ஒரு தீவு : இரண்டு பயணங்கள்

சமீபத்தில் பார்த்த இரண்டு திரைப்படங்களிலும் மையாக இருந்தது டஹிடி (Tahiti) தீவு. பசிபிக் கடலிலுள்ள இந்தத் தீவு ஒரு காலத்தில் கலைஞர்களின் கனவுதேசம்.

டஹிடி பாலினேசியாவில் உள்ள மிகப்பெரிய தீவாகும். ஒவியர் பால் காகின் (Gauguin) இந்தத் தீவிற்குச் சென்று வாழ்ந்து வரைந்த ஒவியங்கள் அதன் புகழை உலகெங்கும் பரவச் செய்தன. இன்றும் சுற்றுலா பயணிகள் டஹிடி தீவினை உல்லாச உலகமாகக் கருதியே பார்வையிட வருகிறார்கள்.

Gauguin: Voyage to Tahiti என்ற 2017ல் வெளியான திரைப்படம் ஒவியர் காகின் டஹிடி தீவிற்குச் சென்ற பயணத்தை விவரிக்கிறது. அறுபத்து-மூன்று நாட்கள் கப்பலில் பயணம் செய்து இந்தத் தீவை அடைந்தார் காகின். 1891-1893 காலகட்டத்தில் காகின் டஹிடியில் வாழ்ந்த வாழ்க்கையே படத்தின் மையக்கரு.

1962ல் வெளியான மார்லன் பிராண்டோ நடித்த Mutiny on the Bounty திரைப்படம் டஹிடி தீவைத் தேடிப் போன பிரிட்டீஷ் கப்பலின் கடற்பயண அனுபவங்களைப் பேசுகிறது

இரண்டிலும் டஹிடியைத் தேடிப்போவதே மையநோக்கம்.

ஒவியர் பால் காகின் பாரிசில் அவருடைய டேனிஷ் மனைவி மற்றும் ஐந்து குழந்தைகளைக் கைவிட்டுவிட்டு, டஹிடி தீவைத் தேடி கிளம்புகிறார். இந்தப் படம் அவரது பயணத்திலே துவங்குகிறது

டஹிடி தீவு எந்தக் கட்டுப்பாடுகளும் இல்லாத இயற்கையின் பேரற்புதமான இடம். விரும்பிய பெண்களுடன் சேர்ந்து வாழலாம் என்ற சுதந்திரம் அங்கிருந்தது. நகரவாழ்வின் நெருக்கடிகள் எதுவும் அங்கே கிடையாது. இயற்கையோடு ஒன்றி வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டு ஒவியம் வரையலாம் என்றே காகின் அங்கே சென்றார்.

உண்மையில் அவர் விரும்பியது அன்றாடத் தொல்லைகள் எதுவுமில்லாமல் ஒவியம் வரைவதற்கான ஒரு இடம். குறிப்பாக மதுவும் பெண்களும் எளிதாகக் கிடைக்கும் இடம், இதற்காகவே அவர் டஹிடி தீவிற்குச் சென்றார்.  இரண்டு ஆண்டுகள் அங்கே வாழ்ந்த காகின் தீவுவாசியான டெஹூரா என்ற இளம் பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்தினார். அவளை விதவிதமாக ஒவியங்கள் வரைந்தார்.

முடிவற்ற நீலக் கடல், வெள்ளி நிறத்தில் சூரிய ஒளி பிரகாசிக்கும் வெளி என டஹிடி தீவின் இயற்கை காட்சிகளையும் வாழ்க்கையையும் சிறப்பான ஒவியங்களாக வரைந்திருக்கிறார் பால் காகின். தனது தீவுவாழ்க்கை குறித்த அனுபவங்களை நோவா நோவா என்ற புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.

இப்படம் இரண்டு புள்ளிகளை முதன்மைப்படுத்துகிறது. ஒன்று இயற்கை, மற்றொன்று காமம். இரண்டும் காகினை அதிகம் வசீகரிக்கின்றன. காமத்தின் வழியே அவர் படைப்பாற்றலின் தூண்டுதலைப் பெறுகிறார். இன்னொருபுறம் இயற்கையின் விநோதங்கள் அவரது சிருஷ்டியைக் கிளர்ச்சி கொள்ளச் செய்கின்றன. அதைக் கலையாக உருமாற்ற முனைகிறார். தன் அடையாளங்களை முற்றிலும் அழித்துக் கொண்டு அவர் தீவுவாசிகளின் உலகோடு தன்னைக் கரைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்.

அவரது ஒவியங்கள் நிர்வாண உடல்களை வரைவதுடன் இயற்கையை அதன் பிரம்மாண்டமான இருப்பின் வீரியத்துடன் சித்தரிக்க முற்பட்டன. இரண்டிலும் அவர் தோற்றுப் போகிறார். அவரது கட்டுப்பாட்டிற்குள் இரண்டும் அடங்க மறுக்கின்றன. வெல்லமுடியாத காமமும் அடக்கமுடியாத இயற்கையும் அவரை மாயச்சுழலுக்குள் சிக்கவைக்கின்றன.

மனிதர்களாலும் இயற்கையாலும் தான் ஏமாற்றப்படுவதாகவே காகின் உணர்ந்தார். தனது தீராதவேட்கையை இரண்டும் தணிக்கவில்லை என்று புலம்பினார். காகினின் தடுமாற்றங்கள். குழப்பங்கள். கோபம். இயலாமை மற்றும் உணர்ச்சிமிக்க போராட்டத்தைப் படம் அழகாகப் பதிவு செய்கிறது.

ஒரு புறம் நீலக்கடல், மறுபுறம் பிரம்மாண்டான மலை, அறுபட்டது போல அதன் நடுவே பெரிய குகை. காணும் வெளியெங்கும் பசுமை. இந்தச் சூழலில் காகின் தனது குடிசை ஒன்றை அமைத்துக் கொண்டார். வீட்டின் பின்புறம் சிறிய உணவருந்தும் இடம் ஒன்றையும் உருவாக்கிக் கொண்டார். மழைக்காலத்தில்  தீவு சொர்க்கமாகயிருந்தது.

இயற்கையின் கரங்கள் காகினை அரவணைத்துக் கொண்டன.

ஒற்றை ஆளாகக் குதிரையில் அவர் செல்லும் காட்சியில் நிலக்காட்சி ஒவியம் ஒன்றினுள் அவர் செல்வது போலவேயிருக்கிறது.

அற்புதமாக ஒவியம் வரையத் தெரிந்த காகினுக்கு மீன்பிடிக்கத் தெரியவில்லை. ஒரு காட்சியில் பசியில் துப்பாக்கியால் சுட்டு மீனைப் பிடிக்க முயற்சிக்கிறார் ஒரு மீன் கூடக் கிடைப்பதில்லை. தண்ணீருக்குள் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டேயிருக்கிறார். அது தான் காகின் மனநிலை.

வேட்கையுற்ற ஒரு ஒவியன் தனது தேடுதலுக்கான களமாக டஹிடி தீவின் தீவினையும் அதன் மனிதர்களையும் உணர்கிறான். அந்தத் தீவில் அவருக்கு இருந்த ஒரே துணை ஒரு டாக்டர் ஹென்றி மட்டுமே. அவரே காகினின் கலைத் திறமைகளைப் புரிந்து கொண்டவர்.  மருந்துவ உதவிகளையும் பொருளாதார உதவிகளையும் செய்தவர்.

பால் காகின் 1848 ல் பாரிசில் பிறந்தார். சிறுவயதிலே அவரது தந்தை இறந்து போகவே தாயுடன் லிமா நகருக்கு சென்று சேர்ந்தார். பால்யகாலம் அங்கேயே கழிந்தது. பின்பு கப்பற்படையில் சில காலம் பணியாற்றினார். ஒவியத்தின் மீது கொண்டிருந்த ஆர்வத்தால் கண்காட்சிகள். ஒவியக்கூடங்கள் என்று சுற்றியலைந்தார். அந்த நாட்களில் ஒவியர் பிசாரோவின் நட்பு கிடைத்தது. அதிலிருந்து அவரது ஆளுமை உருமாற ஆரம்பித்தது.

ஒவியர் வான்கோவின் நெருக்கமான நண்பராக இருந்தார். வான்கோவை இவர் ஒவியம் தீட்டியிருக்கிறார். குடிப்பதும் ஒவியம் வரைவதுமே அவரது வாழ்க்கை முறை. 1877 ல் தன்னுடைய வீட்டிலே சிறிய ஸ்டுடியோவை நிறுவி ஒவியங்கள் வரைய ஆரம்பித்தார் காகின்.

வண்ணங்களைக் காகின் பயன்படுத்தும் விதம் அலாதியானது. அடர்த்தியான வண்ணங்களை அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். குறிப்பாகப் பச்சை, சிகப்பு மஞ்சள் அவரது விருப்பத்திற்குரிய வண்ணமாகும். குளோட் மொனெட் (Claude Monet) ஒவியங்களில் இயற்கை மிகுந்த துல்லியத்துடன் வரையப்பட்டது. அது போன்ற இம்ப்ரெஷனிஸ்ட் ஒவியங்களைக் காகினும் வரையத்துவங்கினார்.

காகின் படத்தில் டஹிடி தீவின் நிகரற்ற அழகும் அங்கு வாழும் மனிதர்களின் தூய நேசமும் அன்பும் சிறப்பாகக் காட்சிப்படுத்தபட்டுள்ளது. காகினின் ஒவியத்திறமை பற்றி அவர்களுக்குத் தெரியாது. ஆனால் தங்களைத் தேடிவந்துள்ள மனிதனை கௌரவமாக, அன்பாக நடத்த வேண்டியது தங்களின் கடமை என்று நினைத்தார்கள். காகின் தான் விரும்பிய எந்த பெண்ணையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று ஆலோசனை சொன்னார்கள்.

காகினைத் திருமணம் செய்து கொண்ட டெஹூராவிற்கு  வயது 14. அவளுக்கு ஒவியம் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவள் காகினை முழுமையாக நேசித்தாள். அன்பு செலுத்தினாள். காகின் தாஹித்தியர்களின் கள்ளமற்றதன்மையை, எளிய வாழ்க்கையைப் புரிந்து கொண்டார்.

அந்தத் தீவின் சிறுவர்களுடன் விளையாடுவது. படகில் சென்று மீன்பிடிப்பது குடித்துவிட்டு நடனமாடுவது என அவர்களுடன் இணைந்து வாழ்ந்தார். ஆனால் எவ்வளவு முயன்றாலும் அவரால் தீவுவாசிகளில் ஒருவராக மாற முடியவில்லை. தனது பிரெஞ்சு அடையாளங்களில் இருந்தே அவர்களைக் அணுகினார்.. அந்த விலகல் அவரைச் சுயசித்ரவதைக்கு உள்ளாக்குகிறது,

முறையற்ற பாலுறவு காரணமாக காகினைச் சிபிலிஸ் எனும் மேகநோய் தாக்கியது. நோயின் கடுமை காரணமாக உடல் நலிவுற்றது. அந்த நாட்களிலும் அவர் ஒவியம் வரைவதை நிறுத்திக் கொள்ளவில்லை.

காகினின் டஹிடி தீவு அடைக்கலமான ஒவியனின் கண்களின் வழியே மட்டுமே காட்சிப்படுத்தபடுகிறது

இதற்கு மாறாக மியூடினி ஆன் தி பவுண்டி திரைப்படம் பிரிட்டீன் அரசின் கண்களால் தீவைக் காணுகிறது

இயற்கையாகக் கிடைக்கும் வாசனைப் பொருள்களைத் தேடி இந்தியா வந்து நமது தேசத்தை அடிமைப்படுத்தியது பிரிட்டீஷ் அரசு. அது போலவே பிரட் ப்ரூட் என்ற தாவரத்தை தேடி டஹிடியை நோக்கி பயணிப்பதே மியூடினி ஆன் பவுண்டி திரைப்படம். இக்கதை இரண்டு முறை படமாக்கபட்டிருக்கிறது. கறுப்பு வெள்ளையில் வந்த படத்தின் வெற்றியே இக்கதையை 1962ல் கலரில் எடுக்கச் செய்தது. இதில் மார்லன் பிராண்டோ முக்கியக் கதாபாத்திரமாக நடித்திருக்கிறார்.

1700 களில் மேற்கிந்திய தீவுகளில் கரும்பு தோட்டத்தில் வேலை செய்யும் கருப்பின அடிமைகளுக்குத் தேவையான அளவு உணவு அளிப்பது முதலாளிகளாக இருந்த வெள்ளைக்காரர்களுக்கு பெரும்சுமையாக தோன்றியது. டஹிடி தீவில் கிடைக்கும் பிரட் ப்ரூட் எனப்படும் ரொட்டிப்பழத்தை கொண்டு வந்து மேற்கிந்திய தீவில் வளரச்செய்தால் அதைக் கறுப்பின மக்களுக்கு உணவாகத் தரலாம் என்ற யோசனை முன் வைக்கபட்டது. இதற்குக் காரணம் கடலோடியான கேப்டன் குக் தனது கடற்பயணத்தில் இந்தப் பிரெட் ப்ரூட்டை கண்டறிந்து வந்து சொன்னதே.

பலாக்காய்ப் போலிருக்கும் பிரெட் ப்ரூட் செடிகளின் கன்றுகளைக் கொண்டு வருவதற்காக ஒரு கப்பல் புறப்பட்டது. அதன் பெயரே பவுண்டி. அக் கப்பலின் கேப்டனாக இருந்தவர், வில்லியம் பிளை (William Bligh) மிகக் கடுமையாகத் தண்டனைகள் கொடுக்ககூடிய கேப்டன், மிகுந்த கோபக்காரர். 215 டன் எடை கொண்ட இக்கப்பல். 1787 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி தனது பயணத்தைத் துவங்கியது. இந்தக் கப்பலின் துணை கேப்டனாக இருந்தவர் பிளெட்சர் கிரிஸ்டியன் .

பவுண்டி கப்பல் புயலில் சிக்கித் தவித்து ஐந்து மாதங்களுக்குப் பிறகு டஹிடி தீவிற்குப் போய்ச் சேருகிறது. தீவுவாசிகள் அவர்களை எதிர்கொண்டு வரவேற்கிறார்கள். விருந்தளிக்கிறார்கள்.

வில்லியம் பிளை தனக்குப் பிரெட் ப்ரூட் செடிகள் வேண்டும் எனக்கேட்கிறார்.

தேவையான செடிகளைக் கொண்டு போங்கள் என அனுமதி தருகிறார் தீவுத்தலைவன்.

இந்நிலையில் விருந்தில் நடனமாடுகிறாள் தீவுத்தலைவனின் மகள். அவள் துணைக் கேப்டன் பிளெட்சரை விரும்புகிறாள். அவரும் அவள் மீது காதல் கொள்கிறார். அவர்கள் காதலை தீவுத்தலைவன் ஏற்றுக் கொள்கிறார்.

தீவிலிருந்து பிரெட் ப்ரூட் செடிகளைக் கப்பல் நிறைய ஏற்றிக் கொண்டு கப்பல் புறப்படுகிறது. செடிகளுக்கு அதிகத் தண்ணீர் வேண்டும் எனப் பணியாளர்களுக்குக் குடிநீர் மறுக்கபடுகிறது. எதிர்ப்பவர்கள் கடுமையாகத் தண்டிக்கபடுகிறார்கள். ஒருவன் தாகமிகுதியில் கடற்தண்ணீரை குடித்துவிடவே நோயுறுகிறான். பிளெட்சர் அவனை மீட்க முயற்சிக்கிறான். இதற்காகப் பிளெட்சரை கேப்டன் கண்டிக்கிறார்.

இந்நிலையில் கேப்டனின் தவறான வழிகாட்டுதல் மற்றும் தண்டனைக்கு எதிராகக் கப்பல் ஊழியர்களை ஒன்று சேர்ந்து கலகம் செய்கிறார்கள். பிளெட்சர் இதற்குத் தலைமை ஏற்கிறான். . கப்பல் பிளெட்சர் வசமாகிறது.. பிளை மற்றும் அவரது உதவியாளர்களை ஒரு படகில் ஏற்றி தனித்து அனுப்பி வைக்கிறார்கள். கப்பல் நிறைய ஏற்றப்பட்ட பிரெட் ப்ரூட் செடிகளைக் கடலில் தூக்கி வீசுகிறார்கள்.

கடலில் எங்கே தப்பிச் சென்றாலும் தாங்கள் கைது செய்யப்படுவோம் எனப் பயந்து அவர்கள் டஹிடி தீவிற்கே திரும்பி போய்த் தங்கள் காதலிகளை உடன் ஏற்றிக் கொண்டு ஆள் அற்ற பிட்கெர்ன் தீவிற்குப் போகிறார்கள். அங்கேயே வாழத் துவங்குகிறார்கள். இங்கிலாந்து அரசு அவர்களை என்ன செய்தது என்பதே படத்தின் முடிவு. படத்தில் பிளெட்சராக நடித்திருப்பவர் மார்லன் பிராண்டோ.

மார்லன் பிராண்டோவின் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தில் அவர் டஹிடி தீவினைக் காண நெடும்காலம் ஆசை கொண்டிருந்ததையும் அந்தத் தீவில் கழித்த நாட்களே தன் வாழ்நாளில் மறக்கமுடியாத தினங்கள் என்றும் குறிப்பிடுகிறார்.

மியூடினி ஆன் தி பவுண்டி படத்தில் பெண்கள் ஒன்று திரண்டு கடலில் மீன்பிடிக்கும் ஒரு அற்புதமான காட்சியுள்ளது. அக்காட்சியில் மீன்களை ஒரு பக்கமிருந்து துரத்தி வருகிறார்கள். வட்டமாக அனைவரும் ஒன்று சேர்ந்து கொள்ள, அந்த வட்டத்திற்குள் குவிந்துள்ள மீன்களைப் பிடிக்கிறார்கள். டஹிடி பெண்களுடன் கப்பற்பணியாளர்கள் ஒன்று சேர்ந்து சந்தோஷமாக மீன்பிடிப்பது அற்புதமாகப் படமாக்கபட்டிருக்கிறது

டஹிடி தீவின் தலைவன் கேப்டன் குக்கை அறிந்திருக்கிறான். அவன் குக் பற்றி விசாரிக்கிறான். வேறு ஒரு பயணத்தில் ஹவாய் தீவில் கேப்டன் குக் தீவுவாசிகளால் கொல்லப்பட்டதை அவர்கள் சொல்வதில்லை. அந்தத் தீவின் தலைவனுக்கு நிறையப் பரிசுகளை அளிக்கிறார்கள்

தனக்குப் பரிசாக அளிக்கபட்ட கண்ணாடியைத் தீவின் தலைவன் விநோதமான வேடிக்கை பொருளாகப் பார்க்கிறான். சிரிக்கிறான்.

இரண்டு படத்திலும் பூலோக சொர்க்கமாகவே டஹிடி தீவு சித்தரிக்கபடுகிறது. இரண்டிலும் தீவுவாசிகள் மற்றவர்களால் உபயோகப்படுத்திக் கொள்ளப்படுகிறார்கள். டஹிடி தீவுவாசிகளை முட்டாள்கள் என்றே கேப்டன் வில்லியம் பிளை நினைக்கிறார். நடந்து கொள்கிறார்.

இழிந்த ஐரோப்பாவை விட்டு ஒதுங்கிவிட வேண்டும் என நினைத்த காகின் டஹிடி தீவில் இருந்த இரண்டு ஆண்டுகளில் வாழ்ந்து 66 ஒவியங்களை வரைந்திருக்கிறார். அந்த ஒவியங்களே மாவோரி பெண்கள் மற்றும் தாஹித்தியர்கள் மீது அவர் கொண்டிருந்த நேசத்தின் அடையாளம். அதன் வழியாகவே டஹிடி தீவின் வாழ்க்கை நிஜமாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது

••

Archives
Calendar
April 2019
M T W T F S S
« Mar    
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Subscribe

Enter your email address: