மேகங்களுக்கு அப்பால்

ஈரான் இயக்குனர் மஜித் மஜிதி (Majid Majidi) இயக்கிய Beyond the clouds பார்த்தேன். இந்தியாவில் அவர் படம் எடுக்கிறார் என்று கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அவர் ஒரு இந்திப்படம் எடுத்திருக்கிறார் என்பது படம் பார்த்தபிறகு தான் புரிந்தது.

போதை மருந்து கடத்தி விற்பனை செய்யும் ஒருவனின் கதை. அவனது அக்கா தன்னைப் பலவந்தப்படுத்தியவரைத் தாக்கிவிடுகிறாள்.. இதனால் அவளைக் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார்கள். சிறையில் அவள் என்னவாகிறாள் என்பது ஒரு புறம். மறுபுறம் தாக்கபட்டவனின் குடும்பம் என்ன ஆகிறது என்ற கதைச்சரடு. இரண்டுக்கும் நடுவே ஊசாலாடும் இளைஞனின் கதை.

சண்டை, பாடல்காட்சிகள். துரத்தல். கடத்தல் என்று பழைய ஹிந்திபடங்களைக் காண்பது போலவே இருக்கிறது. தற்போதைய ஹிந்தி சினிமா நிறையவே மாறியிருக்கிறது. இந்தக் குறைகளைத் தாண்டி படத்தை ரசிக்க வைப்பது எது.

படத்தின் ஒளிப்பதிவு. அனில்மேத்தா( Anil Mehta )படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர். இத்தனை அழகாக, வித்தியாசமாக மும்பையை யாரும் காட்டியதில்லை. குறிப்பாகச் சேற்றில் புரண்டு சண்டையிடும் போது பின்புலத்தில் பறவைகள் நூற்றுக்கணக்கில் விளையாடிக் கொண்டிருக்கும் நிலமும் அதையொட்டிய காட்சிகளும் அபாரம். அது போலவே வீட்டில் அவர்கள் நிழல்களை வரைவதும்,  மழைநாளின் போது அந்த வீட்டில் இருந்து வீதியை காணும் காட்சியும், புறாக்களைத் துரத்திவிடுவதும். ஆமிர் ஆரம்பக் காட்சியில் பைக்கில் செல்லும் போது காட்டப்படும் மும்பைக் காட்சிகளும் துள்ளும் இசையோடு நடனம் துவங்கும் இடமும் என ஆகச்சிறந்த ஒளிப்பதிவு. அதுவே படத்தின் தனிச்சிறப்பு.

மிக நுட்பமான உணர்வுகளைக் கவிதையாகத் திரையில் பதிவு செய்யும் இயக்குனர் மஜித் மஜிதியின் டச் இப்படத்தில் சில காட்சிகளில் மட்டுமே காணமுடிகிறது.

குறிப்பாக  புறாக்களிடம் தன் கொந்தளிப்பை கொட்டும் இளைஞனின் காட்சி. மழைநாளில் அந்தக் குடும்பத்தை வீட்டில் தங்க வைப்பது. மருத்துவமனையில் நோயாளி படுக்கை அடியில் உறங்குவது. சிறையில் எலியை கண்டு பயப்படும் தாராவிற்கும் அந்தச் சிறுவனுக்குமான உறவு. கடைசிக்காட்சியின் கவித்துவம் என்று மஜித் மஜிதி தனித்துத் தெரிகிறார்.

இந்தி சினிமாவின் சந்தை மிகப்பெரியது. அதற்குச் சர்வதேச இயக்குனர்கள் தேவைப்படுகிறார்கள். அவர்களைக் கொண்டு புதிய சந்தையை உருவாக்க முனைகிறது. அதன் பொருட்டே இது போன்ற படங்கள் உருவாக்கபடுகின்றன.

A. R. Rahman இசை படத்திற்கு மிகப்பெரிய பலம். பின்னணி இசை மிகப் பிரமாதமாக உள்ளது. இயக்குனர் கௌதம் கோஷ் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருக்கிறார். தாராவால் அடிபட்டு மருத்துவமனையில் சிகிட்சை பெறும் அவர் முகபாவங்களிலே தன் உணர்ச்சிகளைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

Beyond the clouds என்ற கவித்துவமான தலைப்புக்கு பொருத்தமான கதையில்லை. மஜித் மஜிதியின் முந்தைய படங்கள் அறிமுகமாத ஒருவருக்கு இந்தப் படம் பிடிக்கக் கூடும்.

0Shares
0