புதுவை இளவேனில்

பாண்டிச்சேரி போவது என்றாலே இளவேனிலுடன் சுற்றுவது என்று தான் அர்த்தம். எப்போது பாண்டிச்சேரி சென்றாலும் புகைப்படக்கலைஞர் இளவேனிலைச் சந்தித்துவிடுவேன். தேர்ந்த வாசகர். எழுத்தாளர்களை நேசிக்கும் ப்ரியத்துக்குரிய தம்பி.

எழுத்தாளர் கிராவை தாத்தா என்றே இளவேனில் அழைக்கிறார். கிராவும் தனது சொந்தப்பேரனைப் போல தான் இளவேனிலை நடத்துகிறார். இளவேனிலுடன் பேசிக் கொண்டிருப்பது உற்சாகம் தரக்கூடியது.

சமீபத்தில் அவருக்காக கிரா ஒரு நாவலை எழுதித் தந்திருக்கிறார். காலச்சுவடு பதிப்பகம் அந் நாவலை வெளியிட இருக்கிறது. 96வயது வயதில் கிரா ஒரு நாவல் எழுதியிருக்கிறார் என்பது மிகுந்த மகிழ்ச்சியான செய்தி. .

தன் மீதான அன்பில்  நாவலின் உரிமையை தனக்கே தந்துவிட்டார் தாத்தா என சந்தோஷமாகச்  சொன்னார் இளவேனில்

கிராவை சந்திக்க யார் விரும்பினாலும் உடனே இளவேனிலைத் தான் தொடர்பு கொள்வார்கள். எழுத்தாளர்கள், வாசகர்கள், என யார் வந்தாலும் உடனிருந்து கிராவின் இல்லத்திற்கு அழைத்துப் போய் உரையாடச் செய்து அவர்களுக்கான உதவிகள் செய்து தருவதில் இளவேனில் நிகரற்றவர்.

இளவேனில் கிராவைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். மிகச்சிறந்த படமது. எழுத்தாளர் சுந்தர ராமசாமி மீது மிகுந்த அன்பு கொண்டவர்.  இவர் எடுத்த சுந்தர ராமசாமியின் புகைப்படங்கள் அற்புதமானவை. அதைத் தனி நூலாகவும் வெளியிட்டிருக்கிறார்.

இரண்டு நாட்கள் இளவேனிலுடன் புதுச்சேரியில் சுற்றினேன். முழுநிலவைக் காணுவதற்காக இரவில் புதுச்சேரி கடற்கரைக்குச் சென்றிருந்தோம். உடன் புகைப்படக்கலைஞர் மதுவும் வந்திருந்தார். இரவு பனிரெண்டு மணியிருக்கும். முழுநிலவின் வெளிச்சத்தில் கடல் மினுங்கிக் கொண்டிருந்தது. கரும்பாறைகளில் அலைகள் மோதி சிதறின.. நாங்கள் ஒரு பாறையின் மீது அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஏகாந்தமான காற்று.  தொலைவில் ஒளிரும் கட்டிடங்கள்.

இரண்டு கீரிப்பிள்ளைகள் கடற்கரை மணலில் ஒடிக் கொண்டிருந்தன. கடற்கரையின் பாதி இருளில் இளைஞர்கள் சிலர் பந்துவிளையாடிக்  கொண்டிருந்தார்கள்.

இளவேனில் பேச்சின் ஊடாக என்னைப் புகைப்படங்கள் எடுத்திருப்பதை இப்போது தான் பார்த்தேன்.

நிலவின் முன்பாக அமர்ந்து உரையாடுவது மகிழ்ச்சியின் உச்சம்.

இதைச் சாத்தியமாக்கிய தம்பி இளவேனிலுக்கு நன்றி.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: