பிரபஞ்சனைச் சந்தித்தேன்

மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு தொடர் சிகிட்சைகள் பெற்று வரும் எழுத்தாளர் பிரபஞ்சனைக் காணுவதற்காகக் குடும்பத்துடன் சென்றிருந்தேன்.

நண்பர் இளவேனில் உடன் வந்திருந்தார்.

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறப்புப் பிரிவின் தனியறை…

நலம்பெற்று புன்னகையுடன் எழுதிக் கொண்டிருக்கும் பிரபஞ்சனைக் காண சந்தோஷமாக இருந்தது.

மருத்துவர்கள் சிறப்புக் கவனம் எடுத்துக் கவனித்துக் கொள்கிறார்கள். பத்திரிக்கையாளர் பிஎன்எஸ் பாண்டியன் பெரும்துணையாக இருந்து  உதவிகளைச் செய்து வருகிறார். நண்பர்கள்,எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலரும் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்துப் போகிறார்கள்.

நீண்ட ஒய்விற்குப் பிறகான புத்துணர்வுடன் பிரபஞ்சன் மகிழ்ச்சியாகப் பேசினார். புதிதாகத் தான் எழுத இருப்பதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். முகத்தில் சந்தோஷம் ஒளிர்ந்தது.

நான் முப்பது ஆண்டுகளாகப் பிரபஞ்சனை அறிவேன். எப்போது சந்தித்தாலும் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருப்போம். பிரபஞ்சன் ஒரு காபி பிரியர். நல்ல காபி எங்கே கிடைக்கும் எனத் தேடிப் போய்ச் சாப்பிடுவார்.

சரவணபவன் காபி அவருக்குப் பிடித்தமானது. சரவணப் பவனின் ஊழியர்கள் பலரும் அவரது வாசகர்கள். எப்போது சரவணபவனிற்குப் போனாலும் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பேசிக் கொண்டிருந்துவிட்டு இரண்டு காபி குடித்துவிட்டே பிரிவோம்-

பிரபஞ்சன் அளவிற்கு நட்பைக் கொண்டாடும் ஒரு மனிதரைக் காண முடியாது. அவரது அறை எப்போதும் நண்பர்களுக்காகத் திறந்திருக்கும். இளம் எழுத்தாளர்களைக் கொண்டாடக்கூடியவர். நல்ல படைப்புகளைத் தேடித்தேடி படிக்கக் கூடியவர்.

நேற்றைய சந்திப்பில் கூட இதைப்பற்றியே பேசினார்.

“மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையிலும் தினமும் பத்துப் பக்கம் படிக்காமல் எப்படி உறங்க முடியும்“ என்று கேட்டார்.  அது தான் பிரபஞ்சன்.

மிலி கிரகாம் போலக்கின் ‘காந்தி எனும் மனிதர் நூலை அவர் படிப்பதற்காக அளித்தேன். பேச்சு காந்தி பற்றியதாகத் திரும்பியது. காந்தியின் உடல் மிகுந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. காந்தி அரிதாக நோயுற்றிருக்கிறார். அதுவும் காய்ச்சல். வயிற்றுப்போக்கு போன்றவையே எனப் பேசிக் கொண்டிருந்தோம்.

கர்நாடக சங்கீதம் கேட்பது அவருக்குப் பிடித்தமானது. நேற்றும் அது குறித்துப் பேசிக் கொண்டிருந்தார். மருத்துமவனைச் செவிலியர்கள் தங்கள் தந்தையை நேசிப்பது போல அவரை நேசிக்கிறார்கள். உதவி செய்கிறார்கள்.

எழுத்தாளன் கனவுகளுடன் வாழ்பவன். அந்தக் கனவுகளே அவனது பலம். நேற்றைய சந்திப்பில் அதை முழுமையாக உணர்ந்தேன்.

மருத்துவமனையில் தன்னைக் காண வரும் நண்பர்களில் சிலர் தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள்.  உடல் நலமற்று இருப்பவர்களை கூட நிம்மதியாக இருக்க விடமறுக்கிறார்கள். அன்பின் பெயரால் பகிர்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது. ஆனால் அதையும் தவிர்க்கலாம் தானே எனப் பிரபஞ்சன் வருத்தத்துடன் தெரிவித்தார்.

மணக்குள விநாயகா  மருத்துவமனை  பிரபஞ்சனின் சிகிட்சைகளுக்காக கட்டணம் எதுவும் பெறவில்லை. ,   இந்த நற்செயலை செய்து வரும் அதன் நிர்வாகிகளுக்கும் மருத்துவர்களுக்கும். உறுதுணை செய்யும் நண்பர்களுக்கும் தமிழ் எழுத்துலகின் சார்பில்  நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எழுத்தாளனால் நண்பர்களை மட்டுமே சம்பாதிக்க முடியும். அந்த நட்பு எவ்வளவு மகத்தானது என்பதற்கு சான்றே இந்த நிகழ்வுகள்.

எனது புதிய நாவலைப் பற்றி அவருடன் பேசினேன். வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறேன் என உற்சாகமாகப் பேசினார்.

பிரபஞ்சனின் சிறப்புரைக்காக நானும் காத்திருக்கிறேன்.

வாருங்கள் பிரபஞ்சன். உங்களின் சொற்களால் ஆசிர்வதியுங்கள்.

••

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: