலே சல்லிகாசு தரமுடியாது. “

அவன் இருபது ரூபாயை வாங்கிப் பாக்கெட்டில் திணித்துக் கொண்டான். அது போதாது என்பது அவனது கண் பார்வையிலே தெரிந்த்து. சபாரி அணிந்த ஆள் புக்கிங் ரூமை நோக்கி நடந்தார்.

நான் மின்சார மனிதன் பின்னால் அவன் அறியாமல் நடந்தேன். அருகில் போய் உனக்கு எப்படி இந்தச் சக்தி வந்தது எனக் கேட்க விரும்பினேன். ஆனால் தைரியம் வரவில்லை. ஒருவேளை அவன் என்னைத் தொட்டுவிட்டால் ஷாக் அடிக்குமே எனப் பயமாக இருந்த்து.

அவன் என்னைத் திரும்பி பார்க்கவேயில்லை. முக்குரோட்டில் இருந்த ஒரு கடையில் அவன் அரைமுடி தேங்காயும் தேயிலை பாக்கெட்டும் வாங்கிவிட்டுத் திரும்பி வரும் போது என்னைப் பார்த்து விட்டான்.

“என்னடா வேணும்“ எனக் கோபமான குரலில் கேட்டான்

“உங்களைத் தொட்டா எப்படி லைட் எரியுது“

“என் உடம்புல கரண்ட் ஒடுது“

“பொய்.. உங்க புள்ளையைத் தூக்கி வச்சிருந்தீங்க. அதுக்கு ஷாக் அடிக்கலை “

“நான் . கரண்டை ஆப் பண்ணிகிடுவேன். உங்க வீட்ல ஸ்விட்சை ஆ பண்ணிட்டா லைட் எரியாதுல்ல“

“நிஜமாவா“ எனக் கேட்டேன்

தலையாட்டிபடியே அவன் கேட்டான்

“காசு வச்சிருக்கியா“

“இல்லே.. “

“பின்னே என்ன மசிருக்குடா பின்னாடி வர்றே. ஒடு“ என விரட்டினான்

அந்தக் குரலில் அவன் என்னை மின்சாரத்தால் பஸ்பமாக்கி விடுவானே என்ற பயம் உருவானது.

அவனது பின்னால் போகாமல் ஒதுங்கி நின்று கொண்டேன். அவன் சர்க்கஸ் கூடாரத்திற்குப் போவதை பார்த்தபடியே இருந்தேன். பிறகு ஷோ ஆரம்பிக்கும் நேரம் நான் ஜவகர் மைதானத்தை நோக்கிப் போனேன். சர்க்கஸ் மிருகங்கள் அணிவகுந்து நடந்து கொண்டிருந்தன. நுழைவாயிலின் முன்பாக அதே மேடை. அந்த ஆள் சிவப்புச் சட்டை. சிவப்புப் பேண்ட். அணிந்து ஒரு இயந்திரம் போல உட்கார்ந்திருந்தான். அன்றைக்கு நிறையக் கூட்டம். எப்போதும் போல விதவிதமான பல்ப்புகளை எரிய விட்டுக் காட்டினான்.

கூட்டத்தில் இருந்த ஒரு ஆள் சந்தேகத்துடன் அவன் விரலை தொட்டான்

மறுநிமிஷம் ஷாக் அடித்துக் கையை இழுத்துக் கொண்டபடியே சுரீர்னு இழுக்குது என்றான்.

நான் கூட்டத்திற்குள் ஒளிந்தபடியே மின்சார மனிதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். அவனால் எந்த இருட்டிற்குள்ளும் இப்படி ஒரு பல்ப்பை கையில் பிடித்தபடியே நடந்து போய்விட முடியும் இல்லையா என்று தோன்றியது.

வேடிக்கை பார்த்தவர்கள் மின்சார மனிதனின் முன்னால் இருந்த மரப்பெட்டிக்குள் சில்லறைகளைப் போட்டார்கள். ஒரு ஆள் மட்டும் ஐந்து ரூபாய் போடுவதைக் கண்டேன். பார்வையாளர்கள் கைதட்டுவதையோ, தன்னை ரசிப்பதையோ அந்த மின்சார மனிதன் விரும்பாதவன் போலவே நடந்து கொண்டான்.

ஷோ ஆரம்பித்து ஆட்கள் உள்ளே போன பிறகு சபாரி அணிந்த ஆள் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு போனான். எல்லாப் பல்ப்புகளையும் ஒரு மரப்பெட்டியில் வைத்து பூட்டி எடுத்துக் கொண்டு மின்சார மனிதன் கூடாரத்தை நோக்கி நடந்தான்.

நான் வீடு திரும்பினேன். சர்க்கஸில் உள்ள மின்சார மனிதனை காணுவதற்காகச் சென்றிருந்தேன் என வீட்டில் யாரிடமும் சொல்லிக் கொள்ளவில்லை.

அன்றிரவு பாத்ரூமிலுள்ள 40 வாட்ஸ் பல்ப்பை கழட்டி என் கையில் வைத்துக் கண்ணை மூடிக் கொண்டு மனதில் பல்ப் எரிய வேண்டும் என வேண்டிக் கொண்டேன். பல்ப் எரியவேயில்லை. ஆத்திரமாக வந்தது. பல்பை வீசி உடைத்துவிடலாமா என்று தோணியது. மறுபடியும் அந்தப் பல்பை ஹோல்டரில் மாட்டிவிட்டு வீட்டிற்குள் வந்தேன்.

எப்படி அந்த ஆள் உடம்பில் மட்டும் கரண்ட் ஒடுகிறது.

இந்தக் குழப்பம் என்னை உறங்கவிடாமல் அடித்தது. இதைப்பற்றி என் நண்பர்கள் பலரிடமும் கேட்டேன். ஒருவருக்கும் பதில் தெரியவில்லை

சேஷாத்ரி மட்டும் “அவன் மந்திரம் போட்டுப் பல்பை எரிய வைக்கிறான்“ என்று சொன்னான்

“என்ன மந்திரம்“ எனக்கேட்டேன்

“அதெல்லாம் வெளியே சொல்லக்கூடாது“ என்றான் சேஷாத்ரி

மின்சார மனிதனை காண்பதற்காக அடுத்த நாள் மதியமே போயிருந்தேன். அவனது கூடாரம் தெரியும் என்பதால் அதன் முன்பாகப் போய் நின்று எட்டிப்பார்த்தேன்.

சர்க்கஸ் குள்ளர்களில் ஒருவன் என்னிடம் “யானையைப் பாக்கணுமா“ எனக்கேட்டான்

“இல்லை. மின்சார மனிதன்“ என்று சொன்னேன்

“யாரு மணியா“ எனக்கேட்டான் குள்ளன்

அப்போது தான் மின்சார மனிதனின் பெயர் மணி என்று தெரிந்தது. ஆமாம் எனத் தலையாட்டினேன்

“அவன் குழந்தைக்கு உடம்பு முடியலை.. காச்ச அடிக்குது.. ஆஸ்பத்திரிக்கு கொண்டுகிட்டு போயிருக்காங்க“ என்றான் குள்ளன்

“அவரு ஒடம்புல எப்படிக் கரண்ட் ஒடுது“ எனக்கேட்டேன்

“எல்லாம் துட்டுச் சம்பாதிக்கச் செய்ற வேலை“ என்றான் குள்ளன்

அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை.

நான் சர்க்கஸை விட்டு வெளியே வந்தேன். எந்த ஆஸ்பத்திரிக்கு போயிருப்பான். ஒருவேளை அவன் உடம்பில் ஒடுகிற கரண்ட் ஷாக் அடித்துத் தான் குழந்தைக்குக் காய்ச்சல் வந்திருக்குமா. குழப்பமான யோசனையுடன் நான் வீடு திரும்ப நடந்து வந்து கொண்டிருந்த போது அப்பாவின் நண்பர் ஜெயராம் என்னை அடையாளம் கண்டவராக “எங்கடா போயிட்டு வர்றே“ எனக்கேட்டார்

“பிரண்ட் வீட்ல போயி மேக்ஸ் நோட்ஸ் வாங்கிட்டு வர்றேன் அங்கிள்“ என்றேன்

“வா.. பைக்ல ஏறு. நானே வீட்ல கொண்டுட்டு வந்து விட்டுறேன்“ என்றார் ஜெயராம்

“வேண்டாம்“ என மறுத்தபோதும் அவர் விடவில்லை. வீட்டுவாசலில் அவர் பைக்கில் இறக்கிவிட்டுப் போவதை தங்கை கவனித்து அம்மாவிடம் சொன்னாள்

அன்றிரவு அப்பா ஸ்கேலால் என்னை அடித்தபடியே “தினம் சர்க்கஸ் கேட்குதா.. ஏது காசு.. எங்கிருந்து திருடுனே, ஒழுங்கா படிக்கத் துப்பில்லை.. அறிவு கெட்ட நாயி“ எனத் திட்டியபடியே அடித்தார்

மின்சார மனிதனைக் காணப் போனதைப் பற்றி ஒருவரிடமும் சொல்லவேயில்லை. அதன் நான்கு நாட்களுக்குப் பள்ளிவிட்டதும் என் தங்கையோடு வீடு திரும்பினேன். விளையாடக் கூட வெளியே போகவில்லை. ஐந்தாம் நாள் வீட்டிற்கு வந்து பையைப் போட்டுவிட்டு ரகசியமாக ஜவகர் திடலை நோக்கி ஒடினேன்.

அப்போது சர்க்கஸ் ஆரம்பமாகப் போவதற்காக அறிவிப்பு கேட்டுக் கொண்டிருந்தது

மின்சார மனிதன் அமர்ந்திருக்கும் மேடை காலியாக இருந்தது. என்னைத் தொடாதே என்ற எச்சரிக்கை பலகை கிழே விழுந்து கிடந்தது.

அந்த ஆள் எங்கே போனான். ஏன் அங்கே யாருமில்லை

இரண்டு குள்ளர்கள் பெரிய பந்து ஒன்றை தூக்கிக் கொண்டு நடந்து வந்தார்கள்.

அவர்களிடம் மின்சார மனிதன் வரலையா எனக்கேட்டேன்

“அந்த ஆளோட குழந்தை செத்துப் போச்சி.. அடக்கம் பண்ணிட்டு ஊருக்கு போயிட்டான். இனிமே வரமாட்டான். “

எதனால் குழந்தை இறந்து போனது. இனி மேல் அந்த மின்சார மனிதன் என்ன செய்வான்.

யோசனையுடன் அவன் வழக்கமாக அமரும் இடத்தின் அருகே நின்றிருந்தேன்.

என்னைத் தொடாதே என்ற எச்சரிக்கை பலகையை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு போய்விடலாமா எனத்தோன்றியது.

இனி அந்தப் பலகை எதற்காக.

அதைக் கையில் எடுத்தபோது தொலைவில் சபாரி அணிந்த ஆள் வருவது தெரிந்த்து. அதை வீசி எறிந்துவிட்டு நடந்தேன்.

சர்க்கஸ் உள்ளே கைதட்டும் சப்தம் பலமாகக் கேட்டுக் கொண்டிருந்தது

மின்சார மனிதன் எந்த ஊரை சேர்ந்தவன். எத்தனை வயதில் இருந்து இப்படி வேலை செய்கிறான். இது மாயமா இல்லை நிஜமா. எதுவும் எனக்குத் தெரியவில்லை

வீடு வந்து சேர்ந்த போது ஏனோ எனக்கு அழுகை வந்தது. அதைக் காட்டிக் கொள்ளவேயில்லை

அதன்பிறகு எந்தச் சர்க்கஸிலும் அப்படி ஒரு மனிதனை நான் காணவேயில்லை. வீட்டில் எப்போது லைட் போடும் போதும் அவன் நினைவு வந்து போனது. குண்டு பல்புகளின் காலம் முடிந்து போகத்துவங்கியது.

நீண்ட பல வருஷங்களுக்குப் பிறகு “எல்லாம் துட்டு சம்பாதிக்கிறதுக்குச் செய்ற வேலை“ எனக் குள்ளன் சொன்னது புரிந்தது.

எப்படியாவது அவனை ஒருமுறையாவது சந்திக்க வேண்டும். அவன் கையைத் தொட வேண்டும் என்ற ஆசை மனதில் எப்போதும் ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது.

••

செப்டம்பர் 2 / 2018

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: