எந்த உலகில் வசிக்கிறோம்.

சதத் ஹசன் மண்டோவின் புகழ்பெற்ற கதை டோபா டேக் சிங். 1955ல் வெளியான இக்கதை லாகூரிலுள்ள பழமையான மனநலக்காப்பகம் ஒன்றில் வசிக்கும் பிஷன் சிங் என்பவரின் வாழ்க்கையை விவரிக்கிறது.

தற்போது பாகிஸ்தானிலுள்ள டோபா டேக் சிங் என்ற ஊரில் பிறந்து வளர்ந்தவர் பிஷன் சிங். வசதியான விவசாயி. நிலப்பிரச்சனை காரணமாக மனநோயாளியாக மாறுகிறார். அவரை லாகூரிலுள்ள மனநலக்காப்பகத்தில் சேர்க்கிறார்கள். பதினைந்து ஆண்டுகள் அங்கே தங்கியிருக்கிறார்.

இரவிலும் சரி பகலிலும் சரி அவர் உறங்குவதேயில்லை. அது போல உட்காருவதுமில்லை. நின்று கொண்டேயிருக்கிறார். சில நேரம் சுவரில் சாய்ந்து கொள்வது மட்டும் உண்டு. எந்நேரமும் நின்று கொண்டே இருந்ததால் அவரது கால்கள் வீங்கியிருக்கின்றன . ஆனாலும் அவர் படுத்து ஓய்வெடுப்பதில்லை

நடமாடும் விருட்சம் என அழைக்கபடும் பிஷன் சிங் எப்போதும் அர்த்தமற்ற சில சொற்களைப் புலம்பிக் கொண்டேயிருக்கிறார்.

பிரிவினையால் தேசம் இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகிறது. பிரிவினைக்கு மூன்று ஆண்டுகள் கழித்து இரண்டு அரசாங்கங்களும் குற்றவாளிகளை இடம் மாற்றிக் கொண்டது போலவே மனநலமற்றவர்களையும் இடம் மாற்றிக் கொள்ளவேண்டும் என்று திட்டமிடுகிறது. எந்த அறிவாளியின் யோசனை அது என்று தெரியவில்லை.

அதையடுத்து மனநலக்காப்பகத்திலுள்ள நோயாளிகளை அவரவர் தேசத்திற்கு அனுப்பிவிட அரசு முயற்சிக்கிறது. அதன்படி இந்துக்களும் சீக்கியர்களும் இந்தியா அனுப்பி வைக்கபட இருக்கிறார்கள். இதற்கான நாள் குறிக்கப் படுகிறது . அங்கிருந்தவர்கள் போலிஸ் பாதுகாப்போடு எல்லைக் கோட்டுக்கு அழைத்துச் செல்லப் படுகிறார்கள்

பிஷன் சிங் அவரது வீடு இருந்த டோபா டேக் சிங் கிராமம் எங்கே இருக்கிறது என்று கேட்கத் தொடங்குகிறார். ஆனால் அது இந்தியாவில் இருக்கிறதாஇல்லை பாகிஸ்தானில் இருக்கிறதா என்று யாருக்கும் தெரியவில்லை

அவர்களின் வாகனம் வாகா எல்லையை வந்து அடைகிறது

பிஷன் சிங்கின் முறை வந்த போது அதிகாரி பதிவேட்டில் அவர் பெயரை எழுதத் தொடங்கினார். அப்போது பிஷன் சிங் “டோபா டேக் சிங் எங்கே இருக்கிறது? எனக்கேட்கிறார்

“பாகிஸ்தானில்” என்கிறார் அதிகாரி . உடனே தான் அங்கே போக விரும்புவதாகப் பாகிஸ்தானை நோக்கி ஒட ஆரம்பிக்கிறார். அவரைத் தடுத்து நிறுத்துகிறார்கள். அவரோ திமிறிக் கொண்டு ஒட முயற்சிக்கிறார். தடுக்க வழியின்றி அவரை அங்கேயே நிற்க விட்டுவிட்டு மற்றவர்களை இடமாற்றம் செய்ய ஆரம்பிக்கிறார்கள்

இரவெல்லாம் எல்லையில் நின்று கொண்டிருந்த பிஷன் சிங் விடிகாலையில் பலத்த ஓலம் எழுப்புகிறார்

இரு பக்கங்களில் இருந்தும் அதிகாரிகள் ஓடிவந்து பார்க்கிறார்கள்

பதினைந்து வருடங்களாக, நின்று கொண்டிருந்த பிஷன் சிங் கீழே விழுந்து கிடக்கிறார்

அங்கே முள்வேலிக்கு அந்தப்பக்கம் இந்தியா இருந்தது. மறுபுறம் முள்வேலிக்குப் பின்னால் பாகிஸ்தான் இருந்தது. இரண்டுக்கும் நடுவே, பெயரில்லாத அந்தத் துண்டு நிலத்தில், கீழே டோபா டேக் சிங் இறந்து கிடக்கிறார். எனக் கதையை முடிக்கிறார் மண்டோ

கேதன் மேத்தா இயக்கியுள்ள இப்படத்தில் சதத் ஹசன் மண்டோ ஒரு கதாபாத்திரமாக வருகிறார். அவரே மனநலக்காப்பகப் பொறுப்பாளராகப் பதவி வகிக்கிறார். படம் அவரது வருகையில் தான் துவங்குகிறது. மனநலக் காப்பகத்தில் ஆண்கள் பிரிவு பெண்கள் பிரிவு, ஐரோப்பியர்களுக்கான பிரிவு என மூன்று தனிப் பிரிவுகள் இருக்கின்றன. உள்ளே இருப்பவர்களுக்கு ஆளுக்கு ஒருவிதப் பிரச்சனை.

பிஷன் சிங் குளிக்கவே மாட்டார். தன்னைத் தேடி உறவினர்கள் வருவார்கள் என்று அவரது மனதிற்குத் தோன்றும் நாளில் மட்டுமே குளிப்பார். ஒருமுறை அவரைத் தேடி மகள் வருகிறாள். அவளை அவருக்கு அடையாளம் தெரியவில்லை. யாரோடும் சண்டையிடாமல். கோவித்துக் கொள்ளாமல் தனக்குள்ளாக எதையோ புலம்பியபடி வெறித்தபார்வையுடன் வாழ்கிறார் பிஷன் சிங்.

இந்தியா சுதந்திரம் அடையப்போகிறது என ஒரு நாள் அவர்கள் கேள்விப்படுகிறார்கள். இதைக் கேள்வியுற்ற ஒரு வயசாளி மகிழ்ச்சி அடைந்து மணியடித்துத் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்துகிறார்.

உடனே மற்ற மனநோயாளிகள் ஒன்று கூடி சுதந்திரம் என்றால் என்னவென்று கேட்கிறார்கள். சுதந்திரம் என்பது ஒரு பறவை என்கிறான் ஒருவன். மற்றவனோ அது மழையின் பெயர் என்கிறான்.

யாருக்கும் சுதந்திரம் என்றால் என்னவெனறு தெரியவில்லை.

ஒருவன் வானை நோக்கி கையை உயர்த்திக் கடவுளிடம் கேட்கிறான். பதில் வரவில்லை. ஆகவே அவருக்கும் பதில் தெரியவில்லை. எனக்கும் பதில் தெரியவில்லை. ஆகவே நான் ஒரு கடவுள் என உரக்க அறிவிக்கிறான். இப்படிச் சுதந்திரம் என்றால் என்னவென்று அறியாத அவர்களையும் பிரிவினை பாதிக்கிறது.

ஒரு காட்சியில் நம் மனநலக்காப்பகம் இப்போது எங்கே இருக்கிறது என ஒருவன் கேட்கிறான். காப்பக நிர்வாகி பாகிஸ்தானில் என்கிறார். அது எப்படி இந்த இடம் பாகிஸ்தானாக மாறும். முன்பு இந்தியாவில் தானே இருந்தது எனக்கேட்கிறான். அப்படித் தான். மாறிவிட்டது என்கிறான் நிர்வாகி

உனக்கென்ன பைத்தியமா. அது எப்படிச் சாத்தியம்? இதே இடத்தில் சில நாட்களுக்கு முன் நாம் இந்தியாவில் தானே இருந்தோம்? நகராமல் எப்படி இது பாகிஸ்தானாக மாறும். யாருடைய முட்டாள்தனமது எனக்கேட்கிறான். அரசு அப்படித்தான் நடந்து கொள்ளும் என்கிறான் நிர்வாகி.

பிரிவினையின் போது வன்புணர்ச்சி செய்து மனநலம் பாதிக்கபட்ட ஒரு பெண்ணைக் காப்பகத்திற்கு அழைத்துக் கொண்டு வருகிறார்கள். அவள் இந்துவா, முஸ்லீமா. சீக்கியப்பெண்ணா எதுவும் தெரியவில்லை. அவளாகச் சொல்லாமல் எந்த அடையாளத்தையும் தெரிந்து கொள்ள முடியாது என்கிறாள் பணிப்பெண். அந்தப் பெண் திக்கித்துப் போயிருக்கிறாள். அவளது கண்கள் உறைந்த நிலையில் உள்ளன.

படத்தில் பங்கஜ் கபூர் டோபா டேக் சிங்காகச் சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் என்னை மிகவும் கவர்ந்த பாத்திரம் உதவியாளர் மியானாக நடித்துள்ளவரே. சிரித்த முகத்துடன் அவர் ஒய்விற்குப் பிறகும் வேலை செய்வதும், மனநலமற்றவர்களிடம் பரிவோடு நடந்து கொள்வதும் ஆறுதல் சொல்வதும் என அற்புதமாகச் சித்தரிக்கபட்டிருக்கிறார்

72 நிமிசங்கள் ஒடுகிற படம். பத்தே நாளில் இதைத் தயாரித்திருக்கிறார்கள்.

சாட்டையடி போல வசனங்கள். அழுத்தமான நடிப்பு. சிறந்த ஒளிப்பதிவு எனக் கேத்தன் மேத்தா சிறப்பானதொரு படத்தைத் தந்திருக்கிறார். மண்டோவின் சிறுகதையை வரிக்குவரி அப்படியே படமாக்கபட்டிருக்கிறார்கள் என்பது கூடுதல் மகிழ்ச்சி தருகிறது.

••

Archives
Calendar
December 2018
M T W T F S S
« Nov    
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
Subscribe

Enter your email address: