அரவான்

பழைய புகைப்படங்களைத் தேடிக் கொண்டிருந்த போது அதில் அரவான் நாடகநிகழ்வின் புகைப்படங்கள் கிடைத்தன.

அரவான் என்ற எனது நாடகத்தைப் பத்து ஆண்டுகளுக்கும் முன்பாக கருணாபிரசாத் இயக்கி நடித்தார்.

கருணா பிரசாத் கூத்துப்பட்டறையில் பயின்ற மிகச்சிறந்த நடிகர். தனக்கென ஒரு நாடகக்குழுவை நடத்திவருபவர்.

அரவான் நாடகத்தை அவருக்காகவே எழுதினேன். ஒரு நபர் நடிக்கும் அந்த நாடகம் 50 நிமிஷங்கள் நிகழக்கூடியது.

மகாபாரதத்தில் குருஷேத்திரப் போருக்கு முன்பாக அரவான் களப்பலியிடப்படுகிறான். தன் மரணத்தின் முந்திய இரவில் அரவான் எப்படியிருந்தான் என்பதே நாடகத்தின் மையக்கதை.

இந்நாடகம் தனி நூலாகவும் வெளிவந்துள்ளது.

முதற்காட்சியில் அரங்கில் பிரவேசிக்கும் நடிகன் நாடகம் முடிந்து தான் வெளியேற முடியும். 50 நிமிசங்கள் பார்வையாளர்களைத் தன்வசப்படுத்தி வைத்திருப்பது நடிகனுக்குப் பெரிய சவால். அதைக் கருணா பிரசாத் மிகச்சிறப்பாகக் கையாண்டார். முழுநாடகத்தையும் தீப்பந்த வெளிச்சத்திலே பிரசாத் நிகழ்த்தினார்.

இந்த நாடகம் தமிழகம் முழுவதும் பலமுறை நிகழ்த்தபட்டது.

இதனை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து கேரளாவிலும் ஒரு குழு நாடகமாக நிகழ்த்தினார்கள்.

இந்நாடகம் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டு எத்திராஜ் கல்லூரி ஆங்கில இலக்கியத்துறையில் பாடமாக வைக்கபட்டிருக்கிறது.

அரவான் நாடக நூல் தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசைப் பெற்றுள்ளது.

தற்போது பிரசாத்திற்காகப் புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை ஒரு நாடகமாக எழுதிக் கொண்டிருக்கிறேன்.

இரண்டு மாதங்களில் முடித்துவிடுவேன். பிரசாத்தோடு சேர்ந்து வேலை செய்வது மிகவும் சந்தோஷமானது.

புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக்க வேண்டிய அற்புதமான கதை.  யார் அதை செய்யப்போகிறார்கள்.

நம்மால்  முடிந்த பணி அவரது வாழ்க்கையை ஒரு நாடகமாக்குவது. அதையே செய்து கொண்டிருக்கிறேன்.

புத்தாண்டில் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து புதுமைப்பித்தனைக் கொண்டாடுவோம்.

Archives
Calendar
March 2019
M T W T F S S
« Feb    
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
Subscribe

Enter your email address: