இவான் புனினின் காதல்

இவான் புனின் ரஷ்யாவின் புகழ்பெற்ற எழுத்தாளர். கவிஞர். ரஷ்யாவிலிருந்து முதன்முறையாக நோபல் பரிசு பெற்றவர். ஆன்டன் செகாவின் நண்பர். பதினைந்து வயதில் கவிதைகள் எழுதத் துவங்கியவர் இவான் புனின்.  சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார்.

The Village ,Dry Valley (1912), Mitia’s Love, Grammar of Love, The Life of Arseniev போன்றவை இவரது முக்கிய நூல்கள்.

இவான் புனினின் காதல்வாழ்க்கையை விவரிக்கிறது His Wife’s Diary திரைப்படம். இதை இயக்கியவர் Alexei Uchitel.

படத்தின் துவக்க காட்சியில் மரணப்படுக்கையில் இருக்கும் புனினிற்கு உதவி செய்கிறார் அவரது மனைவி வேரா. புனினின் நினைவுகள் வழியாகக் கடந்தகால வாழ்வு விரிவு கொள்ளத் துவங்குகிறது.

கவிஞரும் சிறுகதை ஆசிரியருமான இவான் புனினின் பெயர் நோபல் பரிசிற்குச் சிபாரிசு செய்யப்பட்ட 1933 ம் வருடம். தன்னை விட நாற்பது வயது குறைந்த இளம்பெண் கலினாவை (Galina Kuznetsova) தீவிரமாகக் காதலித்துக் கொண்டிருக்கிறார் இவான் புனின்.

இவ்வளவிற்கும் அவரது மனைவி வேரா ஒரு பேரழகி. கவிதை எழுதுவதில் ஆர்வம் கொண்ட கலினாவை தனது சிஷ்யையாக்கிக் கொண்ட புனின் அவளை உருகி உருகிக் காதலிக்கிறார்.

படத்தின் புனின் அறிமுகமாகும் காட்சியில் கடலில் அவர் நீந்திக் கொண்டிருக்கும் போது அருகில் அவரது காதலியும் மனைவியும் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள். காதலியே அவர் துடைத்துக் கொள்ளத் துண்டு தருகிறாள் நெருக்கமாகயிருக்கிறாள்.. இவான் புனினின் காதல் குறித்து அவரது மனைவி வேரா அறிந்த போதும் அவளால் அக் காதலை தடுக்கமுடியவில்லை.

ஒரே வீட்டில் அவர்கள் மூவரும் ஒன்றாக வசிக்கிறார்கள். இரவில் மனைவியை விடுத்து காதலியை தேடிச் செல்லும் புனினை காதலியும் கைவிடுகிறார். புனின் புலம்புகிறார்.

ஒரு நாள் புனின் வீட்டிற்கு தொலைபேசி செய்தி வருகிறது. நோபல் பரிசு கிடைத்துள்ள விபரத்தை புனினிற்குத் தெரியப் படுத்த விரைந்து போகிறார்கள். அவரோ காதலியோடு சினிமா பார்த்துக் கொண்டிருக்கிறார். தியேட்டருக்குள் சென்று தகவலைச் சொல்கிறார்கள்.

உடனடியாக அவர் தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. காதலியை அனுப்பிவிட்டு சிறிது நேரம் அவர் மட்டும் தனியே படம் பார்க்கிறார். பின்பு வெளியேறி தியேட்டர் வாசலில் நின்று கைகளை விரித்து கத்துகிறார். அந்தச் சந்தோஷம் மகத்தானது.

ரஷ்யாவிலிருந்து காதலி மற்றும் மனைவியோடு நோபல் பரிசு பெற ஸ்வீடனுக்குப் பயணம் செய்கிறார். வழியில் சந்திக்கும் மனிதர்களிடம் தனது காதலியை சிஷ்யை என அறிமுகம் செய்கிறார். உலகமே அவரது காதலை புறம்பேசுகிறது. அவர் அதை சட்டைசெய்யவேயில்லை.

நோபல் பரிசில் கிடைத்த பணத்தினைக் கொண்டு பிரான்சில் சந்தோஷமாக நாட்களைக் கழிக்கிறார். அப்போது ஒருநாள் அவரது காதலி கலினாவிற்கும் நடனக்கலைஞர் மார்காவிற்கும் உள்ள லெஸ்பியன் உறவை அறிந்து கொள்கிறார்.

கலினா இவான் புனினை விட்டு மார்காவோடு போக முயற்சிக்கிறாள். அதைப் புனின் அனுமதிக்க மறுக்கிறார். சண்டையிடுகிறார். இவருக்குள்ளும் வாக்குவாதம் உருவாகிறது.

ஒரு கட்டத்தில் கலினா அவரை விட்டுச் செல்ல முயற்சிக்க அவளிடம் கெஞ்சுகிறார். கண்ணீர் விடுகிறார். அவள் கேட்பதாகயில்லை. உடனே மார்காவிடம் தன் காதலியை திரும்பத் தந்துவிடு என்று மண்டியிட்டு கேட்கிறார். அவள் அலட்சியமாகப் பேசுகிறாள். இவான் புனின் காதலியின் பின்னாலே அலைகிறார். தவிக்கிறார். ஆனால் அவளை வசப்படுத்தமுடியவில்லை.

கலினா தன்னைப் பிரிந்த துக்கம் அவரை வாட்டுகிறது. மனைவியைத் திட்டுகிறார். கோவித்துக் கொள்கிறார். அவரது உலகம் கவலையும் சோகமும் கொண்டதாக உருமாறுகிறது. தன் காதல் வேதனைகளைப் படைப்பாக மாற்றுகிறார். சதா சர்வ நேரமும் கலினாவை நினைத்தபடியே இறுதி நாட்களைக் கழிக்கிறார்.

இந்த தகவல்களை புனின் மனைவி தனது நாட்குறிப்பில் முழுவதுமாக பதிவு செய்திருக்கிறாள். அதுவே படத்தின் மையமாக விரிகிறது.

இவான் புனினின் முதற்காதலி வரவேரா. அவரது வகுப்பு தோழி வீட்டின் எதிர்ப்பை மீறி அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். ஆனால் அந்தத் திருமணம் சில ஆண்டுகளில் முறிந்து போனது. பின்பு அன்னா என்ற பெண்ணைக் காதலித்தார். அவள் வழியே ஒரு மகன் பிறந்தான். ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவளை விலக்கி வெளியேறினார். பின்பு வேரா முரோமட்சீவா என்ற பணக்காரப் பெண் மீது காதல் கொண்டு அவளை 1922 ஆம் ஆண்டில் திருமணம் செய்துகொண்டார்,

1927 ஆம் ஆண்டு இளம் கவிஞராகக் கலினா குஸ்னெட்சோவா புனினிற்கு அறிமுகமானார். பார்த்த நாள் முதல் காதலாகி அவளைத் தன் வீட்டிலே தங்க வைத்துக் கொண்டார் புனின். இந்நிலையில் புனினை தேடி வந்த இளம் எழுத்தாளர் லியோனிட் ஜுரோவ் இவான் புனினின் மனைவி வேராவின் அழகில் மயங்கி அவர்கள் வீட்டிலே நிரந்தர விருந்தாளியாகத் தங்கிக் கொண்டுவிட்டார். இந்தக் காதல் குழப்பங்களையே திரைப்படம் விவரிக்கிறது.

2000ல் தயாரிக்கபட்ட இப்படம் இவான் புனினின் வாழ்க்கையைப் பொய்யாகச் சித்தரிக்கிறது என்றும் ரஷ்ய ஆட்சியாளர்கள். மற்றும் இலக்கிய உலகம் குறித்துத் தவறாக சித்தரிப்பு செய்துள்ளது என்றும் கூறி படத்தை ரஷ்ய அரசு தடைசெய்தது. ஆனால் படம் வெளியாகி திரைப்படவிழாக்களில் பெரும் பாராட்டினைப் பெற்றது,

படத்தின் ஒரு காட்சியில் ரயிலில் பயணம் செய்யும் இவான் புனின் குடும்பத்தை நாஜி ராணுவ அதிகாரிகள் விசாரணை செய்கிறார்கள். சந்தேகத்தின் பேரில் அவரது ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி அவமானப்படுத்துகிறார்கள். தான் நோபல் பரிசு பெற்ற எழுத்தாளன் என்று அவர் சொல்கிறார். அதைப்பற்றித் தங்களுக்குக் கவலையில்லை என்று உடைகளைக் களைகிறார்கள். அவமானத்தில் கூனிப்போய் அழுகிறார் இவான் புனின். அவரைத் தேற்றும்படி காதலியை அனுப்புகிறாள் இவானின் மனைவி. இவானின் கட்டுபடுத்தமுடியாத உணர்ச்சிப் பெருக்கு மிக அழகாகக் காட்சிப்படுத்தபட்டிருக்கிறது

இவான் புனினின் பித்தேறிய காதலை அவரது காதலி புரிந்து கொள்ளவில்லை. அவள் தனது தேவைகளுக்காகவே அவருடன் பழகுகிறாள். அது முடிந்தவுடன் அவரைக் கைவிடுகிறாள். ஆனால் புனின் எல்லா நிலைகளிலும் அவள் மீதான நேசத்திலே இருக்கிறார். ஒரு காட்சியில் அவளைச் சமாதானப்படுத்த அவள் பின்னாடியே ஒடுகிறார். அவள் எடுத்தெறிந்து நடத்தும் போதும் அவர் கோபம் கொள்ளவில்லை. மாறாக அவளைக் கட்டி அணைத்துக் கொள்ளவே முனைகிறார். காதலின் பித்துநிலைப்பட்ட அவரது வாழ்வின் கடைசி நாட்களைப் படம் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறது. சிறந்த ஒளிப்பதிவு. இசை  என படம் சிறப்பான அனுபவத்தைத் தருகிறது.

படம் பார்த்தபிறகு இவான் புனின் சிறுகதைகள் முற்றிலும் புதியதாக வாசிப்பில் மாறுகின்றன. அதற்காகவே ஒருமுறை இப்படத்தைப் பார்க்க வேண்டியுள்ளது.

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: