கவிஞர் ஆசை

கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து கவிஞர் ஆசையின் வலைப்பக்கத்திலுள்ள அவரது கவிதைகள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகளை வாசித்து வருகிறேன்.

(http://writerasai.blogspot.com/2017/06/blog-post.html)

அற்புதம். மிகச்சிறந்த கட்டுரைகள். மொழிபெயர்ப்புகள். வியந்து ரசித்து படித்துக் கொண்டிருக்கிறேன். அறிவியல் கட்டுரைகளை இவர் அளவிற்குச் சிறப்பாக யாரும் மொழியாக்கம் செய்திருப்பார்களா எனத்தெரியவில்லை.

தி இந்து நாளிதழில் இவரது மொழியாக்க கட்டுரைகள் வெளியான போது வாசித்திருக்கிறேன். ஆனால் அப்போது இவ்வளவு தாக்கம் ஏற்படுத்தவில்லை. இணையத்தில் ஒரு சேர இவற்றை வாசிக்கும் போது ஆசையின் எழுத்துலகின் விரிவையும் வலிமையையும் அறிந்து கொள்ள முடிகிறது.

நாம் கொண்டாட வேண்டிய முக்கியப் படைப்பாளி ஆசை.

ஆங்கில இலக்கியம் படித்துள்ள ஆசை க்ரியா பதிப்பகத்தில் சில ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். இவரது கொண்டலாத்தி என்ற கவிதை நூல் மிக முன்னோடியான ஒரு கவிதைத் தொகுப்பாகும். காரணம் பறவைகள் குறித்த கவிதைகள் மட்டுமே கொண்ட தொகுப்பது. இப்படித் தமிழில் இதுவரை எவரும் ஒரு கவிதைத் தொகுப்பினை வெளியிட்டதில்லை.

பேராசிரியர் தங்க. ஜெயராமனுடன் இணைந்து 2010ஆம் ஆண்டு ஒமர் கய்யாமின் ‘ருபாயியத்’ஐ மொழிபெயர்த்திருக்கிறார். மிகச்சிறந்த மொழிபெயர்ப்பு. வேறுபட்ட ஆங்கில மொழியாக்கங்களில் இருந்து எப்படித் தமிழ் மொழிபெயர்ப்பைத் தேர்வு செய்தார்கள் என்ற விரிவான மொழியாக்க அனுபவத்தையும் பதிவு செய்திருக்கிறார். தமிழில் இப்படியான மொழியாக்கம் அதன் முன்பு வரை நடந்ததில்லை.

பறவைகளின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்ட ஆசை பறவையியலாளர் ப. ஜெகநாதனுடன் இணைந்து ‘பறவைகள்’ என்ற கையேட்டினையும் உருவாக்கியுள்ளார். அது பறவைத் தேடல் கொண்டவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி நூலாகும்.

காந்தி குறித்தும், நேரு குறித்தும் இந்த இணையத்திலுள்ள கட்டுரைகள் மிக முக்கியமானவை.

புத்தக விமர்சனங்களை இவர் எழுதும் முறை நேர்மையாக அதன் நிறைகுறைகளை அலசுகிறது. சிறப்பான பகுதிகளை அடையாளம் கண்டு கொண்டாடுகிறது. தாவோ துவங்கி டாம் பிரௌன் வரையான இவரது வாசிப்பின் அகலம் வியப்பூட்டக்கூடியது.

ஆசை தற்போது தி இந்து தமிழ் நாளிதழில் பணியாற்றி வருகிறார்.

••

ஆசையின் எழுத்து எவ்வளவு நுட்பும் அழகும் கொண்டது என்பதற்கு இக்கட்டுரை ஒரு உதாரணம்.

••

அப்துல் கரீம் கானும் இறுதி மூச்சின் ரயில் நிலையமும்

(‘தி இந்து’ நாளிதழின் ‘கலைஞாயிறு’ பக்கத்தில் 11-06-2017 அன்று வெளியான என் கட்டுரையின் சற்று விரிவான வடி வம் இது)

கடந்த மாதத்தில், வாழ்வின் முக்கியமான நாளொன்றைச் செலவிட (திருமண நாள்) நானும் என் மனைவியும் தீர்மானித்த இடங்களில் ஒன்று சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையமும் ஒன்று. ரயிலில் இறங்கி ஏற அல்லாமல் வேறு ஒரு நோக்கத்தோடு இப்படி ரயில் நிலையம் செல்லும் தருணங்கள் அரிதாகத்தான் நிகழ்கின்றன. சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்துக்குப் பெரிய பெருமை ஒன்று உள்ளது. இந்துஸ்தானி இசையின் மிகப் பெரிய ஆளுமையான அப்துல் கரீம் கான் (11.11.1872 27.10.1937) இறுதி மூச்சு விட்ட நிலையம் அது.

இந்துஸ்தானி இசையின் மயக்கும் காந்தங்களில் ஒருவர் அப்துல் கரீம் கான். அந்த அளவுக்குப் பெண்மை ததும்பும் ஆண்குரல்கள் மிகவும் குறைவு. அவருடைய சங்கீதம், குரல் இனிமை இரண்டுமே எனக்கு மிகவும் பிடித்தமானவை. இந்துஸ்தானி இசை ரசனையில் ஆரம்ப நிலையில் இருக்கும் என்னையும் ஈர்க்கும் ஆளுமை அவர். இந்தியாவில் இசைத்தட்டில் முதன்முதலில் ஒலிக்க ஆரம்பித்த இசை ஆளுமைகளில் இவரும் ஒருவர் என்றே அறிகிறேன். அப்துல் கரீம் கான் நம்மூர் பாலசரஸ்வதியின் நண்பரும் கூட, கர்னாடக சங்கீதத்தையும் கற்றிருக்கிறார் என்பதை வைத்துப் பார்க்கும்போது இசை குறித்துத் திறந்த மனதை அவர் கொண்டிருந்தார் என்பது தெரியவருகிறது. அவர் விட்டுச் சென்ற இசைச் சொத்துக்களில் அவருடைய மகள் ஹீராபாய் படோடேகரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். தந்தையைப் போலவே அந்தக் குரலில் அவ்வளவு கனிவு, அவ்வளவு தேன்.

மெட்ராஸுக்கு வந்திருந்த அப்துல் கரீம் கான் புதுச்சேரி செல்வதற்காக ரயில் ஏறியிருக்கிறார். சிங்கபெருமாள் கோவில் நிறுத்தம் வந்தபோது அவருக்கு உடல்ரீதியாக ஏதோ அசௌகரியம் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே, ரயிலிருந்து கீழே இறங்கியிருக்கிறார் மருத்துவரீதியான உதவி கிடைக்கும் முன் அவருடைய இறுதி மூச்சுக் காற்றில் கலந்துவிட்டிருந்தது. விக்கிபீடியாவில் கூட இந்தத் தகவல் இல்லை. சாஸ்திரிய இசை வரலாற்றாசிரியர் வி. ஸ்ரீராம் ஒரு கட்டுரையில் அப்துல் கரீம் கான் மரணத்தைக் குறித்துச் சொல்லும்போது மேற்கண்ட தகவலைத் தருகிறார்

சிங்கபெருமாள் கோவிலுக்குப் போகிறோம் என்று சொன்னதும் நண்பர் ஒருவர், “ஸ்டேஷனில் இரு பக்கமும் நடந்து பாருங்கள். அப்துல் கரீம் கான் பற்றிய ஏதாவது நினைவுச் சின்னம், குறிப்பு தென்படுகிறதா என்று தேடிப்பாருங்கள்” என்றார். சிங்கபெருமாள் கோவில் நிலையத்துக்கு வந்தவுடன் அதேபோல் எனது தேடலை நான் ஆரம்பித்தேன். பயணச் சீட்டை எடுத்துவிட்டு என் மனைவி ஒரு சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்துகொள்ள, நான் அப்துல் கரீம் கானைத் தேட ஆரம்பித்தேன். இரண்டு பக்கமும் மெதுவாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். பிலாவல், மார்வா ராகங்களில் அமைந்த அவரது நான்கு, ஐந்து நிமிட நேர அற்புதத் துணுக்குகளைக் காதில் ஒலிக்க விட்டுக்கொண்டே இந்தத் தேடலை நிகழ்த்தினேன்.

அவரது மரணம் தொடர்பான தகவல்கள், நினைவுச்சின்னங்கள் ஏதும் அங்கே கிடைக்கும் என்ற எண்ணம் துளிகூட எனக்குத் தொடக்கத்திலிருந்து இல்லை. ஆயினும் இந்த நிலையத்துக்கு வந்து சேர்ந்ததிலிருந்து இசைவயமான ஒரு ஏகாந்தம் என் மனதில் உருவானது. அப்துல் கரீம் கானின் குரலும் ரயில் நிலையத்தின் அப்பட்டமான வெயிலும் அருகிலிருந்த ஒரு மரத்திலிருந்து ஒலித்துக்கொண்டிருந்த குயிலின் கூவலும் இந்த ஏகாந்த நிலையை என் மனதுக்குள் உருவாக்கின.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு (1937) அவர் இங்கே உயிர் விட்டிருக்கிறார். ஆனால், எண்பது ஆண்டுகாலப் பழமை வாய்ந்த ஏதும் அங்குத் தென்படவில்லை. வர்தா புயலில் என்ன மரம் என்று கண்டுபிடிக்க முடியாத மரமொன்று வீழ்ந்துபோய், இலைகளும் இல்லாமல், வேர்களின் அந்தரங்கத்தைக் காட்டிக்கொண்டிருந்தது. எண்பது ஆண்டுகளுக்கு முன்பு இந்த மரம் அங்கு இருந்ததா என்பது தெரியவில்லை. எனினும், எண்பது ஆண்டுகளுக்கு முந்தைய தரையில்தான் இந்த மரம் வளர்ந்து இன்று சாய்ந்தும் போயிருக்கிறது. இந்தத் தரையின் மேற்பரப்பில், பல கோடி அணுக்களைக் கொண்ட அவரது இறுதி மூச்சுக் காற்றின் ஏதாவது ஒரு அணுத்துகளாவது இன்னும் தங்கியிருக்கும் என்ற உணர்வு என்னுள் உறுதியாக இருந்தது. நம் ஒவ்வொருவர் உடலிலும் ஷேக்ஸ்பியரின் அணுக்கள் கணிசமாக இருக்கின்றன என்று பில் பிரைசன் என்ற அறிவியல் எழுத்தாளர் எழுதியிருக்கிறார்.

ரயில் நிலையம் முழுவதுமே சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டோ, அல்லது அதற்கு முந்தைய சமீபத்தில் புதுப்பிக்கப்பட்ட பழமை கொண்டதாகவோதான் காட்சியளித்ததே தவிர வேறுசில ரயில் நிலையங்களைப் போல நூற்றாண்டு பழமையைச் சுமந்துகொண்டிருக்கவில்லை. மேற்குப் பக்கத்தில், தாம்பரத்தை நோக்கியிருந்த, நிலையப் பெயர்ப் பலகை மட்டும் பழசு போல் தெரிந்தது.

ரயில் நிலையங்கள் அவற்றின் வரலாறு குறித்த ஆவணங்களை வைத்திருக்குமா என்பதுபற்றி எனக்குத் தெரியவில்லை. இந்த ரயில் வந்தது, அந்த ரயில் போனது, இன்னொரு ரயில் விபத்துக்குள்ளானது என்பதைத் தாண்டியும் ரயில் நிலையத்துக்கு வரலாறு இருக்கிறது என்பதை அப்துல் கரீம் கான் எனக்கு உணர்த்தினார். எவ்வளவு கூட்டம் இருந்தாலும் ஏகாந்தத்தையே சுமந்துகொண்டிருக்கும் ரயில் நிலையம், தன் இசையால் ஒவ்வொருவரிடமும் ஏகாந்தத்தை உருவாக்கிய அப்துல் கரீம் கான் என்று இரண்டு ஏகாந்தங்கள் ஒன்றையொன்று குறுக்கிட்டுக்கொண்ட, யாருமறியாத வரலாறு இது.

ரயில் நிலையத்தில் உள்ள அதிகாரிகளிடம் கேட்கலாமா என்று ஒரு கணம் யோசித்தேன். அவர்களுக்கு நிச்சயம் இது குறித்து ஏதும் தெரிந்திருக்காது. மேலும், சாதாரணத்தின் நடுவில் அசாதாரணம் குறுக்கிட்டால் இந்த நாளின் இயல்பு கெட்டுவிடும் என்று நினைத்தேன். என்னுள் ஏற்பட்டிருக்கும் விநோதமான, மங்கலான உணர்வை, வரலாறு குறித்த தேடல் துல்லியமானதொன்றாக ஆக்கிவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆகவே, அங்கே விசாரிக்கும் எண்ணத்தைக் கைவிட்டுவிட்டேன். இன்னொரு முறை இங்கு வரலாற்றுக்காகவே வந்து விசாரித்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். இங்கே மரணமடைந்த அப்துல் கரீம் கானின் உடலை எங்கே அடக்கம் செய்தார்கள் என்றும் அப்போது விசாரித்துப் பார்க்க வேண்டும்.

எண்பது ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு பெரிய இசை ஆளுமை இங்கே உயிர்விட்டிருக்கிறார். அது குறித்த ஒரு நினைவு கூட இங்கே எஞ்சியிருக்கவில்லை. மேலைநாடுகளில் 500 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேதை இப்படி உயிர்விட்டிருந்தால் அந்த இடமே நினைவுச்சின்னமாக ஆகியிருந்திருக்கும். ஒருவேளை, இந்தியக் கலையும் இந்திய மனமும் அடையாளமற்றுப் போவதுதானோ என்ற கேள்வியும் என்னுள் எழுகிறது.

அப்துல் கரீம் கானின் நினைவு ஏதும் இங்குத் தவழ்ந்துகொண்டிருக்குமா என்று தேடிக்கொண்டிருந்தபோது அருகிலிருந்த மரத்திலிருந்து குயிலொன்று கூவிக்கொண்டிருந்தது. அந்த மரத்துக்குக் கீழே போய் நின்று குயிலைத் தேடிப் பார்த்தேன். சற்று நேரம் கண் ஒடுக்கிப் பார்த்த பிறகு குயில் புலப்பட்டது. குயிலைத் தேட ஆரம்பித்தபோதே அது தன் பாடலை நிறுத்திவிட்டது. குயிலும் அப்துல் கரீம் கானும் ஒன்றல்ல, அவரின் ஆன்மா இதுவல்ல என்றாலும் ஒரே பிரபஞ்ச சங்கீதத்தை அள்ளிக் குடித்த உயிர்கள் என்ற வகையில் அந்தக் குயிலில், அதன் குரலில் அப்துல் கரீம் கானை தரிசித்ததாக உணர்ந்தேன். அதை நான் கண்டுவிட்ட பிறகு அது மறுபடியும் கூவவே இல்லை. அதன்பின், சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுவிட்டோம்.

•••

நவீன கவிதைப் பரப்பில் பெரும்பாலும் பறவைகள் குறியீடுகளாக, சங்கேதங்களாக, காட்சிப்படிமமாகவே  முன்வைக்கபட்டிருக்கின்றன. ஆசை அவற்றிலிருந்து முற்றிலும் வேறுபடுகிறார். பறவைகளை நாம் புரிந்து கொள்ளவேயில்லை. அவற்றை அடையாளப்படுத்தவும் அறிவின் துணைகொண்டு வகைப்படுத்தவுமே முனைகிறோம். உண்மையில் பறவைகள் இந்தப் பூமியின் மகத்தான விருந்தினர்கள் என்பதாகக் கொண்டாடுகிறார். பூமியே பறவைகளின் பொருட்டு உருவாக்கபட்டதாகக் கூறுகிறார்.

•••

தன் வாழ்நாள் முழுதும்

சிரமப்பட்டு

இந்த ஒரே ஒரு தேன்சிட்டைப்

படைத்தார் கடவுள்

பிறகு தேன்சிட்டுக்கென்று

தேனையும்,

தேனுக்குப் பூவையும்

பூவுக்கென்று செடியையும்

செடியிருக்கத் தரையையும்

தரைக்கெனப் பூமியையும்

பூமிக்கென் வானம்

நட்சத்திரங்களென்று

யாவற்றையும் படைத்தார் கடவுள்

என நீளும் அவரது கவிதை வரியில் உலகம் சட்டென உருமாறுகிறது. பறவைகள் உலகின் மீது தன் நீண்ட நிழலை பரவவிடுகின்றன. கடவுள் பறவைகளின் அரசனாக  தோற்றமளிக்கிறார்.

•••

இந்தத் தினத்தின் பெயர்

- ஆசை

எருக்கஞ்செடியில்

தேன்சிட்டு

பார்த்துக்கொண்டிருந்த

உன்னிடம் கேட்டேன்

‘இன்றைக்கு

என்ன கிழமை?’

ஏதோ நினைவில்

‘தேன்சிட்டு’ என்றாய்.

ஆம்

நீ சொன்னது சரிதான்

இந்தத் தினத்தின் பெயர்

தேன்சிட்டுதான்.

நாளைய தினத்தை இப்போதே அழைக்கிறேன்

குக்குறுவான் தினமென்று.

வாரத்தில் ஒரு நாள்

வாலாட்டி தினமும் இருக்க வேண்டும் என்று

நீ வைக்கும் வேண்டுகோளைக்

கொண்டலாத்தியும் கொண்டைக்குருவியும்

எதிர்க்காமல் இருக்க வேண்டும்.

பைனாகுலரிலிருந்து கையையும்

கண்ணையும் எடுக்காமலே கேட்கிறாய்

‘எந்த நாள் எந்தப் பறவையின் நாள்

என்று எப்படி அறிவது?’ என்று.

‘நீ கண் விழிக்கும்போது எந்தப் பறவை

உன்னிடமிருந்து அந்தத் தினத்தைச்

திருடிச் செல்கிறதோ

அந்தப் பறவையின் பெயரையே

அந்தத் தினத்துக்கு வைத்துவிடு’ என்றேன்.

‘அப்படியென்றால் உனக்கென்றொரு பறவை தினம்

எனக்கென்றொரு பறவை தினமென்று

நாம் தனித்தனியாகவே பெயர்வைப்போம் மாமா’

என்கிறாய்

இன்று காலை

எனக்கு நீ கற்றுக்கொடுத்தாய்

கிழமைகளுக்கு

உண்மையாகப் பெயர் வைக்க.

அது மட்டுமல்லாமல்

இன்று காலை

கிழமைகளுக்கு நீ கற்றுக்கொடுத்தாய்

உண்மையாகப் பறக்க…

••

இந்தக் கவிதையின் வழி நாட்கள் பறவைகளாக மாறி பறக்க த்துவங்குகின்றன. தினசரி வாழ்வை இப்படி யாரும் கலைத்து விளையாடியதில்லை. ஒவ்வொரு நாளையும் ஒரு பறவையின் பெயர் சொல்லி அழைப்பது எத்தனை வசீகரமானது. ஆசை தமிழ் நவீன கவிதையைச் சங்க மரபின் தொடர்ச்சியைப் போல மாற்றுகிறார்.  அதன் வழியே தனித்துவமிக்க நவீன கவியாக ஒளிருகிறார்.

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: