சுராவிற்குப் பிடித்த சினிமா

எழுத்தாளர் சுந்தர ராமசாமி அபூர்வமாகத் திரைப்படங்கள் குறித்து எழுதியிருக்கிறார். பேசியிருக்கிறார். தனிப்பட்ட சந்திப்புகளின் போது சினிமா குறித்துத் தெரிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்ததை அறிவேன். ஆனால் தனக்குப் பிடித்த படங்கள் பற்றியோ, சினிமா இயக்குனர்கள பற்றியோ அதிகம் எழுதியதில்லை. அடூர் பற்றியும் சத்யஜித் ரே பற்றியும் எழுதியிருக்கிறார் என்று நினைவு.

அவரது குறிப்பு ஒன்றில் Fried Green Tomatoes திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று சுந்தர ராமசாமி எழுதியிருக்கிறார். அது புகழ்பெற்ற படமில்லை. ஆனால் நேர்த்தியாக உருவாக்கபட்ட ஹாலிவுட் படம்.

தமிழ் வணிகச் சினிமாவின் மீது கடும் அதிருப்தியும் கோபமும் கொண்டிருந்தவர் சுந்தர ராமசாமி. ஹாலிவுட் சினிமாக்களில் ஒன்றிரண்டு தவிர வேறு எதுவும் அவருக்குப் பிடித்ததாகச் சொன்னதில்லை. ஆனால் அவருக்கு இந்தப்படம் பிடித்திருக்கிறது.

Fried Green Tomatoes 1991ல் வெளியான திரைப்படம். ரயில்வே கிராசிங் அருகே நடத்தப்பட்ட ஒரு உணவகத்தில் கிடைக்கும் சிறப்பு உணவே Fried Green Tomatoes. அந்த உணவகத்தை நடத்திய இரண்டு பெண்களின் நட்பும் வாழ்க்கையுமே படத்தின் மையக்கதை.

பெண்களே படத்தின் முக்கியக் கதாபாத்திரங்கள். அவர்களின் உலகை மிக உண்மையாக, நேர்த்தியாகப் படம் விவரிக்கிறது. நினைவுகளின் வழியே கதை நிகழ்த்தப்படுகிறது. எதிர்பாராத ரயில் விபத்து. மரணம். இழப்பு எனப் பெண்கள் எதிர்கொள்ளும் துயரை படம் அழுத்தமாகப் பதிவு செய்துள்ளது.

சுந்தர ராமசாமியின் கதைகளிலும் இப்படியான பெண்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். நெருக்கடிகளை எதிர்கொள்கிறார்கள்.

நான்கு வேறுபட்ட பெண்களை அடையாளம் காட்டுகிறது இப்படம்.. பெண்களுக்கான எல்லாத் துயரங்களும், பிரச்சனைகளும் உறவின்  வழியாகவே வருகின்றன. குறிப்பாகக் குழந்தையைத் தூக்கி செல்ல முற்படும் கணவன். சதா பேஸ்பால் பார்த்தபடியே இருக்கும் கணவன். மிரட்டி அடித்துத் துன்புறுத்தும் இளைஞன் என அந்தப் பெண்கள் ஆண்களின் மீதான அச்சத்திலே வாழுகிறார்கள். ஆனால் அது மட்டுமில்லை அவர்களின் உலகம். தங்களின் சந்தோஷத்தை, சுதந்திரத்தை எப்படி அவர்கள் அனுபவிக்கிறார்கள். அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள் என்பதைப் படம் மிக அழகாகச் சித்தரிக்கிறது. குறிப்பாகப் போலீஸ் விசாரணையை எதிர்கொள்ளும் இரண்டு பெண்கள் தொடர்பான காட்சிகள் அற்புதம். படத்தில் அவர்களுக்குத் துணையாக இருந்து அவர்களைப் புரிந்து கொள்கிற கறுப்பின மனிதன் தான் அவர்களின் ஒரே நண்பன். அவன் படத்தின் பெரும்பான்மை காட்சிகளில் மௌனமாகவே இருக்கிறான்.

உணவு படத்தின் மையப்படிமம் போல இருக்கிறது. ஒரு பெண் விதவிதமான இனிப்புகளைப் படம் முழுவதும் சாப்பிட்டுக் கொண்டேயிருக்கிறாள். பெயர்கள். உடைகள். மொழியைக் கடந்துவிட்டால் இப்படம் ஒரு தமிழ் கதையே. ஆனால் தமிழ் சினிமா தொட்டிராத கதை. நிஜமாக, கவித்துமாகப் படம் உருவாக்கபட்டிருக்கிறது

இந்தப்படம் சுந்தர ராமசாமிக்கு பிடித்திருப்பதற்கான நிறைய காரணங்களை படம் பார்க்கும் போது உணர முடிந்தது.

இத் திரைப்படத்தைச் சுந்தர ராமசாமி  அமெரிக்காவில் எங்கே பார்த்தார். அரங்கத்திலா, தொலைக்காட்சியிலா எனக் குறிப்பிடவில்லை. விரிந்த திரையில் காண வேண்டிய படமிது.

கவிஞர் பாரதிதாசன் நிறைய ஆங்கிலப்படங்களைப் பார்த்திருக்கிறார். இரவுக்காட்சிக்கு போய் ஆங்கிலப்படம் பார்த்துவிட்டு வந்து அந்தப் படத்தின் இடம்பெற்ற பாடலின் மெட்டிற்குக் கவிதைகள் சொல்வது உண்டு என்று முருகு ரத்தினம் நூலில் பாரதிதாசன் பற்றி எழுதியிருக்கிறார். புதுமைப்பித்தனும் நிறைய ஆங்கிலப்படங்களைப் பார்த்திருக்கிறார். ஆனால் எதைப்பற்றியும் விரிவாக எழுதியிருப்பதாகத் தெரியவில்லை.

My daddy always used to say there was a separate god for children என்றொரு வசனம் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

குழந்தைகளுக்காக மட்டும் ஒரு கடவுள் இருப்பார் என்பது எவ்வளவு நன்றாக இருக்கிறது.

அந்த வசனம் படம் முடிந்தபிறகும் மனதில் ஒலித்துக் கொண்டேயிருக்கிறது

Archives
Calendar
November 2018
M T W T F S S
« Oct    
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
Subscribe

Enter your email address: