கண்ணீர் சிந்தும் சிறுவர்கள்.

மனிதனின் நிர்கதியான நிலையைப் பதிவு செய்வதில் சங்க இலக்கியம் முன்னோடியாக உள்ளது.

ஒரு மனிதன் நிர்கதியான நிலையில் தான் கடவுளை நம்பத்துவங்குகிறான்.

சகமனிதர்களை நோக்கிக் கைகூப்புகிறான். கருணையை வேண்டுகிறான்.

நிர்கதியின் போது உலகம் சிறியதாகிவிடுகிறது.

காலமும் சூழலும் தான் நிர்கதியை உருவாக்குகிறது.

போரில் வென்ற பின்பு மலையமானின் இரண்டுபிள்ளைகளை யானைக்காலில் இட்டு மிதிக்கச் சொல்லி ஆணையிடுகிறான் சோழன் குள முற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்.

அந்தக் கொடுஞ்செயலை எதிர்த்து கோவூர் கிழார் என்ற கவிஞர் ஒரு பாடலை எழுதியிருக்கிறார்.  புறநானூறு பாடல் எண் 46ல் இடம்பெற்றுள்ளது

மலையமான் திருக்கோவலுரைத் தலைநகரமாகக் கொண்ட மலைநாட்டுத் தலைவன். இவர்கள் பரம்பரையாகச் சோழப் பேரரசிற்கு உட்பட்டவர்கள். கிள்ளிவளவன் காலத்து மலையமான் சோழப்பேரரசை எதிர்த்தான். இதனால் இவன் மீது போர் தொடுத்த கிள்ளிவளவன் போரில் வென்று மலையமானின் இரண்டு பிள்ளைகளைச் சிறைபிடித்து யானை காலில் இட்டு கொல்ல ஆணையிட்டான்

யானையின் முன் நிறுத்தப்பட்ட இரண்டு சிறார்களின் நிர்கதியைத் தான் இப்பாடல் சித்தரிக்கிறது.

சங்கப்பாடல்களில் கோவூர் கிழார் பாடியவை 17 பாடல்கள். அதில் 15 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

கிள்ளிவளவனைப் போற்றிப் பாடியவர்களில் கோவூர் கிழார் முக்கியமானவர். ஆனாலும் அறம் இழந்தசெயலை செய்ய முற்படும் கிள்ளிவளவனைக் கிழார் கண்டிக்கிறார்.

அந்தக் கண்டித்தல் எத்தனை நாகரீகமாக, நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.

பாடலின் துவக்கத்தில் சோழமன்ன்ன் கிள்ளிவளவனின் மூதாதையர்களை நினைவுபடுத்துகிறார் கோவூர் கிழார். அவர்கள் புறாவின் துன்பத்தைக் கூடப் பொறுக்கமாட்டாதவர்கள். கொடையாளிகள். கருணைமிக்கவர்கள். பெரும் வீரர்கள் அதே நேரம் மலையமான் வம்சத்தினர் எப்படிப் பட்டவர்கள் என்றால் கஷ்டப்படும் உழவர்களுடன் தங்கள் உணவைப் பகிர்ந்து உண்ணும் மரபினர். உங்கள் இருவர் சண்டையில் பாவம் அறியாப்பிள்ளைகளான இந்தச் சிறுவர்கள் ஏன் உயிர் துறக்க வேண்டும்.

அங்கே நிற்கும் சிறுவர்களின் நிர்கதியான நிலையைப் பாருங்கள்.

யானை கொல்லப்போகிறதே என்று பயந்து அழுது, அதே நேரம் யானை அருகில் வர பயம் தெளிந்து வேடிக்கை பார்த்து பின்பு தன்னிலை உணர்ந்து அழும் சிறார்களாக இருக்கிறார்கள்.

நான் சொல்லவேண்டியதை சொல்லிவிட்டேன்.

இனி செய்வதைச் செய் என்று பாடல் முடிகிறது

நீயே புறவின்அல்லல் அன்றியும் பிறவும்

இடுக்கண் பலவும் விடுத்தோன் மருகனை

இவரே புலன்உழுது உண்மார் புன்கண்அஞ்சித்

தமதுபகுத்து உண்ணும் தண்ணிழல் வாழ்நர்

களிறுகண்டு அழூஉம் அழாஅல் மறந்த

புன்தலைச் சிறாஅர் மன்றமருண்டு நோக்கி

விருந்திற் புன்கண் நோவுடையர்

கேட்டனை யாயின்நீ வேட்டது செய்ம்மே.

பாடலில் முடிவு கிள்ளி வளவனிடம் விடப்படுகிறது.

பாடலை வாசிப்பவருக்கு அந்தச் சிறுவர்கள் என்ன ஆனார்கள்  என்ற பதைபதைப்பு உருவாகிறது.

கிழாரின் பாடலைக்கேட்டு அச்சிறார்களை கிள்ளிவளவன் விடுவித்துவிட்டானா. அல்லது கொன்றுவிட்டானா.

பாடலில் உருவம் இல்லாமல் தோன்றும் அந்த இரண்டு சிறுவர்கள் அழுதபடியே யானையின் முன் நிற்கும் தோற்றம் கண்ணில் தெரிகிறது.

அவர்கள் கையறு நிலையில் இருக்கிறார்கள்.  எந்த நாட்டில் போர் நடந்தாலும் இது தான் நிலை. அந்த சிறுவர்கள் எல்லா தேசத்திற்கும் பொதுவானவர்கள்.

கவிஞனை தவிர வேறு யார் அவர்கள் பொருட்டு வேண்ட முடியும். நீதி கேட்க முடியும்

கோவூர் கிழார் அந்த இரண்டு சிறார்களுக்காக மட்டும் குரல் எழுப்பவில்லை. அதிகாரத்தின் முன்பு கையறு நிலையில் இருக்கும் எல்லோருக்குமான பாடலையே எழுதியிருக்கிறார்.

சிறார்களைக் கொல்லாதே..விட்டுவிடு என்று கவிஞன் கட்டளையிடவில்லை.

நீயே முடிவு செய்து கொள் என்று தான் சொல்கிறார். கவிஞனால் அவ்வளவு தான் சொல்ல முடியும்.

அதிகாரத்தில் இருப்பவனின் அறமற்ற செயலை துணித்துச் சுட்டிக்காட்ட தயங்காதவர்கள் சங்க கவிஞர்கள்.

சோழன் கிள்ளிவளவன் புலவர்களை அள்ளிக் கொடுப்பவன். தான் வென்ற நகரங்களைக் கூடத் தானமாகக் கொடுக்கக் கூடியவன். அவனைத் தேடி வருபவர்களுக்குப் பெரும் விருந்தளிக்கக் கூடியவன். அந்த விருந்தில் சுடுசோறு சாப்பிட்டு வியர்த்துப் போனது தவிர வேறு எந்நிலையிலும் புலவர்களுக்கு வியர்வை வந்ததில்லை என்று அவனைப் புகழ்ந்து ஒரு பாடல் கூறுகிறது.

இத்தனை நெறிப்பட்ட ஒரு அரசன் ஏன் இரண்டு சிறார்களைக் கொல்லும்படி ஆணையிடுகிறான்.

போர் கொடியது என்பதற்கு இதை விடச் சிறந்த பாடல் இருக்க முடியுமா என்ன.

அந்தச் சிறார்களின் மனநிலை நிமிஷத்துக்குள் மாறுவதைப் பாடல் அழகாகச் சித்தரிக்கிறது. கொல்லப்போகும் யானை என்றாலும் அது நெருங்கி வருகையில் மனது வியப்போடு அதை ரசித்தே பார்க்கிறது. ஆனால் தன்னிலை உணர்ந்தவுடன் தானே அழுகை பீறிடுகிறது.

இரண்டு நினைவுகளைச் சுட்டிக்காட்டுகிறது இக்கவிதை , ஏன் இந்த நினைவுகள் மீள் எழுப்பபடுகின்றன. கடந்தகாலமே நிகழ்காலத்தின் செயல்களைத் தீர்மானிக்கிறது. வழிநடத்துகிறது. இந்த இரண்டு மன்னர்களும் மரபு வழி நடப்பவர்கள். அவர்களைத் தடுத்து நிறுத்த செய்யும் கடிவாளம் அவர்களின் முன்னோர் மரபே. அதைத் தான் கோவூர் கிழார் சுட்டிக்காட்டுகிறார்.

எதற்காக இந்தப் போர் என்ற விபரம் எதுவும் பாடலில் இல்லை. ஆனால் பாடல் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட இரண்டு சிறார்களின் கண்களில் வெளிப்படும் தவிப்பையே முதன்மைப்படுத்துகிறது.

The Scream என்ற எட்வர்ட் மஞ்ச் ஒவியத்தைப் பார்த்திருக்கிறீர்களா. அதில் ஒலமிட்டு ஒடி வரும் மனிதனின் சித்திரம் வரையப்பட்டிருக்கும். அந்த மனிதனின் துயரக்குரல் ஒவியத்தில் இல்லை. ஆனால் முகம் அந்த வலியை பிரதிபலிக்கிறது. அப்படியொரு காட்சியைத் தான் கோவூர் கிழாரும் காட்டுகிறார்.

இதே சிறார்கள் யானையைத் தங்கள் மலைநாட்டில் பார்த்திருப்பார்கள். யானையோடு விளையாடியிருப்பார்கள். ஆனால் யானையை ஒரு கொலைக்கருவியாக அறிந்திருக்கமாட்டார்கள். இன்றோ போரின் விளைவாக அவர்கள் யானையின் காலில் மிதிபடக் காத்திருக்கிறார்கள்.

உலகம் ஏன் இத்தனை கருணையற்றதாக இருக்கிறது என்ற கேள்வியில் இருந்தே கவிதை பிறக்கிறது.

நவீன கவிதையின் சிறப்பாக நான் கருதுவது, கச்சிதமாக ஒரு காட்சியைத் துண்டித்து முன்வைப்பது, மற்றும் துல்லியமாக உணர்ச்சிநிலையை விவரிப்பது. முழக்கங்கள் இல்லாமல் சொல்லவேண்டியதை சுட்டிக்காட்டுவது. இந்த மூன்றும் கோவூர் கிழாரின் பாடலிலே உள்ளது.

அது தான் இந்தப் பாடலை இத்தனை காலம் தாண்டியும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது

சாவின் முன் காத்திருக்கும் அந்தச் சின்னஞ்சிறு சிறார்களின் பக்கம் நிற்கிறது தமிழ் கவிதை.

அதுவே புறநானூற்றின் சிறப்பு.

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: