மதவிலக்கம்

1901ம் ஆண்டு ரஷ்ய கிறிஸ்துவத் திருச்சபை மதவிரோதக் குற்றசாட்டின் பெயரால் லியோ டால்ஸ்டாய்யை மதவிலக்கம் செய்தது. இதற்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் ரஷ்யாவில் நிறைய விவாதங்கள் நடைபெற்றன.

திருச்சபையினரிடம் மண்டியிட்டுத் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கறாராக அறிவித்தார் டால்ஸ்டாய் . ஆனால் அவரது மனைவி சோபியா தன் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்கபட்டுவிடுமே என்று பயந்து எப்படியாவது திருச்சபையை;ச் சமாதானப்படுத்த முயன்றார். அந்த முயற்சிகளுக்காக முக்கிய அரச பிரதிநிதிகள். மதகுருமார்களைத் தொடர்பு கொண்டார் ஆனால் திருச்சபை தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்தது.

டுகோபார் மக்களுக்காக டால்ஸ்டாய் பரிந்து பேசியதோடு அவர்களின் இடப்பெயர்வுக்கு நிதி திரட்டி அளித்து அவர்களைக் கனடாவில் குடியேற்றம் செய்ய வைத்தது ஜார் அரசின் கோபத்தினைத் தூண்டியது. ஆகவே அரசும் திருச்சபையும் டால்ஸ்டாயிற்கு எதிராக கைகோர்த்துக் கொண்டன

மதவிலக்கம் குறித்து டால்ஸ்டாய் கவலைப்படவேயில்லை. அது போலவே ஜார் அரசினைப்பற்றியும் அவருக்குப் பயமில்லை.  அவர் செவஸ்தபோல் கதைகள் எழுத  துவங்கிய காலத்தில் நாட்டுப்பற்றை உருவாக்குகிறார் என்று ஜார் மன்னர் வியந்து பாராட்டினார். பின்பு  ரஷ்யப் பஞ்சம் குறித்து டால்ஸ்டாய் கடுமையாக எழுதியது ஜாரிற்கு பிடிக்கவில்லை.  அதிகாரத்திற்கு துதி பாடுவது தன்வேலையில்லை என்று டால்ஸ்டாய் அறிந்திருந்தார். ஆகவே அவர் எதிர்ப்புகளை கண்டுகொள்ளவில்லை.

உனக்குள்ளே கடவுளே இருக்கிறார் என்று அறிவித்தார் டால்ஸ்டாய். அத்துடன் தனது பாணியில் சுவிசேசங்களை மறுஉருவாக்கம் செய்தார். வெளிப்படையாக திருச்சபை மீதான குற்றசாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார்.

டால்ஸ்டாய் இறந்த போது திருச்சபை எவ்விதமான இறுதி சடங்குகளையும் செய்ய அனுமதிக்கவில்லை. தேவாலயத்தில் பிரார்த்தனை நடத்தப்படவில்லை. கல்லறைத்தோட்டத்தில் இடம் தரவில்லை. டால்ஸ்டாய் இதனை முன்னதாகவே உணர்ந்திருந்தார். ஆகவே தனது பண்ணையில் புல்வெளியின் ஊடே தன்னைப் புதைத்துவிடும்படியாகவே டயரியில் எழுதியிருந்திருந்தார்.

டால்ஸ்டாயின் இறுதி ஊர்வலத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமானவர்கள் கலந்து கொண்டார்கள். அவரது சவப்பெட்டியை சுமந்து போனவர்கள் அறிவாளிகளோ, எழுத்தாளர்களோயில்லை. சாமானிய மக்கள். எளிய விவசாயிகள். அவர்களே இறுதி ஊர்வலத்தில் கண்ணீருடன் பின்தொடர்ந்தார்கள்.

டால்ஸ்டாயின் புதைமேடு எளிமையானது. இன்றும் அப்படியே பராமரிக்கபடுகிறது.

டால்ஸ்டாய் மதவிலக்கம் செய்யப்பட்டு நூற்றாண்டு கடந்தபோய்விட்டது. 2001ல் அவரது வம்சாவழியில் வந்தவர்கள் திருச்சபை இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் வைத்தார்கள். ஆனால் உலகம் போற்றும் எழுத்தாளராக இருந்தாலும் தங்கள் முடிவில் மாற்றமில்லை என்று மறுத்துவிட்டது. இன்றும் திருச்சபை அவரது மதவிலக்கத்தை நீக்கவில்லை.

ஒரு பக்கம் டுகோபார் மக்கள் லியோ டால்ஸ்டாயை புனிதராக நினைத்து வணங்குகிறார்கள். இன்னொரு பக்கம் திருச்சபை அவரை இன்றும் புரிந்து கொள்ள மறுக்கிறது.

வாழும் காலத்தில் மட்டுமின்றி இன்றும் டால்ஸ்டாய் எதிர்ப்பாளராகவே தொடர்கிறார்.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: